Published : 30 Jun 2018 09:58 AM
Last Updated : 30 Jun 2018 09:58 AM
ந
ற்றிணை, குறுந்தொகை என்று எட்டுத்தொகையிலிருந்துதான் சங்க இலக்கியம் தொடங்குகிறது. இத்தொகுப்பு நூல்களில் பாடல்களோடு சம்பந்தப்பட்ட திணை, துறை, கூற்று, பாடினோர், பாடப்பட்டோர், வண்ணம், தூக்கு, பண், பெயர், இசை வகுத்தோர் முதலிய குறிப்புகள் பிற்காலத்தில் தான் அப்பாடல்களோடு இணைக்கப்பட்டன. சங்கப் பாடல்கள் தொகை நூல்களாகத் தொகுக்கப்பட்ட காலத்தில் அவற்றைத் தொகுத்த தொகுப்பாளர்களால் தரப்பட்ட இவ் விளக்கங்கள் குறித்து விவாதிப்பதாக அமைகிறது ‘தமிழ்த்தொகுப்பு மரபு’ என்னும் இந்நூல். தமிழ்ச் செவ்விலக்கிய மரபாக அமைந்த திணை இலக்கிய மரபு தொடர்ந்து வளர்ந்துவரும் வாய்ப்பினைத் தமிழ்ச் சூழலில் இழந்திருந்தாலும், அவ்விலக்கியங்கள் சார்ந்து முன்னெடுக்கப்பட்ட தொகுப்புக் குறிப்புகள் அவற்றின் பின்னர் தோன்றிய இலக்கண நூல்களுக்குப் பெரும் பங்களிப்பை நல்கியுள்ள தன்மை இனங்காட்டப்பட்டுள்ளது. தொகுப்புக் குறிப்புகளுள் திணைசார்ந்த குறிப்புகளை உரையாசிரியர்களே வழங்கியுள்ளனர் என்னும் கருத்து மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு உள்ளிட்ட உதிரிப் பாடல்களின் தொகுப்புகள், ஐங்குறுநூறு, பதிற்றுப் பத்து போன்ற திட்டமிட்டு உருவாக்கப்பட்ட தொகுப்புகள், பின்னதன் தொடர்ச்சியாக அமைந்த கலித்தொகை, பரிபாடல் ஆகிய தொகுப்புகள் எனும் வகையில் சங்கப் பாடல்களின் முத்திறத் தொகுப்பு மரபு அடையாளப் படுத்தப்பட்டுள்ளது. சுஜா சுயம்பு திரட்டியுள்ள பின்னிணைப்புகள் அவரது உழைப்பையும் ஆர்வத்தையும் காட்டுகின்றன. தமிழின் தனித்த அடையாளமான செவ்விலக்கியப் பிரதிகள் மீது காலந்தோறும் நிகழ்த்தப்பட்ட வாசிப்பு முறைகளை, அப் பிரதிகளுக்குத் தரப்பட்ட தொகுப்புக் குறிப்புகளை முன்னிறுத் தித் திறம்பட விவாதித்துள்ளது இந்நூல்.
- அ.செந்தில் நாராயணன்
தமிழ்த் தொகுப்பு மரபு - எட்டுத்தொகைப் பனுவல்கள்
சுஜா சுயம்பு
சந்தியா பதிப்பகம்
அசோக் நகர், சென்னை - 83.
விலை - ரூ.700
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment