Last Updated : 28 Jun, 2018 09:18 AM

 

Published : 28 Jun 2018 09:18 AM
Last Updated : 28 Jun 2018 09:18 AM

மரணம் ஒரு கலை 18: இருளில் நடந்த விடிவெள்ளி

புதுமைப்பித்தன்

“நான் இப்போ எனக்கு வரப் போகிற மணியார்டரை எதிர்பார்த்துக்கிட்டிருக்கேன். புரியலையா? சாவைத்தான் நான் மணியார்டரை எதிர்பார்ப்பதுபோல் எதிர்பார்த்துக்கிட்டிருக்கேன்” - வறுமையின் கொடுமையை மரணத்திலும் சித்தரித்துவிட்டுச் சென்றவர், புதுமைப்பித்தன். வறுமையும் நோயும் தின்று தீர்த்ததில் தமிழ் இலக்கிய உலகம் புதுமைப்பித்தனை அவருடைய 42-வது வயதில் இழந்துவிட்டது.

இருபதாம் நூற்றாண்டின் இருபெரும் இலக்கிய ஆளுமைகளாக உருவெடுத்தவர்கள் பாரதியும், புதுமைப்பித்தனும். இருவருமே தங்களால் தமிழ் பெருமைகொள்ளும் என வெளிப்படையாகச் சொன்னவர்கள். அந்த நம்பிக்கை தந்த கம்பீரம் இருவரின் நடவடிக்கையிலும் இருந்தது. பாரதிக்கு முன்னுதாரணமாக தமிழில் வளமான கவிதை மரபு இருந்தது. உரைநடையோ இருபதாம் நூற்றாண்டு ஈன்றெடுத்த குழந்தை. முன்னுதாரணமற்ற உரைநடை பாணி புதுமைப்பித்தனுக்கு வாய்த்தது.

புதுமைப்பித்தனின் மெலிந்த தேகத்துக்குள் காட்டாற்று வெள்ளம்போல் சீறீப் பாயும் படைப்புள்ளம் இருந்தது. 1933-ல் தன்னுடைய 27-வது வயதில் கதைகள் எழுதத் தொடங்கிய புதுமைப்பித்தன், 30 கதைகளை முதல் ஓராண்டில் எழுதியிருக்கிறார் என்பதே அவரின் மன வேகத்துக்கு உதாரணம்.

எதையும் சிறுகதையாக்கலாம்

புதுமைப்பித்தன் கதைகள் அவருடைய காலத்திலேயே பெரும் விமர்சனத்துக்கு உள்ளாயின. அவர் தன் கதைகளைக் கருத்தியல் அடிப்படையில் எழுதியதில்லை. அனுபவம் சார்ந்தே எழுதினார். எந்தக் கோட்பாட்டு வளையத்துக்குள்ளும் புதுமைப்பித்தனை அடைத்துவிட முடியாது. எதையும், எவரையும் சிறுகதையாக்கலாம் என்ற சுதந்திரத்தை சிறுகதையில் செய்து காட்டினார். புதுமைப்பித்தன் சிறுகதைகளின்மேல் பல விமர்சனங்கள் கொண்ட க.நா.சு., “தமிழில் சிறுகதை எழுதப் பேனா பிடித்தவர்களிலேயே மேதமை படைத்தவர் புதுமைப்பித்தன் ஒருவர்தான்” என்கிறார்.

‘தன் கதைகளில் நம்பிக்கை வறட்சியே மேலோங்கிக் காணப்படுவதாக’ சுயவிமர்சனம் செய்துகொண்ட புதுமைப்பித்தன் கதைகளில் வெளிப்பட்ட கூர்மையான விமர்சனங் களும், கேலியும், சமூகத்தைப் பற்றிய கோபமும் இன்னும் பழையதாகி விடவில்லை. கதைகளுக்குள் எப்போதும் கறாரான விமர்சன சவுக்கை வைத்திருப்பார். “பரிணாமத் தத்துவப்படி தோன்றிய முதல் குரங்கு, தமிழ்க் குரங்கு என்றால்தான் நம்மளவனுக்குத் திருப்தி” - அவரின் ஒரு சவுக்கு.

வேதாந்திகளின் கைக்குள் சிக்காத கடவுள் மாதிரி, தன் கதைகளை இலக்கிய உலகில் உலவவிட்ட புதுமைப்பித்தன், முற்போக்குவாதி, ஆன்மிகவாதி என்ற அடையாளங்களுக்குள் நின்றதில்லை. “என்னுடைய கதைகள் உலகத்துக்கு உபதேசம் செய்து உய்விக்க ஏற்பாடு செய்யும் ஸ்தாபனம் அல்ல. பிற்கால நல்வாழ்வுக்குச் சவுகரியம் பண்ணிவைக்கும் இன்சூரன்ஸ் ஏற்பாடும் அல்ல” என்று மதிப்பீடுகளை உதறித் தள்ளி கொள்கை, கோட்பாடுகளில் இருந்து விலகி நின்று கொள்வார்.

சிதறிப்போன பெருங்கனவு

புதுமைப்பித்தன் என்று பெயர் சூட்டிக்கொண்ட சொ.விருத்தாசலத்துக்குப் பூர்வீகம் திருநெல்வேலி என்றாலும் அவர் பிறந்தது கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில். அவருடைய அப்பா நிலப் பதிவு தாசில்தாராக இருந்ததால், ஒவ்வொரு ஊராகச் சென்று கொண்டிருந்த புதுமைப்பித்தன் தன்னுடைய 12-வது வயதில்தான் திருநெல்வேலிக்குத் திரும்புகிறார்.

8 வயதிலேயே தாயை இழந்த புதுமைப்பித்தனுக்கு, வாழ்நாளின் இறுதிவரை அந்தத் தனிமை தீராமல் இருந்தது.

தந்தையின் செல்வாக்கினால் ஓர் அரசு அதிகாரியாகி வாழ்வில் செல்வ நிலையில் இருந்திருக்க முடியும். ஆனால் எழுத்தாளனாக அதுவும் முழுநேர எழுத்தாளனாக வேண்டும் என்ற பேய், புதுமைப்பித்தனின் மனதைப் பிடித்து ஆட்டியதால், துன்ப வாழ்வில் தள்ளப்பட்டார். “அவன் பிறந்த ராசி அப்படி, அடங்காதவன்” என்று தந்தையால் கைவிடப்பட்ட போது புதுமைப்பித்தனுக்கு, கமலாவுடன் திருமணம் முடிந்திருந்தது.

மனைவியை உடன் வைத்துக்கொண்டு சென்னையில் காலம் தள்ள முடியாது என்று தீர்மானித்த புதுமைப்பித்தன், கமலாவை அவரின் சொந்த ஊரான திருவனந்தபுரத்தில் விட்டுவிட்டு, சென்னையில் பத்திரிகையில் சேர வந்தார். பெருநகரங்கள் ஆயிரக்கணக்கான கலைஞர்களின் பெருங்கனவுகளைச் சிதறடித்திருக்கின்றன. பெருநகரத்தின் சூட்சுமம் புரியாமல் தொலைந்துபோன, தொலைந்து போய்க்கொண்டிருக்கும் பலருக்கு, புதுமைப்பித்தன் ஒரு முன்னோடியானார்.

சினிமாவுக்கும் போனார்

காந்தி, ஊழியன், மணிக்கொடி போன்ற பத்திரிகைகளில் பணியாற்றி, அவைகளின் ஆயுள் நீடிக்க வழியில்லாத நிலையில், ‘தினமணி’ நாளிதழில் உதவி ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். ‘தினமணி’ ஆசிரியர் சொக்கலிங்கம் அவர்களுடன் ஓரளவுக்குப் புரிதலுடன் பணிசெய்ய முடிந்ததால், ஏழாண்டு காலத்தை ஓட்ட முடிந்தது. ‘தினமணி’யில் இருந்து சொக்கலிங்கம் வெளியேறி, ‘தினசரி’ என்ற நாளிதழை ஆரம்பித்தபோது, புதுமைப்பித்தனும் அதில் சேர்ந்தார். `தினசரி’யிலும் தொடர முடியாத நிலையில் முழுநேர எழுத்தாளரானார்.

16 ஆண்டுகள் திருமண வாழ்வில் 10 ஆண்டு காலம் மனைவியைப் பிரிந்து வாழ்ந்திருக்கிறார். பிரிவின் துயரம் கொந்தளிக்க, காதலும் பரிதவிப்பும் பொங்கிய மனநிலையில், தன் மனைவி கமலாவுக்கு ஏறக்குறைய தினம் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். ‘எனதாருயிர்க் கண்ணாளுக்கு...’ என அவர் எழுதிய கடிதங்கள், தமிழின் துயரக் காவியத்தின் பக்கங்கள். `தன்னிடமிருந்தே தான் தப்பிக்க வேண்டும்’ என்று புதுமைப்பித்தன் முயற்சித்துக் கொண்டிருந்த வேளையில், தன் ஆருயிர் கண்ணாளை, கடிதங்கள் வாயிலாகத் துயரங்களில் இருந்து கரையேற்ற நினைத்தார் புதுமைப்பித்தன்.

தன் வாழ்வின் சிரமதசையை எப்படியாவது சரிசெய்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் திரைப்படங்களுக்கு வசனம் எழுதச் சென்றார். பருவம் தப்பிய பயிர் போலவே, திரைப்படத் துறை அனுபவமும் அவருக்கு அவ்வளவு அனுகூல மாக அமையவில்லை. ஜெமினி ஸ்டுடியோ தயாரித்த ‘அவ்வையார்’ படத்துக்கு வசனம் எழுதினார். பணம் கிடைத்தது. படத்தில் வசனம் இடம் பெறவில்லை. ‘காமவல்லி’ படத்தில் வசனம் எழுதினார். பணமும் பெயரும் கிடைத்தது. கிடைத்தப் பணத்தை எதிர்காலத்துக்காக சேமிக்கும் சுதாரிப்பு புதுமைப்பித்தனிடம் இல்லை. ‘பர்வதகுமாரி புரொடக்‌ஷன்ஸ்’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். இருந்த பணம் மொத்தமும் படக் கம்பெனியின் விளம்பரத்துக்கே செலவழிந்தது.

எம்.கே.தியாகராஜ பாகவதரின் ‘ராஜமுக்தி’ படத்தில் வசனம் எழுத புனே சென்ற புதுமைப்பித்தனுக்கு அந்தப் பயணமும் தோல்வியில் முடிந்தது. பாகவதர் மட்டுமே புதுமைப்பித்தனுக்கு ஆதரவாக இருந்த நிலையில், பணம் வருவதில் பல சிக்கல்கள். பேசிய பணத்தைக் கொடுக்காமல் இழுத்தடித்த படக்குழுவினரிடம் போராடும் அளவுக்குத் தெம்பு இல்லாததால், நுரையீரல் முழுக்க காச நோயுடன் ஊர் திரும்பினார்.

வெகுவாக தன்சுத்தத்தை பராமரித்தவருக்குத் தொற்று நோய் வந்தது வேதனையே. நல்ல காபியையும், அமர்த்தலாக வெற்றிலைப் போடுவதையும், நண்பர்களுடன் சுவாரசியமான பேச்சையும் விரும்பும் புதுமைப்பித்தனின் இறுதி நாட்கள் துயரம் என்ற சொல்லுக்குள் அடங்க மறுப்பவை.

உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு தன் மனைவியையும் மகள் தினகரியையும் பார்த்துவிட்டால்போதும் என்ற வேதனையில் புனேயில் இருந்து ஊர் திரும்பிய அவரின் இரண்டு நுரையீரல்களையும் காசம் தின்றிருந்தது. தன் எழுத்தின் சக்தியை தமிழ்ச் சமூகம் ஏற்கவில்லையே என்ற ஏக்கம் அவரின் இதயத்தைத் தின்றது.

தன் நோயின் தீவிரத்தைப் புரிந்துகொண்ட புதுமைப்பித்தன், அதில் இருந்து மீண்டுவிட பெரும் முயற்சி எடுத்தார். தன்னுடைய மனைவிக்காகவும் மகளுக்காகவும் வாழ வேண்டும் என்று விரும்பினார். எழுத்தாளர்களுக்கு நிதி திரட்டுவதை ஒருபோதும் விரும்பாதவர் புதுமைப்பித்தன். ஆனால் தன்னுடைய நோயை குணப்படுத்த தேவைப்படும் பணத்துக்காக உதவி கேட்டு சென்னை மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்த எழுத்தாளர்களுக்கு கடிதம் எழுதும் சூழலுக்குத் தள்ளப்பட்டார். ‘‘தமிழ்நாட்டுக்கு நான் செய்த சேவை தகுதியானது. மறுக்க முடியாதது. இன்று சாகக் கிடக்கிறேன். வறுமையினால் சாகக் கிடக்கிறேன். எனவே, தமிழ்நாட்டாரைப் பார்த்து நீங்கள் எனக்கு உதவி செய்யுங்கள் என்று கேட்க எனக்கு உரிமை உண்டு” என்று, தன்னையே ஆறுதல் செய்துகொண்டு, தன் நண்பர் ரகுநாதனுக்கு புதுமைப்பித்தன் எழுதிய வரிகள் தமிழ்ச் சமூகத்தின் ஆறா வடு. மாபெரும் கலைஞனின் நிராதரவான குரல் தமிழ் இலக்கிய உலகில் செவிமடுக்கப்படாமலேயே போய்விட்டது.

கடைசிக் காலங்களில்...

நோய் முற்றி, மரணம் முடிவான நிலையிலும் புதுமைப்பித்தன் தன்னைக் காப்பதற்கு உதவிகள் வரும் என்று காத்திருந்திருக்கிறார். அவர் காத்திருந்த மணியார்டர், மரணம்தான் என்பதை இறுதியில் புரிந்துகொண்டார். புதுமைப்பித்தனின் கடைசிக் காலங்களில் திருவனந்தபுரத்தில் அவருடன் இருந்த ‘கவிக்குயில் மலர்’ ஆசிரியர் எஸ்.சிதம்பரம், புதுமைப்பித்தனின் மரணத்தைப் பற்றி எழுதியிருக்கும் 28 பக்க நினைவுகள், ரத்தம் தோய்ந்தவை.

சின்ன ஓலைப்பந்தலின்கீழ், எண்ணெய்ப் பிசுக்குப் படிந்த கட்டிலில், குச்சியான தேகத்துடன் மரணித்துக் கிடந்த புதுமைப்பித்தனைப் பார்த்து அவரின் காதல் மனைவி கதறு கிறார்.

“இன்னும் கொஞ்ச நேரத்தில் சாம்பலாகிவிடுவாயே கண்ணா, கடைசியாக ஒரு முத்தமாவது கொடு என் ராஜா” என்று உலர்ந்த அந்த உதடுகளின்மேல் கமலா முத்தம் கொடுக்கிறார். புதுமைப்பித்தன், மனைவியின் அன்பை மட்டுமே நிரந்தரமாகப் பெற்றார்.

எழுத்தை நம்பி, எழுத்தாளனாகவே வாழ ஆசைப்பட்ட புதுமைப்பித்தன் எனும் இலக்கியப் பேரொளி பாதியிலேயே அணைந்தது.

- வருவார்கள்...

எண்ணங்களைப் பகிர: vandhainila@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x