Last Updated : 13 Jun, 2018 09:55 AM

 

Published : 13 Jun 2018 09:55 AM
Last Updated : 13 Jun 2018 09:55 AM

எமதுள்ளம் சுடர் விடுக 44: தமிழர் பண்பாடும் தத்துவமும்!

றிஞர் நா.வானமாமலை, 20-ம் நூற்றாண்டுத் தமிழ் வரலாற்றுப் பண்பாட்டுத் தத்துவத்தில் ஆகச்சிறந்த படைப்புகளை அளித்துச் சென்ற அறிஞர்களுள் முக்கியமானவர்!

அவருடைய தொகுப்பு ஒன்று வந்துள்ளது. ‘தமிழர் பண்பாடும் தத்துவமும்’ என்ற பெயரில், 6 கட்டுரைகளைக் கொண்ட நூலாக ’நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்’ வெளியிட்டுள்ளது. தமிழ் முருகனும், வடநாட்டு ஸ்கந்தனும் இணைந்தது எப்படி? பரிபாடலில் முருக வணக்கம், மிக முக்கியமான இரு பண்பாட்டுக் கலப்பும் எவ்வாறு நிறைவேறி வந்துள்ளது என்பது பற்றிய அழகிய சித்தரிப்பாகும். அதோடு, இடதுசாரி கருத்தாக்கங்களிலும் இறைமை சார்ந்த விஷயங்களிலும் அடிப்படை உண்டு என்பதை நிரூபணம் செய்த முதல் தலைமுறை படைப்புகள் ஆகும்.

கலைகள் என்று இப்போது சொல்லப்படுகிற பட்டியல் தோன்றியது எப்படி என்பதையும், உலகம் படைக்கப்பட்டது எப்படி என்பதையும், உலகம் ஆண் பார்வையில் படைக்கப்பட்டது எப்படி என்பதையும், பெண் படைப்பு எப்படி என்பதையும் பற்றிய ஆய்வு நடந்துள்ளது. அதோடு மணிமேகலையில் பவுத்தம், பழந்தமிழ் இலக்கியத்தில் பொருள்முதல் வாதக் கருத்து, பரபக்க லோகாயதம் போன்ற தத்துவ உரையாடல்களும் இடம்பெற்றுள்ளன.

மயில் பின்னால் வந்தது

பேராசிரியர் நா.வானமாமலை கட்டுரைகளில் உள்ளடக்க ஆழமும், பயிற்சியும் இருக்கும். அதோடு எளிமையான சொல்லாடலும் இருக்கும். மக்கள் சார்ந்த கருத்துகள் தொடர்ந்து ஆராயப்படும்.

முதல் கட்டுரை தமிழ்நாட்டு முருகன், இவரை சிவகுமரன் என்றும் பிற்கால வைணவ நூல்கள் மால்மருகன் என்பது எப்படி?

ஆராவமுதன் ஆராய்ச்சியைக் குறிப்பிடுகிறார் நா.வானமாமலை என்கிற நா.வா.

இளமை, உற்சாகம், மதுவெறி, அழகுணர்ச்சி, காதல், வீரம், தீமையை ஒழிக்கும் தன்மை, பிறரைக் காக்கும் பண்பு இவற்றைத் தொகுத்து உலகத்தில் கடவுள் உருவாக்கப்பட்டார்கள். அவர்களில் இரண்டு பேர் இந்தியர்கள். ஒருவர் ஸ்கந்தன், மற்றவர் முருகன்.

முருக வணக்கம் காதம் (மயக்கம், வெறி) போன்ற சூழலில் வர்ணிக்கப்படுவது பற்றி அதைச் சிறுவணக்கம் என்கிறார் தலைவி ( அகம் 202). மேலும் களத்திலும் ஊர்மன்றத்திலும் வெறியாடி வணங்கும் தெய்வம்.

முருகன், முதலில் வைத்திருந்த பறவை சேவல். மயில் பின்னால் வந்ததாம்.

பரிபாடல் சென்ற பாதை

காமத்துக்கு முந்திய நூல்களில் ‘மானிடரே ’ கதை மாந்தர்கள். கடவுள்கள், காமக் (கதை) நிகழ்ச்சிகளுக்கு விலக்கு இல்லை என்று கருதினார். ஆனால், பரிபாடல் காலம் வரை கடவுளர் காம இலக்கியத்தில் பொருளாக்கப்படவில்லை.

பரிபாடலில் உள் இருக்கும் பக்தி இயல்பை ஆசிரியர் மிக அழகாகச் சொல்கிறார்.

‘பொன்னுக்காக, பொருளுக்காக இல்லை...’

கடவுளை வீட்டின்பம் பெறவே பழந்தமிழர் வணங்கினர் என்பதற்கும் மாற்றுக்கருத்து இருப்பதையும் நா.வா. எடுத்துச் சொல்கிறார்.

“ உன் குன்றம், பூமி பிளப்பினும் மழை பொய்யினும் உனக்கு நிலை பெறுவதாக இக்குன்றம்...” ஒரு முக்கியமான கருத்தாக இன்ப நுகர்ச்சியும் தெய்வ வழிபாடும் முரண்பாடுடையவை அல்ல. இன்பம் நீடிக்கவும், உலகியல் பயன் நீடிக்கவுமே, மக்கள் இறையை வணங்கினர்.

கலைகள் ஏன் தோன்றின?

‘கலை உணர்ச்சி தோன்றிய பின் கலைப் பொருட்கள் படைக்கப்படவில்லை. மாறாக, மனித உணர்ச்சி தோன்றிய பின்பே கலைகள் தோன்றின’ என்ற அழகிய பொருளை முன்வைத்து இக்கட்டுரையைத் தொடங்குகிறார் ஆசிரியர்.

மனிதனது படைப்புக்களில் அகழ்வாராய்ச்சி மூலம் கிடைத்துள்ள சான்றுகளின் மூலம் சிற்பக் கலையின் வளர்ச்சியை 4 கட்டங்களாக குறிப்பிடலாம்.

1. விலங்குருவ படைப்புக் காலம்

2. மனித விலங்குருவப் படைப்புக் காலம்

3. மனித உருவப் படைப்புக் காலம்

4. தெய்வ உருவப் படைப்புக் காலம்

யானை, காண்டாமிருகம் ஆகிய குகைச் சித்திரங்களின் காலம் 2 லட்சம் ஆண்டுகள் என்று தொல் பொருளாய்வாளர் கூறுகின்றனர். அக்காலத்தில் தோன்றிய சித்திரம் மிகப் பழமையான கலைப் பண்பு. இத்தகைய சித்திரங்கள் மனிதனது முதற் கலை முயற்சிகள் எனக் கூறலாம். நம்பிக்கையும், மனத்துள் எழும் அகச்சித்திரமும் கலைகள் ஆகாது. வரையப்படும்போதோ, செதுக்கப்படும்போதோ அவை புறவடிவம் பெற்றால்தான் கலையாகிறது. இங்கு கற்கால மனிதனது அகச்சித்திர வெளிப்பாட்டையே குகைச் சித்திரத்தில் காண்கிறோம். சில குகைக் சுவர்களில் ஒரு தனி விலங்கின் படம் வரைந்திருப்பதன் அருகில் ஒரு மானோ, ஓர் ஆடோ, அல்லது காட்டு எருமையோ அம்பு தைத்து வீழ்ந்து கிடப்பது போல வரைந்திருப்பதைத் தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். தனி விலங்கை வரைவதன் காரணத்தை முன்னரே கூறினோம். அது கற்கால மனிதரது கலைப் படைப்பு. அது குலக்குறி நம்பிக்கையின் புறவடிவம். அம்பு தைத்துக் கிடக்கும் மிருகத்தை கற்கால மனிதன் வரைந்திருக்க முடியாது. ஏனெனில் கல்முனை அம்பு விலங்கின் உடம்பில் தைக்காது. இது வெண்கலம், அல்லது இரும்பால் ஆன அம்புமுனையாகத்தான் இருத்தல் வேண்டும். அப்படியானால் கலப்புக் கற்காலத்தில் இவை வரையப்பட்டிருக்கலாம். இது ஓர் வேட்டைக் காட்சியாகும். குலக்குறி விலங்கின் ஆற்றல் அம்பு எய்யும் மனிதன் கையில் ஏறி, அம்பை விடுவித்து விலங்கைக் கொல்கிறது என்று அவர்கள் நம்பியிருக்க வேண்டும். இத்தகைய நம்பிக்கை இனக்குழு மக்களிடையே இன்றும் உள்ளது. இத்தொடர்பைக் காட்ட கலப்புக் கற்கால மனிதன் இச்சித்திரத்தை வரைந்தான்.

மணிமேகலையின் பௌத்தம்

புத்தர் கோயில் பற்றிய பல கருத்துககள் உரையாடுகிறார் ஆசிரியர். இவை மிகவும் புதியவை.

மகாயன பௌத்தம் எழுவதற்கு முன்னர் புத்தருக்குக் கோயில் கட்டி வழிபடாமல் அவருடைய திருவடி நிலைகளை மட்டும் வணங்கிய காலத்தில் எழுந்தது மணிமேகலை. அதில் காணும் மந்திர தந்திரங்கள் மகாயன பௌத்தம் தோன்றுவதற்கு வழிகோலுகின்றன எனக் கூறலாம்.

தமிழ்நாட்டில் பண்டையக்காலத்தில் பௌத்த நூல்கள் எழுதிய சில ஆசிரியர்களின் பெயர்களை தெ.பொ.மீ. குறிப்பிடுகிறார். திக்நாகர், தருமபாலர், போதிதருமர் போன்றோர் காஞ்சியில் வாழ்ந்ததையும் பின்னர் நாலந்தாவில் அறம் போதித்ததையும் குறிப்பிடுகிறார்கள். ஆனால், இவர்கள் எப்பிரிவைச் சார்ந்தவர்கள் என்பதை அவர்கள் குறிப்பிடவில்லை. மணிமேகலையின் பௌத்தப் பிரிவு தேரவாதம் என்பதற்கு வணக்கமுறை ஒன்றைத்தான் அவர்கள் சான்றாகக் காட்டியுள்ளார்கள்.

மணிமேகலையில் ‘சமயக் கணக்கல் தம் திறங்கேட்ட காதை’யில் தமிழ்நாட்டில் இருந்த பல்வகைச் சமயங்களைப் பற்றிக் கூறுகின்ற சீத்தலைச் சாத்தனார், ஈனாயனத்துக்கு மாறுபட்ட கொள்கைகளையும், தத்துவங்களையும் உடைய மகாயன மதத்தைப் பற்றிக் கூறாதிருப்பது நாகார்ச்சுனரது கொள்கைகள் பரவுவதற்கு முன்னே மணிமேகலை இயற்றப்பட்டிருக்க வேண்டும்.

அதே நூலில் ம.சீ.வே. அவர்கள் மணிமேகலையின் காலத்தை நிறுவப் பல ஆதாரங்கள் கூறியுள்ளார். அவற்றுள் மேற்கூறிய கருத்து மட்டும் நமது ஆராய்ச்சிப் பொருளோடு நேரடித் தொடர்புடையது.

எனவேதான் பிற சான்றுகளை நீக்கி இதனை மட்டும் குறிப்பிட்டேன். எனவே, வேங்கடசாமி அவர்கள் மணிமேகலையின் பௌத்தம் ஈனாயனம் அல்லது தேரவாதம் என்றே கூறுகிறார்கள்.

அறிஞர் பெருமக்களின் கருத்துகள்

இனி வையாரிப்பிள்ளையின் கருத்தை அறிந்துகொள்வோம். அவர் ‘காவியகாலம்’ என்ற நூலில் மணிமேகலையின் காலத்தை ஆராயும்போது அந்நூலில் மகாயனக் கொள்கைகளான ‘எண்ணில் புத்தகர்கள் ’ என்ற கருத்தும், தின்னாகர், தர்மபாலர் போன்ற அளவை நூலாசிரியர்களது கருத்துகளும் அறவணர் அறவுரையில் காணப்படுவதால், அது பிற்கால நூலென்றும், இது மஹாயனக் கொள்கைகளோடு உடன்படுகிறது என்றும் கூறுகிறார்கள்.

உ.வே.சா அவர்கள் மணிமேகலையின் காலத்தை 2-ம் நூற்றாண்டு என்று முடிவு செய்து, அப்போது மஹாயனம் தோன்றவில்லை என்றும், எனவே மணிமேகலையில் காணப்படும் பௌத்த சமயக் கருத்துகள் தேரவாதக் கருத்துகளே என்றும் கூறுகிறார்கள்.

முடிவாக...

தமிழர் பண்பாடும் தத்துவமும் என்ற இந்த நூல், பழமை போற்றுதல் அல்ல. பழமையில் புதியதைத் தேர்தல். புதிய சமுதாயத்தைப் புதிய கருத்துகளோடு, பழமையின் சாரத்தோடு உருவாக்கவும் கூடும்தானே..?

- சுடரும்...

எண்ணங்களைப் பகிர: writerprapanchan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x