Published : 05 May 2018 08:01 AM
Last Updated : 05 May 2018 08:01 AM

எழுத்தும் மனிதகுலத்தின் பாய்ச்சல்!

மே

ற்கில், கடந்த பிப்ரவரி மாதத்தை ‘கறுப்பர் வரலாற்று மாத’மாகக் கொண்டாடினார்கள். அதன் வெற்றி இந்தியாவிலும் பிரதிபலித்திருக்கிறது. ஆம், ஏப்ரல் மாதத்தை ‘தலித் வரலாற்று மாத’மாகக் கொண்டாடுகிறார்கள் இங்குள்ள அறிவியக்க ஆளுமைகள்.

சென்னையில், பனுவல் புத்தக நிலையம் ‘தலித் வரலாறுகள்’ என்ற தலைப்பில், கடந்த மாதம் முழுவதும் தலித் பிரச்சினைகளைப் பற்றிப் பேசும் படங்களின் திரையிடல், எழுத்தாளர் சந்திப்பு, நூல்கள் திறனாய்வு போன்ற விஷயங்களை மேற்கொண்டது. இந்நிகழ்வுக்குக் கடந்த 22-ம் தேதி உரையாற்ற வந்திருந்தார் மராத்தி எழுத்தாளர் ஊர்மிளா பவார்.

‘சாதி முறையை எதிர்த்துப் போராடுவதற்கு இலக்கியம் சிறந்த வழிதான்’ என்றார் அம்பேத்கர். அந்த வழியில், தலித் எழுத்தாளர்கள் பலர் நடைபோட்டுள்ளனர். கவிதையாகவும், கட்டுரையாகவும், சிறுகதையாகவும், நாவலாகவும், நாடகமாகவும் தங்களின் சுவட்டைப் பதித்துச் சென்றிருக்கிறார்கள். அவர்களில் பெண்களும் உண்டு. எனினும், ஊர்மிளா பவாருக்கு மராத்திய தலித் இலக்கிய உலகில் தனிச் சிறப்பு இருக்கிறது. ஏனென்றால், அவர்தான் தலித் வாழ்க்கையைச் சிறுகதை வடிவில் சொன்ன முதல் இந்திய பெண் எழுத்தாளர்!

ஒரு நாடகம், இரண்டு சிறுகதைத் தொகுப்புகளைக் கொண்டுவந்திருக்கும் இவரது கதைகளில் சில, வீணா தேவ் என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ‘மதர்விட்’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. ‘ஆய்தான்’ என்ற தலைப்பில் இவர் எழுதிய சுயசரிதையை மாயா பண்டிட் என்பவர் ஆங்கிலத்தில் ‘தி வீவ் ஆஃப் மை லைஃப்’ என்று மொழிபெயர்த்துள்ளார். தமிழில் இதை ‘முடையும் வாழ்வு’ (விடியல் பதிப்பகம்) என்று மொழிபெயர்த்திருக்கிறார் போப்பு.

ஒரு பெண்ணாகவும், அதிலும் தலித்தாகவும் இருந்துகொண்டு சமூகத்தைப் பார்க்கிற ஊர்மிளாவின் கதைகள், ‘தலித் பெண்ணிய’ அல்லது ‘அம்பேத்கரியப் பெண்ணிய’ கோணத்தில் தலித்துகளின் பிரச்சினைகளை அலசுகின்றன.

உதாரணத்துக்கு, அவரது ‘வேக்ளி’ (ஆங்கிலத்தில் ‘ஆட் ஒன்’. அதாவது, ‘கூட்டத்துடன் ஒன்றாத’, ‘தனித்து நிற்கிற’ என்று பொருள்கொள்ளலாம். சுருக்கமாக, ‘மற்றமை’.) எனும் கதையைச் சொல்லலாம். புகுந்த வீட்டில் இருந்துகொண்டு அலுவலகம் சென்றுவரும் பெண்ணுக்கு, அலுவலகத்திலும் வீட்டிலும் ஏற்படுகிற பிரச்சினைகளும் நிர்ப்பந்தங்களும்தான் கதை. அவளுடைய சாதியைக் காரணம் காட்டி, அலுவலகத்தில் அவளை எல்லோரும் விலக்கிவைக்க, வீட்டிலோ, ‘சம்பாதிக்கும் திமிரில் ஆடுகிறாள்’ என்று விமர்சிக்கப்படுகிறாள். வீட்டில் ஏற்படும் நெருக்கடி தாளாமல், அவள் தனியே வீடு பார்த்துச் சென்றுவிடுகிறாள். கணவனையும் விட்டுவிட்டுத்தான்!

