Published : 26 Nov 2024 06:12 AM
Last Updated : 26 Nov 2024 06:12 AM

ஈரம் | அகத்தில் அசையும் நதி 2

தாய்க்கும் மகளுக்குமான உரையாடலாகத் தொடங்கும் ‘ஈரம்’ சிறுகதை, காவிரியில் தண்ணீர் வராததால் நிகழக்கூடிய சோகங்களைச் சொல்வதாக இருக்கும். கதைக்குள் செல்வதற்கு முன் இக்கதை நிகழும் கற்பகநாதர்குளம் என்னும் சிற்றூரைப் பற்றிச் சொல்வது அவசியம். நான் பிறந்த ஊரும் இதுதான். திருக்கடிகுளம் என்னும் அழகான பெயர் எப்போது எப்படி யாரால் ‘கற்பகநாதர்குளம்’ ஆனது என்று தெரியவில்லை.

இங்குள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் தென்னந் தோப்புகளுக்குச் சொந்தக் காரியான வாலசுந்தரியம்மனுடன் உறைந் திருக்கும் கற்பகநாதர் என்னும் சிவனின் பெயரால் இப்பெயர் மாற்றப்பட்டிருக்கக்கூடுமெனத் தோன்றுகிறது. எது எப்படியோ. மாங்கனிக்காக முருகன் தன் மயில் வாகனத்தில் ஏறி உலகத்தைச் சுற்றிவர, பிள்ளையாரோ இவர்கள் தான் என் உலகம் என்று சொல்லி சிவனையும் பார்வதியையும் சுற்றி வந்து தந்திரமாக மாங்கனியைப் பெற்றுக்கொண்ட நிகழ்வு நடந்தது இங்கேதானாம்.

சிறுவயதில் இந்தக் கதையைக் கேட்கும்போதெல்லாம் சிவன் மீதும் பார்வதி மீதும் எனக்குக் கோபம் வரும். பாவம் அழகுப் பிள்ளை முருகன் அவ்வளவு தூரம் அம்மா, அப்பா வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து உலகைச் சுற்றிவிட்டு வந்து நிற்கும்போது, ‘கனியை அண்ணனுக்குத் தந்துவிட்டோம். நீ தோற்றுவிட்டாய் என்று சொல்வது அநியாயமில்லையா?’ என்று என் அக்காள்கள், அண்ணனிடம் கேட்பேன். ‘என்ன செய்வது பிள்ளையாரும் பாவம்தான். அவருடைய வாகனம் எலியாச்சே. மயில் வேகத்துக்கு எலியால ஓட முடியாதே’ என்பார்கள்.

‘அப்படின்னா ரெண்டு பேருக்கும் ஒத்து வர்ற மாதிரி போட்டிய மாத்தி வச்சிருக்கலாமில்ல’ என்று கேட்டுக்கொண்டே இருப்பேன். என் மனம் சமாதானம் அடைவது போன்ற பதிலை யாரும் எனக்குச் சொன்னது கிடையாது. சரி நடப்புக்கு வருகிறேன். ஐவகை தமிழ் நிலக்கூறுகளையும் கொண்ட அழகிய கிராமம். கிழக்கில் வளவனாறும் மேற்கில் மணிமுத்தா நதியும் வடக்குத் தெற்காகக் கோடுபோட்டதுபோல ஓட, இடையே தேர்ந்த ஓவியன் வரைந்த நேர்த்தியான சித்திரம் போன்ற தோற்றத்தைக் கொண்டது என் ஊர்.

இந்த மணிமுத்தா நதிக்குக்கூடப் புராணக்கதை ஒன்று உண்டு. சீதையைத் தேடி ராமன் தன் சேனை களுடன் சென்ற நீண்டதூரப் பயணத்தில் எங்கள் ஊரை அடைந்தபோது உடல் நலிவாலும் பசியாலும் தாகத்தாலும் எல்லாரும் மயக்கமடைந்து விழுந்தார்களாம். சாவகாசமாகத் தங்கி உணவு சமைத்துப் பசியாறிச் செல்லவோ படுத்துறங்கி உடலின் சோர்வு போக்கிச் செல்லவோ ராமனுக்கு மனம் ஒப்பவில்லையாம்.

சீதையைக் காணும்வரை கால்கள் நில்லாது என மனம் தவித்து ஓடிக்கொண்டிருந்தானாம். எனவே, போகிற போக்கில் தனது வில்லால் நிலத்தை ஒரு கீறல் கீறியிருக்கிறான். “இதோ இங்கே நான் உங்களுக்காக ஒரு நதியை உருவாக்கித் தருகிறேன். இதில் பிரவாகமெடுக்கும் நீரானது நாக்கு வறண்டவரின் தாகத்தைத் தணிக்கும், பசித்தோருக்கு உணவாகும், நலிவுற்றவருக்கு மருந்தாகும்.

