Published : 03 Jun 2018 09:27 AM
Last Updated : 03 Jun 2018 09:27 AM
த
மிழ்ப் பேரராசிரியராக ம.லெ.தங்கப்பாவைப் புதுவைக் கல்வி உலகம் அறிந்திருந்தது. தனித்தமிழ்வாதியாக அவரைத் தமிழ் உலகம் கண்டுகொண்டிருந்தது. செயற்பாட்டாளராக அவரைத் தமிழ்நாட்டினர் இணைத்துக்கொண்டிருந்தனர். மொழிபெயர்ப்பாளராக இந்தியா இனங்கண்டிருந்தது. பெங்குவின் வழி வெளிவந்த ‘லவ் ஸ்டாண்ட்ஸ் அலோன்’ (Love Stands Alone) சாகித்திய அகாதெமியின் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான விருதைப் பெற்றது (2012). குழந்தை இலக்கியத்துக்கான விருதையும் சாகித்திய அகாதெமியிலிருந்து முன்பே பெற்றிருந்தார். இந்தியா கொண்டாடும்போது தமிழ்நாடு கொண்டாடவில்லை என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
தங்கப்பா என்றதும் அவருடன் பழகிய நண்பர்களுக்கு நினைவுக்கு வருவன பல. அவருடைய கொள்கை உறுதிப்பாடு அதில் ஒன்று. அவருக்கென்று தனிப்பார்வை உண்டு. அது தமிழ்ப் பார்வை. கோவையில் நடந்த உலக செம்மொழி மாநாட்டை அறிக்கையிட்டுப் புறக்கணித்த பெருமக்களில் அவரும் ஒருவர். அன்பே எல்லாவற்றுக்கும் தீர்வு என்பது தங்கப்பாவின் அசைக்க முடியாத நம்பிக்கை. அதற்காகப் போராட்டத்தைப் புறக்கணித்தவர் அல்ல. தமிழ் மண் சார்ந்த எல்லாப் போராட்டங்களிலும் முதலில் வந்து அமர்ந்தவர்.
இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை மேற்கொண்டவர், பரப்பியவர். வீட்டுக்கு வானகம் என்று பெயர். செங்கதிர், விண்மீன், இளம்பிறை, மின்னல் என்பன அவர் குழந்தைகளின் பெயர்கள். ஞாயிறுதோறும் ஊசுட்டேரிக்கு மாணவர்களை அழைத்துச்சென்று பறவைகளையும், தாவரங்களையும் அறிமுகப்படுத்துவார். புதுவை இயற்கைக் கழகத்தைத் தோற்றுவித்தவர்; பிற சுற்றுச்சூழல் அமைப்புகளோடு பங்களித்துக்கொண்டிருந்தவர்.
தமிழ் படித்து போதிக்கும் ஆசிரியர்களுக்குக் கணிதத்தைப் போலவே ஆங்கிலமும் வேப்பங்காயாக இருப்பது தமிழ் வாடிக்கை. இதற்கு நேர் எதிர் தங்கப்பா. சென்ற தலைமுறையைச் சேர்ந்த தங்கப்பா ஆங்கிலம் நன்கறிந்த தனித்தமிழ்வாதி. சங்க இலக்கியத்தை, முத்தொள்ளாயிரத்தை, வள்ளலாரை, பாரதியை, பாரதிதாசனை ஆங்கிலத்திற்குக் கொண்டுசென்றவர். தமிழ்தான் ஆ.இரா.வேங்கடாசலபதியை இவரோடு இணைத்தது என்றாலும் ஆங்கிலம்தான் பிணைத்தது என்று சொல்ல வேண்டும். நவீன கவிதைகளையும் தங்கப்பா மொழிபெயர்த்துள்ளார். பழமலய்யின் ‘இவர்கள் வாழ்ந்தது’ கவிதையை அவரது முன்னிலையில் மொழிபெயர்த்த காட்சி 25 ஆண்டுகளுக்குப் பின்னும் நினைவில் தங்கியிருக்கிறது.
உணர்ச்சிப்பெருக்கில் ஓடிவந்து விழும் சொற்றொடர்களைப் பிறகு பார்த்துப் பார்த்து செதுக்குகிறோமே அதுபோன்ற எழுத்துமுறை தங்கப்பாவிடம் கிடையாது. கடிதமானாலும் காவியமானாலும் ஒரே தடவையில் எழுதி முடித்துவிடுவது அவருடைய பாங்கு. அடித்தல், திருத்தல், நீக்குதல், சேர்த்தல், மாற்றுதல் அபூர்வம். உள்ளத்தின் உண்மை ஒளி. தனித்தமிழ்ச் சொற்களாலேயே அந்தச் சொற்றொடர் உருபெற்றிருக்கும். எழுதும்போது மட்டுமல்ல பேசும்போதும் குழந்தைகளைக் கொஞ்சும்போதும் தமிழ்தான், கலப்பில்லாத தமிழ். தூவல் (பேனா) என்ற சொல் ஒலியாகக் காதில் முதலில் விழுந்தது தங்கப்பா வீட்டில்தான். P.O.D. என்ற புத்தகம் அச்சிடும் முறைக்கு கேட்புப் புத்தகம் என்ற சொல்லை வழங்கியது தங்கப்பாதான்.
1994, 1995 ஆக இருக்கலாம். மனிதரில் மாற்றங்களை ஏற்படுத்தும் ஆற்றல் இசைக்கு உண்டா என்று சிந்தித்துக்கொண்டிருந்த காலம். அமிர்தவர்ஷிணி மழையைப் பொழிவிக்கும், நீலாம்பரி தூக்கத்தைக் கொண்டுதரும் என்ற நம்பிக்கைகளில் அறிவியல் அல்லது நடைமுறை உண்மைத் தன்மையைக் கண்டறிய ஜிப்மரில் டாக்டர் கீதாஞ்சலி ஒத்துழைப்பில் ஓர் ஆய்வை 10 மனித மாதிரிகளுடன் மேற்கொண்டேன். பல்வேறு வயது கொண்ட மனிதர்கள் அதில் பங்கேற்றனர். அதில் தங்கப்பாவும் ஒருவர். ஒருவகை தூக்கநோய் அவருக்கு இருந்தது எங்களுக்குத் தெரியவந்தது.
ஜிப்மர் மருத்துவமனைக்கு அவர் தன் உடலைக் கொடையாகக் கொடுக்க ஒப்பந்தம் செய்துவிட்டிருந்தார். மற்றவர்களுக்குப் பயன்படும் வாழ்க்கையை வாழ்ந்தவர், வாழ்க்கைக்குப் பிறகும். சமூக மனிதர் அவர். சமூகத்துக்கு வந்த மனிதரைக் குடும்பக் கூட்டுக்குத் துரத்தும் தலைவர்கள் முக்கியத்துவம் பெறும் காலத்தில் தங்கப்பா போன்றவர்கள் நமக்கு ஆதர்சங்கள். திருநெல்வேலி மாவட்டம் குறும்பலாப்பேரியில் 1934-ல் பிறந்த மதன பாண்டியன் லெனின் தங்கப்பா, தன் 84-ம் வயதில் சிறிதுகாலம் நோய்வாய்ப்பட்டிருந்து காலமானார். அவர் இறந்த நாளை காலம் நினைவில் வைத்துக்கொள்ளுமா என்று தெரியவில்லை. பிறந்த நாளை பெண்ணுலகம் மறக்காது. அது ஒரு மார்ச் 8-ம் நாள்.
கவிதை, உரைநடை, மொழிபெயர்ப்பு என்றெல்லாம் கவனம் பதிந்திருந்தாலும் இறுதிக் காலத்தில் குழந்தைகளுக்கான நூல்கள் எழுதுவதில் அதிக கவனம் செலுத்தினார். பெரியவர்களைத் திருத்த முடியாது என்று அவர் நினைத்திருக்கலாம். அவர் பலநூல் எழுதி இருப்பினும் என் மனம் கவர்ந்தது ‘எது வாழ்க்கை’ என்ற நூல். குறிக்கோள் இலாது கெட்டேன் என்ற அப்பரின் தேவார வரியைச் சுட்டிக்காட்டி அப்படியெல்லாம் வாழ்க்கைக்கு நோக்கம் என்ற ஒன்று உண்டா? அப்படி வைத்துக்கொள்வதால் நேரும் பயன், பயனின்மைகளை விளக்கும் தங்கப்பா, எறும்பு தள்ளிக்கொண்டு போகும் அழுக்குருண்டைகளாய் நாம் என்று நமது தற்செயல் வாழ்க்கையை விவரித்து முடிக்கிறார். யாருடைய எலிகள் நாம் என்ற சமீபத்துச் சந்தேகமும், யாருடைய நடமாடும் நிழல்கள் நாம் என்ற பழைய கேள்வியும் துளைத்தெடுத்த நம் மனதில் அப்படி மேலுமொரு கேள்வியைச் செருகிச் சென்றவர் தங்கப்பா.
தங்கப்பா புலமையை இன்னும் தமிழ்நாடு பயன்கொண்டிருக்கலாம்தான். இரத்தம்தான் உயிர். ஆனால், மாமிசங்கள் போற்றப்படுகின்றன. தங்கப்பா, தமிழ்ச் சமூகத்தின் இரத்தம். ஆனால், இரத்தம் புசிக்கப்படுவதில்லை. தண்ணீரைப் போல் கீழே கொட்டி ஊற்றுகிறோம். தமிழர் வீணாக்கிய இன்னொரு இரத்த வங்கி தங்கப்பா.
- பழ.அதியமான்,
தொடர்புக்கு: athiy61@yahoo.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT