Published : 22 Apr 2018 09:30 AM
Last Updated : 22 Apr 2018 09:30 AM
த
மிழ்ப் பண்பாட்டு ஆய்வுக்களத்தில் இயங்கிவரும் ஆய்வாளர்களில் முக்கியமானவர் தொ. பரமசிவன். தமிழ்ச் சமூக வாழ்வியல்மீது புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சியவை இவரது பண்பாட்டு ஆய்வுகள். தமிழர்களின் தொன்மங்கள், நாட்டார் தெய்வங்கள், சமூக மரபுகள் பற்றிய இவரது கருத்துகள் தமிழ்ப் பண்பாட்டு ஆய்வுக்கு வளம் சேர்த்துள்ளன.
வரலாறு என்பது காலந்தோறும் மேட்டிமைச் சமுதாயங்களின் பார்வையிலிருந்தே பதிவுசெய்யப்பட்டு வந்திருக்கிறது. இந்தப் போக்கிலிருந்து மாறுபட்டு, புறக்கணிக்கப்பட்ட அடித்தட்டு மக்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு தன் ஆய்வுகளை மேற்கொண்டவர். இதற்காக இவருடைய கருத்தியல் தளத்தை மனித வாசிப்பு சார்ந்து அமைத்துக்கொண்டிருக்கிறார். இந்த மனித வாசிப்பு உரையாடல் மரபு வழியாக இயங்குகிறது. இந்தப் பேச்சு வழியாகவும் அதன் உள்ளீடாக விளங்கும் பழமொழிகள், கதைகள், சடங்குகள் போன்றவற்றின் வழியாகவும் பண்பாட்டு வரலாற்றை மீட்டெடுக்க முடியும் என்ற நம்பிக்கையில் ஆய்வுகள் மேற்கொண்டுள்ளார். இவருடைய ‘அழகர் கோயில்’, ‘பண்பாட்டு அசைவுகள்’, ‘உரைகல்’ போன்ற நூல்கள் இந்த மனித வாசிப்பை அடிப்படையாக வைத்தே எழுதப்பட்டிருக்கின்றன.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் 1950-ம் ஆண்டு பிறந்த இவர், செயின்ட் சேவியர் கல்லூரியிலும், காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும் தமிழ் பயின்றிருக்கிறார். தமிழ்ப் பேராசிரியராகப் பணி வாழ்க்கையைத் தொடங்கிய இவர், இளையாங்குடி டாக்டர் ஜாகிர் ஹுசைன் கல்லூரியிலும், மதுரை தியாகராஜர் கல்லூரியிலும் பணியாற்றியிருக்கிறார். மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராக 9 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். சிறுவயதில் தன் தாய் லட்சுமி அம்மாளிடமும் பல வாழ்க்கைச் சம்பவங்களைக் கதைகளாகக் கேட்டதுதான் தனது பிற்காலப் பேச்சுவழி ஆய்வுகளுக்குக் காரணமாக இருப்பதாகச் சொல்கிறார். பண்பாட்டு மானிடவியல் (Cultural Anthro pology), இனவரைவியல் (Ethnography), வரலாறு, நாணயவியல் போன்ற பிற துறைகளில் இவருக்கு ஆர்வம் உண்டு. அதற்குக் காரணம் அவருடைய குரு அறிஞர் சி.சு.மணி.
புதுமைப்பித்தன் சிறுகதைகள் குறித்துதான் தன்னுடைய முனைவர் பட்டத்துக்கான ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என முதலில் நினைத்திருக்கிறார். ஆனால், அவருடைய ஆய்வு நெறியாளர் மு.சண்முகம்பிள்ளை, கோயில் சார்ந்த ஆய்வுசெய்யச் சொல்லியிருக்கிறார். அப்படித்தான் அழகர் கோயிலைப் பற்றிய ஆய்வை மேற்கொண்டுள்ளார். இந்தக் கள ஆய்வில், ‘தான் சந்திக்கும் எல்லா மனிதர்களும் வாசிப்பதற்குரிய ஒரு புத்தகம்’ என்ற ஞானம் வந்ததாகச் சொல்கிறார் அவர்.
அதனால், தன்னுடைய ஆய்வுகளைக் கல்வெட்டுகள், ஓலைச்சுவடுகளைத் தாண்டி நாட்டார் வழக்காறுகள் வழி அமைத்துக்கொண்டிருக்கிறார். “புத்தக வாசிப்புபோல மனித வாசிப்பு ஓர் ஆய்வாளனுக்கு மிக முக்கியம். அதிலும் குறிப்பாக, பண்பாடு சார்ந்த ஆய்வுகளின்போது, இந்த மனித வாசிப்பின் முக்கியத்துவம் கூடுதலாகப் புரிந்தது. என்னுடைய மனித வாசிப்பில் நாட்டார் என்று அடையாளங்காட்டப்படும் எளிய மனிதர்களும் உண்டு. மயிலை சீனி வேங்கடசாமி போன்ற அறிஞர்களும் உண்டு” என்கிறார்.
கோயில்கள் பற்றிய ஆய்வில் இவருடைய அழகர் கோயில் (1989) இன்றளவும் ஒரு முன்னோடி நூலாகத் திகழ்கிறது. அவருடைய ஆய்வுகளை திராவிடம் சார்ந்த இலக்கியப் பார்வையுடன் அமைத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது. ஒரு பெரியாரியவாதியாகத்தான் கோயில் ஆய்வுகளுக்குள் நுழைந்ததாகச் சொல்லும் அவர், 30 ஆண்டுகளுக்குப் பின்னும் பெரியாரியவாதியாகவே வெளியே வருவேன் என்றும் சொல்கிறார். “என்னுடைய ஆய்வுகள் மற்றவர்களைக் கவர்கிற இடமே, பெரியாரியத்தையும், நாட்டாரியலையும் நான் இணைத்துப் பார்ப்பதால்தான். கோயில் என்பது ஓர் அதிகாரக் கட்டுமானம். தெய்வம் என்பது மனிதர்களின் நிறைவேறாத ஆசைகளையும் நம்பிக்கைகளையும் ஆதங்கங்களையும் உள்ளடக்கியது. பல தெய்வங்கள் இறந்திருக்கின்றன, பிறந்திருக்கின்றன என்பது நம்முடைய மக்களுக்குத் தெரியாது. இறந்த தெய்வங்கள், பிறந்த தெய்வங்கள் என இரண்டின் எண்ணிக்கைகள் பற்றிய எந்த அளவீடும் நம்மிடம் இல்லை. அதனால், இந்தத் தெய்வங்களைப் பற்றிப் பேசப் பேச இயல்பாகவே பகுத்தறிவுச் சிந்தனைகள் வளர்ந்து மதவாதச் சிந்தனைகள் குறையும் என்று நம்புகிறேன்” என்கிறார்.
தாலியும் மஞ்சளும் என்ற இவரது கட்டுரையில், தமிழர்களின் வாழ்க்கையில் 10-ம் நூற்றாண்டுக்குப் பின்புதான் பெண்ணின் கழுத்துத் தாலி புனிதப்பொருளாகக் கருதப்பட்டு வந்துள்ளதாகத் தெரிவிக்கிறார். சங்க இலக்கியங்களில் தாலி மட்டுமல்ல; பெண்ணுக்குரிய மங்கலப் பொருட்களாக இன்று கருதப்படும் மஞ்சள், குங்குமம் ஆகியவை பற்றியும் பேசப்படவே இல்லை என்கிறது அந்தக் கட்டுரை. இப்படித் தமிழர்களின் திருவிழாக்கள், தெய்வங்கள், உணவு, உறவுமுறை என அன்றாட வாழ்வின் பகட்டில்லாத பல்வேறு கூறுகளைக் கொண்டு தமிழ்ச் சமூகத்தின் ஈராயிரம், மூவாயிரமாண்டு வரலாற்று அசைவியக்கத்தைப் பதிவுசெய்திருக்கிறார்.
“நெல்லை மாவட்டத்தில் இடையன்குளம், ஆதிச்சநல்லூர், ஆழ்வார்குளம் என்ற மூன்று இடங்களில் இரும்புக்கான நாகரிகத்தைக் கண்டுபிடித்திருக்கிறேன். இந்தியாவின் வரலாறு தாமிரபரணியில் ஆரம்பிக்கிறது என்று மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை சொல்கிறார். இந்தத் தாமிரபரணி நாகரிகத்தைப் பற்றி எழுத வேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டு. காலமும், நண்பர்களின் உதவியும் கிடைத்தால் பொருநை நாகரிகத்தைப் பற்றி எழுதுவேன்” என்கிறார்.
- © ‘தி இந்து’ குழுமத்தின்
‘சித்திரை மலர்’ இதழிலிருந்து...
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT