Published : 11 Feb 2018 09:21 AM
Last Updated : 11 Feb 2018 09:21 AM
இ
ந்திய அளவில் நடக்கும் புத்தகக் காட்சிகளில் மிக முக்கியமானவை மூன்று. டெல்லியில் நடக்கும் சர்வதேசப் புத்தகக் காட்சி, கொல்கத்தாவின் சர்வதேசப் புத்தகக் காட்சி மற்றும் சென்னையின் புத்தகக் காட்சி.
டெல்லி புத்தகக் காட்சி ‘நேஷனல் புக் டிரஸ்’டின் ஆதரவில், பெரும் பொருட்செலவில், 150 ஏக்கர் பரப்பளவு கொண்ட ‘பிரகதி மைதா’னில் நடப்பது. அந்த இடத்தில் ஏற்கெனவே பல்வேறு நிலையான அரங்குகள் உள்ளன. புத்தகக் காட்சியின்போது இந்தியாவின் முக்கியமான ஆங்கில, இந்திப் பதிப்பாளர்கள் குழுமுவார்கள். நாடு முழுவதிலுமிருந்து பிற மொழிப் பதிப்பகங்கள் பலவும் கலந்துகொள்ளும். பல வெளிநாட்டுப் பதிப்பாளர்கள் வந்திருப்பார்கள். ஒருபக்கம், அரங்குகளில் புத்தக விற்பனை நடக்கும் என்றால், மறுபக்கம் புத்தக உரிமங்களுக்கான மொழிமாற்றல் ஒப்பந்தம், விநியோக ஒப்பந்தம் போன்றவையும் நடைபெறும்.
கொல்கத்தா சர்வதேசப் புத்தகக் காட்சி, சால்ட் லேக் சிட்டி சென்ட்ரல் பார்க் மேளா மைதானத்தில் நடைபெறு கிறது. சால்ட் லேக் சிட்டி சென்ட்ரல் பார்க் மேளா மைதானம் அழகானது. ஒரு பெரிய ஏரி. அதை ஒட்டி நன்கு அமைக்கப்பட்ட மைதானம். அந்த மைதானத்தில் நடைபாதைகள் ஏற்கெனவே பாவப்பட்டிருக்கின்றன. பாதைகளைத் தவிர, மீதி இடங்கள் கட்டாந்தரை. பிரகதி மைதான்போல நிலையான அரங்குகள் கிடையாது. பல தற்காலிக அரங்குகள் உருவாக்கப்பட்டுள்ளன.
நீங்கள் விரும்பினால், தனியாகத் தரையை மட்டும் வாடகைக்கு எடுத்துக்கொண்டு, வேண்டிய வகையில் அரங்குகளை அமைத்துக்கொள்ளலாம். அல்லது சென்னை போல் எழுப்பப்பட்ட வெவ்வேறு பெரும் அரங்குகளில் குறிப்பிட்ட பகுதியை எடுத்துகொண்டு, உள் அலங்காரங்களை மட்டும் செய்துகொள்ளலாம். பெங்குவின் ராண்டம் ஹவுஸ், ஒரு பெரும் அரங்கில் தனக்கு வேண்டிய பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு, மிக அழகாகவும் நேர்த்தியாகவும் தன் அரங்கை உருவாக்கியுள்ளது. ரூபா அண்ட் கோ, தனக்கெனத் தனியானதோர் அரங்கைக் கட்டியுள்ளது. இருவருக்கும் அவரவர் வேண்டிய அளவு இடம் தரப்பட்டுள்ளது.
வங்க மொழியின் மிகப் பெரிய பதிப்பகமான ஆனந்தா, பிரம்மாண்டமான அரங்கைக் கட்டியுள்ளது. உள்ளே கூட்டம் அலைமோதுகிறது. அதேநேரம், சிறுசிறு பதிப்பகங்கள் தங்களுக்கு வேண்டிய அளவு இடம் எடுத்து, அதில் தங்கள் புத்தகங்களை மிக நேர்த்தியாகக் காட்சிக்கு வைத்துள்ளன. மத்திய அரசின் கீழ் இயங்கும் சாகித்ய அகாடமி, நேஷனல் புக் டிரஸ்ட் போன்ற அமைப்புகள் மிகப் பெரிய அரங்குகளை எடுத்து மிக அழகாகப் புத்தகங்களைக் காட்சிப்படுத்துகின்றன. சிறுவர்களுக் கான பதிப்பகங்களுக்கு என்று தனி அரங்கு உள்ளது. கல்விப்புலம் சார்ந்த பல பதிப்பாளர்கள் வந்துள்ளனர்.
இவை அனைத்தையும்விட என்னைக் கவர்ந்தது சிற்றிதழ்களுக்கு என்றே உருவாக்கப்பட்ட தனி அரங்கு. இந்த அரங்கு நாலா பக்கமும் திறந்து காணப்படுகிறது. வரிசையாக மேசைகள். பல சிறு பதிப்பாளர்கள் ஒற்றை நாற்காலியில் அமர்ந்து ஒரு புத்தகம் முதல் பத்து புத்தகங்கள் வரை காட்சிக்கு வைத்துள்ளார்கள். பலர் வார மாத இதழ்களை மட்டும் காட்சிப்படுத்தி சந்தா சேகரிக்கிறார்கள்.
இதுதவிர, நடைபாதை ஓரங்களில் பல ஓவியர்கள் தத்தம் ஓவியங்களைக் காட்சிப்படுத்தி விற்கிறார்கள். ஆங்காங்கே உணவு விற்கப்படுகிறது. ஒன்றுமே செய்யாமல் உட்கார விரும்பினால் அதற்கும் வேண்டிய இடம் உள்ளது. இளைஞர்கள் கூட்டமாக வருகிறார்கள். திடீரெனப் பாடல்களைப் பாடுகிறார்கள். கும்மாளம் அடிக் கிறார்கள். கூட்டம் அதிகமாக இருந்தாலும் திறந்தவெளி நிறைய இருப்பதால் மூச்சுத் திணறல் ஏற்படுவதில்லை.
உள்ளே செல்லக் கட்டணம் ஏதும் கிடையாது. இந்த வழியாக இங்கே சென்ற பின்னரே அங்கே செல்ல முடியும் என்றெல்லாம் கிடையாது. நீங்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். மைதானத்தின் ஒவ்வொரு மூலையிலும் கழிப்பறைகள் உள்ளன. இவை தற்காலிகக் கழிப் பறைகள் அல்ல; நிலையான கட்டிடங்கள். நன்கு பாவப்பட்ட பாதைகள் என்பதால், சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்தலாம். இடப் பற்றாக்குறை இல்லை என்பதால் பதிப்பகங்கள், விற்பனையகங்கள் மட்டுமல்ல, அறிவுசார் அமைப்புகள் பலவற்றையும் காண முடிகிறது. பல பல்கலைக்கழகங்கள் அரங்குகளை அமைத்துள்ளன. ‘ஸ்பான்சர்கள்’ தங்களுக்கெனத் தனி அரங்குகளைக் கட்டிக்கொண்டுள்ளனர்.
அண்டை நாடான வங்கதேசத்தில் பேசப்படும் மொழியும் வங்கமொழிதான். அந்நாட்டுக்கு என்று தனி அரங்கு ஒன்று உள்ளது. அது மிக அழகான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. அந்தப் பெரும் அரங்கினுள் அந்நாட்டுப் பதிப்பாளர்கள் தனித்தனியாகத் தங்கள் புத்தகங்களைக் காட்சிக்கு வைத்துள்ளனர். இதுதவிர, ஏற்பாட்டாளர்கள், பல தேசங்களிலிருந்தும் சில பதிப்பாளர்களை அழைத்துவந்துள்ளனர்.
இதிலிருந்து சென்னை என்னவெல்லாம் கற்றுக்கொள்ளலாம்? ஒரு பெரும் கூடாரம், அதில் பல அரங்குகள் என்பதைத் தாண்டி நாம் சிந்திக்க வேண்டும். சென்னை அரங்கில் முக்கியமான ஆங்கிலப் பதிப்பாளர்கள் யாருமே வருவதில்லை. வந்தாலும் அவர்களுக்கு நாம் மிகச்சிறு அரங்குகளையே ஒதுக்குகிறோம். அவர்கள் விற்பனையைத் தம் உள்ளூர் ஏஜெண்டிடம் விட்டுவிடுகிறார்கள். இடத்தை ரேஷன் செய்வதன் மூலம் விற்பனையை ஏதோ ஒருவிதத்தில் கட்டுப்படுத்தலாம் என்று நாம் நினைக்கிறோம். வாசகர்களின் வசதியை நாம் முன்னிலைப்படுத்துவதில்லை. பதிப்பகங்கள் தங்கள் தனித்தன்மையைப் பறைசாற்றுவதையும் நாம் அனுமதிப்பதில்லை. தேடித்தேடி யாரையும் நாம் அழைப்பதில்லை. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற தமிழ் அதிகமாகப் புழங்கும் நாடுகளின் எழுத்தாளர்கள், பதிப்பாளர்களை விரும்பி அழைத்து அவர்களுக்கென்று தனி அரங்குகளை நாம் ஏற்படுத்துவதில்லை.
நம்முடைய முதல் பிரச்சினை, டெல்லி போன்ற கட்டப்பட்ட அரங்கும் நம் நகரில் இல்லை; கொல்கத்தா போன்ற வசதியான மைதானமும் நம்மிடம் இல்லை. கொல்கத்தா வில் முதல்வர் கட்டாயம் வருவார்; பெரும்பாலும் அவரே புத்தகத் திருவிழாவைத் தொடங்கிவைப்பார். பல கிலோமீட்டர் தொலைவுவரை, ‘இது புத்தகத் திருவிழாவுக்குச் செல்லும் வழி’ என்று தெருவெங்கும் வழிகாட்டிப் பதாகைகளைக் காணலாம்.
சென்னை நிகழ்வில் கொல்கத்தா அளவுக்கே புத்தகங் கள் விற்பனை ஆகும் என்று கணிக்கிறேன். ஆனால், சென்னை நிகழ்வை நாம் பெருமையுடன் முன்வைக்க முடியுமா? நாம் போக வேண்டிய தூரம் மிக அதிகம். நம் மாநகராட்சியும் மாநில அரசும் இணைந்து பதிப்பாளர், விற்பனையாளர் அமைப்புக்கு உதவாவிட்டால் கொல்கத்தா புத்தகக் காட்சி போன்ற பிரம்மாண்ட நிகழ்வை நம்மால் நடத்த முடியாது. நம் மாநிலத்தின் முக்கியப் பதிப்பாளர்கள் கொல்கத்தா, டெல்லி புத்தக விழாக்களை நேரில் பார்த்து உணராவிட்டால், சென்னை நிகழ் விலேயே திருப்தி அடைந்துவிடுவார்கள். அதை மேம்படுத்துவது குறித்து யோசிக்கக்கூட மாட்டார்கள். அதனால் நஷ்டம் நம் மக்களுக்குத்தான்!
- பத்ரி சேஷாத்ரி, பதிப்பாளர்,
தொடர்புக்கு: badri@nhm.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT