Last Updated : 30 Aug, 2014 11:39 AM

 

Published : 30 Aug 2014 11:39 AM
Last Updated : 30 Aug 2014 11:39 AM

இரண்டு கவிஞர்கள், ஓர் ஆவணப்பட இயக்குநர்

அக்டோபர் 16, 1916 தேதியிட்ட சுதேசமித்திரனில் பாரதி தான் எழுதிய கட்டுரையில் மாடர்ன் ரிவ்யூ என்ற கல்கத்தா பத்திரிகையில் அப்போது வெளியான யோநெ நொகுச்சி என்ற ஜப்பானியக் கவிஞரின் கடிதம் ஒன்றைக் குறிப்பிடுகிறார். ’மேற்குக் கவிதையில் சொல் மிகுதி. எண்ணத்தை அப்படியே வீண் சேர்க்கையில்லாமல் சொல்லும் வழக்கம் ஐரோப்பியக் கவிதையில் இல்லை. எதுகை சந்தம் முதலியவற்றைக் கருதியும், சோம்பற் குணத்தாலும், தெளிவில்லாமையாலும் பல சொற்களைச் சேர்த்து வெறுமே பாட்டை, அது போகிற வழியெல்லாம் வளர்த்துக்கொண்டு போகும் வழக்கம் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் அதிகமிருக்கிறது. ஜப்பானில் அப்படி இல்லை. வேண்டாத சொல் ஒன்றுகூடச் சேர்ப்பது கிடையாது. . . சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் ஜப்பானியக் கவிதையின் விசேஷத் தன்மை’ என்று நொகுச்சி அக் கடிதத்தில் சொல்வதை பாரதி மேற்கோள் காட்டுகிறார்.

தொடர்ந்து, ஹொகூஷி என்ற சீடர் தன் வீடு தீப்பற்றி எரிந்துபோனதைத் தன் குருவுக்கு ‘வீடு தீப்பட்டெரிந்தது. வீழுமலரின் அமைதியென்னே’ என்ற கவிதையின் மூலம் தெரியப்படுத்தியதை ஜப்பானியக் கவிதையின் விசேஷத் தன்மைக்குச் சான்றாக நொகுச்சி குறிப்பிடுவதையும் பாரதி பதிவு செய்கிறார். மலரும் சீடரும் தங்களுக்கு நேர்ந்த துன்பத்தினால் அமைதி இழக்கவில்லை என்பதே அந்த ஹைகூ உணர்த்துவது. ‘கடுகைத் தொளைத்தேழ் கடலைப் புகட்டும்’ குறள் தமிழில் உண்டென்பதையும் ஒரேடியாகக் கவிதை சுருங்கியே போய்விட்டால் நல்லதன்று, ஜப்பானி லேகூட எல்லாக் கவிதையும் ‘ஹொகூஷி’ பாட்டு இல்லை என்றும் ஹொகூஷி சொல்வதில் அருமையான உண்மையிருக்கிறது என்றும் சொல்லி ‘எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்...’ என்ற குறளோடு பாரதி கட்டுரையை முடிக்கிறார்.

தமிழ் மொழிக்கு ஹைகூவை, அதன் பெயரைக் குறிப்பிடா மலேயே, முதன்முதலாக அறிமுகப்படுத்தி யிருக்கிறார் பாரதி.

நொகுச்சி (1875-1947) ஜப்பானிய மொழியிலும் ஆங்கிலத்திலும் எழுதிய கவிஞர், புனைகதையாளர், விமர்சகர். ஹைகூ வடிவத்திலும் ஜென் தத்துவத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இளம் வயதை நியூயார்க்கிலும் லண்டனிலும் கழித்தார். ஹார்டி, யேட்ஸ், தாகூர், சரோஜினி நாயுடு போன்றவர்களோடு நெருங்கிய பரிச்சயம் கொண்டிருந்தார். தன் முதல் கவிதைத் தொகுப்புகளை அமெரிக்காவில் வெளியிட்ட அவர் அமெரிக்கக் கவிஞர்களை ஹைகூ வடிவத்தை முயலுமாறு கேட்டுக்கொண்டார். ஜப்பானியக் கலாச்சாரத்தை மேற்குலகுக்கும் மேற்குலகக் கலாச்சாரத்தை ஜப்பானுக்கும் அறிமுகப்படுத்தும் அறிவுஜீவியாக அவர் அறியப்பட்டார்.

