Last Updated : 14 Feb, 2018 12:50 PM

 

Published : 14 Feb 2018 12:50 PM
Last Updated : 14 Feb 2018 12:50 PM

எமதுள்ளம் சுடர் விடுக 29: உறங்குபவனால் இன்னொரு உறங்குபவனை எழுப்ப முடியாது!’

‘உ

ங்கள் காதலிக்கான முத்தத்தை அவசரம் கருதி, உங்கள் வீட்டு வேலைக்காரரிடம் கொடுத்து அனுப்புவீர்களா?’’

இந்தக் கேள்வியுடன் தொடங்குகிறது ‘சூஃபி வழி - இதயத்தின் மார்க்கம்’ என்ற நாகூர் ரூமி எழுதிய புத்தகம். முதல்முறையாக சூஃபித்துவம் பற்றி விரிவான, எளிய வாசகத் தெளிவு கொண்ட நல்ல புத்தகம் இது.

நாகூர் ரூமி இதற்கு முன் எழுதியுள்ள ‘இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம்’ புத்தகம், சிறப்பான வரவேற்பைப் பெற்றது. இந்தத் தத்துவ வரலாற்று மெய்யியல் புத்தகமும் அந்தப் பெருமையை அடைந்துள்ளது.

முத்தம் பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில்:

முத்தத்துக்கும் சூஃபித்துவத்துக்கும் என்ன தொடர்பு? இரண்டும் ஒன்றுதான்! முத்தம் சூஃபித்துவம் இரண்டுமே காதலின் விளைவுதான். ஒன்று அறைக் காதல். இன்னொன்று இறைக் காதல். இரண்டுமே மெய்க்காதல்தான். முத்தம் ஒரு சுகானுபவம் என்றால், சூஃபித்துவம் ஒரு மகானுபவம்!

‘இறை வணக்கங்களிலேயே தலைசிறந்த இறை வணக் கம் காதல்தான்’ என்றார் சூஃபி மேதை இம்னு அரபி. காதலிக்காக தனது குணங்களை மாற்றிக் கொள்ள காதலன் தயாராகிறான். அவளது விருப்பமே அவனது விருப்பமாகிறது. அவள் வெறுப்பு அவன் வெறுப்பு. பூ, செடி, கொடி, மரம், மட்டை எதைப் பார்த்தாலும் காதலனுக்குக் காதலி நினைவைப் போல, ஒரு சூஃபிக்கு இறை நினைவு. இப்படி யான ஒரு முன்னுரைத்தலோடு சூஃபி வழியைப் பற்றி பேசத் தொடங்குகிறார் நாகூர் ரூமி.

பள்ளிச் சிறுவர்களைப் புல்வெளி, மலர்ப் பூங்கா, பழத்தோட்டங்கள் என்று சுற்றிக் காட்டும்போது குழந்தைகள் பெறும் மன மகிழ்ச்சி, வாசகருக்கும் கிடைக்கிறது என்பதைச் சொல்லவே வேண்டும். தோளில் விழும் ஒற்றை மழைத்துளி போல, நிறைய நிறைய ஞானச் சிதறல்கள் பக்கம்தோறும்.

இரண்டு என்பது எண்ணல்ல

சூஃபி வழியில் இரண்டு இல்லையாம். ஒன்று மட்டும்தான்! காதலர்கள் இருவர், ஒருவரே அல்லவா? இஸ்லாமும் சூஃபித்துவமும் ஒன்றுதான். அதன்பெயர் ஏகத்துவம்.

சூஃபி ஷெய்ருக்கு இரண்டு மாணவர்கள். ஒருவர் மகன், மற்றவர் மருகன். இருவரில் மருகனையே அவர் விரும்பினார். காரணம் மருகனின் ஞானம். மகனுக்கே பிரதிநிதித்துவம் தரப் படவேண்டும் என்பது அவர் மனைவியின் கனவாக இருந்தது. ஷெய்ரு ஒருநாள் இரண்டு பேர்களை யும் அழைக்கிறார்.

ஆளுக்கொரு புறாவைக் கொடுத்து, ‘‘யாரும் காணாத இடத்தில் வைத்து அறுத்து வாருங்கள்’’ என்று அனுப்பி வைக்கிறார். மகன் உடனே அறுத்துக் கொண்டு வந்தான். மருகன், உயிர்ப் புறாவுடன் திரும்பினான்.

‘ ‘ஏன்..?’’ என்றார் குரு ஷெய்ரு.

‘‘இறைவன் எல்லா இடத்திலும் என்னைப் பார்க்கிறான். மறைவான இடம் கிடைக்கவே இல்லை’’ என்றான். மருகனே, குருவுக்குப் பின் குரு ஆகிறார்.

ஒரு ஞானகுரு இப்படிச் சொல்கிறார்: ‘‘நீங்கள் சாய்ந்துகொண்டிருப்பது நாற் காலி என்று நினைக்கிறீர்கள். ஆனால், அது இறைவனின் முதுகு என்பது உங்களுக்குத் தெரியவில்லை!’’

பாமரர்கள் என்று ஒரு சாராரை மக்கள் குறிப்பிடுவார்கள். ஆன்மிகத் துறை பாமரர்கள் யார் என்று இப்படிச் சொல்கிறது: ‘இலக்கிய மேதைகள், இலக்கண நிபுணர்கள், சட்ட வல்லுநர்கள், திருக்குர்ஆன் விளக்கவுரை எழுதுபவர்கள் பாமரர்கள்’ என்கிறது சூஃபி ஞானம். பின் யார்? தன்னையும் இறைவனையும் அறிந்து கொள்கிற முயற்சியில் ஈடுபடாதவர்கள் அனைவரும் பாமரர்கள்.

துடைத்து வையுங்கள்

சூஃபித்துவம் அறிய ஒருவழிதான். சிலேட்டை மனதை, மூளையை, சேர்த்து வைத்திருக்கும் அனைத்தையும் கழு வித் துடைத்து காலியாக வைத்திருப்பது. முற்றிலும் புதிதா கத் தொடங்குவது. எது சரி, எது தவறு?

கடவுள் என்பது ஒரு பெயர். அது தரும் மூளைப் பதிவுகள் ஒன்று. பெயர்களும் அவை குறிக்கும் பொருட்களும் ஒன்று அல்ல. வெள்ளிக் காசு, தங்கக் காசிடம் சொன்னது: ‘நானும் ஒரு காசுதான்’. தங்கக் காசு சொன்னது: ‘கொஞ்சம் பொறு. உரைகல் வருகிறது’. உரைகல்லை அறிமுகப்படுத்துவது தான் - சூஃபித்துவம்.

‘விழித்துக்கொள்ளும்’ எந்த மனிதரும் சூஃபியே. சூஃபி த் துவம் சிந்தனையில் இருந்தோ, தத்துவத்தில் இருந்தோ பிறந்தது அல்ல; அது இதயத்தில் இருந்து பிறந்தது. ‘தத்துவத்தை அழைக்காதே பாதையென்று; முட்டாளை அழைக்காதே மேதையென்று’ என்கிறார் சா அதி.

சரி. சூஃபி என்ற சொல்லுக்கு என்ன பொருள்? தமிழில் ‘இஸ்லாமிய மெய்ஞ்ஞானம்’ என்றோ ‘இஸ்லாமிய ஆன்மிகம்’ என்றோ சொல்லலாம். ஒருவர் சூஃபி ஆவது, அவர் விருப்பம் அல்ல; இறைவனின் விருப்பம்.

சூஃபி மேதைகள் பற்றிய பதிவுகள் மிகவும் சாரம் பொருந்தியவை. இறைவன் ‘ஒளிகளின் ஒளியாக’ இருக்கிறான் என்ற இறைவசனத்துக்கு விளக்கம் சொல்ல, இமாம் கஸ்ஸாலி ஒரு நூலையே எழுதியிருக்கிறார். ஒருநாள் கஸ்ஸாலி காலை எழுந்தார்.

‘‘இன்று என்னக் கிழமை?’’ என்றார். ‘‘திங்கள்கிழமை’’ என்றனர். தான் இறக் கும்போது உடலை மூட என்று வைத்திருந்த துணியைக் கொண்டுவரச் சொல்லி, அதை விரித்து அதன்மேல் படுத்துவிட்டார். ‘‘இறைவா... நான் என் விருப்பத்தோடு உனக்கு அடி பணிகிறேன்’’ என்றார். உடனே அவர் உயிர் பிரிந்தது, இரவு அவர் எழுதிய கவிதையில் சில வரிகள்:

‘என்னை உயிரற்ற உடலாகப் பார்த்து /அமுது துக்கிக்கும் நண்பர்களிடம் சொல்லுங்கள்/ நீங்கள் பார்க்கும் இவ்வுடல் நானல்ல/ நானொரு பறவை/ இவ்வுடலோ ஒரு கூண்டு/ இப்போது எனக்கும் அவனுக்கும் இடையில்/ எந்தத் திரைகளும் இல்லை/ நேருக்கு நேர் பார்க்கிறேன்/ அவனை நானிப் போது விதிவசப் பட்டோலையில் இருந்தது/ இருப்பது, இருக்கப் போவது அனைத்தையும் படிக்கிறேன் நான்/ இறப்பென்பது இறப்பல்ல/ அதுநாம் கற்பனை செய்ய முடியாத வாழ்வு...’

துன்னூன் மிஸ்ரி பற்றிய செய்தி ஒன்று. அவர் சிறைப்பட்டு இருந்த காலத்தில், ஒரு சகோதரி ரொட்டி சமைத்துக் கொண்டு வந்து கொடுத்தாள். அவர் 40 நாட்களும் அந்த ரொட்டியை உண்ணாமல் இருந்தது, விடுதலை ஆன பிறகே தெரிந்தது.

‘‘நான் நூல் நூற்று நேரிய வழியில் சம்பாதித்த பணத்தில்தானே ரொட்டி செய்து வந்தேன். ஏன் உண்ண வில்லை?’’

துன்னூன் சொன்னார் : ‘‘சகோதரி... ரொட்டி கொண்டுவந்த பாத்திரம் தூய்மையாக இல்லையே!’’

துன்னூன், ஒரு சமயம் பால் அருந்தினார். அது வட்டிக்கு விட்டுச் சம்பாதிப்பவன் பணத்தில் வாங்கிய பால் என்பதை அறிந்து, வாயில் விரலைவிட்டுப் பாலை வாந்தி எடுத்தார் என்பது பழைய வரலாறு.

அனைத்திலும் தூய்மை, சூஃபிக்களின் வாழ்க்கை முறை.

சூஃபிக்கள் கவிதை இலக்கியத்துக்குச் செய்த தொண்டு அளவு மிகக் கொண்டது. நாகூர் ரூமி சில அருமையான கவிஞர்களையும் கவிதைகளையும் அறிமுகம் செய்கிறார்.

அவனது வாசலில் முஸ்லிம் யார்? கிறிஸ்துவன் யார்?

நல்லவன் யார்? கெட்டவன் யார்?

எல்லோரும் தேடுபவர்; அவனோ தேடப்படுபவன்

- ஸனாய் - இ 1180.

ஒரு கதை...

சூஃபியை முழுக்கச் சொல்லும் மகாகவி ரூமின் காவிய மான ‘மஸ்னவி’-யில் இருந்து ஒரு கதை.

கற்க வேண்டியதை எல்லாம் கற்றுவிட்டதாக நினைத்த சிஷ்யர், குருவின் வீட்டுக் கதவைத் தட்டுகிறார்.

‘‘யாரது?’’- குரு

‘‘நான்தான்’’- சிஷ்யர்

‘‘போ...போ... இன்னும் நீ முழுமை அடையவில்லை’’ என் றார் குரு.

சூஃபியாக மிகு புகழ் - நியாயமான புகழ் - கொண்ட பெண்மணி ராபியா பற்றிய அறிமுகமான பகுதி. மிக அழகியது. அவர் எழுதுகிறார்.

‘இறைவா.. நரகத்துக்குப் பயந்து உன்னை நான் வணங்கினால் என்னை நரகில் எரித்துவிடு. சொர்க்கத்தின் நம்பிக்கையில் உன்னை நான் வணங்கினால் எனக்கு சொர்க்கம் தராமல் விட்டுவிடு. உனக்காகவே உன்னை நான் வணங்கினால் உனது அழகை எனக்கு மறைக்காதே...’

சூஃபி உலகில், உலகம் கொண்டாடும் ஞானி அவர். அவரிடம் உண்மைக்கும் பொய்க்கும் என்ன வித்தியாசம் என்றார் ஒருவர்.

‘‘நான்கு அங்குலங்கள்’’ என்று பதில் சொன்னார் ராபியா. கேள்வி கேட்டவர்க்கு ஒன்றும் புரியவில்லை. கண்ணுக்கும் காதுக்கும் இடையில் உள்ள தூரம்தான் உண்மைக்கும் பொய்க்கும் இடையில் உள்ள தூரம். கேட்கப்படுவதெல்லாம் பொய். பார்க்கப்படுவதெல்லாம் உண்மை என்றார் ராபியா. ( பார்க்கப்படுவது = அனுபவங்களை.)

சூஃபி பரிபாஷையின் ஒரு அம்சம்தான் சூஃபி கதைகள். முல்லா கதைகளில் வரும் முல்லா சூஃபிக்களால் உருவாக்கப்பட்ட கற்பனைப் பாத்திரம். முல்லா கதைகள், நகைச்சுவைக் கதைகள் அல்ல; ஆழ்மனதோடு தொடர்புடையவர் முல்லா. தன்னைத்தானே கிண்டல் பண்ணிக்கொள்வது சூஃபிக்களின் இயல்பு.

ஒரு படகில் முல்லாவும் அறிஞர் என தம்மைப் பாவிக்கும் ஒருவரும் பயணம் செய்கிறார்கள். முல்லா பேசியதைக் கேட்டு, ‘‘உங்களுக்கு இலக்கணம் தெரியவில்லையே... உங்கள் வாழ்க்கையின் பாதி வீண்’’ என்றார் அறிஞர்.

முல்லா, ‘‘உங்களுக்கு நீச்சல் தெரியுமா?’’ என்றார்.

‘‘தெரியாது, ஏன்?’’

‘‘படகு முழுகிக் கொண்டிருக்கிறது . உங்கள் முழு வாழ்க்கையும் வீண்’’ என்றார் முல்லா.

உங்களுக்கு நம்பிக்கை இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம், என்றாலும், சூஃபிகளைப் படியுங்கள். உங்கள் வாழ்க்கை முழுமை அடையும். நாகூர் ரூமியின் இப்புத்தகம் உங்களை நிச்சயம் அடர்த்தி செய்யும்.சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ள அழகிய பதிப்பு இது.

-சுடரும்...

எண்ணங்களைப் பகிர: writerprapanchan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x