Published : 11 Feb 2018 09:23 AM
Last Updated : 11 Feb 2018 09:23 AM
க
லையுலகின் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளில் ஒன்று ‘ரோடு ஷோ’ எனப்படும் சாலையோரக் கலைக் கண்காட்சி. இதில் பெரும்பாலும் ஓவியக் கண்காட்சிகள்தான் பிரதானம். வெளிநாடுகளில் மட்டுமல்லாது மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களிலும் இந்நிகழ்வுகள் அதிகம். அருங்காட்சியகங்கள், கலை அரங்கங்கள் இருக்கின்ற பகுதிகளிலோ அல்லது மக்கள் ஒன்றாகக் கூடும் பொதுஇடங்களிலோ ஓவியக் கண்காட்சி நடைபெறும்.
கலை என்பது எப்போதுமே இவர்களுக்கானது மட்டும் என்று பிரித்தெடுக்கக்கூடியதாக இருத்தல் கூடாது. தமிழகத்தில் அப்படி யான நிகழ்வுகள் நடப்பது அரிதினும் அரிது. இங்கு நட்சத்திர விடுதிகளிலும், கலை அரங்கங்களிலும் மட்டுமே ஓவியங்கள் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன. பெரும்பாலும் கலை ஆர்வலர்கள், ஓவிய விமர்சகர்கள், பிற கலைஞர்கள், நிறுவனங்கள் எனச் சிலர் மட்டுமே இந்தக் கண்காட்சிகளுக்கு வருவார்கள். மாறாக, பொதுமக்கள் முன்பாக வைக்கப்படும் ‘ரோடு ஷோ’ போன்ற நிகழ்வுகள், கலை உலகில் பெரிதும் மாற்றங்களை ஏற்படுத்தும்.
தற்போது இந்தப் போக்கு சென்னையிலும் காணப்படுவது மகிழ்ச்சி தரும் விஷயம். சென்னையில் கடந்த மூன்று வருடங்களாக இந்த ‘ரோடு ஷோ’ நடைபெறுகிறது. கடந்த வருடத்தைக் காட்டிலும் பார்வையாளர்கள் கூட்டம் வெகுவாக அதிகரித்திருக்கிறது. குறிப்பாகக் கலைஞர்களும் கலைப் படைப்புகளை வாங்குபவர்களும் கணிசமான எண்ணிக்கையில் கலந்துகொண்டிருக்கிறார்கள். இந்த நிகழ்வினை ஒருங்கிணைக்கும் வின்சென்ட் டிசௌசா ‘சென்னை தினம்’ உள்ளிட்ட சில முன்னெடுப்புகளைச் செய்துவருபவர். அவரோடு இணைந்து ஓவியர் கணபதி சுப்ரமணியம் இந்த விழாவினை ஏற்பாடுசெய்துள்ளார். இதில் ஓவியர்கள், ஓவியக் கல்லூரி மாணவர்கள், மினியேச்சர் கலைஞர்கள், கைவினைஞர்கள் கலந்துகொண்டார்கள்.
சுயமாகக் கற்றுக்கொண்டு ஓவியங்கள் வரைபவர்கள் மீது பொதுவாக ஒரு கேலியான பார்வை உண்டு. ஆனால், எம்.எஃப். ஹுசைன், ஏ.வீ.இளங்கோ போன்றோர் அந்தக் கற்பிதங்களை உடைத்துப்போட்டவர்கள். இந்தக் கண்காட்சிக்குவந்த ஏ.வீ.இளங்கோ, மாருதி போன்றவர்கள் ஓவியர்களை உற்சாகப்படுத்தினார்கள். மாணவர்கள், சிறுவர்கள் ஓவியர்களோடு உரையாடும் வாய்ப்பும் இருந்தது. மூத்த கலைஞர்களின் கலைநேர்த்தி, உத்திகள், வண்ணச் சேர்க்கைகள் பற்றி அவர்களிடம் நேரில் கேட்டுத் தெரிந்துகொள்ளும் அரிய வாய்ப்பு அது. கடந்த வருடம் ஜல்லிக்கட்டுத் தடை இருந்ததால், அந்த வருடத்தில் நடந்த நிகழ்வில் பெரும்பான்மை யாக ஜல்லிக்கட்டு ஓவியங்கள் காணப்பட்டன. இந்த முறை பெரும்பான்மையான ஓவியங்கள் ‘கிளாசிக்’ தன்மையோடு காணப்பட்டன. கல்வெட்டுகளை, சிற்பங்களை மையமாகக்கொண்டு தீட்டப்பட்ட ஓவியங்கள் குறிப்பிடத்தக்கவை. ஐ.டி. நிறுவன ஊழியர்கள் வரைந்த ஓவியங்களில் அவர்களது பணிச் சூழல் சார்ந்த தன்மை அதிகம் வெளிப்பட்டிருக்கிறது.
சென்னையில் லலித்கலா அகாடமி உள்ளிட்ட அரங்குகளில் முக்கியமான கண்காட்சிகள் இதேவேளையில் நடைபெற்றுக்கொண்டிருந்தன. ஆனால், மக்களிடம் கலை உலகில் மாற்றம் வந்தால் எப்படி சமூகத்துக்கு உகந்ததாகிறது என்கிற கேள்வியும் எழலாம். ரசனை என்பது நுகர்வுப் பண்பை மாற்றும், நுகர்வுப் பண்பு சரியாக இருந்தால் சந்தையை மாற்றியமைக்கும், சந்தையில் ஏற்படும் மாற்றம் சமூக மாற்றத்துக்கான வித்தை ஊன்றும். ஓவியம் பயில வேண்டும் என விரும்பும் ஒரு மாணவன், தன் பள்ளிக்காலத்தில் நீட் தேர்வுக்குப் பதிலாக ஓவியங்கள் வரைந்து பழகுவதற்குமான நம்பிக்கையை அவனுக்கும் அவன் பெற்றோர்களுக்கும் அளிக்கும். அதற்கு இத்தகைய கலைஞர்களை வேற்றுக் கிரகவாசிகள்போல வைக்காமல், அவர்களது படைப்புகள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்.
இதற்கு இத்தகைய கூட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். டெல்லியில் சர்வதேச அளவில் கலைஞர்களும், ஆர் வலர்களும் பங்குபெறும் முக்கியக் கலைத் திருவிழா ஒன்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இப்படியான நிகழ்வுகள் அங்கே ஒவ்வொரு வருடமும் நடைபெறும். நாம் இப்போதுதான் இதைத் தொடங்கியிருக்கிறோம். இத்தகைய விழாக்கள் சென்னை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் நடைபெற வேண்டும்!
- ஜீவ கரிகாலன், எழுத்தாளர், பதிப்பாளர்,
தொடர்புக்கு: kaalidossan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT