Last Updated : 26 Apr, 2018 09:12 AM

 

Published : 26 Apr 2018 09:12 AM
Last Updated : 26 Apr 2018 09:12 AM

மரணம் ஒரு கலை 9: ஏழிசை மன்னா, எங்கு சென்றாயோ?

எம்.கே.தியாகராஜ பாகவதர்

கலைஞர்களைச் சிகரத்தில் ஏற்றி வைத்துக் கொண்டாடுவதும், பாதாளத்தில் வீழ்த்தி மண்ணைக் கவ்வ வைப்பதும் திரைக்கலைதான்!

திரையில் மின்னும் நட்சத்திரத்துக்குப் பின்னால் ஓராயிரம் எரிநட்சத்திரங்கள் மண்ணில் விழுந்து கருகி இருக்கக்கூடும். ஓராயிரம் எரிநட்சத்திரங்களின் தோல்வியைவிட மின்னும் ஒற்றை நட்சத்திரம் தரும் நம்பிக்கை அளவற்றது. திரைக்கலை, என்றும் தீராத புகழ் போதையை தனக்குள் வைத்துக்கொண்டு கலைஞர்களை ஈர்க்கிறது. தென்னிந்தியாவின் முதல் பேரொளி நட்சத்திரமாக ஒளிர்ந்தவர் எம்.கே.தியாகராஜ பாகவதர். காதுகளில் வைரக் கடுக்கண், விரல்களில் வைர மோதிரங்கள், பளபளக்கும் பட்டாடை, தோளில் தவழும் பட்டு அங்கவஸ்திரம், பாக்கெட்டில் தங்கப் பேனா, மணக்கும் ஜவ்வாது என தன்னுடைய நட்சத்திர அந்தஸ்துக்கு ஏற்றார் போலவே வளைய வந்தவர்.

எழிலிசை மன்னர்

அற்புதமான குரல் வளம், குரல் வளத்தை வசீகரமாக வெளிப்படுத்தும் திறன், பொன்னிறத்தில் கவரும் தோற்றம், எடுப்பான நாசி, காந்தக் கண்கள், சுருள் சுருளான நீண்ட முடிக்கற்றைகள் என அழகனாகவும் இருந்த பாகவதர் ரசிகர்களைக் கவர்ந்தார்.

ஏழு சுரங்களையும் தன்னிடம் வசீகரமாக்கிக் கொண்ட தியாகராஜருக்கு ‘ஏழிசை மன்னர்’ என்ற பட்டமும், கவரும் பேரெழிலையும் கொண்டதால் ‘எழிலிசை மன்னர்’ என்ற பட்டமும் பொருத்தமாகவே இருந்தன.

பாடகர்களாக இருப்பவர்களே நடிகர்களாக முடியும் என்ற காலகட்டத்தில், நிறைய பாடகர்கள் நடிக்க வந்தாலும், பாகவதரின் இடத்தை யாராலும் எட்ட முடியவில்லை. கர்னாடக இசையை இசையறியாத எளிய மக்களும் அனுபவித்து ரசிக்கும்வண்ணம், பாகவதரின் பாடல்கள் வசீகரமானவை. அவரின் ‘மன்மத லீலையை வென்றார் உண்டோ?’, ‘வதனமோ சந்திர பிம்பமோ’ போன்ற எண்ணற்றப் பாடல்கள் இன்றும் கேட்பவரை ஈர்ப்பவை.

திருச்சியில் பிறந்து வளர்ந்த பாகவதரின் தந்தையும் நாடகத்தில் ஈடுபாடு கொண்டவர். பாகவதரின் திறமையை, அவருக்குள் இருந்த இசையாற்றலை இளமையிலேயே அடையாளம் கண்டு கொண்டவர் வயலின் வித்வான் பொன்னு ஐயங்கார். பாகவதரின் திறமையைக் கண்டு வியந்த அவர் சன்மானம் பெற்றுக் கொள்ளாமலேயே தியாகராஜருக்கு வயலின் கற்றுத் தருகிறார். மாணவனின் அரங்கேற்றத்துக்குப் புகழ்வாய்ந்த வித்வான்களை அழைக்கிறார். ‘சின்னப் பையனின் கச்சேரிக்குத் தாங்கள் வாசிப்பதா’ என ஒருவரும் வரவில்லை. பொன்னு ஐயங்கார் தானே வயலின் வாசிக்க முன்வருகிறார். புகழ்பெற்ற புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை கஞ்சிரா வாசிக்க முன்வருகிறார். அரங்கேற்றம் அன்றே தியாகராஜன், பாகவதர் ஆகிறார். இன்றும் பாகவதர் என்றால் அது தியாகராஜர்தான்.

1934-ல் ரூ.4,500 சம்பளம்

1931-ல் தென்னிந்தியாவின் முதல் பேசும் படமான ‘காளிதாஸ்’ வெளியாகிறது. 1934-ல் தமிழகத்தில் வெளியான 7-வது படமான ‘பவளக்கொடி’-யில் கதாநாயகனாக அறிமுகமாகிறார் பாகவதர். கதாநாயகி எஸ்.டி.சுப்புலட்சுமி. பவுன் 15 ரூபாய்க்கு விற்ற அந்தக் காலத்தில், பாகவதரின் முதல் படச் சம்பளம் ரூ.4,500. விரைவிலேயே அவரின் சம்பளம் லகரத்தைத் தொடுகிறது. அக்காலத்தில் முழுப்படத்துக்கே தயாரிப்புச் செலவு 50 ஆயிரம்தான் ஆகும். லட்சங்கள் கொடுத்தும் பாகவதரை கதாநாயகனாக நடிக்க வைக்கத் தயாரிப்பாளர்கள் விரும்பியதற்குக் காரணம், படத்தின் வசூல்தான். 1934 முதல் 1944 வரை பாகவதர் நடித்தப் படங்கள் மொத்தம் 9. அனைத்து படங்களும் வசூலை அள்ளின. தயாரிப்பாளர்கள் பண மழையில் நனைந்தார்கள். திரையரங்கைத் தவிர வேறெங்கும் திரைப்படம் பார்க்க வாய்ப்பில்லாத காலத்தில், பாகவதரின் பாடல்களைக் கேட்டு மகிழ்வதற்காகவே மக்கள் ஒவ்வொரு படத்தையும் பலமுறை பார்த்தார்கள். பாகவதரின் படங்கள் எல்லாமே 50 வாரங்கள், 100 வாரங்கள் ஓடியவை. அவர் நடித்த ‘ஹரிதாஸ்’ 1944-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியானது, அடுத்து வந்த இரண்டு தீபாவளிக்கும் தொடர்ந்து ஓடியது. 110 வாரங்கள் ஒரு திரையரங்கில் ஓடிய ஒரே திரைப்படம் பாகவதரின் ‘ஹரிதாஸ்’ படம்தான். பாகவதரின் இனிமையான குரலும், கலைவாணரின் நகைச்சுவையும், இளங்கோவனின் வசனங்களும், பாபநாசம் சிவனின் பாடல்களும் பாகவதர் படங்களின் வெற்றிக் கூட்டணி.

பிரபலமான பாகவதர் கிராப்

திரைக்கலைஞர்களைப் போல் சிகையலங்காரம், ஆடையலங்காரம் செய்துகொள்ளும் போக்கு முதன்முதலில் பாகவதரில்தான் தொடங்கியது. அப்போதெல்லாம் பாகவதர் கிராப் வெகு பிரபல்யம். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் அவரைப் பார்க்க மக்கள் திரண்டனர். கணிசமான எண்ணிக்கையில் பெண்களும் அடக்கம்.

புகழின் உச்சியில் இருக்கும்போதுதான் பாகவதர் வாழ்வில் லட்சுமிகாந்தன் கொலை வழக்கு சூறாவளியாக வந்து சேர்ந்தது. ‘இந்துநேசன்’ என்ற மஞ்சள் பத்திரிகையின் ஆசிரியர் லட்சுமிகாந்தன். பிரபலங்களின் அந்தரங்கத்தின்மேல் கதைகளைப் புனைபவர்கள் அன்றும் இன்றும் என்றும் இருக்கிறார்கள். பிரபலங்களின் அந்தரங்கத்தைத் திரித்து எழுதி, பணம் பறித்து பலருக்குப் பெரும் தலைவலி யாக இருந்த லட்சுமிகாந்தன் கொல்லப்படுகிறார். கொலை நடந்த 48 நாட்களுக்குப் பிறகு, அக்கொலை வழக்கில் பாகவதரும் கலைவாணரும், குற்றவாளிகளாக சேர்க்கப்படுகிறார்கள்.

கலை உலகமே கண்ணீரில் மிதந்தது. விதியின் மீது நம்பிக்கைக் கொண்ட பாகவதரும், கடவுளின் மீது நம்பிக்கையற்ற பகுத்தறிவுவாதி கலைவாணரும், தங்கள் வாழ்வில் நேர்ந்த இத்துன்பத்துக்குக் காரணமறிய முடியாமல் திகைத்தார்கள். வாழ்வின் போக்கையே மாற்றிவிட்ட சூதின் கயிறு மாபெரும் இரு கலைஞர்களின் கழுத்தில் சுருக்காக விழுந்தது. ‘திருவாழத்தான் இருந்தும் கெடுத்தான், செத்தும் கெடுத் தான்’ என்பதுபோல், லட்சுமிகாந்தன் உயிரோடு இருந்து கொடுத்த துன்பத்தைவிட, இறந்து கொடுத்த துன்பம் அதிகம்.

கலைவாணரோடு பாகவதர்

பாகவதர், கலைவாணர் இருவரும் குற்றவாளிகள் என்பதற்கு ஆதாரமில்லை. இருந்த ஒரு சாட்சியமும் பொய்யன் என நீதிபதியால் விவரிக்கப்படுகிறது. விடுதலையாகி விடக்கூடிய சாதகமான சூழலில் இருவருக்கும் ஆயுள் தண்டனை கிடைக்கிறது. தங்களின் கலை உலக வாழ்க்கை அஸ்தமித்த வலி இருவருக்கும். மேல்முறையீட்டுக்காக வழக்கு உயர் நீதிமன்றத்துக்குப் போகிறது. பெரும் துரதிர்ஷடம் அவர்களின் கால்களைச் சுற்றிக் கொள்கிறது. மறுவிசாரணையே மேற்கொள்ளாமல் கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை உயர் நீதிமன்றமும் உறுதி செய்கிறது. அஸ்தமன சூரியன்போல் இருவரும் பொலிவிழந்தார்கள். ஆனாலும் நம்பிக்கை இழக்காமல், லண்டனில் இருந்த ‘பிரிவி கவுன்சில்’ என்ற உச்ச நீதிமன்றத்துக்கு வழக்கைக் கொண்டு செல்கிறார்கள்.

ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு உட்பட்ட எல்லா நாடுகளில் இருந்தும் மேல்முறையீட்டுக்கு வழக்குகள் இங்குதான் வர வேண்டும். நிலுவையில் இருக்கும் வழக்குகள் விசாரணைக்கு வரவே நீண்ட காலம் பிடிக்கும். இறுதியாக 2 ஆண்டுகள், 2 மாதங்கள், 13 நாட்கள் சிறையில் இருந்த இருவரும் நிரபராதிகள் என விடுவிக்கப்பட்டார்கள்.

சிறையில் இருந்து விடுதலையான இருவரும் தங்களின் கலை வாழ்க்கையைத் தொடர்ந்தார்கள். ஆனால், திரையுலகில் பிரகாசிக்கும் ஒருவரின் பயணத்தில் சிறு இடைவெளி விழுந்தாலும், அவர்களின் திரையுலக வாழ்க்கை சோதனைகளையே சந்திக்கும். அடுத்து வந்த 12 வருடங்களில் பாகவதர் சொந்தமாகத் தயாரித்த 4 படங்களும் பெரும் வெற்றியை ஈட்டவில்லை. ரசிகர்களின் ரசனை மாறிவிட்டிருந்தது.

போன பார்வை வந்தது

கடைசிப் படமான ‘சிவகாமி’யில் நடித்துக் கொண்டிருக்கும்போது அவருக்குச் சர்க்கரை நோயின் அளவு அதிகமானது. இன்சுலின் போட்டுக்கொண்டாலும் முறையான மருத்துவம் செய்து கொள்ளாததால், கண்பார்வை குறைந்தது. கடவுளின்மேல் ஆழ்ந்த நம்பிக்கைக் கொண்ட அவர், தஞ்சை மாரியம்மன் கோயிலில் 45 நாட்கள் தங்கி, அம்மனைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருந்தார். அவர் நம்பிக்கையினால் அவரின் கண்பார்வை சரியானதாக சொல்லப்பட்டது.

‘சிவகாமி’ படத்தை முடித்துக்கொடுக்க வேண்டும் என்பதற்காக சேலத்தில் தொடர்ந்து படப்பிடிப்பில் இருந்தார். இடையில் ஒருநாள் சேலத்தில் இருந்து பொள்ளாச்சிக்கு கச்சேரிக்குச் சென்றார். 3 மணி நேரம் கச்சேரி.

கச்சேரிக்கு வந்திருந்த ஒரு சாமியார், அவரின் கால் வீக்கம் குறைய சுரைக்காய் கொடி சூப் ஒன்று தயாரித்துக் கொடுத்து குடிக்கச் சொன்னார். எந்த எச்சரிக்கை உணர்வும் இல்லாமல் வாங்கிக் குடித்த பாகவதருக்கு, சுரைக்காய் சூப் மரணத்தின் தூதுவனானது.

இசை நிரம்பிய இதயம்

மூச்சுத் திணறலும் உடல் ஒவ்வாமையும் ஏற்பட்டதால் உடனடியாக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஏழு சுரங்களால் நிரம்பியிருந்த அவரின் ரத்தத்தில் ஒவ்வாமையின் நஞ்சு கொஞ்சம் கொஞ்சமாக கலக்கிறது. இசையின் இனிமை நிரம்பியிருந்த இதயம், அதிக சர்க்கரையால் ஸ்தம்பிக்கிறது. தம்புராவின் சுருதியைப் போல் இசைத்த நாடித் துடிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைகிறது. அவரின் சீடர் ரத்தினப்பா, தியாக பிரம்மத்தின் பாடல்களைப் பாட, பாகவதரின் உதடுகளும் இறைவனின் நாமத்தை உச்சரிக்கின்றன. இனிய இசையை எழுப்பி, அதிர்ந்து அடங்கும் வீணையின் தந்தியைப் போல் பாகவதரின் உடல் அதிர்ந்து அடங்குகிறது.

மண்ணில் எத்தனையோ கலைஞர்கள் பிறக்கிறார்கள், புகழ் பெறுகிறார்கள், மறைகிறார்கள். முதிர்ந்த பருவத்தில் மெல்ல உதிரும் சருகினைப்போல் வாழ்வு அடங்கிப் போகிறவர்கள் மரணம் இயற்கையானது. ஏற்கக்கூடியது. இயற்கை யின் சூறாவளியில் வேருடன் சாய்க்கப்பட்ட மரத்தைப் போல், பயணத்தின் நடுவில் நேரும் மரணம் துயர் நிரம்பியது. தாங்க இயலா வேதனையைத் தருவது. பாகவதரின் மரண மும் நினைக்கும் கணந்தோறும் தீரா துயர் தருவது. இசைக்கப்படாத ராகங்களுடன் தம்பூராவைப் போட்டுடைத்தத் துயரம்.

- வருவார்கள்...

எண்ணங்களைப் பகிர: vandhainila@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x