Published : 23 Aug 2014 01:18 PM
Last Updated : 23 Aug 2014 01:18 PM

எழுத்தாளர்கள் பார்வையில்...- அந்தக் காலத்தில் சென்னை இல்லை

சென்னை நகரம் புதிதாக வருபவர்களுக்குத் திகைப்பையும், அசூயையையும் அளிப்பது. ஆனால் இங்கு வாழ்பவர்களுக்கோ என்ன வகையான பின்னணிகளில் இருந்தாலும் நம்பிக்கையையும், சவாலையும் ஒரே நேரத்தில் அளிக்கும் தந்தை போன்று வசீகரிப்பது. ‘நேற்று தோற்றேன், நாளை என்னை சென்னை தோற்கடிக்காது’ என்ற நம்பிக்கைதான் சென்னை மக்களைத் தொடர்ந்து வாழச்செய்கிறது. உ.வே.சா. தொடங்கி ,கவிஞர் மு.சுயம்புலிங்கம் வரை சென்னை பற்றி எழுதிய பதிவுகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

உ.வே. சாமிநாதையர்

சென்னை நகரத்தில் பார்க்க வேண்டிய பொருட்காட்சிச் சாலை, கடற்கரை, கோயில்கள், புத்தகச் சாலைகள், சர்வகலா சாலை முதலியவற்றையும் பார்த்தேன். வித்துவான்களையும் அறிஞர்களையும் பார்த்துப் பழகியது கிடைத்ததற்கரிய பெரிய லாபமாகத் தோன்றியது. சிறந்த உத்தியோகப் பதவியை வகித்த பெரியவர்களெல்லாம் அடக்கமாகவும், அன்பாகவும் இருப்பதைக் கண்டு வியந்தேன். கும்பக்கோணத்தில் பதினைந்து அல்லது இருபது ரூபாய் சம்பளம் பெறும் குமாஸ்தா செய்யும் அட்டகாஸத்தையும் ஆடம்பரத்தையும் கண்ட எனக்கு அப்பெரியவர்களுடைய நிலை மிக ஆச்சரியத்தை உண்டாக்கியது.

- ‘என் சரித்திரம்’ நூலில் இருந்து

புதுமைப்பித்தன்

சாயந்தரமாகிவிட்டால், நாகரிகம் என்பது இடித்துக்கொண்டும் இடிபட்டுக்கொண்டும் போக வேண்டிய ரஸ்தா என்பதைக் காட்டும்படியாகப் பட்டணம் மாறிவிடுகிறது. அதிலும் தேகத்தின் நரம்பு முடிச்சுப் போல, நாலைந்து பெரிய ரஸ்தாக்களும், டிராம் போகும் ரஸ்தாக்களும் சந்திக்கும் இடமாகிவிட்டாலோ தொந்தரவு சகிக்கவே முடியாது.

ஆபீஸிலிருந்து ‘எச்சு'ப் போய் வருகிறவர்கள், இருட்டின் கோலாகலத்தை அநுபவிக்க வரும் அலங்கார உடை தரித்தவர்கள். மோட்டாரில் செல்லுவதற்கு இயலாத அவ்வளவு செயலற்ற அலங்கார வேஷ வௌவால்கள் எல்லாம் ஏகமேனியாக, ‘எல்லாம் ஒன்றே' என்று காட்டும் தன்மை பெற்றவர்கள் போல் இடித்துத் தள்ளிக்கொண்டு அவரவர் பாதையில் போவார்கள். அன்றும் அம்மாதிரியே போய்க்கொண்டிருந்தார்கள்.

‘ஒற்றைவழிப் போக்குவரத்து' என்ற ஸஞ்சார நியதி வந்ததிலிருந்து உயர்ந்த அடுக்குக் கட்டிடங்களின் உச்சியின் மேல் நின்றுகொண்டு பார்த்தால் அங்கே நாகரிகத்தின் சுழிப்புத் தெரியும். கரையைப் பீறிட்டுக்கொண்டு பாயும் வெள்ளத்தை அணைக்கட்டின்மேல் இருந்துகொண்டு பார்த்தால் எப்படியோ, அப்படி இருக்கும்.

நான் சொல்ல வந்த இடமும் அதுதான். மவுண்ட் ரோட் ரவுண்டாணா. மலைப்பழ மாம்பழக் கூடைக்காரிகளின் வரிசை. அவர்களுக்குப் பின்புறம் எச்சில் மாங்கொட்டையைக் குதப்பித் துப்பிவிட்டு, சீலையில் கையைத் துடைத்துக்கொள்ளும் ‘மெட்ராஸ் பறச்சிங்கோ', கைத்தடியோடு ‘சிலுமன்' கொடுத்து உலாவிக்கொண்டிருக்கும் காபூலிவாலா, முகம்மதியப் பிச்சைக்காரன், நொண்டிப் பிச்சைக்காரன், குஷ்டரோகப் பிச்சைக்காரன், ராத்திரித் ‘தொழிலுக்கு'த் தயாராகும் யுவதி - பாதையின் ஓரத்தில் உட்கார்ந்துகொண்டு, நிம்மதியாகச் சீவிச் சிங்காரித்துக்கொண்டிருக்கிறாள் அவள் - அப்புறம் நானாவித, “என்ன சார் ரொம்ப நாளாச்சே”, “பஸ் வந்துட்டுது”, “ஏறு” என்கிற பேர்வழிகள் எல்லாம். அவசரம், அவசரம், அவசரம்...

- ‘மகா மசானம்’ சிறுகதையிலிருந்து

க.நா. சுப்பிரமணியம்

சென்னைக்கு வருகிறவர்கள் மூர் மார்க்கெட்டில் போய் ஏமாந்துவிடக் கூடாது என்று அந்த நாளில் சொல்வார்கள்- மூர் மார்க்கெட்தான் ஏமாற்றுக்கெல்லாம் இருப்பிடம் என்று எண்ணி. இப்போது சென்னை பூராவுமே இது வியாபித்து நிற்கிறது என்று சொல்லலாம். ‘நல்லெண்ணெயிலிருந்து நல்லெண்ணம் வரையில் கலப்படந்தான்’ என்று புதுமைப்பித்தன் சொன்னாரே- அது சென்னை வாழ்வை அடிப்படையாக வைத்துதான்.

கலப்படம் செய்பவர்கள்தான் அதிகமாகக் கலப்படத்தின் ஆபத்துகளைப் பற்றிச் சொல்லுகிறார்கள்- வள்ளுவர் வகுத்த வழியை எடுத்துப் புளியமரம் உலுக்குவது போல உலுக்குபவர்கள் வள்ளுவர் பண்புக்கு எதிர்மாறான வாழ்க்கை வாழ்வதுபோல, இந்த முரண்பாடு சென்னை வாழ்வின் அடிப்படை என்றுதான் தோன்றுகிறது.

- ‘சென்னைக்கு வந்தேன்’ கட்டுரை, சரஸ்வதி இதழ்,1958

அசோகன்

இப்பொழுது இருட்டடிப்பு கிடையாது. நகரின் சின்னஞ்சிறு சந்துகளிலும் சந்திரக் குஞ்சுகள்போல் ஒளி சிந்தும் மெர்க்குரி விளக்குகள் பிரகாசிக்கின்றன. மதுக்கடைகள் ஒழிந்துவிட்டன. திருட்டுச் சாராய விற்பனையும் பெரும்பாலும் ஒடுங்கிவிட்டது. பகிரங்கமாக நடைபெற்ற விபச்சாரம் வெவ்வேறு பரிணாமங்களில் சமூக வாழ்க்கையோடு ஐக்கியமாகிவிட்டது. நான் முதல் தடவை வந்தபோது இருந்ததைவிடச் சென்னை நகரின் ஜனத்தொகை கிட்டத்தட்ட மும்மடங்கு பெருகிவிட்டது.

நகரும் நாலாபக்கமும் வளர்ச்சி அடைந்துவருகிறது. வளரும் கட்டிடங்கள், ‘போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து’ என்று தம்மைப் பின்பற்றுவோர்களுக்கு உபதேசித்துவிட்டு நிதிகள் வசூலித்து வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக்கொள்ளும் தலைவர்கள், கலையின் பெயரால் உயரும், தாழும் கலைஞர்கள் ஆகியவர்களது வாழ்க்கையை வழக்கம்போல் நானும் நண்பர்களும் வேடிக்கை பார்த்துவருகிறோம்.

- எழுத்தாளர் வல்லிக்கண்ணின் சகோதரர், ‘சென்னைக்கு வந்தேன்’ கட்டுரை, சரஸ்வதி இதழ்,1958

சுந்தர ராமசாமி

எக்மூர் ஸ்டேஷனில் இறங்கி ரயிலடியிலிருந்து வெளியே வந்ததும் சென்னைக்கு வந்துவிட்டோம் என்ற பரபரப்பு மேலும் அதிகமாயிற்று. நான் முதன்முதலாக ஒரு பெரும் நகரத்தைப் பார்க்கப் போகிறேன். ரயில், ஸ்டேஷனை நெருங்கிக்கொண்டிருந்தபோது ஜன்னலில் மடிந்து விழுந்தவாறு பார்த்த எக்மூர் ஸ்டேஷன் கட்டிடம் எனக்குப் பிடித்திருந்தது. சிவப்பு நிறம். கூரை விசித்திரமாக இருந்தது. வெள்ளையடிக்காமல் விடப்பட்டிருந்தது.

ஸ்டேஷன் முகப்பில் டிக்கட் தரும் இடத்திற்கு முன்பாக நின்ற தூண்களைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த பீடங்களில் ஆணும் பெண்ணும் குழந்தைகளுமாக அப்பிக்கொண்டிருந்தார்கள். திடீரென்று என் மனதில் ஒரு ஏமாற்றம் கவிழ்ந்தது. தோற்றத்தில் அவர்கள் அவ்வளவு பூஞ்சையாக இருந்தார்கள். ‘வறுமை’ என்ற தலைப்பில் வரைந்த ஓவியம் உயிர்பெற்றது போல் இருந்தது. எங்கள் வறுமைக்கும் சென்னை வறுமைக்கும் இடையில் இருந்த வேற்றுமை பெரிய அதிர்ச்சியைத் தந்தது.

- ‘முதலில் பார்த்த சென்னை’ கட்டுரையிலிருந்து

ஜெயகாந்தன்

இருட்டில் சந்தில் நின்று பேரம்பேசும் விபச்சாரியின் வாழ்வில், அவள் ஆசைகளில், அவள் பேச்சில், அவள் சிரிப்பில் இந்த நகரத்தின் ஒரு அம்சம் பிரதிபலிப்பதைக் காண்கிறேன். சல்லாத் துகிலணிந்து, மார்புக் குவட்டை நிமிர்த்தி, சிரைத்த புருவங்களும் சிவப்பிட்ட உதடுகளும் காட்டி ஒயிலாக நடந்து செல்லும் சினிமா எக்ஸ்ட்ராக்களின் டம்பத்தில் இந்த நகரத்தின் இன்னொரு அம்சத்தைக் காண்கிறேன்.

இப்படிப்பட்ட விஷயங்கள் மட்டுமா? மிகவுயர்ந்த விஷயங்களும் இங்கே உண்டு. தன்மதிப்புடன் வாழும் ரிக்‌ஷாக்காரன், ரோஷத்தோடு வாழும் சோற்றுக் கடைக்காரி, பத்திரிகை படித்து அரசியல் பேசும் மூட்டை தூக்குபவன், பிள்ளையைப் படிக்கவைத்துக் காலேஜுக்கு அனுப்பும் ரெயில்வே போர்ட்டர், சாயங்கலத்தில் பீச்சில் முறுக்கு, சுண்டல் விற்று, பள்ளிக்குச் செல்லும் பிராமணச் சிறுவர்கள், இப்படிப் பற்பல விதமான ‘வாழ்ந்து காட்டும்’ மனிதர்களைப் பட்டணத்தில்தான் நிறையக் காண முடியும்.

- ‘சென்னைக்கு வந்தேன்’ கட்டுரை, சரஸ்வதி இதழ்,1958

அசோகமித்திரன்

சுமார் நூறாண்டு காலமாகவே திருவல்லிக்கேணி ‘மெஸ்’கள் பெயர் போனவை. சைடோஜி மெஸ், ஹனுமந்தராவ் மெஸ், வெங்கடரங்கம் பிள்ளைத் தெரு மெஸ், மாமி மெஸ் என இச்சிறு அமைப்புகள் காலை எட்டரை மணியிலிருந்து பதினொரு மணிவரையிலும், மாலை ஏழு மணியிலிருந்து ஒன்பது மணிவரையிலும் இருபது இருபது நபர்களாக உள்ள பந்தியில் உணவு படைப்பார்கள். இவர்களுடைய வத்தல் குழம்பு பிரசித்தமானது. அநேகமாக உணவு உண்பவர்கள் அனைவரும் வாடிக்கைக்காரர்கள். திருமணத்திற்கு முன்பு பையன், பெண் பற்றி விசாரிப்பது போல மெஸ் முதலாளி நிறையக் கேள்விகள் கேட்டுத் திருப்தியான பதில் கிடைத்தாலும், அந்த இளைஞனுக்கு ஒரு இறுதிச் சோதனையாக மூன்று நாட்கள் மட்டும் உணவு அளிப்பதாக ஒத்துக்கொள்வார்.

அவன் எப்படிச் சாப்பிடுகிறான், உணவை வீண் செய்கிறானா, ஓரேடியடியாக அள்ளிப் போட்டு அடைத்துக்கொள்கிறானா, பக்கத்திலிருப்பவர், அருவருப்படையும்படி உணவைக் கீழே சிந்துகிறானா, ஏப்பம் விடுகிறானா என்று பார்த்த பிறகுதான் வாடிக்கைக்காரனாகச் சேர்த்துக்கொள்வார். உண்மையில் உணவு அருந்தும்போது இவ்வளவு அமைதியாகவும் கட்டுப்பட்டுடனும் இயங்கும் கோஷ்டிச் சாப்பாட்டை இந்த மெஸ்களில்தான் காண முடியும். இன்று பெரிய, பளபளவென வர்த்தக ரீதியான உணவு விடுதிகள் வந்துவிட்டன. இந்த மெஸ்களின் செல்வாக்கும் மிகவும் குறைந்துவிட்டது. கண்டிப்பு நிறைந்த மனிதர்கள் இப்போது இல்லை.

- திருவல்லிக்கேணி ‘மெஸ்’கள் குறித்து

எஸ். ராமகிருஷ்ணன்

திருஅல்லிக்கேணியின் தெருக்கள் அகலமாகயிருந்தன. நாழி ஒடு போட்ட வீடுகள், நீண்ட திண்ணைகள், சாணம் தெளித்து அழகாகக் கோலமிட்டிருந்தார்கள், அவர்கள் குடியிருந்த கிழக்கு பகுதியில் ஒன்றிரண்டு பத்தர்களின் வீடுகளிருந்தன. அவர்கள் விடிகாலையில் கும்மட்டி அடுப்பைப் புகையவிட்டபடியே தங்க வேலை செய்யத் துவங்கியிருப்பார்கள். கோவிலுக்கு தெற்கேயொரு இடிந்த குளமிருப்பதைக் கண்டிருக்கிறான். அதில் யாரும் குளிக்கப்போவதில்லை, தூர்ந்து போயிருந்தது.

வீட்டிலிருந்து பார்த்தால் பார்த்தசாரதி கோவிலின் கோபுரம் தென்பட்டது. வெளியே பறவைகளின் கீச்சொலி முற்றியிருந்தது. ஆனைக்குளத்திற்குக் குளிப்பதற்குச் செல்லும் பெண்கள் சந்திற்குள் நடந்துகொண்டிருந்தார்கள். ஹார்மோனியத்தின் சப்தமும் இசைவான பெண் குரலும் கேட்கத் துவங்கியது.

கரைக்குத் திரும்பியிருந்த மீனவர்களின் கூச்சலும் கூடைகூடையாக அள்ளிக்கொண்டு போன மீன் வியாபாரிகளையும் பார்த்தபடி கடற்கரைச் சாலையில் போய்க்கொண்டிருந்தான். கரை மணல்கள் முழுவதும் நாட்டுப் படகுகள் நின்றிருந்தன. வலையை மணலில் உலரவிட்டிருந்தார்கள். கடற்காகங்கள் மணலில் வெயிலைக் கொத்திக்கொண்டு அலைந்தன.

- ‘யாமம்’ நாவலில்

ஜெயமோகன்

அடையாற்றின் கரையில் இருந்த தன் பங்களாவிலிருந்து காலை ஏழு மணிக்குக் கிளம்பி மெரினாவை ஒட்டிச்சென்ற வண்டிப் பாதையில் அயோத்தியாகுப்பம் வழியாகக் கடலோரமிருந்த தலைமைக் காவல் நிலையத்துக்குச் செல்வது ஏய்டனின் வழக்கம். இரவில் ஒன்பது மணி அளவில் அதேபோலக் குதிரையில் தனியாகத் திரும்பி வருவான். அவனுக்கிருந்த ஒரே உடற்பயிற்சி அதுதான். வலப்பக்கம் வந்துகொண்டே இருக்கும் நீலமான கடல் அவனுடைய அன்றாட எரிச்சல்களை, சங்கடங்களை எல்லாம் சிறியதாக்கிவிடும். அதன் விளிம்பில் ஒரு சிறிய நுரைக்கொப்புளம் போல நகர்ந்து கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் போல விடுதலை அளிப்பது ஏதுமில்லை.

அபாரமான கடல். மதராசப்பட்டினத்தில் ஏய்டன் மிக விரும்பியதே அந்தக் கடலைத்தான். துல்லியமான நீலம். வளைவுகளற்ற நீளமான மணற்கை மீது பட்டுத் துணியை விரித்து விரித்துக் காட்டிக்கொண்டே இருப்பதுபோல அலை நுரை பரவியபடியே இருக்கும். ஒளி தளதளக்கும் நீலப்பரப்பில் செம்படவர்களின் கட்டுமரங்கள் வெண்ணிறமான பாய்கள் புடைத்து அசைய ஒற்றைச் சிறகுள்ள பறவைகள் போலச் செல்லும். அப்பால் துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும் கப்பல்கள் கரிய சிறுமேடுகள் போலத் தெரியும்.

- ‘வெள்ளை யானை’ நாவலிலிருந்து

கவிஞர் விக்ரமாதித்யன்

அந்நாளைய சென்னை எனக்குப் பிடித்த ஊர். எல்லாருக்குமே இனிய மாநகரமாகத்தான் இருந்திருக்கும். இப்போதுள்ள வாகன நெரிசல் இராது. ஜனக்கூட்டம் கிடையாது. பஸ்களில் உட்கார இருக்கை கிடைக்கும். மாம்பலம் மெய்ன் ரோடுகளில் மரங்கள் நிறைந்திருக்கும். நிறைய பங்களாக்களில், ஐயர் வீடுகளில் மாமரங்கள் இருக்கும். பஸ்ஸில் செல்வது என்பதே அபூர்வம். மாம்பலத்திலிருந்து மைலாப்பூருக்கு நடந்து செல்வது நல்ல அனுபவம். புறநகர் பகுதிகளே தோன்றியிருக்கவில்லை. வேஷ்டி கட்டியிருப்பவர்களைப் பார்க்க முடியும். ஓட்டல்களில் அருமையான சாப்பாடு போடுவார்கள். இவ்வளவு ஆட்டோக்கள் எல்லாம் வந்திருக்கவில்லை. டாக்சிதான். வசதியுள்ளவர்கள் போவார்கள்.