இரண்டாம் உலகப் போரில் மேற்கு நாடுகளின்மீது நடந்த ஜப்பானியத் தாக்குதலை அவர் ஆதரித்தார். போரின் இறுதியில் அமெரிக்கத் தாக்குதலில் அவருடைய வீடு அழிந்துபோனது. வயிற்றுப் புற்றுநோய் காரணமாக 1947-ல் இறந்தார்.

ஏ.கே. செட்டியார் என்று பரவலாக அறியப்படும் அ.கருப்பன் செட்டியார் (1911-1983) செட்டிநாட்டுக் கோட்டையூரில் பிறந்தவர். காந்தி குறித்த ஆவணப்படம் தயாரிக்கும் திட்டத்தோடு அவர் தொடர்பான படச்சுருளகளைச் சேகரிக்க தென் ஆப்பிரிக்கா தொடங்கி பல நாடுகளுக்கும் 1937-40 காலகட்டத்தில் பயணித்தவர். பயண கட்டுரைகள்யும், ஆய்வுக்கட்டுரைகளையும் அறிவுலகச் சிந்தனைகளையும் வெளியிட்ட குமரி மலர் (1943-83) என்ற குறிப்பிடத்தக்க மாத இதழையும் நடத்தினார்.

நொகுச்சியின் இந்தியப் பயணம், காந்தியை அவர் சந்தித்தது போன்ற வற்றால் செட்டியார் அவரை அறிந்திருக்கிறார். 1930களின் பிற்பகுதியில் டோக்கியோவில் நொகுச்சியை அவருடைய இல்லத்தில் சந்தித்துப் பேசியதை ஒரு கட்டுரையாக ஜோதி இதழில் (செப்டம்பர், 1937) எழுதியிருக்கிறார். உலகம் சுற்றும் தமிழன் நூலில் இக்கட்டுரை இடம்பெற்றுள்ளது. நொகுச்சி ஜப்பானிய உடையில் இந்திய முறை வணக்கத்தோடு செட்டியாரை வரவேற்றிருக்கிறார்.

சென்னை வெயில், காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தியோடு காங்கிரஸ் பொருட்காட்சிக்குச் சென்றது, உதயசங்கரின் நடனத்தைப் பார்த்தது, நேரு அப்போது ஐரோப்பாவில் இருந்ததால் அவரைச் சந்திக்க இயலாமல் போனதால் வருந்தியது, காந்தியின் ஒவ்வொரு சொல்லிலும் தத்துவம் அடங்கியிருப்பது என்று பல விஷயங்களைக் குறித்து நொகுச்சி உரையாடியிருக்கிறார். தன் கட்டுரைகள் மூலம் இந்தியாவை ஜப்பானியர்களுக்கு அறிமுகப்படுத்திய அவர் இந்தியாவின் சில குறைகளையும் சுட்டிக்காடியுள்ளார் என்றும் அக்குறைகளைக் களைய நாம் முயல வேண்டுமே தவிர அதற்காக அவர்மீது கோபம் கொள்ளலாகாது என்றும் செட்டியார் குறிப்பிடுகிறார்.

இம்மூன்று ஆளுமைகளும் ஒருவரோடொருவர் வெவ்வேறு நிலைகளில் கொண்ட ஊடாட்டம் அவரவர் கலாச்சாரத்துக்கு விளைத்த பயனுக்கு வரலாறு சாட்சி.

கட்டுரையாளர், தொடர்புக்கு: sivaranjan51@yahoo.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x