Published : 17 Feb 2018 08:46 AM
Last Updated : 17 Feb 2018 08:46 AM

குஜராத் கதையாடலுக்கு மாற்று: பெருமிதம் தரும் தமிழக முன்மாதிரி!

ளர்ச்சி, மேம்பாடு - இந்த இரண்டு வார்த்தைகளும் பொருளியலில் அடிக்கடி பயன்படுத்தப் படுபவை. ஒன்றுக்கொன்று மிக நெருங்கிய தொடர்புடையவை. எனினும் இரண்டும் ஒன்றல்ல. அவற்றுக்கிடையே உள்ள வேறுபாடுகளைக் கவனத்தில்கொள்ளாத எந்தவொரு பார்வையும் முழுமையானதாக இருக்க முடியாது.

காலனியச் சுரண்டலால், கடும் பஞ்சங்களை அனுபவித்த இந்தியா, சுதந்திரத்துக்குப் பின்பு முன்னெடுத்த பொருளாதாரத் திட்டங்களால் இன்று வளரும் நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. குறிப்பாக, கடந்த 25 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி திருப்திகரமாக உள்ளது. சராசரியாக 7% பொருளா தார வளர்ச்சி என்பதே ஒப்பீட்டளவில் மகிழ்ச்சிக்குரிய ஒன்று. எனினும் எதிர்பார்த்த பொருளாதார வளர்ச்சி குறைந்தால், நமது பொருளாதார வல்லுநர்களும் அரசியல் விமர்சகர்களும் வருத்தம் தெரிவிக்கிறார்கள். ஆனால், மனித வள மேம்பாட்டுக் குறியீடுகளில் இந்தியா பின்தங்கியிருக்கிறது என்பதைப் பற்றி அவர்கள் அக்கறை கொள்வதில்லை. மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவீடுகளைக் காட்டிலும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டியது மனித வள மேம்பாட்டுக் குறியீடுதான் என்பதை வலுவாக வாதிட்டு நிறுவியிருக்கிறது ஜீன் டிரீஸ், அமர்த்தியா சென் இருவரும் இணைந்தெழுதிய ‘நிச்சயமற்ற பெருமை’.

பெண்கள் இல்லாமல் மேம்பாடு இல்லை

இந்தியாவைக் காட்டிலும் பொருளாதார வளர்ச்சி யில் பின்தங்கியிருக்கும் வங்கதேசம், மனிதவளக் குறியீட்டில் இந்தியாவை முந்திச் சென்றிருக்கிறது. பொருளாதார வளர்ச்சிக்கும் மனித வள மேம்பாட்டுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஒரு நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்தால்தான் அந்நாட்டு மக்களின் மேம்பாட்டுக்குப் பங்களிக்க முடியும். ஆனால், பொருளாதாரம் வளர்ச்சி யடைந்து, மனித வள மேம்பாட்டில் பின்தங்கியிருக்கிறோம் என்றால், எதற்கு முக்கியத்துவம் கொடுப்பது என்ற திட்டமிடலில் நாம் அக்கறை காட்டவில்லை என்று அர்த்தம்.

வங்கதேசத்தில் கல்வி, சுகாதாரம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. முக்கியமாக, பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்கள் பங்களிப்பு ஊக்குவிக்கப்பட்டது. பெண்களின் பங்கேற்பு, வங்கதேசம் இன்று அடைந்திருக்கும் மேம்பாடுகளின் ஆதாரப் புள்ளி. இந்தியாவில் பெண்களின் பங்கேற்பு ஊக்குவிக்கப்படவில்லையா என்றால், அனைத்து மாநிலங்களிலும் அதற்கான முயற்சிகள் சரிசமமாக அமையவில்லை.

திராவிட இயக்கத்தின் சாதனைகள்

மனித வள மேம்பாட்டின் மிக முக்கியமான அம்சங்கள் கல்வியும் சுகாதாரமும். இவை இரண்டும் இல்லாமல், பொருளாதார வளர்ச்சியையும் அடைய முடியாது. சீனாவுடன் பொருளாதாரப் போட்டியில் முனைந்துநிற்கும் இந்தியா, இந்த விஷயங்களில் பின்தங்கியே இருக்கிறது. ஆனால், தென்னக மாநிலங்களான தமிழகமும் கேரளமும் மனித வள மேம்பாட்டில் முன்னணி வகிக்கின்றன. கேரளம், தேசியக் கட்சிகளால் மாறி மாறி ஆளப்படும் மாநிலம். ஆனால், தமிழ்நாடு? மாநில உரிமைகளுக்காக 50 ஆண்டுகாலமாகத் தொடர்ந்து மத்திய அரசோடு இணங்கியும் பிணங்கியும் சென்றுகொண்டிருக்கும் மாநிலம். தேசியக் கட்சிகளால் நீண்ட காலமாக ஆளப்படும் மாநிலங்களைக் காட்டிலும் தமிழகம் மனித வள மேம்பாட்டில் முன்னேறியிருக்கிறது என்பது திராவிட இயக்க ஆட்சியின் குறிப்பிடத்தக்க சாதனை.

பெல்ஜியத்தில் பிறந்த ஜீன் டிரீஸ், இந்தியாவில் வசிக்கும் பொருளாதார அறிஞர். தமிழகத்தின் பல ஊர்களுக்கும் அவர் பயணம் செய்திருக்கிறார். நேரடி கள ஆய்வுகளையே ஆதாரமாகக் கொண்டு கட்டுரைகளை எழுதி வெளியிட்டிருக்கிறார். அவர், அமர்த்தியா சென்னுடன் இணைந்து எழுதியுள்ள இந்தப் புத்தகம் தமிழகம் அடைந்திருக்கும் வளர்ச்சியும் மேம்பாடும் இந்தியாவுக்கு முன்னுதாரணமாகக் கொள்ளத்தக்கது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

இந்நூலில் பின்னிணைப்புகளாக வழங்கப்பட்டிருக்கும் மாநிலங்களுக்கு இடையிலான ஒப்பீட்டு விவரங்கள் கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ கம் அடைந்திருக்கும் முன்னேற்றங்களை ஆதாரங்களுடன் நிறுவியிருக்கிறது. சந்தைப் பொருளாதார அறிஞர்கள் ஜிடிபி விவரங்களைப் பிடித்துக்கொண்டு தொங்கிக்கொண்டிருக்கிறார்கள். மேம்பாட்டுப் பொருளாதார அறிஞர்கள் மனித வள மேம்பாட்டையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறார்கள், அந்தவகையில் ஜீன் டிரீஸ் மற்றும் அமர்த்தியா சென் இணைந்தெழுதிய இந்தப் புத்தகம் பொருளியல் என்பது அரசியல், சமூகவியலோடும் கொண்ட நெருக்கத்தையும் எடுத்துக்காட்டும் ஒரு முக்கியமான வழிகாட்டி.

சமீபத்தில் நிதி ஆயோக் வெளியிட்ட அறிக்கையின்படி சுகாதாரத்துறையில் கேரளம். தமிழகத்துக்கு மூன்றாமிடம். ‘வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது’ என்று மத்திய அரசை நோக்கி கடுமை யான விமர்சனத்தை முன்வைத்த திராவிட இயக்கம், தமிழகத்தில் ஆட்சிப்பொறுப்புக்கு வந்த பிறகும் வடக்கு வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் தெற்கு தேயவில்லை... மேம்பட்டிருக்கிறது என்பதற்கு இந்நூல் ஒரு சான்றாக இருக்கிறது!

நிச்சயமற்ற பெருமை,

இந்தியாவும்

அதன் முரண்பாடுகளும்

ஜீன் டிரீஸ், அமர்த்தியா சென்,

தமிழில்: பொன்னுராஜ்

பாரதி புத்தகலாயம்,

சென்னை-18,

விலை ரூ.350.

044 2433 2424

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x