Last Updated : 21 Jun, 2018 10:42 AM

 

Published : 21 Jun 2018 10:42 AM
Last Updated : 21 Jun 2018 10:42 AM

மரணம் ஒரு கலை 17: மரணம் காப்பாற்றிய கவிதை

அன்னா அக்மதோவா

சி

லுவையின் வடிவத்தில் கட்டப்பட்டிருந்த லெனின்கிராடு சிறைச்சாலையின் முன் நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருக்கிறார்கள். தந்தையை, மகனை, காதலனைப் பார்க்கத் தவித்தவர்களின் ஓலங்கள் காற்றை வெப்பமாக்குகின்றன. 17 மாதங்களாக நீண்ட வரிசையில் காத்திருக்கிறார் அன்னா. தன்னுடைய ஒரே மகனின் முகத்தைப் பார்த்துவிட மாட்டோமா? தான் கொண்டு வரும் உணவுப் பொட்டலத்தை மகனுக்குக் கொடுத்துவிட மாட்டோமா என்ற தவிப்பில் அலைபாய்கிறார். ஆண்டுக்கணக்கில் வரிசையில் நிற்கின்ற பெண்கள், பனியால் தீற்றப்பட்ட சோகச் சித்திரங்களாக உறைந்துபோய் இருந்தார்கள். அடையாளம் கண்டுகொண்ட ஒருவர் அன்னாவைப் பெயர் சொல்லி அழைக்கிறார். உச்சரிக்கப்பட்ட பெயரைக் கேட்டவுடன், நீலம் பாரித்த உதடுகளுடன் நின்றிருந்த பெண்ணொருத்தி அன்னாவைத் திரும்பிப் பார்த்தார். பிரிக்கவே விருப்பமில்லாத தன் இதழ்களைப் பிரித்து, “இதை உங்களால் சித்தரிக்க முடியுமா?” என்றார். துயரத்தில் மரத்துப்போய் நின்றிருந்த அன்னா “என்னால் முடியும்” என்றார்.

ஸ்டாலின், ருஷ்யா முழுவதும் அடக்குமுறையை கட்டவிழ்த்திருந்த நேரம். லட்சக்கணக்கான மக்களும் படைப்பாளிகளும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.

கொல்லவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்ட பிறகு காரணங்கள் உருவாக்கப்பட்டன. கைது செய்ய வேண்டும் என்றால் காரணங்கள்கூட வேண்டியதில்லை.

இரண்டு கவிஞர்களின் மகன் என்பதற்காகவே லெவ் குமிலெவ் கைது செய்யப்பட்டார். ஆட்சிக்கும் கட்சிக்கும் எதிராக விமர்சனங்கள் எழும் இடங்களில் தடைகளும் பரி சோதனைகளும். அன்னாவும் இரண்டு உளவு அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டார்.

கண்ணீரில் கண்டெடுத்த சொற்கள்

சிறை வாசலில் கொடுத்த வாக்குறுதி அன்னாவை விரட்டிக் கொண்டிருந்தது. தாளெடுத்து எழுத முடியாது. எழுதியதை பத்திரப்படுத்த முடியாது. பரிசோதனையில் சிக்கினால் மகனின் உயிருக்கு ஆபத்து. தான் எழுதிய நாடகப் பிரதி ஒன்றையும், கவிதைகள் எழுதிய நோட்டுப் புத்தகத்தையும் ஏற்கெனவே ஒருமுறை தீயிலிட்டு எரித்திருக்கிறார்கள். எனவே, அன்னா அடக்குமுறையின் துயரத்தை தன் மனதுக்குள் எழுதினார். சிறை வாசலில் காத்திருந்த ஒவ்வொருவரின் கண்ணீரில் இருந்தும் கவிதைக்கான சொற்களைக் கண்டெடுத்தார். மனதுக்குள் `இரங்கற்பா’ என்ற நீள்கவிதை உருவானது. ருஷ்யாவின் தாயாக, மக்களின் துயர் பேசும் ரட்சகியாக, மொழியின் சொற்களைக் காப்பாற்றும் தேவதையாக தன்னுடைய நீண்ட கவிதையை எழுதிக்கொண்டிருந்தார். நினைவுகளிலேயே உயிர் வாழ்ந்த அக்கவிதை, எழுதி 40 ஆண்டுகள் கழித்துதான் முதல் பிரசுரத்தைக் கண்டது.

கவிஞர் அன்னா அக்மதோவா வாழ்நாள் முழுக்க நெருக் கடிகளில் வாழ்ந்தவர். ஜார் மன்னராட்சியின் வீழ்ச்சி, ருஷ்யப் புரட்சி, இரண்டு உலகப் போர்கள், உள்நாட்டுப் போர்... ருஷ்ய வரலாற்றினை சூறாவளியாகக் கடந்த, கனத்த இச் சம்பவங்களின் ஊடாக, புயற்காற்றில் நின்றெரியும் அகல் விளக்கென வாழ்ந்தவர் அன்னா.

16 ஆண்டுகாலம் ஒன்றுமே எழுத முடியாத அடக்குமுறை யின் கொடூரமான சூழல், 30 ஆண்டுகாலம் பின்தொடர்ந்த அரசாங்கத்தின் கண்காணிப்பு, பொதுவுடைமைக் கட்சியின் மத்தியக் குழு சோவியத் எழுத்தாளர்கள் கூட்டமைப்பில் இருந்து விலக்கி வைத்து, அன்னாவின் படைப்புகள் சோவி யத் அச்சகத்தில் பிரசுரிக்கப்படக்கூடாது என்று பிறப்பித்த ஆணை, அதனைத் தொடர்ந்த அவதூறுப் பிரச்சாரங்கள், “பாதி கன்னியாஸ்திரி, பாதி பரத்தை” என்ற இழிசொல்... போன்ற சொந்த வாழ்வின் துயரங்களும் அன்னாவை துரத்தின.

காதலில் இணைந்தார்கள்

துர்க்கனவுகள் உண்டாக்கும் அச்சத்தில் இருந்து விழித்து எழுவதுபோலவே அவருடைய நாட்கள் விடிந்திருக்கின்றன. 20 வயதில் நிக்கோலாய் குமிலெவ்வை காதலித்து மணம் செய்துகொண்டார். இருவரும் கவிஞர்கள். ஒத்த சிந்தனையாளர்கள். ஆனாலும் கணவன் மனைவியாக சேர்ந்து வாழ்வ தில் சிக்கல். பயணங்களில் பெரும்விருப்பம் கொண்டவரான குமிலெவ் ஆப்பிரிக்க காடுகளில் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருந்தார். துணிகரமான, மனவெழுச்சித் தரும் பயணக் கதைகளைச் சுமந்து அவர் நாடு திரும்புவதற்குள் அன்னா கவிதைகளில் பெயர் வாங்கியிருந்தார். காதலனின் பிரிவும் துயரமும் தனிமையும் நிரம்பிய அவரின் கவிதைகள் பெற்றுத் தந்திருந்த புகழை குமிலெவ் விரும்பவில்லை. முதலாம் உலகப் போர் வெடித்ததும் குமிலெவ், தானாகவே விரும்பிப் போர்க்களத்துக்குச் சென்றார். பிரான்ஸின் படையெழுச்சிப் பிரிவில் சேர்ந்து செயல்பட்டதால், ருஷ்யாவின் எதிரியாக நடத்தப்பட்டார்.

தனிப்பட்ட அவர்களின் வாழ்வில் நிகழ்ந்த நீண்ட காலப் பிரிவு, நிரந்தரப் பிரிவாகி 6 ஆண்டுகளுக்குள் மணவிலக்குப் பெற வைத்தது. இருவரும் பிரிந்த இரண்டாண்டுகளுக்குள், அரசுக்கு எதிரான சதித்திட்டமொன்றில் பங்கேற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு குமிலெவ் போல்ஷ்விக்குகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

குமிலெவ்வுக்குப் பிறகு ஷிலெய்க்கோ என்ற மொழி ஆராய்ச்சியாளரைத் திருமணம் செய்துகொண்டார். 2 ஆண்டுகள் மட்டுமே நீடித்த இந்த உறவுக்குப் பின் வரலாற்றா சிரியர் நிகோலாய் புனினுடன் வாழ்ந்தார். புனினும் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டு சைபீரிய சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அடக்குமுறை அதிகரித்த நேரங்களில் அன்னா தன் படைப்பூக்கத்தின் உச்சத்தில் எழுதிக்கொண் டிருந்தார். போரின் நெருக்கடிகளால் 2 ஆண்டுகளுக்குமேல் வறுமை வாழ்வு. ரொட்டியும் சர்க்கரை இல்லாத தேநீரும் குடித்த நாட்களிலும் அவர் சொற்களைச் செழுமைப்படுத்திக் கொண்டிருந்தார்.

அன்னாவின் சமகாலத்திய கவிஞர்கள் பலர் கொல்லப்பட்டார்கள். பலர் அந்நிய தேசங்களில் குடியேறினார்கள். அன்னாவுக்கும் அழைப்புகள் வந்தன. ஒருபோதும் சொந்த மண்ணைவிட்டுத் தன்னால் வெளியேற முடியாது என்பதை வாழ்ந்து நிரூபித்தார். இரண்டாம் உலகப் போரின்போது ஸ்டாலின் தற்காலிகமாக ருஷ்ய மக்களுடனும் படைப்பாளி களுடனும் இணக்கத்தில் இருந்தார். 900 நாட்கள் லெனின்கிராடு முற்றுகையிடப்பட்டிருந்தது. முற்றுகைக்கு எதிராக நகரத்தில் இருந்த பெண்களிடம், தங்களின் நேசத்துக்குரிய பீட்டர்ஸ்பெர்க் நகரத்தைக் காக்க வானொலிமூலம் அறைகூவல் விடுத்தார் அன்னா. ஆனாலும், போர் முடிவுக்கு வரும்முன்னே வலுக்கட்டாயமாக தாஷ்கண்டுக்கு விமானத்தின் மூலம் வெளியேற்றப்பட்டார்.

உற்சாகமும் நகைச்சுவையும் நிரம்பிய அன்னாவுக்கு ஏராளமான நண்பர்கள். ஒசிப் மண்டல்ஷ்டாம், பாஸ்டர்நாக் போன்ற ருஷ்யாவின் புகழ்பெற்ற கவிஞர்கள் அன்னாவுடன் நெருங்கிப் பழகியவர்கள். கவிதைகளில் சொற்சிக்கனமும், அவற்றில் வெளிப்படும் கம்பீரமும், சொற்களுக்கிடையில் அவர் ஒளித்து வைத்த ருஷ்யாவின் வரலாறும் துயரமும் இன் றும் பேசப்படுகின்றன. வாழ்க்கை தன்மீது சுமத்திய துயரங்களை எந்தப் புகாருமின்றி அமைதியாக ஏற்றுக் கொண்டவர்.

‘கவிதை என்பது தான் இளமையில் நினைத்ததுபோல் அல்ல’ என்பதைப் புரிந்துகொண்ட அன்னா, கவிதையின் நூற்றாண்டு அடையாளமாக இருந்தார். அன்னாவை, ருஷ்ய மக்கள் தங்களின் மனசாட்சியாக ஏற்றார்கள். ருஷ்யாவின் ‘தலைமைக் கவி’ என புகழ்ந்துரைத்தார்கள். 50 ஆண்டுகளுக்கும்மேல் வெளிநாடுகளுக்கு சாதாரணப் பயணம்கூட மேற்கொள்ளாமல், துயர்மிகுந்த ருஷ்யாவின் இரவுகளுக்குச் சாட்சியாக இருந்த அன்னாவை, 1989-ம் ஆண்டு ‘அக்மதோவா ஆண்டாக’ அறிவித்து பெருமைபடுத்தியது யுனெஸ்கோ.

