Published : 06 Jan 2024 06:20 AM
Last Updated : 06 Jan 2024 06:20 AM
க.மோகனரங்கன், தமிழ்க் கவிதையியலில் எந்த எதிர்பார்ப்பும் இன்றித் தீவிரமாக இயங்கும் நவீனக் கவிஞர். ‘நெடுவழித்தனிமை’, ‘மீகாமம்’, ‘கல்லாப் பிழை’, ‘இடம்பெயர்ந்த கடல்’ ஆகியவை இவரது கவிதைத் தொகுப்புகள். இவரது கவிதைகள், எளிமையின் அழகை ஒருபடி உயர்த்திக் காட்டுபவை. இதே தன்மையிலானவை இவரது மொழிபெயர்ப்புக் கவிதைகள். நவீன கவிதை சூடிக்கொள்ள வேண்டிய வசீகரத்தை உணர்த்தும் விதமாகத் தொடர்ந்து ஆங்கிலத்திலிருந்து கவிதைகளை மொழிபெயர்த்துவருகிறார்.
‘இதயங்களின் உதவியாளர்’ என்கிற தலைப்பில் ரூமியின் கவிதைகளை மோகனரங்கன் மொழிபெயர்த்துள்ளார். நூல் வனம் பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நூல், சென்னைப் புத்தகக் காட்சியை ஒட்டி வெளியாகியுள்ளது. (நூல்வனம் - சென்னைப் புத்தகக் காட்சி அரங்கு எண்: 112)
முகநூலில் தொடர்ந்து கவிதைகளை மொழிபெயர்த்து வருகிறீர்கள். எந்த அடிப்படையில் கவிதைகளைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்? - கவிதை வாசகன், கவிதைகளும் எழுதுபவன் என்கிற அடிப்படையில் பிறமொழிக் கவிதைகளை இணையத்தில் தேடி வாசிப்பது உண்டு. அவ்வாறு வாசிக்கையில் மனதைக் கவர்ந்திடும் கவிதைகளை அவற்றின் வடிவம், சொல்முறை, செய்நேர்த்தி, தொனி ஆகியவற்றை நெருக்கமாகப் புரிந்துகொள்வதற்காக ஒரு பயிற்சியாக அக்கவிதைகளைத் தமிழாக்கம் செய்துபார்ப்பேன். அவ்வாறு மொழிபெயர்ப்பவற்றையே அவ்வப்போது முகநூலில் பதிவிட்டு வருகிறேன். அவை தொகுக்கப்பட்டு மூன்று தொகுதிகளாக வெளியாகியுள்ளன.
காதல் கவிதைகளை நிறைய மொழிபெயர்த்திருக்கிறீர்கள். அவற்றுடன் ஒப்பிடுகையில் தமிழ்க் காதல் கவிதைகளை எப்படிப் பார்க்கிறீர்கள்? - முதல் வாசிப்பில் என்னை ஈர்க்கின்ற கவிதையையே (அது வாசகனையும் ஈர்த்திடும் என்ற நம்பிக்கையில்) நான் மொழிபெயர்க்கத் தேர்வு செய்கிறேன். அதில் காதல் கவிதைகளும் அடங்கும். அகம் என்பதை இலக்கியத்தில் ஒரு பிரிவாகவே வகுத்து, வளர்த்தெடுத்தவர்கள் நம் முன்னோர்.
சங்கம் தொடங்கிப் பக்தி மரபின் ஊடாக இன்றைய நவீன கவிதைகள் ஈறாகத் தமிழில் இதுகாறும் எழுதப்பட்டிருக்கும் அபாரமான காதல் கவிதைகள் பல உண்டு. தமிழ்க் கவிதைகளில் நமது எழுத்து மரபின் தொடர்ச்சியாகக் காமத்தை உடல்சார்ந்த திளைப்பாக விவரிக்கும் தன்மை ஒப்பீட்டளவில் குறைவு. மனம் சார்ந்த அலைக்கழிப்புகளாகவே அகக் கவிதைகள் அதிகம் பாடப்பெற்றிருக்கின்றன. பிறமொழிக் கவிதைகளில் இந்த மனவிலக்கம் குறைவு. அங்கு உடல்களின் தாபம் ரசக்குறைவாகப் பார்க்கப்படுவதில்லை.
இந்த மொழிபெயர்ப்புக் கவிதைகள், கவிஞனாக உங்கள் கவிதையில் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பு என்ன? - நேரடியான பாதிப்பு என்று எதுவும் எனக்குத் தோன்றவில்லை. ஆனால், நான் எழுதத் தேறும் விஷயங்கள், அவற்றை விவரிக்கும் விதம், காட்சிப்படுத்தும் கோணம் ஆகியவற்றில், நான் வாசித்த, மொழியாக்கம் செய்த பிறமொழிக் கவிதைகளின் மறைமுகமான பாதிப்பு ஓரளவேனும் இருக்கவே செய்யும்.