வேண்டுமளவு பருகிவிட்டு என்னோடு விரைந்து வாருங்கள்” என்றானாம். ராமன் கேட்டுக்கொண்டதுபோல நிமிட நேரத்தில் நீரள்ளிப் பருகி அவனைப் பின்தொடர்ந்தார்களாம். அதன் பிறகு அவர்களில் யாருக்கும் இலக்கை எட்டும்வரை தாகமோ, பசியோ, சோர்வோ ஏற்படவே இல்லையாம். அதனால்தான் இந்த மணிமுத்தா நதி மட்டும் கோடையிலும் நீர் வற்றாமல் ஓடிக்கொண்டே இருக்கிறது என்று இங்குள்ள சனங்கள் பேசிக்கொள் வார்கள்.

ஊரின் வடக்குப்பகுதி மிக உயர்ந்த மணல்மேடு களைக் கொண்டதாகவும் தென்னந் தோப்புகள் அடர்ந்ததாகவும் இருக்கும். இடையிடையே தாமரையும் அல்லியும் பூத்திருக்கும் குளங்கள், கொட்டியும் நீர்முள்ளியும் பூத்திருக்கும் குட்டைகள். அடுத்து மேட்டு நிலத்திலிருந்து சட்டெனத் தாழும் தரைவாய்.

கருங்களி மண் நிலம். இந்த நிலத்தை வளப்படுத்த மணிமுத்தா நதியிலிருந்து வளவனாறு வரை ஓடும் சிற்றோடை. ஓடையின் இரு கரைகளிலும் தென்னை, பனை மரங்கள். ஊரின் காவல் தெய்வங்களான மின்னடியானும் தூண்டிக்காரனும் வேட்டைக்குச் செல்லும் வழிப்பாட்டை இதுதான்.

அவர்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாதென்று இரவு நேரத்தில் ஓடைக்கரைப் பக்கம் யாரும் போக மாட்டார்கள். நள்ளிரவு நேரத்தில் குதிரைகளின் குளம்படி ஓசையும் இவர்களின் கனைப்புச் சத்தமும் கேட்குமாம். அந்த நேரத்தில் யாரும் எதிர்பட்டுவிடக் கூடாது என்று கவனமாயிருப்பார்கள். ஓடையை அடுத்து மணற்பாங்கான மானாவாரி நிலம். இதன் மையப்பகுதியில் ஓடையைப் போலவே கிழக்கு மேற்காகச் செல்லும் மண்சாலை.

இதன் இருபுறமும் நெடுகிலும் வீடுகள். இந்த வரிசையில்தான் இருக்கிறது நான் ஐந்தாம் வகுப்புவரை படித்த பள்ளிக்கூடம். இங்கும் ஐந்து கடவுளர்கள் இருந்தார்கள். ஐயனாரும் தூண்டிக்காரனும் மின்னடியானும் மட்டும் ஊரைக் காக்கும் தெய்வங்களில்லை. பணி நியமனம் பெற்றது முதல் ஓய்வுபெறும் வரை ஒட்டுமொத்த ஊருக்கும் கண்ணொளி தந்து பலரையும் சான்றோராக்கிய ஆசிரியர்கள்தான் அவர்கள்.

அதற்கடுத்து இதற்கு இணையான தார்ச்சாலை. இதன் இருபுறமும் வரிசையாக வீடுகள். அடுத்து பம்புசெட் பாசனத்தால் செழிக்கக்கூடிய செம்போடை. இது மணலும் களியும் கலந்த நிலப்பகுதி. அதையடுத்து புது ஆறு, அடுத்து கொஞ்சம் உப்புப் பூக்கும் அளம். அடுத்து கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கோட்டகம். டெல்டாவின் கடைமடைப் பகுதி. வண்டல்மண் நிலம். கோடையி்ல் நிலம் காய்ந்து வெடித்து பாலைபோல் கிடக்கும். காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டால் போதும். கோட்டகத்திற்குக் கொண்டாட்ட களை வந்துவிடும்.

குறுக்கும் நெடுக்குமாகக் கோடுபோட்டது போலக் கிடக்கும் வாய்க்கால்களில் பாய்ந்தோடி வரும் தண்ணீர். வாய்க்கால்கள் நிரம்பி, தாமாகவே வயல்களுக்குள்ளும் ஏறிப் பாயும். காய்ந்து வெடித்துக்கிடந்த மண் ஒருவித வாசனையைப் பரப்பியபடி ஊறி நெகிழும். புது நீரோடு துள்ளி வரும் சிறு சிறு கெளுத்தி மீன்கள் சுவையான வண்டலை உண்டு கொழுக்கும். தண்ணீர் பாய்ந்த மூன்றாம் நாளே புதிதாக முளைத்துவரும் ஊசிபோன்ற முனைகளைக் கொண்ட புற்கள் மெல்லத் தலைநீட்டி கோட்டகத்திற்கு இளம்பச்சை வண்ணத்தைப் போர்த்திவிடும். சரி, ஆரம்பத்தில் சொன்ன அந்த அம்மாவுக்கும் மகளுக்கும் என்ன ஆனது? அடுத்த வாரம் பார்க்கலாம்.

(நதி அசையும்)

- thamizhselvi1971@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x