80-களின் இறுதியில் எழுத ஆரம்பித்தார் ஊர்மிளா. இந்தக் கதை வெளியானபோது, ‘இப்படி எல்லாம் நிஜத்தில் நடக்குமா?’ என்று யாராவது கேட்டிருந்தால், அவர் உயர் சாதியைச் சார்ந்தவராகத்தான் இருந்திருப்பார். அல்லது, அன்று நிகழ்ந்துவந்த சமூக மாற்றத்தை அவர் அறியாதிருந்திருப்பார். காரணம், அது அம்பேத்கர் பிறந்தநாள் நூற்றாண்டுக் கொண்டாட்டத்துக்கான தயாரிப்புகள் நடந்துவந்த காலம். தலித் எழுச்சியின் காலம். தலித் இலக்கியத்தின் மறுமலர்ச்சிக் காலம்!

இந்தக் கதையில் தெரியும் ‘மற்றமை’ என்கிற நிலை, ஊர்மிளாவின் சுயசரிதை நெடுகிலும் விரவிக்கிடக்கின்ற ஒன்று. அதில் ஓரிடத்தில், மாதவிடாய்க் காலத்தில் தன்னைத் தன் வீட்டினர் ஒதுக்கிவைப்பதை, “சாதியால், இந்தச் சமூகம் என்னை ஒதுக்கிவைத்தது போதாதென்று, இப்போது என் குடும்பமும் எனக்கான விதிகளை விதித்துவிட்டது!” என்று எழுதுகிறார்.

இதன் காரணமாகத்தான் இந்தச் சமூகத்தை ஒரு பெண்ணாகவும், ஒரு தலித்தாகவும் இருந்து பார்க்கும் பார்வை ஊர்மிளாவுக்குக் கிடைத்திருக்கிறது. பொதுவாக, ஊருக்கு வெளியேதான் சேரிகள் இருக்கும். ஆனால், ஊர்மிளாவின் குடியிருப்பு, அதாவது, மஹர் தலித்துகளின் குடியிருப்புகள் ஊரின் மத்தியில் அமைந்திருக்கும். எனவே, ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், நான்கு புறமிருந்தும் தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டிய பாதுகாப்பற்ற நிலைக்கு அந்த மக்கள் தள்ளப்படுகிறார்கள். இப்படியான சூழலில் பிறந்து, வளர்ந்து, படித்து, எழுத வந்தவர்தான் ஊர்மிளா.

‘ஆய்தான்’ என்ற மராத்திச் சொல்லுக்கு, ‘முடைதல்’ என்று பொருள். ஊர்மிளாவின் தாய், கூடை முடையும் தொழிலைச் செய்துவந்தார். ‘அப்படித்தான் என் எழுத்தும். வாழ்க்கையின் சிக்கல்களை எழுத்தில் கொண்டு கதைகளாக முடையப் பார்க்கிறேன்’ என்கிறார் அவர். கதைகள் எழுதியிருந்தாலும், தலித் இலக்கியத்துக்கு ஊர்மிளாவின் மிகப் பெரிய பங்களிப்பு என்பது, ‘வீ ஆல்ஸோ மேட் ஹிஸ்டரி’ எனும் நூல்தான். அம்பேத்கரியச் செயல்பாட்டாளர் மீனாட்சி மூன் உடன் இணைந்து, அம்பேத்கரிய இயக்கத்தில் பங்கேற்ற பெண்களை இந்தப் புத்தகத்தில் ஆவணப்படுத்தியிருக்கிறார் ஊர்மிளா.

‘பனுவல்’ நிகழ்ச்சியில் ஊர்மிளா பேசும்போது ஒரு விஷயத்தைச் சொன்னார். சமீபத்தில் ஸ்வீடனில் நடந்த புத்தகக் கண்காட்சிக்கு அவர் சென்றிருக்கிறார். அங்கு நடந்த எழுத்தாளர் சந்திப்பு ஒன்றில் அவரிடம், ‘தலித் இலக்கியம் என்றால் என்ன?’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். அதற்கு அவர், ‘நிலவில் நீல் ஆம்ஸ்ட்ராங் அடியெடுத்து வைத்தபோது அதை, ‘மனிதகுலத்தின் பெரும் பாய்ச்சல்’ என்று சொன்னார்கள். அதைப் போலத்தான் தலித் இலக்கியமும். அது, மனிதகுலத்துக்கான பெரும் பாய்ச்சல்!’ என்றார்.

உரை நிகழ்த்தி முடிந்தவுடன், அவரிடம் இப்படிக் கேட்டேன். “உங்களுடைய கதைகள் பெரும்பாலும் உங்களின் வாழ்க்கை நிகழ்வுகளோடு ஒத்துப்போகிறதே?” அதற்கு அவர் சொன்னார்: “நான் சிறந்த எழுத்தாளராக இருந்திருந்தால், கற்பனைக் கதைகளை எழுதியிருப்பேன். ஆனால், நான் ஒரு சுமாரான எழுத்தாளர்!”

- ந.வினோத் குமார்,

தொடர்புக்கு: vinothkumar.n@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x