அப்போதைய மனசுக்கு மெட்ராஸின் மிக முக்கியமான இடங்கள் கோடம்பாக்கம் சின்ன கேட், எம்.ஜி.ஆர். வீடு (ராயப்பேட்டை), சிவாஜி வீடு, என்.டி. ராமராவ் வீடு, ஜெமினி ஸ்டுடியோ, வாகினி ஸ்டுடியோ இதுபோலச் சிலதாம். ஆற்காடு சாலையில் இருப்பது பெரிய கேட். மாம்பலத்திற்கும் கோடம்பாக்கத்திற்கும் மத்தியில் சின்ன கேட். அது என்னவோ, சினிமா நடிகர்களின் கார் இந்த வழியாகத்தான் போகும். அவர்களைப் பார்ப்பதற்காகவே ஒரு கூட்டம் காத்துக்கிடக்கும்.

ஒரு குறிப்பிட்ட நேரத்தில், கொஞ்ச நேர இடைவெளியில், அடுத்தடுத்து சிவாஜி, எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர்., எம்.ஆர். ராதா, டி.எஸ். பாலையா, ஏ. கருணாநிதி, கே.ஏ. தங்கவேலு, சாவித்திரி, பத்மினி யாராவது வந்துகொண்டிருப்பார்கள். ரயில்வே கேட் அடைத்திருந்தால் ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான். நடிக, நடிகையரும் மக்களைப் புரிந்துகொண்டு நடந்துகொள்வார்கள். எல்லாம் ஏதோ சொல்லிவைத்தது மாதிரி நிகழும். நடிகர்கள் யாருமே பந்தா காட்டியதில்லை. விசிறிகளும் நாகரிகமாகவே இருப்பார்கள்.

வண்டியைப் பார்த்ததுமே யாரென்று சொல்லிவிடுவார்கள். வண்டி நம்பர் கண்ணில் பட்டதுமே உற்சாகமாகி விடுவார்கள். நிறைய நாட்கள் நான் இந்த ரசிகர் கூட்டத்தில் ஒருவனாக நின்றிருக்கிறேன். நடிகர்களைப் பார்த்து சந்தோஷப்பட்டிருக்கிறேன்.

- ‘மழை போல மனிதர்கள்’ கட்டுரையிலிருந்து

(இங்கு வெளியிடப்பட்ட கட்டுரைகளில் அசோகன், க.நா. சுப்பிரமணியம், ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி ஆகியோரது எழுத்துகள் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட பழ.அதியமான் தொகுத்த ‘சென்னைக்கு வந்தேன்’ நூலிலிருந்து எடுக்கப்பட்டவை. கவிஞர் விக்ரமாதித்யனின் எழுத்து ‘எனக்கும் என் தெய்வத்துக்கும் இடையேயான வழக்கு’ நூலிலிருந்து எடுக்கப்பட்டது. மு. சுயம்புலிங்கத்தின் கவிதை ‘நிறமழிந்த வண்ணத்துப்பூச்சிகள்’ கவிதைத் தொகுதியிலிருந்து எடுக்கப்பட்டது. அசோகமித்திரனின் கட்டுரை அவரது ‘ஒரு பார்வையில் சென்னை நகரம்’ நூலிலிருந்து எடுக்கப்பட்டது)

தேய்ந்த டயர்கள்

பட்டணத்துல

நாங்க

நடுசென்டர்ல இருக்கோம்.

எங்களச் சுத்தி

எல்லாம்

பெரிய பெரிய கடைகள்தான்.

டவுன்ல நாங்க இருக்கிற இடம்தான்

முக்கியமான நகைக்கட பஜார்.

ஒரு சொவத்துல

ரெண்டு ஆணி அடிச்சி

ஒரு சாக்கு

தொங்க விட்டுருக்கோம்.

எங்க கால்மாட்டுல

தண்ணிக் குழாய் இருக்கு

எங்க தலக்கமாட்டுல

கார்ப்பரேசன்

ரிப்பன் பில்டிங்

கழிப்பிடம் இருக்கு.

விடிய விடிய

தெருவெளக்கு

எரிஞ்சிக்கிட்டே இருக்கும்.

பட்டணத்துல

நாங்க

நடுசென்டர்ல இருக்கோம்.

- மு. சுயம்புலிங்கம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x