ரூமியின் கவிதைகளைப் பலரும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்கள். நீங்கள் என்ன அம்சத்தில் இந்தத் தொகுப்பை மொழிபெயர்த்துள்ளீர்கள்? - தமிழில் மட்டுமல்ல... ஆங்கிலத்திலும் ரூமியின் கவிதைகளைப் பலரும் மொழிபெயர்த்துள்ளார்கள். அதில் இருவிதமான மொழிபெயர்ப்பு முறைகள் இருக்கின்றன. மத அறிஞர்கள் பலரும் ரூமியின் கவிதைகளில் மதம் தொடர்பான அம்சங்களை மொழிபெயர்ப்பாளர்கள் தவிர்த்துவிடுவதாக விமர்சிக்கிறார்கள். ரூமியை ஒரு கவிஞராக மட்டுமே தங்கள் மொழிபெயர்ப்பின் வழி நிறுவுகிறார்கள்.
தமிழில் அவரது மத அம்சத்தையும் கணக்கில் கொண்டு வந்த மொழிபெயர்ப்பு என்.சத்தியமூர்த்தியின் ‘தாகங்கொண்ட மீனொன்று: ரூமி’ தொகுப்பு மட்டுமே. ஃபரூக் தோண்டி, கோல்மன் பார்க்ஸ் முதலியோரின் நூல்களிலிருந்து சில கவிதைகளையும் ஏனைய பல கவிதைகளை இணையத்திலுள்ள ரூமியின் பக்கத்திலிருந்தும் தெரிவுசெய்து மொழியாக்கம் செய்திருக்கிறேன்.
ரூமி ஏறக்குறைய எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சூபி ஞானி. ‘திவானே- ஷம்ஸ்-இ-தப்ரீஸ்’, ‘மஸ்னவி’ ஆகியவை அவருடைய முக்கியமான ஆக்கங்கள். இரண்டும் சேர்ந்து ஏறக்குறைய 50 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைக் கொண்டிருக்கும். அதனால், இன்னும் மொழிபெயர்க்க வேண்டியவை ஏராளம் உள்ளன. நவீனத் தமிழ் இலக்கிய வாசகனை மனதில் கொண்டும் மூல மொழியின் அம்சங்களையும் (மதம் உள்பட) முடிந்த அளவு கைக்கொண்டு நான் மொழிபெயர்த்துள்ளேன்.
நீங்கள் தேர்ந்தெடுக்கும் கவிதைகள் எல்லாம் எளிய மொழியில் இருக்கின்றன. இது பொதுவான உலகக் கவிதைகளின் தன்மையா? - பொதுவான உலகக் கவிதைகளின் தன்மை எளிமையான ஒன்றல்ல. அவை பன்முகத்தன்மை உடையவை. நான் என் புரிதல் எல்லைக்குள் வரக்கூடிய, காட்சிப் படிமங்கள் கொண்ட,நேரடியான விவரணைகளுடன் கூடிய அளவில் சிறிய கவிதைகளை மாத்திரமே மொழியாக்கம் செய்ய எடுத்துக்கொள்கிறேன்.
வரலாற்றுப் பின்புலமும் பண்பாட்டு மறைபொருள் குறிப்புகளும் கூடிய சிக்கலான மொழிகொண்ட கவிதைகளை மொழிபெயர்க்க நான் முயல்வதில்லை. அதற்கான மொழிப் புலமையும் பரந்துபட்ட வாசிப்பும் ஆங்கிலத்தில் எனக்குக் குறைவு.
பல்வேறு பண்பாட்டுப் பின்புலம் கொண்ட பல கவிதைகளை மொழிபெயர்த்துள்ளீர்கள். அதன் ஒருமைப்பாடு என்ன? - நல்ல கேள்வி. வெளிப்படுத்தும் விதத்தில் பல்வேறு பண்பாட்டுப் பின்னணிகளைக் கொண்டிருப்பினும், அக்கவிதைகள் கிளர்த்தும் மையமான உணர்வுநிலை என்பது மனித அனுபவம் என்ற வகையில் யாவருக்கும் பொதுவானதே. எனவே, கவிதை உள்ளிட்ட இலக்கியப் படைப்புகளை எந்த மொழியிலிருந்தும் எம் மொழிக்கும் பெயர்க்கலாம் என்பதே என் நம்பிக்கை.
மொழிபெயர்ப்புக் கவிதைகளுடன் ஒப்பிடும்போது தமிழ்க் கவிதைகள் எப்படி இருக்கின்றன? - ஒவ்வொரு மொழிக்கும் அதன் தொன்மை, வரலாறு, பண்பாடு, அதைப் பேசுபவர்களின் தொகை, அது பரவியிருக்கும் நிலப்பரப்பு முதலியவற்றைப் பொறுத்து அதனதற்கே உரிய சாதகபாதகங்கள் உண்டு. எடுத்துக்காட்டாக, ஆங்கிலம் அதன் காலனியாதிக்கம் காரணமாகப் பிற பிரதேசங்களினின்றும் பெற்றுக்கொண்ட செழுமை அதிகம்.
ஒப்பீட்டளவில் தமிழ்க் கவிதைகளின் வரலாற்றுத் தொடர்ச்சி நெடியது. அவற்றின் ஆழமும் பிறமொழிக் கவிதைகளுக்குக் குறைந்ததல்ல. ஆனால் அவற்றின் அகலம், பன்முக விரிவு என்பது குறைவானதே. மொழியாக்கங்கள் எதுவாயினும் அவை ஏதோ ஒருவகையில் தமிழ்ப் படைப்புகளின் எல்லைகளை அதனளவில் விரிக்க முயல்பவையே.
- தொடர்புக்கு: jeyakumar.r@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT