Published : 20 May 2018 09:11 AM
Last Updated : 20 May 2018 09:11 AM
நா
ட்டார் கதைகள், சுவாரசியமானவை மட்டுமல்ல; அவை ஓர் இனத்தின் பண்பாட்டு வரலாற்றுக்கான சான்றுகள். இந்தக் கதைகளைத் தொகுத்து ஆராய்வதன் மூலம் இன்றைக்குள்ள பல சமூகச் சிக்கல்களுக்கான காரணத்தைக் கண்டறிய முடியும். அப்படிப்பட்ட ஆய்வுகளைத் தமிழில் மேற்கொண்டு வருபவர்களுள் முக்கியமானவர் பேராசிரியர் அ.கா.பெருமாள். நாட்டார் வழக்காற்று ஆய்வாளராக அடையாளம் பெற்றாலும்கூட கல்வெட்டியல், சிற்பவியல், கோயில் கலை ஆகிய துறைகள் சார்ந்தும் இவர் செயல்பட்டுவருகிறார்.
கன்னியாகுமரி மாவட்டம் பறக்கையில் பிறந்தவர் அ.கா.பெருமாள். இளங்கலை முடித்த பிறகு பத்திரிகையாளராக வாழ்க்கையைத் தொடங்கியவர். பிறகு, பாலக்காடு அருகிலுள்ள சித்தூர் கல்லூரியில் முதுநிலைப் படிப்பில் சேர்ந்தார். அங்கே பேராசிரியர் ஜேசுதாசன் மூலம் தமிழ் இலக்கியப் பரிச்சயம் அவருக்குக் கிடைத்தது. புதுமைப்பித்தன் உள்ளிட்ட எழுத்தாளர்கள் பலரையும் வாசித்தார். அந்த உற்சாகத்தில் ஒரு நாவலும் எழுதினார். ஆனால், அது முழுமையடையவில்லை. அதன் பிறகு, ‘தமிழ் இலக்கியங்களின் காலம் பற்றி வையாபுரியாரின் கணிப்பு’ என்னும் தலைப்பில் ஆராய்ச்சியில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.
சாமானிய மக்கள் வரலாறு
அம்மானை வடிவத்தில் இருந்த சில கதைகளை எளிய உரைநடை வடிவத்தில் மாற்றியதுதான் நாட்டார் வழக்காற்றியலில் இவரது முதல் பணி. பிறகு, விமர்சகர் வெங்கட் சாமிநாதனை ஆசிரியராகக்கொண்டு வெளிவந்த ‘யாத்ரா’ இதழில் இசக்கி அம்மன் வழிபாடு, கணியான் கூத்து பற்றி கட்டுரைகளை எழுதினார். இந்தக் கட்டுரைகளைப் படித்த மூத்த நாட்டார் வழக்காற்று ஆய்வாளர் நா.வானமாமலை, அ.கா.பெருமாளைப் பாராட்டியுள்ளார். இதே காலகட்டத்தில் கன்னியாகுமரி மாவட்ட வில்லிசைப் பாடல்கள் குறித்து ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார். இதுதான் நாட்டார் வழக்காற்றியல் துறையில் இவரது முதல் ஆய்வு. “விடுதலைப் போராட்டம் குறித்த சாமானியரின் மனநிலை என்ன என்பதை இதுவரை எழுதப்பட்ட வரலாறு பதிவுசெய்யவில்லை. ஆனால், நாட்டுப்புறப் பாடல்கள் இதைப் பதிவுசெய்திருக்கின்றன. ‘ஐ பை அரைக்கா பக்கா நெய், வெள்ளக்காரன் கப்பலிலே தீயைக் கொளுத்தி வை’ என்று ஒரு நாட்டுப்புறப் பாடல் இருக்கிறது. வ.உ.சிதம்பரம் பிள்ளை சுதேசிக் கப்பல் விட்டார். இதைத் தொடர்ந்து அந்தக் காலகட்டத்தில் சாமானிய மக்களிடம் உருவான ஆங்கில ஆட்சிக்கு எதிரான மனநிலையை இந்தப் பாடல் சித்திரிக்கிறது” எனச் சொல்லும் அவர், இதன் மூலம் சாமானிய வாழ்க்கையைப் பதிவுசெய்ய நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகள் முக்கியமானவை என்பதை எடுத்துக்காட்டுகிறார்.
