Published : 27 May 2018 10:03 AM
Last Updated : 27 May 2018 10:03 AM
த
மிழ்ச் சமூகத்தின் வரலாற்றை ஆவணப்படுத்துவதில் கல்வெட்டுகள் போன்ற ஸ்தூலமான ஆதாரங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதோ அதே அளவு முக்கியத்துவம் நாட்டார் கதைகளுக்கும் உண்டு. இந்த இரண்டின் வழியாகவும் ஆய்வாளர்கள் தமிழ்ப் பண்பாட்டு வரலாற்றை ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். நாட்டார் வழக்காற்றியல், கல்வெட்டியல் ஆகிய இரு துறைகள் வழியாகவும் ஆய்வுசெய்து முத்திரை பதித்தவர்கள் அபூர்வம்தான். அவர்களுள் ஒருவர் செந்தீ நடராசன். அந்த வகையில் இவரை முழுமையான பண்பாட்டு ஆய்வாளர் எனலாம்.
கல்வெட்டியல், வரலாறு, தமிழ் போன்ற துறையில் பட்டதாரிகளாக இருப்பவர்கள்தாம் பரவலாகத் தமிழ்ப் பண்பாட்டு வரலாற்றியலில் இயங்கிவருகிறார்கள். இந்தச் சூழலில் இவர்களிலிருந்து மாறுபட்டு அறிவியல் பட்டதாரியான செந்தீ நடராசன் கல்வெட்டியல் துறையில் இயங்குவது விசேஷமானது. தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற பிறகுதான் கல்வெட்டுகளை வாசிக்கக் கற்றுக்கொண்டுள்ளார். கல்வெட்டு ஆய்வாளர் தே.கோபாலிடம் கல்வெட்டு எழுத்துகளை வாசிக்கப் பயிற்சிபெற்றார். தமிழகத்தில் பிராமி, வட்டெழுத்து கல்வெட்டுகளை வாசிக்கக் தெரிந்த சொற்ப ஆய்வாளர்களுள் செந்தீ நடராஜனும் ஒருவர்.
“இன்னும் கண்டுபிடிக்க வேண்டிய கல்வெட்டுகளே ஏராளம் இருக்கும் சூழலில், கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளில் பல இன்னும் படிக்கப்படாமல் இருக்கின்றன. அவற்றில் சில காணாமல் போய்விட்டன” எனத் தன் ஆற்றாமையைப் பகிர்வதோடு நிற்காமல் கல்வெட்டு எழுத்துகளைப் புரிந்துகொள்வது குறித்த ‘தொல் எழுத்துக்கள் ஓர் அறிமுகம்’ என்னும் நூலை எழுதியுள்ளார். இந்த நூல் கல்வெட்டு எழுத்துகளை வாசிப்பது குறித்த பயிற்சி தருகிறது. இந்நூல் கல்வெட்டுத் துறைக்கே சிறப்புச் செய்யும் வகையிலான நூல். இதன் மூலம் கல்வெட்டு எழுத்துகள் வாசிப்பு பரவலாகி, கல்வெட்டு குறித்த ஆய்வும் விரிவுபடும் என்பது அவரது நம்பிக்கை. அது மட்டுமின்றி, தமிழ் வரலாறும் முழுமை பெறும் என்கிறார் செந்தீ நடராசன்.
கல்வெட்டியல் மட்டுமல்லாது சிற்பவியலிலும் ஆய்வு மேற்கொண்டுவருகிறார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பெரும்பாலான கோயில்களிலும் ஆய்வு மேற்கொண்டுள்ளார் செந்தீ நடராசன். “காலங்காட்டும் கருவிகளான சிற்பங்கள், வழிபாட்டு வடிவங்களாக இருந்திருக்கின்றன. இதன் வழியாக ஒரு சமய வரலாற்றைத் தெரிந்துகொள்ள முடியும். கி.பி. 9-ம் நூற்றாண்டுக்கு முன்பு வரை தாயார் சன்னிதிகள் கிடையாது. சரஸ்வதி சிற்பம் 11-ம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் கிடைக்கின்றன. அதற்கு முன்பு சரஸ்வதி வழிபாடே கிடையாது. வாக் தேவி என்னும் பவுத்த தெய்வத்தைப் பின்னால் இந்து சமயம் உள்வாங்கிக்கொள்கிறது. மேலும், வழிபாட்டுத் தெய்வமாக மூதேவி இருந்திருக்கிறாள் என்பதையும் இன்றைக்குக் கிடைக்கும் சிற்பங்கள் மூலம் அறிய முடிகிறது. ஒரே சிற்பத்திலேயே ஒரு தொன்மக் கதையைச் சொல்லிவிடக் கூடிய ஆற்றல் கொண்ட சிற்பங்களும் உண்டு” எனச் சொல்லும் செந்தீ நடராசன், சிற்பங்களை ஆராய்வதன் மூலம் சமய வழிபாட்டு முறை, சடங்குகள் குறித்த பண்பாட்டு வரலாற்றை ஆய்வுசெய்துள்ளார். 28 சிற்பங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு ‘சிற்பம் தொன்மம்’ என்னும் நூல் ஒன்றை எழுதியுள்ளார். ஒரு சிற்பத்துக்குப் பின்னாலுள்ள தொன்மக் கதை, அது சித்திரிக்கும் சமூக உறவு, நாட்டார் வழக்காறு ஆகியவற்றை இந்த நூலில் விரிவாக விளக்கியுள்ளார்.
ராஜராஜசோழனின் முதல் போராகச் சித்திரிக்கப்படும் காந்தளூர்ச் சாலைப் போர் குறித்தும் செந்தீ நடராசன் முக்கியமான கட்டுரை எழுதியுள்ளார். கி.பி. 866 ஆண்டைச் சேர்ந்த பார்த்திவசேகரபுரம் செப்பேடு, இன்றைய குமரி மாவட்டக் கேரள எல்லையில் உருவாக்கப்பட்ட பார்த்திவசேகரபுரம் சாலை என்னும் கல்விச் சாலையைப் பற்றிச் சொல்கிறது. பார்த்திவசேகரபுரம் முழுக்க முழுக்க வேதங்களைக் கற்றுக்கொடுப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு சாலை என்பதும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அதில் காந்தளூர்ச் சாலையை முன்மாதிரியாகக் கொண்டு அமைக்கப்பட்டது என்ற தகவலும் உள்ளது. ராஜராஜசோழனின் மெய்கீர்த்தியில் உள்ளபடி ‘காந்தளூர்ச் சாலை கலமறுத்தருளிய’ என்பதில் கலம் என்ற சொல்லைக் கப்பல் எனக் கொண்டு அது கப்பற்படைகளுடனான போர் எனச் சொல்லப்படுகிறது. கலம் என்பது இங்கு ‘Stipend- கல்வி உதவித்தொகை’யைத்தான் குறிக்கிறது. அருளிய என்பது மாணவர் ஒவ்வொருவருக்கும் சரியான விகிதத்தில் பிரித்துக்கொடுத்ததைத்தான் குறிக்கிறது என ஆய் மன்னன் கோக்கருநந் தடக்கனின் பார்த்திவசேகரபுரம் செப்பேட்டைக் கொண்டு இவர் எழுதிய மறுப்புக் கட்டுரை முக்கியமான ஆய்வு.
வீரகேரள வர்மா காலத்தைச் (1606) சேர்ந்த, ‘இன்று முதல் புலைப்பேடி மண்ணாப்பேடி இல்லா’ என்னும் கல்வெட்டை வைத்து திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நிலவிவந்த ‘புலைப்பேடி, மண்ணாப்பேடி’ வழக்கத்தைப் பற்றி முதலில் ஆய்வுசெய்து கட்டுரை வெளியிட்டுள்ளார். இந்த வழக்கத்தைப் பற்றிச் சொல்லக் கேட்ட ஊகங்கள்தாம் அதிகமாக இருக்கின்றன என்றும் இந்த விநோத வழக்கத்தைக் குறித்து இன்னும் முழுமையான ஆய்வுசெய்ய வேண்டியது அவசியம் என்றும் கூறுகிறார் செந்தீ நடராசன். தமிழ் நாட்டார் வழக்காற்றியல் துறையின் தந்தை எனப் போற்றப்படும் நா.வானமாமலையின் சிந்தனைப் பள்ளியின் மாணவர் இவர். அவரது தாக்கத்தால் நாட்டார் வழக்காற்றியல் துறையில் ஆர்வத்துடன் செயல்பட்டவர்.
தொடக்க காலகட்டத்தில் நாட்டார் வழக்காற்றியல் குறித்த முக்கியமான கட்டுரைகள் எழுதியுள்ளார். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலச் செயலாளராகவும் உள்ளார். ‘பண்பாட்டுத்தளங்கள் வழியே’ ஆய்வுக் கட்டுரை நூல் இவரது முக்கியமான ஆக்கம். குமரி மாவட்டக் கல்வெட்டுகளின் அடிப்படையில் அம்மாவட்டத்தின் முழுமையான வரலாற்றை எழுதும் முயற்சியில் இருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT