Published : 23 Aug 2014 12:00 AM
Last Updated : 23 Aug 2014 12:00 AM
வடக்கிந்தியாவில் இஸ்லாம் பரவியதற்கும் தமிழ்நாட்டில் இஸ்லாம் வேர் பிடித்ததற்கும் பெருத்த வேறுபாடுகள் உண்டு. தமிழகத்தோடு அரபு வணிகர்கள் தொன்றுதொட்டு வாணிபம் செய்துவந்திருக்கிறார்கள். ஏழாம் நூற்றாண்டில் அரபு மண்ணில் இஸ்லாம் தோன்றிவிட்டதையொட்டி இஸ்லாமியர்களாகிவிட்ட அரபு வணிகர்கள் காலப்போக்கில் தமிழகத்தில் குடியேறி வாழத் தொடங்கிவிட்டனர்.
வடக்கிந்தியாவில் முஸ்லிம்களின் ஆட்சி பல நூறு வருடங்கள் நடைபெற்றதைப் போல, தமிழகத்தில் முஸ்லிம்களின் ஆட்சி இருக்கவில்லை. மதுரை சுல்தான்களின் ஆட்சி 1333-1378 வரை இடைப்பட்ட ஆண்டுகளில்தான் நடை பெற்றிருக்கிறது. பதினான்காம் நூற்றாண்டிற்கு முன்பாகவே திருச்சியிலும், இராமநாதபுரம் ஏர்வாடி பகுதியிலும், இஸ்லாத்தைப் பரப்புவதற்காக இறை நேசச் செல்வர்கள் தமிழகத்திற்கு வந்துவிட்டார்கள்.
இதற்கு வரலாற்றுச் சான்றுண்டு. பதினான்காம் நூற்றாண்டில் திருச்சி அருகே கண்ணனூர் என்ற பெயரில் ஓரூர் இருந்திருக்கிறது. ஹொய்சாளர்களின் ஆட்சிக் காலத்தில் அவர்களது தலைநகராகவும் கண்ணனூர் விளங்கியிருக்கிறது.
1310-ல் டில்லி சுல்தானான அலாஉத்தீன் கீல்ஜியின் பிரதிநிதியாக மாலிக்காபூர் தென்னகம் நோக்கிப் படையெடுத்து வந்தபோது கண்ணனூர் பகுதியில் இஸ்லாத்தை ஒப்புக்கொள்ளும் அடிப்படை மந்திரத்தை மட்டும் தெரிந்துகொண்டு, மற்ற மத அனுஷ்டானங்களைப் பற்றி அதிகம் பரிச்சயம் இல்லாத முஸ்லிம்கள் இருந்து வந்ததையும் அவர்களுக்கு எந்தப் பாதகமும் செய்யாமல் மாலிக்காபூர் விலகிவிட்டதையும், மாலிக்காபூருடன் பயணம் செய்த அமீர் குஸ்ரு என்ற இஸ்லாமிய வரலாற்றாசிரியர் பதிவு செய்திருக்கிறார்.
குஸ்ருவின் குறிப்பினைத் தமிழகம் பற்றி நிறைய செய்திகள் கொண்ட சௌத் இந்தியா அன்ட் ஹெர் முஹம்மதன் இன்வேடர்ஸ் என்ற தனது நூலில் மேற்கோள் காட்டியிருக்கிறார் இருபதுகளில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் வரலாற்றுப் பேராசிரியராக பணியாற்றிய கிருஷ்ணசாமி ஐயங்கார்.
படையெடுப்புகளுக்கு முன்பாகவே தமிழகம் வந்த இஸ்லாம் தமிழ்ப் பண்பாட்டோடு பிரிக்க முடியாதபடி நெருக்கமாகக் கலந்துவிட்டது. தமிழ் இலக்கிய மரபை அடியொற்றித் தமிழ் முஸ்லிம் புலவர்கள் ஏராளமாக காப்பியங் களையும் சிற்றிலக்கியங்களையும் படைத்திருக்கின்றனர். பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்த பல்சந்தமாலை என்ற செய்யுள் தமிழக முஸ்லிம்களின் தொன்மையைக் காட்டக்கூடியதாக இருக்கிறது.
இதற்கு தமிழ்த் தாத்தாவான உ.வே. சாமிநாத ஐயர் வழியாகவும் நமக்குச் சான்றுகள் கிடைக்கிறது. உ.வே.சா அவரது சரிதையான என் சரித்திரத்தில் தஞ்சை களத்தூர் பகுதியில் வெற்றிலைக் கொடிக்கால் வைத்து ஜீவனம் நடத்திக் கொண்டிருந்த முஸ்லிம்கள் தமிழ் இலக்கியப் பயிற்சி மிக்கவர்களாகவும், கம்ப ராமாயணம், திருவிளையாடல், பிரபுலிங்க லீலை போன்ற நூல்களை மதிப்புடன் கற்று வைத்திருந்ததாயும், தானும் அந்நூற்களை அந்த முஸ்லிம்களிடம் கேட்டுச் சுவைத் ததைப் பற்றியும் ஒரு சிறு குறிப்பை எழுதியிருப்பார். உ.வே.சா.வின் பதிவு, முஸ்லிம்கள் தமிழ் மண்ணோடு ஒன்றி தனித்ததொரு அடையாளத்தைப் பெற்று விட்டார்கள் என்பதைத்தான் சுட்டுகிறது.
இஸ்லாமிய வெகுஜன இலக்கியங்கள்
நீண்ட காலத்துக்கு முன்பாகவே, தமிழ் மரபையொட்டி முஸ்லிம் புலவர்கள் இஸ்லாம் சம்பந்தப்பட்ட நூல்கள் இயற்றியது போக, பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போர்ச் சூழலில் நிஜமாக ஈடுபட்டிருந்த இஸ்லாமிய நாயகர்களை கதாபாத்திரங்களாகக் கொண்டு மூன்று வெகுஜன இலக்கியங்கள் வந்திருக்கின்றன.
கி.பி. 1757-ல் தென் மாவட்டங்களில் வரி வசூலிப்புக்கென்று ஆங்கிலேயர் களால் பதவி கொடுக்கப்பட்டு ஆங்கிலேயர் களாலேயே தூக்கிலிடப்பட்ட கான் சாகிப்பைப் பற்றி ‘கான் சாகிபு சண்டை’ என்ற நூல் வந்திருக்கிறது. அடுத்தது வட தமிழகத்தில் செஞ்சிக் கோட்டையிலிருந்த மராத்தியர்களின் ஆட்சியை நீக்குவதற்காக மொகலாயப் படைகள் எட்டு ஆண்டுகள் (1690 -1698) அங்கு முற்றுகையிட்டிருந்தன. அந்த நீண்டகால போர்ப் பின்னணியை யொட்டி எழுந்தது ‘சீதக்காதி நொண்டி நாடகம்’.
மற்றுமொரு கதைப் பாடல் ‘தேசிங்கு ராஜன் கதை’ என்பது. அதுவும் செஞ்சிக் கோட்டைப் பகுதியை மையமாகக் கொண்டது. கி.பி 1714-ல் ராஜபுத்ர இளவரசனான தேஜ்சிங் செஞ்சியை ஆண்டுகொண்டிருக்கிறான். அவன் ஆர்காடு நவாபுக்கு கப்பங்கட்ட மறுத்து நவாபுடன் போரிட்டு வீர மரணம் அடைகிறான். தேஜ்சிங்கிற்கு உற்ற நண்பனாக இருப்பவன் மகபத் கான் என்ற முஸ்லிம். தேசிங்கு ராஜனுக்காக மகபத் கானும் தனக்கு நடக்கவிருந்த திருமணத்தை வேண்டாமென்று சொல்லிப் போர்க்களம் புகுந்து மரணமடைகிறான். தேசிங்கு ராஜன் கதையைக் கண்ணதாசன் எம்.ஜி.ஆரை வைத்துப் படமாயிருக்கிறார்.
கதைப் பாடல்கள்
சீதக்காதி நொண்டி நாடகம், கான்சாகிபு சண்டை, தேசிங்கு ராஜன் கதை ஆகியவற்றினின்றும் மாறுபட்டது. கடல் வாணிகத்தில் சிறந்தோங்கி விளங்கிய தமிழ் முஸ்லிம் வணிகர் ஒருவரைப் பற்றித் தமிழ்ப் பண்பாட்டின் அம்சங்கள் அழுத்தமாக ஊடுருவி இயற்றப்பட்ட படைப்பு இது.
சீதக்காதி இராமநாதபுரம் கீழக்கரையில் வாழ்ந்தவர். ஷெய்கு அப்துல் காதர் என்பதுதான் சீதக்காதியாய் மருவி யிருக்கிறது. 1698வரை வாழ்ந்திருக்கும். அவர் பன்முகங் கொண்டவர். பெரிய வணிகர். வங்கம், சீனா, மலாக்கா போன்ற நாடுகளுக்கு அவரது கப்பல்களில் முத்து பாக்கு, கிராம்பு மிளகு என்று பல சரக்குகள் போயிருக்கின்றன. அவரைப் பற்றி டச்சு, ஆங்கிலேயே ஆவணங்கள் இருக்கின்றன. அவர் உமறுப் புலவர் சீறாப்புராணம் பாடுவதற்கு நிதியுதவி செய்தவர். இராமநாத புரத்தை ஆண்ட கிழவன் சேதுபதிக்கு மந்திரி போல வலதுகரமாகச் செயல்பட்டவர்.
சீதக்காதிக்கு மதிப்பளிக்கும் வகையில் சேதுபதுகளுக்கேயுரிய விஜயரகுநாத என்ற பட்டத்தையும், கடற்கரையோர முத்து சலாபத்தின்போது வரி வசூலிக்கும் அதிகாரத்தையும் சீதக்காதிக்கு வழங்கியுள்ளார் கிழவன் சேதுபதி. கர்ணன் போல் கொடுத்துக் கொடுத்துச் சிவந்த சீதக்காதியின் கரத்தைப் பற்றிச் சைவப் புலவரான பொற்களந்தை படிக்காசுத் தம்பிரான் பாடியுள்லார். அந்தப் பாடல்:
காய்ந்து சிவந்தது சூரியகாந்தி கலவியிலே தோய்ந்து சிவந்தது மின்னார் நெடுங்கண்டொலைவில் பன்னூல் ஆய்ந்து சிவந்தது பாவாணார் நெஞ்சமனுதினமும் ஈந்து சிவந்தது மால் சீதக்காதியிரு கரமே. சீதக்ககாதி இறந்தது தாளாமல் அவரது சமாதிக்குப் போய் படிக்காசுப் புலவர், புலவர்கள் வாயில் மண் அள்ளிப் போட்டு, ‘இப்படிப் போய்விட்டீரே யார் இனி ஆதரிப்பார்கள்' என அழுது அரற்றிக்கொண்டிருக்கும் சமயத்தில் சமாதி வெடித்துக் கையில் போட்டிருந்த மோதிரத்தை எடுத்துக்கொள்ளும்படி சீதக்காதியின் கரம் வெளிப்பட்டதாம்.
அந்த அதிசயம்தான் புலவர்களின் கற்பனையினால் ‘செத்தும் கொடுத்த சீதக்காதியே' என்ற பேச்சு வழக்காகி, வள்ளல் தன்மையோடு தொடர்புடைய பெயராக சீதக்காதியின் நினைவை நம்மிடம் நீட்டி வைத்திருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT