Published : 20 May 2018 09:11 AM
Last Updated : 20 May 2018 09:11 AM
‘ஜே
.
ஜே. சில குறிப்புகள்’ நாவல் எடிட்டிங் தொடர்பாக நான் சு.ரா. வீட்டில் தங்கியிருந்தபோது, வீடு வெகு இதமாகவும் மிக நெருக்கமாகவும் ஆனது. காலையில் மாடிக்கு வெகு ருசியான பில்டர் காபி வரும். கூடவே இரண்டு பில்டர் வில்ஸ் பாக்கெட்டுகளும் வந்துவிடும். ஒரு நாளில் சு.ரா. இரண்டு அல்லது மூன்று சிகரெட்டுகள் புகைப்பார். அதை மிகவும் லயித்துச் செய்வார். அந்த நாட்களில் இரவு விடியும் வரை பேசிக்கொண்டிருந்திருக்கிறோம். ஒருநாள் அதிகாலை கோழி கூவியபோது, ‘விடிஞ்சிடுச்சுபோல’ என்று முறுவலித்தார். தன் அனுபவங்களின் பரிசீலனையோடு வாழ்வின் சாளரங்களை அவர் திறந்து காட்டிய அந்தத் தருணங்களை வாழ்வு என் மீது காட்டிய பெரும் கருணையாகவே உணர்ந்திருக்கிறேன். எந்த ஒன்றையும் நம் அனுபவங்களின் வழி உரசிப் பார்த்தே ஏற்கவோ, நிராகரிக்கவோ வேண்டும் என்பதே – கடவுள் உட்பட – அவரது அணுகுமுறை.
அக்காலகட்டத்தில், சு.ரா.விடம் கார் இருந்தது. அம்பாசிடர். அடர்நீல வண்ணம். அவரேதான் ஓட்டுவார். கார் ஓட்டுவது அவருக்குப் பிடித்தமானதாகவும் இருந்தது. வெவ்வேறு சந்தர்ப்பங்களில் மூன்று முறை பத்மநாபபுரம் அரண்மனைக்கும் கன்னியாகுமரிக்கும் காரில் அழைத்துப்போயிருக்கிறார். இம்முறை தினமும் மாலை அவருக்கு மிகவும் பிடித்தமான ஓரிடத்துக்குச் சென்று வந்தோம். ஊருக்கு வெளியே கொஞ்ச தூரம் சென்றால் ஒரு சிறு ஓடைப் பாலம் வரும். சாலையின் இடதுபக்கம் ஓடை. வலதுபக்கம் சற்று தொலைவில் மலை. இருபுறமும் வயல்வெளி. மாலை மங்கும் அத்தருணத்தில் அந்த இடம் ஏகாந்தமாக இருக்கும். மலை, பார்வையில் படும்படியாக இடதுபுற ஓடைப் பாலத் திண்டில் அமர்ந்துகொள்வோம். முதல் நாள், அந்த மலை முழுவதும் எழுதப்பட்டிருந்த பெயர்களையும் சின்னங்களையும் காட்டி விசனப்பட்டார். ‘நம்ம ஆட்களுக்கு எதையும் அசிங்கப்படுத்திப் பார்த்தால்தான் நிம்மதி’ என்றார்.
அவர் ஒருசமயம் கன்னியாகுமரியில் ஒரு வடநாட்டு இளம் பெண் துறவியாரைச் சந்தித்திருக்கிறார். அவர் தனியாக இந்தியா முழுவதும் உள்ள முக்கிய கோயில் ஸ்தலங்களுக்குப் பயணப்பட்டுக்கொண்டிருப்பவர். இப்படித் தனியாக அலைவதிலும் இரவில் எவ்விதப் பாதுகாப்புமற்று எங்கோ படுத்துறங்குவதிலும் உங்களுக்குப் பிரச்சனை ஏதுமில்லையா? என்று அவரிடம் சு.ரா. கேட்டிருக்கிறார். அப்படி ஏதும் இல்லையென்றும், அதேசமயம் எந்த ஊருக்குப் போனாலும், பள்ளிக்கூடம் விடும் நேரங்களில், அந்தப் பகுதியைக் கடக்காதிருப்பதில் மிகுந்த கவனம் எடுத்துக்கொள்வேன். கும்பலாக வரும் குழந்தைகளிடமிருந்து தப்பிப்பதே பெரும் பிரச்சனை என்றும் கூறியிருக்கிறார். இதை என்னிடம் சொல்லிவிட்டு, அசாதாரணமானவர்களைக் கேலியும் கிண்டலுமாகக் குழந்தைகள் நடத்துவதையும், சமயங்களில் கல்லெறிந்து இம்சிக்குமளவுக்கு அவர்கள் சென்றுவிடுவதையும் குறிப்பிட்டார். சிறார்கள் பற்றிய கற்பிதங்கள் அன்று கேள்விக்குள்ளாகின.
ஜே.ஜே. நாவல் பணிக்காகச் சென்ற நான், போன வேலை முடிந்த பின்னும் கிளம்புவது தள்ளிக்கொண்டே போனது. இச்சமயத்தில் எனக்குத் திருமணமாகி, ஒரு வயது மகனும் இருந்தான். ஒருநாள் உறுதியாகக் கிளம்ப முடிவெடுத்து, சு.ரா.விடம் சொன்னேன். “சரி, மதியம் சாப்பாட்டுக்குப் பிறகு போகலாம்” என்றார். காலை உணவுக்குப் பின்னர், மாடி அறையில் பேசிக்கொண்டிருந்தபோது, “இடையில் ஒருநாள் ஏ.கே.பி. (அ.கா.பெருமாள்) ஃபோன் பண்ணினார். நீங்கள் வந்திருப்பதாகச் சொன்னேன். பார்க்க வருவதாகச் சொன்னார். வேலை முடிந்ததும் சொல்வதாகச் சொன்னேன். இன்று அவருக்கு காலேஜ் கிடையாது. வரச் சொல்வோமா?” என்றார். சரி என்றேன். வந்தார். சிரிக்கச் சிரிக்கப் பேசிக்கொண்டே இருந்தார். நேரம் வெகுவாகக் கடந்தது. “நாளை போகலாமா?” என்று ராமசாமி கேட்டார். நானும் சிரித்தபடி தலையாட்டினேன்.
மறுநாள் மதிய உணவுக்குப் பின் கிளம்பினேன். கீழே வீட்டில் எல்லோரிடமும் சொல்லிக்கொண்டபோது, அந்த வீட்டில் ஒருவராக வாழ்ந்திருந்து, சமையலறையை மேலாண்மை செய்து, விதவிதமாகச் சமைத்து, மிகுந்த வாத்சல்யத்துடன் பரிமாறும் ஹரிகர ஐயர், “பட்சணங்கள் இருக்கு. வீட்டில கொடுங்கோ” என்றபடி ஒரு பெரிய பார்சல் கொடுத்தார். காரில் ஏறிக்கொண்டேன். திருவள்ளுவர் பேருந்து நிலையத்தில், டிக்கெட் எடுத்துக் கொடுத்து, நான் இருக்கையில் உட்கார்ந்த பிறகு, சு.ரா. சிரித்த முகத்துடன் கையசைத்து விடை கொடுத்தார். நான் கலங்கி உட்கார்ந்திருந்தேன். நான் மதுரை திரும்பிய பின், ராமசாமியிடமிருந்து வந்த நீண்ட கடிதத்தின் முதல் சில வரிகள் இப்படியாக அமைந்திருந்த ஞாபகம்: “நீங்கள் இம்முறை இங்கு தங்கியிருந்த நாட்களில் கிருஷ்ணன் நம்பியின் மறைவுக்குப் பின்னான வெற்றிடம் நிரம்பி வருவதை உணர்ந்தேன்.”
சமூக மனிதனாக வாழ்ந்தபடியே, சமூகத்தின் அவலங்களையும் கோணல்களையும் சிடுக்குளையும் போதாமைகளையும் ஆழ்ந்த விமர்சனத்துக்கு உட்படுத்தியபடி, சமூக அமைப்பானது, மனிதர்கள் சிறப்பாகவும் மேன்மையாகவும் வாழ்வதற்குரியதாக இருக்க விழையும் நவீனத்துவ மனம் இவருடையது. இத்திசையில் அலைக்கழியும் நவீனத்துவ மனதின் இருப்பே இவருடைய படைப்புலகம். அதற்கேற்ப, தகிக்கும் மனதின் ஜூவாலையையும் எள்ளல் மனதின் தன்மையையும் இவருடைய படைப்பு மொழி ஏற்றிருந்தது. தனதான படைப்பு மொழியை வசப்படுத்திய வெகு சில தமிழ்ப் படைப்பாளிகளில் சு.ரா. தனித்துவம் கொண்டவர். வெளிப்பாடும் மொழியும் லயப்படும் இசைமையில் ஓர் உச்சத்தைத் தொட்டவர்.
அவருடைய வாழ்வின் கடைசி கட்டத்திய சில ஆண்டுகளின்போது அவரோடு எனக்குத் தொடர்பில்லை. தன் வரையான நியாயங்களோடும் கோபங்களோடும் விட்டு விலகுவதற்கான தார்மீகத்தை ஒருவகையில் கற்றுக் கொடுத்தவரும் அவர்தான். ஆனால், ‘சுந்தர ராமசாமி தீவிர உடல்நலக் குறைவால் ஆபத்தான கட்டத்தில் அமெரிக்க மருத்துவமனையில் இருக்கிறார்’ என்ற செய்தியைக் கேள்விப்பட்ட நாளிலிருந்து, நாகர்கோவில் சென்று அஞ்சலி செலுத்திய நாள் வரையும் நிராதரவான தவிப்பும் கலக்கமும் மனதில் கவிந்திருந்தது. எது எப்படியென்றாலும், அடிப்படையில் அவர் என் ஆசான் என்பதைத் தீர்க்கமாக உணர்த்திய நாட்கள் அவை.
அஞ்சலி நாளன்று வந்திருந்த பல எழுத்தாளர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்களின் மனோபாவங்களை, அவர்களுடைய நடவடிக்கைகள், பேச்சுகள், மற்றும் ஆழ்ந்த மெளனங்களிலிருந்து அவதானித்தபோது, ஒரு விசேஷமான அம்சத்தை உணர முடிந்தது.
அநேகமாக, ஒவ்வொருவருமே மற்ற எவரையும் விடத் தனக்குத்தான் சு.ரா. மிக நெருக்கமானவர் என்ற அலாதியான உணர்வோடு கலங்கிக்கொண்டிருந்தார்கள். சு.ரா.வின் ஆளுமையில் சுடர் கொண்டிருந்த ஓர் அற்புத அம்சமிது. அவர் வாழ்வின் ரகஸ்யம். எவராலும், இனி எப்போதும் கைப்பற்ற முடியாத ரகஸ்யம்.
- சி.மோகன், எழுத்தாளர்.
தொடர்புக்கு: kaalamkalaimohan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT