Last Updated : 19 Apr, 2018 10:22 AM

 

Published : 19 Apr 2018 10:22 AM
Last Updated : 19 Apr 2018 10:22 AM

மரணம் ஒரு கலை 8: விதியை மாற்றிய வீராங்கனை

மணலூர் மணியம்மா

ட்டையும் இல்லாமல், ஜிப்பாவும் இல்லாமல் புதுவகையான அரை கைச் சட்டை, மேல் பாக்கெட், கதர் வேட்டி, தோளில் துண்டு, கிராப்புத் தலை, தோள்ப் பை, ஒற்றைக் காளை மாடு பூட்டப்பட்ட வண்டியில் தன்னந்தனியாகப் பயணம் செய்யும் துணிச்சல், கையில் உள்ள குடைக் கம்பியில் எப்போதும் மறைத்து வைக்கப்பட்ட குறுங்கத்தி, சிலம்பத்தைத் தற்காப்புக் கலையாகக் கற்றத் துணிச்சல், தென்னிந்தியாவிலேயே முதன்முதலில் மிதிவண்டி ஓட்டியவராக ஏற்கப்படுபவர்... இதுதான் மணலூர் மணியம்மா. சாதிய ஏற்றத் தாழ்வுகளுக்கு எதிராகவும், பண்ணை அடிமைத்தனத்துக்கு எதிராகவும் போராட துணிந்த மணியம்மா, போராளியைப் போல் தன்னுடைய தோற்றத்தையும் மாற்றிக் கொண்டவர்.

மணியம்மா இருந்த நிலையோ வேறு. 10 வயதில் திருமணம். 20 வயதில் விதவை. காலில் செருப்பு அணிவதற்கும், ரவிக்கை அணிவதற்கும் அனுமதிக்காத வைதீக மதத்தின் கட்டுப்பாடுகள். கடவுள் விக்கிரகங்களுக்கு அனுதினமும் பூசை செய்து வந்தவர். விதவைப் பெண் பூசை செய்வதுகூட ஆண்களின் எல்லைக்குள் நுழைவது என்ற அவதூறு. தன்மீதான கட்டுப்பாடுகளைத் தகர்க்கப் பொங்கி எழுந்தார் மணியம்மா. விடுதலைப் போராட்டம் தீவிரப்பட்டிருந்த நேரத்தில் காந்தி தமிழகம் வருகிறார்.

தஞ்சை வந்த காந்தியை உறவினருடன் சென்று சந்திக்கிறார். பொதுச்சேவையில் ஈடுபட காந்தியடிகளின் வாழ்த்து கிடைத்தவுடன், புதுப் பிறவிப் பெற்றதைப் போல் மகிழ்ச்சியடைகிறார்.

காங்கிரஸில் இணைந்து செயல்படுவது அன்று மேல்தட்டு மக்களின், ஊர் செல்வந்தர்களின், பண்ணை முதலைகளின் பெருமைக்குரிய நடவடிக்கையாக இருந்ததால், மணியம்மா காங்கிரஸ் நடத்திய போராட்டங்களில் ஈடுபடுவதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

யார் அந்த நடுவாள்?

வெளியுலகத்துக்கு வந்த பிறகுதான், சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் சாதிய வேறுபாடுகளையும், விவசாயப் பண்ணை அடிமைகளின் அவல வாழ்வினைப் பற்றியும் புரிந்து கொள்கிறார். பண்ணையாருக்கும், பண்ணைக் கூலிகளுக்கும் இடையில் ஏஜெண்ட்களாக இருந்து, விவசாயக் கூலிகளைக் கொடுமைப்படுத்திக் கொண்டிருந்த ‘நடுவாள்’களைப் பற்றி அறிந்தார்.

‘‘நிலம் தங்களுடையது. மக்கள் உழைக்கிறார்கள். உழைப்பவர்களுக்கு உரிமையான கூலியைக் கொடுக்க வேண்டும். இதில் நாட்டாமை செய்ய நடுவாள் எதற்கு?’’ என்ற அவரின் பிரச்சாரம், உள்ளூரில் இருந்த பண்ணை முதலாளிகளையும் ஏஜென்ட்களையும் அதிருப்திக்கு உள்ளாக்கியது. அவர்களே காங்கிரஸின் தலைவர்களாகவும் இருந்ததால், மணியம்மா கட்சியில் எதிர்ப்புகளைச் சம்பாதித்தார்.

‘‘பொட்டச்சிக்கு எதுக்கு இந்த வாய்ச் சவடால்கள்?’’ என்ற கீழ்மையான விமர்சனத்தை மணியம்மா ஒருமுறை தன் காதுபட கேட்க நேர்ந்தது. ஆணாதிக்கம் நிரம்பிய சமுதாயத்தில் ஆணைப் போல் இருந்துதான் சாதிக்க முடியும் என் பதற்காகவே தன் தோற்றத்தை மாற்றிக் கொண்டார். தன் மீதான கட்டுப்பாடுகளை மீற வெளியுலகம் வந்த மணியம்மா, சமூகத்தின் கட்டுப்பாடுகளைத் தகர்க்கத் துணிந்தார். இயற்பெயர் வாலாம்பாள் என்றாலும், மணிபோல் அழகாக இருக்கிறார் என்பதால் மணியம்மா ஆன அவர், தோற்றத்திலும் பெண்ணுக்கு இருந்த கட்டுப்பாடுகளைத் தகர்த்தெறிந்தார்.

விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக இருந்தாலும், மணியம்மாவின் மனம் முழுக்க தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலையிலும், விவசாயக் கூலிகளின் நல்வாழ்விலுமே இருந்தது. ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலைப் பெற்றுவிடலாம். ஆனால், நிலங்களில் பாடுபடும் மக்களின் ரத்தத்தை உறிஞ்சி வாழும் மிராசுதாரர்களிடம் இருந்து விடுதலை வாங்குவது எளிதல்ல என்பதை மணியம்மா ஒவ்வொரு போராட்டத்திலும் உணர்ந்தார்.

‘நாகை தாலுகா கிசான் கமிட்டி’

விதவைப் பெண்ணான மணியம்மா கிராப்பு வெட்டியதை, ஆண்களைப் போல் தனியாக வண்டி ஓட்டிச் செல்வதை, கட்சியில் சேர்ந்து கொடி பிடித்து கோஷம் போடுவதைக்கூட பொறுத்துக் கொண்டார்கள்.

ஆனால், சேரிகளுக்குள் சென்று சேரிக் குழந்தைகளைத் தொட்டுத் தூக்கி, அவர்களுக்குக் கல்வி தந்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி, நியாயமான கூலியைப் பெறுவதற்காகப் போராடும் துணிவினை அம்மக்களிடம் உண்டாக்கியதை மட்டும் கட்சித் தலைவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

‘மதுவிலக்கும் அரிசன முன்னேற்றமும்’ அன்றைய காங்கிரஸின் இரண்டு பிரதானமான கொள்கைகள் என்றாலும், தலைவர்களில் பலரால் நடைமுறையில் அவற்றை ஏற்க முடியவில்லை. நாட்டின் விடுதலைக்காக காங்கிரஸ் தேசிய எழுச்சியை முன்னெடுத்தாலும், சாதிய ஏற்றத் தாழ்வுகளையும், நிலச்சுவான்தார்களின் ஆதிக்கத்தையும் கட்டுப்படுத்தவில்லை என்பது மணியம்மாவின் குற்றச்சாட்டு.

மணியம்மா போன்ற அர்ப்பணிப்பான போராளியை காங்கிரஸ் கட்சியில் இருந்தவர்களே, கட்சியின் மாகாணப் பொறுப்புகளுக்குக் கூட வரவிடாமல் சதிவேலைகள் செய் தார்கள்.

சாட்டை அடி, சாணிப் பால், தொழுவக்கட்டை போன்ற கொடுமைகளில் இருந்து பண்ணை ஆட்களைக் காப்பாற்ற காங்கிரஸை நம்பிப் பலன் இல்லை என்றவுடன், ‘நாகை தாலுகா கிசான் கமிட்டி’ என்றொரு அமைப்பை மணலூரில் தொடங்குகிறார். சுபாஷ் சந்திர போஸ், ஜெயப்பிரகாஷ் நாராயணன், ஆசார்ய நரேந்திர தேவ் போன்றவர்களின் சோஷலிஸ சிந்தனைகளை மணியம்மா உள்வாங்கிச் செயல்பட்டார்.

உள்ளூரில் மக்களிடம் உருவான விழிப்புணர்வு, முதலாளிகளுக்குக் கோபத்தை உண்டு பண்ணியது. மணியம்மையை முடக்க தினம் ஒரு வழக்கு. நீதிமன்றத்தில் நீதிபதி உள்ளே வந்து உட்காரும்போதே, ‘‘இன்றும் மணியம்மா வழக்குதானா?’’ என்று கேட்கும் அளவுக்கு நீதிமன்றத்துக்கு இழுத்தடிக்கப்பட்டார்.

‘மணியம்மா கட்சி’

விவசாயிகளின் போராட்டத்தை முன்னெடுத்த மணியம்மா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து, பல்வேறு தொழிலாளர்களுக்காக சங்கங்கள் அமைத்தார். வீதிவீதியாக நடந்தார். துண்டறிக்கைகளை விநியோகித்தார், புத்தகங்களை விற்றார். சின்னச் சின்ன சேரிகளிலும் செங்கொடியை ஏற்றி வைத்தார். ஒடுக்கப்பட்ட மக்களின் காவல் தெய்வம்போல் இரவு பகல் பாராமல் அலைந்தார். அவர்களுக்குத் துன்பம் நேரும்போது எல்லாம் முதல் ஆளாகக் களத்தில் நின்றார். கம்யூன்ஸ்ட் கட்சியை ‘மணியம்மா கட்சி’ என்றே அப்பகுதி மக்கள் அறிந்திருந்தார்கள். பெண்களின் முன்னேற்றத்துக்காகப் போராடிய தலைவர்கள் மத்தியில், அரசியல் விழிப்புணர்வுக்காகக் களத்தில் நின்று போராடிய வீரப் பெண் மணிதான் மணியம்மா!

அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் உண்மையானப் போராளிகளை அங்கீகரிக்கத் தவறி இருக்கின்றன. கட்சியின் உயர் பொறுப்புகளுக்கு வரவிடாமல் செய்திருக்கின்றன. வாதியின் நியாயம், பிரதிவாதியின் நியாயம் போன்ற வாதங்களைக் கடந்து, கட்சிகள் தவறவிட்ட மாமணிகள் இருக்கிறார்கள். மணியம்மா, காங்கிரஸும் கம்யூனிஸ்ட் கட்சியும் தவற விட்ட மாமணி!

கம்யூனிஸ்ட் கட்சித் தடை செய்யப்பட்ட காலத்தில் ‘தடுப்புக் காவல் கைதி’ ஆகச் சிறைச்சாலையில் ஒன்றரை ஆண்டுகாலம் கழித்து, உடல்நலன் கெட்டுத் திரும்பினார். காங்கிரஸ் அரசாங்கம், கட்சிக்காரர்கள்மேல் பெரும் வன் முறையை ஏவி விட்டிருப்பதைப் பார்த்தவுடன், மீண்டும் போராடும் திறனைப் பெற்றார். ஒவ்வொரு கிராமமாகச் சென்று கலைக்கப்பட்ட சங்கங்களுக்கு உயிர் கொடுத்தார்.

குடும்பத்தினர், உறவினர், உடன் பயணித்த கட்சிக்காரர்கள் எல்லோரிடமும் இருந்து விலக்கப்பட்ட மணியம்மா, ஒடுக்கப்பட்ட மக்களின் அம்மாவாக இருந்தார். உண்மை யான அன்பைக் காட்டிய அம்மக்களே அவரின் தியாகத்துக்கான அடையாளமாக இருந்தார்கள்.

வாழ்நாளில் ஒரு நாளும் அவர் சோர்ந்ததில்லை. மற்றவர்களின் வாழ்வில் ஒளியேற்ற விரும்பிய அவருக்கென்று தனிப்பட்ட வாழ்வும் மகிழ்ச்சியும் இருந்ததில்லை. கட்சியே தன்னுடைய நேர்மையின்மேல் சந்தேகிக்கிறது, ஒதுக்கி வைக்கிறது என்பதை அறிந்தபோதுதான் வாழ்வில் முதன்முறை யாக அவருக்குள் வருத்தம் வந்தது.

வாழ்நாள் முழுக்கத் துன்பப்பட்டவருக்கு மரணமும் மர்மமாகவே வந்தது. 1953-ம் ஆண்டு லால்குடியில் நடைபெற்ற தி.மு.க. மாநாட்டில் புத்தகம் விற்க சின்னகுத்தூசியுடன் செல்ல இருந்தவர், கடைசி நேரத்தில் முடிவை மாற்றி, தான் திருமணம் நடத்தி வைத்த தம்பதிக்குப் பிறந்த குழந்தைக்குப் பெயர் சூட்ட, பூந்தாழங்குடி செல்கிறார். விழா முடிந்தவுடன் மணலூர் திரும்பியவர் அங்கு உறவினர்களைச் சந்தித்துவிட்டு, திருவாரூர் செல்ல பேருந்துக்காகக் காத்து நிற்கிறார். சுற்றிலும் ஆங்காங்கே ஆட்கள் நடமாடிக் கொண்டிருந்த பிற்பகல் நேரம். எங்கிருந்தோ பாய்ந்து வந்த கலைமான் ஒன்று மணியம்மாவைப் பின்னிருந்து குத்திச் சாய்க்கிறது. விலாவிலும் இடுப்பிலும் குத்துவாளாய் இறங்கின கொம்புகள். ரத்தம் பீறிட மண்ணில் சாய்ந்தார். பிற்பகல் ஒன்றரை மணி சுமாருக்குக் கீழே விழுந்த அவரின் உடலை, மூன்று மணியளவில்தான் மருத்துவமனைக்குக் கொண்டு செல்கிறார்கள்.

உடலைப் பிரிந்த உயிர்ச் சிறகு

எந்த மக்களுக்காக வாழ்நாளெல்லாம் பாடுபட்டாரோ அந்த மக்கள்கூட அவரைக் காக்கத் துணியவில்லை. தமிழகத்தின் வீரப் பெண்களின் முன்னோடியான மணியம்மாவின் ரத்தம் மணலூர் மண்ணில் உறைகிறது. திருவாரூர் மருத்துவமனைக்குத் தாமதமாகக் கொண்டு செல்லப்பட்ட மணியம்மாவின் உயிர் பிரிகிறது.

குத்தியது மான்தானா? அல்லது மான் கொம்பினால் யாரும் குத்தினார்களா என்பது இன்றுவரை புரியாத மர்மம். ஏழை மக்கள் விழிப்புணர்வு அடைந்துவிடக் கூடாதே என்று பதறிக் கொண்டிருந்தவர்கள், மணியம்மாவைக் கொல்ல சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்ததால், அவரின் மரணம் கொலையாகவும் இருக்கலாம்.

60 ஆண்டுகளுக்கு முன்பாக, தென்னிந்தியாவிலேயே புரட்சிப் பெண்ணாக வாழ்ந்த மணியம்மாவைப் பற்றி வாய்மொழித் தகவல்களே நமக்கு அதிகமாக கிடைத்துள்ளன. எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன், 1980-களில் கள ஆய்வு செய்து மணியம்மாவைப் பற்றி எழுதிய ‘பாதையில் பதிந்த அடிகள்’ என்ற நாவலே உயிர்த்துடிப்பான ஆதாரம்.

அவர் சார்ந்திருந்த கட்சிகள் மணியம்மாவை தங்களின் முன்னோடியாக சொல்லிக் கொள்வதில்லை. அவர் கட்டிய சங்கங்கள் பல இன்று காணாமல் போய்விட்டன. சில அடையாளம் மாறிவிட்டன.

விவசாயக் கூலிகளின் சேறு படிந்த நாட்டுப்புறப் பாடல்களில் மட்டும் மணியம்மா ஜீவனுடன் வாழ்கிறார்.

- வருவார்கள்...

எண்ணங்களைப் பகிர: vandhainila@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x