Published : 10 Feb 2018 09:08 AM
Last Updated : 10 Feb 2018 09:08 AM

சுடலை மாடன் தெரு, திருநெல்வேலி டவுன்

மிழகத்தின் முக்கியப் படைப்பாளிகளும், அரசியல் தலைவர்களும் அடிக்கடி வந்துசென்ற வீதி இது. தெருவின் இறுதியில், உயர்ந்த அந்தக் காரை வீட்டின் சந்துக்குள் சென்றால், பெரிய வானவெளி தென்படும். அந்தப் பெரிய வளவினுள் கடைசியாய் இருக்கும் வீட்டில் தி.க. சிவசங்கரன் இருந்தார். அவருக்கான அறை ஐந்துக்குப் பத்து அளவு கொண்டது. அதிலே அவருக்கான சாய்வுநாற்காலி, மேஜை, புதிதாய் வந்த புத்தகங்கள், வாராந்திர சஞ்சிகைகள், செய்தித்தாள்கள் என நிரம்பியிருக்கும்.

யார் அவரைத் தேடிச் சென்றாலும், அவர் படைப்பாளியாய் இருக்கும்பட்சத்தில், அவர் என்றோ ஒரு சிறு பத்திரிகையில் எழுதிய கவிதையை நினைவுபடுத்தி , ‘அந்த போஸ்ட்மேன் பற்றி கவிதை எழுதியிருந்தீங்களே?’ என்று அவரை வியப்பில் ஆழ்த்துவார். தமிழகத்தின் எந்த ஒரு மூலையில் புதிதாய் ஒருவன் எழுதத் துவங்கி யிருந்தாலும், நமக்குத் தெரியாது. ஆனால், தி.க.சி.க்குத் தெரியும். அவனது கவிதையை, கதையைப் பாராட்டி ஒரு போஸ்ட் கார்டு போட்டு வைப்பார். எல்லா நாட்களிலும் அவரைச் சுற்றி ஒரு கூட்டம் இருக்கும். மற்ற மாதங்களைக் காட்டிலும், டிசம்பர் மாதத்தில் பனி விழும் நேரங்களில் கூடுதலாகவே உள்ளூர் நண்பர்கள் குழுமியிருப்பார்கள். ஓவியர் வள்ளி, பொன்னையன், கழனியூரன், திருநாவுக்கரசு எனப் பலர்! ‘‘இந்த வருஷம் யாருக்குக் கிடைக்கும்?’’ என்ற விவாதம்.

படைப்பாளிகள் சார்ந்து ஒரு பட்டியல் சொல்லிக்கொண்டிருக்கும்போது, சமீபத்தில் வந்த படைப்புகள் சார்ந்து ஒரு பட்டியலைச் சொல்லுவார் தி.க.சி. அவரா, இவரா என்று விவாதம் சூடுபறக்கும். விருது அறிவிக்கப்படும் அன்று காலையிலேயே அரசல்புரசலாகப் பெயர் வெளியே கசிந்தாலும், திகசி வெளியே சொல்ல மாட்டார்.

முறைப்படி அறிவிக்கப்பட்ட பிறகே, நண்பர்களுக்கு போன் போட்டுச் சொல்ல ஆரம்பிப்பார். ‘‘என்ன நாறும்பூ.. இந்த வருஷம்...க்கு கொடுத்திருக்காங்க..கேள்விப்பட்டீங்களா? மொதல்ல அவருக்கு ஒரு வாழ்த்தைச் சொல்லிட்டு, திருநெல்வேலியில பாராட்டுக் கூட்டத்துக்கு ஏற்பாடு பண்ணுங்கய்யா. மொத கூட்டம் நம்ம கூட்டமா இருக்கட்டும்’’ என்று சொல்லி நம் பதிலை எதிர்பாராமல் போனை வைத்துவிடுவார்.

சென்னையிலிருந்து எழுத்தாளர் வல்லிக்கண்ணன் வந்துவிட்டால் போதும். அளவில்லாத மகிழ்ச்சி. ‘‘வாங்க.. வாங்க.. வந்தவுடனே தாமிரபரணியில ஒரு முங்கைப் போட்டுட்டு வந்துட்டிகளா..?’’ என்று சிரிப்பார். அது வல்லிக்கண்ணனின் இயல்பு. பஸ்ஸோ, ரயிலோ.. நெல்லைக்கு வந்தவுடன், விறுவிறுவென்று ரெண்டு பர்லாங் தொலைவில் இருக்கும் சிந்துபூந்துறை ஆற்றில் தலையை நனைத்துவிட்டுத்தான் மறுசோலி. இருவரும் ஆத்மார்த்தமாகப் பேசுவதை எவ்வளவு நேரமானாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

தி.க.சி.யின் நிழல்போல இயங்கியவர், கவிஞர் வே.முத்துக்குமார். ஞாயிற்றுக்கிழமைகளில் அவரோடு மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்பவர். விசித்திரம் என்னவெனில், முத்துக்குமார் சாதாரணமாக எல்லோருடனும் பேசிக்கொண்டிருக்கும் நபரும் அல்ல. சொற்ப வார்த்தைகளில் மட்டுமே உரையாடல் இருக்கும். தி.க.சி. யின் வீட்டுப் பரணில் ஏறி, அவரின் பழைய டிரங்குப் பெட்டியிலிருந்து தூசி படிந்துகிடந்த அவரின் படைப்புகளை, நாட்குறிப்புகளைத் தேடிப் பதிப்பித்தவர் இவர். தி.க.சி.யின் ‘கடல் படு மணல்’, தி.க.சி. நேர்காணல்கள், தி.க.சி.யின் ‘காலத்தின் குரல்’, தி.க.சி.யின் நாட்குறிப்பு கள் என அவரின் படைப்புகளை நூல் வடிவில் கொண்டுவந்தவர் கவிஞர் முத்துக்குமார். ஒரு இலக்கிய விமர்சகராகவே அறியப்பட்ட தி.க.சி.யின் 70 ஆண்டுகளுக்கு முந்தைய படைப்புகளைத் தேடித்தேடிப் பதிப்பித்த இவரின் கைகளை தி.க.சி. ரொம்பவும் வாஞ்சையாகப் பிடித்துக்கொள்வார். ‘‘இதெற்கெல்லாம் நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்’’ என்று சொல்வது போலிருக்கும்.

சமீபத்தில் தி.க.சி. திரை விமர்சனங்கள், தி.க.சி. நாடகங்கள், தி.க.சி. கவிதைகள் என்று மூன்று நூலைத் தொகுத்திருக்கிறார் கவிஞர் முத்துக்குமார். 60 ஆண்டுகளுக்கு முன் வந்த மிஸ்ஸியம்மா, ரங்கோன் ராதா, மக்களைப் பெற்ற மகராசி, மாயா பஜார் போன்ற திரைப்படங்களுக்கு தி.க.சி. கறார் தன்மையில் எழுதிய திரை விமர்சனங்கள் சுவாரசியமானவை!

- இரா.நாறும்பூநாதன்,

தொடர்புக்கு: narumpu@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x