கருங்கடலை ஒட்டிய புறநகர்ப் பகுதியில், துணிவுமிக்க தத்தாரிய குடும்பத்தில் பிறந்தவர் அன்னா(1889). அன்னா கோரெங்கோ என்ற இயற்பெயரை, அன்னா அக்மதோவா என 17 வயதில் மாற்றிக்கொண்டார். தந்தையுடன் விவாகரத்தான பிறகு, தனியாக தங்களை வளர்த்து ஆளாக்கிய தாயின் மூலமே கவிதைக்கான உந்துதலைப் பெற்றார்.

தாகூரையும் மொழிபெயர்த்தவர்

8 கவிதைத் தொகுப்புகள், 3 நீள்கவிதைகளின் மூலம் கவிதையின் தேவதையான அன்னா, பெண் கவிஞர் என்று தான் அடையாளப்படுத்தப்படுவதை ஏற்கவில்லை. அந்த அடையாளத்தின்மூலம் தன் கவிதைகள்மேல் எளிதாக மற்றவர்கள் அதிகாரம் செலுத்த இயலும் என்பதற்காகவே அந்த அடையாளத்தை எதிர்த்தார்.

ஸ்டாலின் இறந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு நிலைமை கொஞ்சம் சீரானது. கண்காணிப்புடன் கூடிய சுதந்திர வாழ்வு அன்னாவுக்கு அனுமதிக்கப்பட்டது. மறைக்கப்பட்டிருந்த பிரதிகளின் அச்சாக்கத்திலும், மீள்பிரசுரத்திலும் நிம்மதி யாகவே இறுதிக்காலத்தைக் கழித்தார். தொடர்ச்சியாக 20 ஆண்டுகள் 30 மொழிகளில் இருந்து ஏறக்குறைய 150 கவிஞர்களின் கவிதைகளை மொழிபெயர்த்திருக்கிறார். தாகூரின் கவிதைகளையும் அன்னா மொழிபெயர்த்திருக்கிறார்.

அன்னாவின் வரிகள்...

ருஷ்ய வரலாற்றின் நூற்றாண்டு சாட்சியமாக வாழ்ந்த அன்னா 77-வது வயதில் மாரடைப்பினால் இறந்தார்(1966). காலத்தின் மிகப்பெரிய முரண், ஸ்டாலினின் நினைவு தினமான மார்ச் 5-ம் தேதியே, அன்னாவும் இறந்தார்.

அன்னாவின் மரணத்தைப் பற்றித் தனியாகப் பேசிட என்ன இருக்கிறது? உலக நாடுகளிலேயே அச்சுறுத்தலுக்கு எதிரான குரலுடன் அதற்கு சாட்சியமாக வாழ்ந்த அன்னாவின் ஒவ் வொரு நாளும் மரணத்தின் சாம்பலுடன்தான் விடிந்தன.

“இந்த நாட்டில் தனக்கொரு நினைவாலயம் எழுப்ப யாரே னும் முடிவு செய்தால், தான் பிறந்த கடலுக்கருகிலோ, தன் வாழ்வில் காதல் மலர்ந்த ஜார் பூங்காவிலும் கட்ட வேண்டாம்.மீளாத் துயிலிலும் தன்னை பீதியடையச் செய்யும் லெனின்கிராடு சிறைச்சாலையின் வாசலில் நினைவிடத்தை எழுப்புங்கள்” என்ற அன்னாவின் வரிகள் நமக்குச் சொல்வது -

மரணத்தின் நாட்குறிப்புகளுக்கு இடையில்தான் அன்னா வாழ்ந்திருக்கிறார்.

- வருவார்கள்...

எண்ணங்களைப் பகிர : vandhainila@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x