Published : 20 Jan 2024 06:16 AM
Last Updated : 20 Jan 2024 06:16 AM
அரசியல் வரலாற்றாளர் பார்த்தா சாட்டர்ஜி தன் வீட்டு வாசலில் ஒரு பெரிய பொட்டலம் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு, வியப்போடு எடுத்துப் பிரிக்கிறார். உள்ளே ஒரு கையெழுத்துப் பிரதி. அதை எழுதியவர் சார்வாகர் என்பதை உணரும்போது, அவர் வியப்பு குழப்பமாக மாறுகிறது. பண்டைய இந்திய மெய்யியல் கோட்பாடான பொருள்முதல்வாதத்தை முன்மொழிந்தவர் அல்லவா சார்வாகர்? அவர் ஏன் தன் பிரதியை எனக்கு அனுப்ப வேண்டும்? ஆ, பழங்காலத்தைச் சேர்ந்த ஒருவரால் எப்படித் தேசியவாதம், வகுப்புவாதம், சாதி அரசியல், மொழி அரசியல், இந்துராஷ்டிரம் குறித்தெல்லாம் எழுத முடியும்? வியப்பும் அதிர்ச்சியும் குழப்பமும் பொங்க அந்தப் பிரதியை வாசித்து முடிக்கும் சாட்டர்ஜி, ஓர் அறிமுகக் குறிப்போடு அதை நமக்கு அப்படியே அளித்துவிடுகிறார். நூலின் தலைப்பு ‘தேசியத்தின் உண்மைகளும் பொய்களும் சார்வாகர் கூறியபடி'. ஒரு மாய யதார்த்தக் கதைபோல் தொடங்கி அரசியல், வரலாறு, கோட்பாடு, சமூகவியல், சமயம், நடப்பு நிகழ்வுகள் என்று பலவற்றைக் காத்திரமாகவும் சுவையாகவும் விவாதிக்கும் இந்நூலை ராஜன் குறை, ரவீந்திரன் ஸ்ரீராமச்சந்திரன் இருவரும் தமிழில் கொண்டு வந்திருக்கிறார்கள்.
...
நூற்றுக்கும் அதிகமான முறை நம் அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட்டிருக்கிறது. அவற்றுள் முக்கியமானது 1951ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட முதல் திருத்தம். சில வாரங்களில், சரியாகச் சொன்னால் 16 நாட்கள் தீப்பொறி பறக்கப் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு இறுதியில் மேற்கொள்ளப்பட்ட இத்திருத்தம், மூன்று அம்சங்களைப் பற்றியது. முதலாவது, கருத்துச் சுதந்திரத்துக்கு எல்லை என்று ஒன்று இருக்க வேண்டுமா? ஆம் எனில், அதை எப்படி வரையறுப்பது? இரண்டாவது, ஒரு ஜனநாயக நாட்டில் ஜமின்தாரி முறை தொடர்வது சமத்துவம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது அல்லவா? அதை எப்படி ஒழிப்பது? மூன்றாவது, கல்வியிலும் அரசு வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு அளிப்பது சரியா? அது அறமா? நம் அரசமைப்புச் சட்டத்தையும் அதன்மூலம் இந்தியாவின் எதிர்காலத்தையும் தீர்மானித்தவர்கள் இக்கேள்விகளை எவ்வாறு எதிர்கொண்டனர் என்பதை விவரிக்கும் வரலாற்றாசிரியர் திரிபுர்தமான் சிங்கின் ‘பதினாறு நாள் சூறாவளி' புத்தகத்தை சதீஷ் வெங்கடேசன் தமிழாக்கம் செய்திருக்கிறார். இவை இரண்டும் எதிர் வெளியீடுகள்.
...
பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தையும் அதிலிருந்து நாம் விடுபட்ட வரலாற்றையும் எளிமைப்படுத்திப் புரிந்துகொள்வதில் உள்ள அபாயத்தைத் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருபவர்களுள் ஒருவர் ராமச்சந்திர குஹா. மேற்கத்தியர்கள் அனைவரும் ஆதிக்கவாதிகள், மோசமானவர்கள், இந்தியாவுக்குத் தீங்கு விளைவித்தவர்கள் என்று பொதுப்புத்தியில் பதிந்துபோயிருக்கிறது... அது உண்மையல்ல. இந்தியர்களைப் போலவே காலனியாதிக்கத்தை எதிர்த்த மேற்கத்தியர்கள் இருந்திருக்கின்றனர். இந்தியர்களுக்கு இணையாக இந்திய விடுதலை குறித்துச் சிந்தித்த, செயல்பட்ட வெள்ளையர்கள் இருந்திருக்கிறார்கள். காந்தியின் தலைமையை ஏற்று, இந்தியர்களோடு கரம் சேர்த்து விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட சில மேற்கத்தியர்களைத் தனது புதிய நூலில் அறிமுகம் செய்திருக்கிறார் குஹா. ‘ஏழு போராளிகள்’ எனும் தலைப்பிலான விருதுபெற்ற நூலை சு.தியடோர் பாஸ்கரன் மொழியாக்கம் செய்திருக்கிறார். தட்டையாக அல்லாமல் இயன்றவரை விரிவாக நம் அரசியல் வரலாற்றைப் புரிந்துகொள்ள உதவும் ஒரு முக்கியமான நூல் இது.
...
யாரோ மூளைச்சலவை செய்து தன் மகளை நக்சலிசத்துக்கு மாற்றிவிட்டார்கள் என்று நம்பிய பெற்றோர், இளம் கீதாவை இழுத்துச் சென்று மூன்று வாரம் மின் அதிர்வுச் சிகிச்சை கொடுத்துப் பார்த்திருக்கிறார்கள். தனது இயல்புநிலையை, நினைவாற்றலை, மனஉறுதியை இழந்து அவர் வாட வேண்டியிருந்தது. எந்தக் கொள்கைமீது அவர் பற்றுறுதியோடு இருந்தாரோ அதுவும் அவரைக் கைவிட்டது. குடும்பம், கனவு, எதிர்காலம், அரசியல் அனைத்தும் இருண்டுவிட்ட ஒரு கணத்தில் கீதா தன் வாழ்வை முடித்துக்கொள்ள முடிவுசெய்தார். என்ன தோன்றியதோ, இதுவரை வாழ்ந்த வாழ்வையும் சந்தித்த இடர்களையும் மேற்கொண்ட போராட்டங்களையும் எழுதி வைப்போம் என்று அமர்ந்தார். ‘நான் எழுதிய புத்தகம்தான் இறுதியில் என்னை மீட்டெடுத்தது’ என்கிறார் கீதா. ஒரு பதிப்பாளராகவும் சமூக அக்கறை கொண்ட ஒரு செயல்பாட்டாளராகவும் திகழும் கீதா ராமசாமியின் அசாதாரண சுயசரிதையை ஆங்கிலத்திலிருந்து ‘நிலம் துப்பாக்கி சாதி’ எனும் தலைப்பில் வினோத்குமார் மொழியாக்கம் செய்திருக்கிறார். மேற்படி இரு புதிய நூல்களையும் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT