Last Updated : 29 Apr, 2018 03:13 PM

 

Published : 29 Apr 2018 03:13 PM
Last Updated : 29 Apr 2018 03:13 PM

நடைவழி நினைவுகள்: சுந்தர ராமசாமி - நவீனத்துவக் கனவு வடிவம்

உரையாடல் என்பதன் லட்சிய உருவகம் சு.ரா.

எழுத்துப் பிரவேசத்தின் தொடக்கத்தில், மார்க்ஸியப் பிடிமானத்துடனும், புதுமைப்பித்தன் எழுத்துகள் மீதான ஈர்ப்புடனும், தன்னுடைய 20-வது வயதில், 1951-ம் ஆண்டு எழுதத் தொடங்கிய சுந்தர ராமசாமி, 35-வது வயதிலிருந்து 7 ஆண்டுகள் (1966-1973) எழுதுவதிலிருந்து ஒதுங்கியிருந்தார். இக்காலகட்டத்தில் கம்யூனிஸ பற்று அவரிடமிருந்து விலகிவிட, புதுமைப்பித்தனின் கலை நம்பிக்கை அவரை முழுமையாக ஆட்கொண்டது. 7 ஆண்டுகள் மெளனத்துக்குப் பின், 1973-ம் ஆண்டு, அவர் புதிய படைப்புச் சக்தியோடும், கலைப் பரிசோதனைகளில் நம்பிக்கையோடும், நவீனத்துவ மனோபாவத்தோடும் செறிவான படைப்பு மொழியோடும் கதைகள், கவிதைகள் என ஒரு நவீனப் படைப்பாளுமையாக வெளிப்பட்டார். அன்றைய மிக முக்கியமான சிறுபத்திரிகையான ‘பிரக்ஞை’ அவருடைய இந்தப் புதிய பிரவேசத்தை, ‘7 ஆண்டுகள் மெளனத்துக்குப் பின் சுந்தர ராமசாமி’ என அட்டையில் பெரிதாகக் குறிப்பிட்டது. அவருடைய புதிய கவிதைகளும் கதையும் அடங்கிய தனிப் பகுதி அதில் இடம்பெற்றது. தொடர்ந்து, சு.ரா. சிறுபத்திரிகைச் செயல்பாடுகளில் மிகுந்த கனவுகளுடன் தீவிரமாக இயங்கத் தொடங்கினார். என்னைப் போன்ற சிறுபத்திரிகை இயக்க இளைஞர்களின் ஆதர்சங்களில் ஒருவரானார். அதன் ஓர் அம்சமாகத்தான் ‘காகங்கள்’ அமைப்பை உருவாக்கினார்.

சுந்தர ராமசாமி நடத்திய ‘காகங்கள்’ அமைப்பின் முதல் கூட்டம் மட்டும்தான் ஆசாத் லாட்ஜில் நடந்தது. அதற்கடுத்த கூட்டங்களை சு.ரா. தன் வீட்டு மாடியிலேயே நடத்தினார். ஏதேனும் ஒரு விசயம் பற்றி அத்துறை சார்ந்தவர்களைக் கூப்பிட்டுப் பேசி விவாதிப்பதாக அது அமைந்தது. 1976-ம் ஆண்டின் ஏதோ ஒரு மாதம், வீட்டு மாடிக் ‘காகங்கள்’ கூட்டத்தில் ‘நாவல் என்ற கலைச் சாதனம்’ என்ற தலைப்பில் கட்டுரை வாசித்தேன். சுந்தர ராமசாமியை நான் முதன்முதலாகச் சந்தித்தபோது, மதுரைப் பல்கலையில் எம்.ஏ., தமிழ் இரண்டாமாண்டு படித்துக்கொண்டிருந்தேன். நண்பர்களோடு இணைந்து ‘விழிகள்’ என்ற சிற்றிதழையும் நடத்திவந்தேன். பின்னர், அதே பல்கலையில் ஆய்வு மாணவன். தமிழ் நாவல்கள் பற்றியது என் ஆய்வு. இடைப்பட்ட காலத்தில், கிருஷ்ணன் நம்பியின் மரணம் நிகழ்ந்து, அந்த இழப்பின் வேதனையிலிருந்து விடுபட ராமசாமி மதுரை வந்திருந்து, காலேஜ் ஹவுஸில் சில நாட்கள் தங்கியிருந்தார். அந்நாட்களிலும் அதனைத் தொடர்ந்தும் அவருடனான உறவும் நட்பும் நெருக்கமடைந்திருந்தது.

வீட்டு மாடிக் ‘காகங்கள்’ கூட்டத்துக்கு, முதல் நாளே, மாலை 4 மணிபோல, நாகர்கோவில் சென்று ஒரு லாட்ஜில் அறை எடுத்துத் தங்கினேன். கூட்டத்துக்கான கட்டுரையை எழுதி முடித்திருக்கவில்லை. அறையில் தங்கி எழுதிக்கொள்ளலாம் என்று நினைத்துத்தான் முதல் நாளே சென்றிருந்தேன். வந்துவிட்ட தகவலைத் தெரிவிக்க சு.ரா.வுக்கு ஃபோன்செய்தேன். “எங்கு தங்கியிருக்கிறீர்கள்?” என்று கேட்டார். சொன்னேன். “அறையைக் காலிசெய்துவிடுங்கள். நம் வீட்டிலேயே தங்கிக்கொள்ளலாம்” என்றார். அறையைக் காலிசெய்துவிட்டு, லாட்ஜ் வாசல் முன் நின்றிருந்தேன். ஓரிரு நிமிடங்களில் ஒரு கார் வந்து நின்றது. டிரைவர் இருக்கையில் இருந்தபடியே, “ஏறிக்கொள்ளுங்கள்” என்றார்.

‘சுந்தர விலாஸ்’ வீட்டு மாடி அறையில் அதுதான் என் முதல் தங்கல். அதன் பிறகு, காரிய நிமித்தமாகவும், அப்படியில்லாமலும் எண்ணற்ற முறை தங்கியிருக்கிறேன். நீண்ட முற்றமும் திண்டுகளுமாக, மரங்கள் சூழ்ந்த விசாலமான வீடு. நன்கு வளர்ந்து, ஒய்யாரமாய் மாடியில் கிளைகள் பரப்பியிருக்கும் சப்போட்டா மரம் பேரழகு. அதன் கனிகள் ஆரஞ்சுப் பழமளவு பருத்துச் செழித்திருக்கும். ருசியும் அலாதி. மாடியறை அப்போதே தன்னிறைவான வசதிகள் கொண்டது.

மறுநாள் மாலைக் கூட்டத்தில், பத்துப் பதினைந்து பேர் நெருக்கமாக வளைய வடிவில் ஜமக்காளம் விரிக்கப்பட்ட தரையில் அமர்ந்திருந்தனர். சுந்தர ராமசாமி சுவரில் சாய்ந்தபடி, ஒரு கால் மடக்கி மறுகால் குத்திட்டிருக்க, அவருடைய வழக்கமான பாணியில் அமர்ந்திருந்தார். அ.கா.பெருமாள், ராஜமார்த்தாண்டன், வேதசகாயகுமார், உமாபதி ஆகியோர் அக்கூட்டத்தில் இருந்தது நினைவிருக்கிறது. கட்டுரையை வாசித்து முடித்ததும் சு.ரா., “மறுபடியும் வாசியுங்களேன். சரியாக உள்வாங்கிக்கொண்டு பேச உதவியாக இருக்கும்” என்றார். ராமசாமிக்குக் கட்டுரை மிகவும் பிடித்திருந்தது. விவாதத்தை அவர்தான் மேலெடுத்துச் சென்றார். அக்கட்டுரை, நாவல் கலை பற்றிய புதிய சிந்தனைகளைக் கொண்டிருப்பதாக அப்போது அவர் தொடர்பில் இருந்த இலக்கிய நண்பர்களுக்கெல்லாம் கடிதம் எழுதியிருக்கிறார் என்பதைப் பின்னால் அறிந்துகொண்டேன்.

இரவு உணவுக்குப் பின், “தொடர்ந்து கட்டுரைகள் மட்டுமே எழுதினாலும் நீங்கள் ஒரு கிரியேட்டிவ் ரைட்டர் என்பதான ஒரு எண்ணம்தான் என் மனசில் இருக்கு. உங்களுக்குக் கதை எழுதணும்னு தோணினதே இல்லையா?” என்று கேட்டார். என் தயக்கத்தைச் சொன்னேன். “உலக இலக்கிய மேதைகளின் முன் நாம் ஒன்றுமில்லைதான். அதற்காக நாம் சும்மா இருந்துவிட முடியாது. நம் மொழியில் நம்மால் செய்யக்கூடியவற்றை நாம் செய்துதான் ஆக வேண்டும்” என்றார். மெளனமாக இருந்தேன். “எழுதலாம்னு ஏதாவது கதை தோணியிருக்கா” என்று மறுபடியும் கேட்டார். “ரொம்ப நாளாவே ஒரு கதை மனசுல இருக்கு” என்றேன். “எங்க அதச் சொல்லுங்க” என்றார். சொன்னேன்.

பொதுவாக, சு.ரா. கட்டிலில் கால் நீட்டிப் படுத்துக்கொண்டு, தலையை உயர்த்தி வைத்தபடிதான் பேசவும் கேட்கவும் செய்வார். உற்சாகம் அடைந்துவிட்டால், எழுந்து உட்கார்ந்துகொள்வார். ஓரிரு கணம் அமைதியாக இருப்பார். பேச இருப்பதை மனம் தொகுத்துக்கொண்டிருப்பது போலிருக்கும். அப்போது ஒரு சிகரெட் பற்றவைத்தார் என்றால், ஒரு தீர்க்கமான உரையாடலை நிகழ்த்தப்போகிறார் என்பது நிச்சயம். எழுந்து உட்கார்ந்துகொண்டு, சிகரெட் கேட்டார். கொடுத்தேன். பற்றவைத்துக்கொண்டார். “நீங்கள் சொன்னது, அப்படியே ஒரு சிறுகதையாக இருக்கிறது. இதை நீங்கள் எழுதிவிட்டால் போதும். உங்கள் மனத்தடைகள் விலகி, நீங்கள் தொடர்ந்து கதைகள் எழுத ஆரம்பித்துவிடுவீர்கள்” என்று சொல்லிக்கொண்டே போனார். ஆனாலும், மனத்தடைகளிலிருந்து விடுபட எனக்கு மேலும் 20 ஆண்டுகள் ஆகின.

என் 40 ஆண்டு கால கலை இலக்கிய உறவுகளில் சு.ரா.வுக்கு இணையான ஒரு உரையாடல் வித்தகரை இதுவரை சந்தித்ததில்லை. அலாதியான பேச்சு. உடனிருப்பவரை மெல்லமெல்ல ஈர்த்து, தன்னுடன் இணைந்து சஞ்சரிக்கவைக்கும் பேச்சு. உடனிருப்பவரின் கூச்சங்களை, ஏதோ ஒரு தருணத்தில் உதிரச்செய்து அவர்களையும் பேசவைக்கும் வித்தகம் சு.ரா.விடம் ஒரு அபாரமான இயல்பாக அமைந்திருந்தது. உரையாடல் என்பதன் லட்சிய உருவகம்.

- தொடரும்...

- சி.மோகன், எழுத்தாளர்.

தொடர்புக்கு: kaalamkalaimohan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x