பன்முகப்பட்ட ஆய்வுகள்
நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு எல்லையற்றது. நாட்டார் ஓவியங்கள், நிகழ்த்துக் கலை என விரிந்துகொண்டே செல்லும். இதன் எல்லாப் பிரிவுகளிலும் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.
நாட்டார் இசைக் கருவிகள், வில்லுப்பாட்டு, தோல்பாவைக் கூத்து குறித்த இவரது ஆய்வுகள் முக்கியமானவை. இன்றைக்குப் பயன்பாட்டிலிருந்து அருகிவிட்ட பவுரா என்ற இசைக் கருவி குறித்து எழுதியிருக்கிறார். குமரி மாவட்ட வாய்மொழி வில்லுப்பாட்டுகளான பொன்னிறத்தாள் அம்மன் கதை, பூலங்கொண்டாள் அம்மன் கதை, தம்பிமார் கதை உட்படப் பல கதைகளைப் பதிப்பித்துள்ளார். தமிழ் நாட்டார் கலைகள் பலவற்றைக் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டதுடன், நாட்டார் கலைஞர்களின் நலனுக்காகப் பாடுபட்டும் வருகிறார். கேரளத்தில் கண்ணகி வழிபாடு குறித்து ஆய்வுசெய்திருக்கிறார். சுசீந்திரம் தாணுமாலயன் கோயில், திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோயில் ஆகியவை குறித்த ஆய்வு நூல்களை எழுதியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட வரலாறு குறித்த முக்கியமான முதலியார் ஆவணத்தைத் தன் ஆய்வின் மூலம் கண்டடைந்து பதிப்பித்துள்ளார். 70-க்கும் மேற்பட்ட நூல்களைத் தன் பங்காகத் தமிழுக்கு நல்கியுள்ளார். இவரது ஆய்வுகள் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், கேரளப் பல்கலைக்கழகம், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்களில் பாடங்களாக உள்ளன. ‘தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து’, ‘தென்குமரியின் கதை’ ஆகிய இரண்டு நூல்களுக்காகத் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசை 2002, 2003 ஆகிய இரு ஆண்டுகள் பெற்றுள்ளார்.
புதிய வரலாறு தேவை
இது மட்டுமல்லாமல் கவிஞராக அறியப்பட்ட கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் என்ற அறியப்படாத முகத்தைத் தன் தேடலின் வழியே கண்டறிந்து எழுதியுள்ளார். இது குறித்து தேசிகவிநாயகம் பிள்ளை ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரைகளை உதாரணமாகக் காட்டுகிறார். கவிமணியின் அச்சில் வராத கட்டுரைகளைத் தேடிப் பதிப்பித்துள்ளார். “மொத்த இந்தியாவில் உள்ள கல்வெட்டுகளில் மூன்றில் ஒரு பங்கும் இன்னும் வெளியிடப்படவில்லை. கிடைத்த கல்வெட்டுகளின் அடிப்படையில்தான் வரலாறு எழுதப்பட்டுள்ளது. 1950- களுக்குப் பிறகு வரலாற்றுத் துறையில் குறிப்பிடத்தகுந்த ஆய்வுகள் வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
கல்வெட்டு அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள வரலாற்றை மீட்டுருவாக்கம்செய்ய வேண்டியது அவசியம்” எனச் சொல்கிறார் அ.கா.பெருமாள். அதாவது, நாட்டார் வழக்காற்றியல் கூறுகளை அடிப்படையாகக் கொண்டு புதிய வரலாறு உருவாக்கப்பட வேண்டும் என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறார்.
ஆர்.ஜெய்குமார்
தொடர்புக்கு:
jeyakumar.r@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT