Published : 07 Jan 2018 10:54 AM
Last Updated : 07 Jan 2018 10:54 AM

2017-ன் சிறந்த சொல்!

வ்வோர் ஆண்டும் சிறந்த சொல்லாக முன்னணி ஆங்கில அகராதிகளால் ஒரு சொல் கடந்த சுமார் 10 ஆண்டுகளாகத் தெரிவுசெய்யப்பட்டு வருகிறது. அவ்வகையில், 2016-ன் சிறந்த சொற்களாக முறையே ‘போஸ்ட்-ட்ரூத்’ (ஆக்ஸ்போர்டு அகராதி), ‘பிரெக்ஸிட்’ (காலின்ஸ் அகராதி), சர்ரியல் (மெரியம் வெப்ஸ்டர் அகராதி) தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. ‘போஸ்ட்-ட்ரூத்’ எனும் வார்த்தைக்கு இணையாக, தமிழில் ‘உண்மை கடந்த’ எனும் வார்த்தையை ‘தி இந்து’ நாளிதழ் கடந்த ஆண்டு உருவாக்கியது. 2013-ன் சிறந்த சொல்லாக ‘செல்ஃபி’ ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியால் தேர்ந்தெடுக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

2017-ன் சிறந்த சொற்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவை: ‘யூத்க்வேக்’ (youthquake) - ஆக்ஸ்போர்டு அகராதி, ‘ஃபேக் நியூஸ்’ (fake news) -காலின்ஸ் அகராதி, ‘ஃபெமினிசம்’ (feminism) -மெரியம் வெப்ஸ்டர் அகராதி. இந்தச் சொற்களைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணங்களையும் அந்த அகராதிகள் விவாதிக்கின்றன.

ஆக்ஸ்போர்டு அகராதி

2004 முதல் அந்தந்த ஆண்டின் சிறந்த சொல்லாக, பண்பாட்டு முக்கியத்துவம் பெறும் வகையில் அமைகின்ற, ஒரு சொல்லைத் தெரிவுசெய்கிறது ஆக்ஸ்போர்டு அகராதி. 2017-ல் பண்பாடு, மனநிலை, முன்முடிபு போன்றவற்றை எதிரொலிக்கும் விதமாக ஆக்ஸ்போர்டு அகராதி கருதிய சொல் ‘யூத்க்வேக்’ என்பதாகும். இந்தச் சொல்லின் பெயர்ச்சொல் ‘இளைஞர்களின் நடவடிக்கைகளாலோ தாக்கத்தாலோ வெளிப்படுகின்ற ஒரு குறிப்பிடத்தக்க பண்பாட்டு, அரசியல் அல்லது சமூக மாற்றம்’ என்ற பொருளைக் கொண்டு அமைகின்றது. 2016-ல் தெரிவுசெய்யப்பட்ட சொல்லுடன் ஒப்புநோக்கும்போது 2017-ன் தெரிவுசெய்யப்பட்ட ‘யூத்க்வேக்’ என்ற சொல் ஐந்து மடங்கு அதிகம் பயன்படுத்தப் பட்டுள்ளது.

பிரிட்டனில் ஜூன் 2017-ல் தேர்தல் உச்சகட்டத்தில் இருந்தபோது ‘யூத்க்வேக்’ சொல் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் வாக்களித்ததன் காரணமாக தொழிலாளர் கட்சியின் வாக்கு சதவீதம் அதிகரித்தது. இளைஞர்களின் அந்த எழுச்சியான ‘யூத்க்வேக்’கே இதற்குக் காரணம் என்பதை உணர்த்தியது. 2017 செப்டம்பரில் ரஷ்ய அரசியல்வாதியான நிகிடா இசாவ் தொலைக்காட்சியில் டொனால்ட் ட்ரம்பை எதிர்கொள்வதாக மிரட்டியபோது, இச்சொல்லின் பயன்பாடு சூடுபிடித்தது.

செப்டம்பர் 2017-ல் இச்சொல் இரண்டாவது முறையாக அதிகபட்சமாகப் பயன்படுத்தப்பட்டதை நியூசிலாந்தில் உணர முடிந்தது. இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் அரசியலில் ஆர்வம் காட்டினர். அதனை அரசியல்வாதிகளும் ஊடகங்களும் பயன்படுத்திக் கொண்டனர்.

‘யூத்க்வேக்’ சொல் இதற்கு முன்னரே பயன்பாட்டில் உள்ளது. உலகம் முழுவதும் பிரிட்டிஷ் இளைஞர்கள் பேஷனையும் இசையையும் மாற்றிக்கொண்டு வருவதைக் குறிக்கும் வகையில் 1960-களில் ‘வோக்’ இதழின் ஆசிரியர் டயானா ப்ரீலேண்ட் இந்தச் சொல்லை முதன்முதலாக உருவாக்கினார். 1965-ல் போருக்கான பிந்தைய மாற்றத்தின்போது ‘வோக்’ ஆசிரியர் அவ்வாண்டை ‘யூத்க்வேக்’ என்று குறிப்பிட்டு, ஜனவரி மாதம் வெளியான தலையங்கத்தில், “அதிகம் கனவு காண்பவர்கள். அதிகம் செயல்பாட்டாளர்கள். இதோ இங்கே. இப்போதே. யூத்க்வேக் 1965” என்று எழுதியிருந்தார்.

2017-ல் பல சொற்கள் விவாதிக்கப்பட்டாலும் ஒன்பது சொற்களே இறுதிச்சுற்றில் இடம்பெற்றதாகவும், இறுதியில், அவற்றில் ‘யூத்க்வேக்’ என்ற சொல் இந்த ஆண்டின் சிறந்த சொல்லாகத் தெரிவுசெய்யப்பட்டதாகவும், ஆக்ஸ்போர்டு அகராதியினர் தெரிவித்துள்ளனர். பொதுவாக, இவ்வாறாகப் புதிய சொல் தெரிவுசெய்யப்படும்போது, பின்னர் ஆக்ஸ்போர்டு அகராதியில் சேர்க்கப்படும். ஆனால் ‘யூத்க்வேக்’ என்ற சொல் முன்னரே அந்த அகராதியில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காலின்ஸ் அகராதி

2017-ன் பிரபலமான சொல்லாக ‘ஃபேக் நியூஸ்’ என்பதை காலின்ஸ் அகராதி தெரிவுசெய்துள்ளது. 2017-ல் இந்தச் சொல்லின் பயன்பாடு 365% அதிகரித்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் இச்சொல் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் இச்சொல் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. செய்திகளைத் தருவதுபோலவே பொய்யான தகவல்களைத் தருவது ‘ஃபேக் நியூஸ்’ என்பதாகும். அடுத்த ஆண்டு வெளிவரவுள்ள காலின்ஸ் அகராதியில் ‘ ஃபேக் நியூஸ்’ என்ற சொல்லும், அதற்கான விளக்கமும் இடம்பெறும் என்று காலின்ஸ் அகராதியினர் தெரிவித் துள்ளனர்.

மெரியம் வெப்ஸ்டர் அகராதி

2003 முதல் மெரியம் வெப்ஸ்டர் அகராதி ஆண்டின் சிறந்த சொல்லாக ஒரு சொல்லைத் தெரிவுசெய்கிறது. இந்த ஆண்டு ‘ஃபெமினிசம்’ (Feminism) என்ற சொல்லைத் தெரிவுசெய்துள்ளது. 2017-ல் அதிகம் பயன்படுத்தப்பட்ட சொல் இது. பல நிகழ்வுகள் இத்துடன் தொடர்புடையனவாக உள்ளன. பலர் இச்சொல்லை அதிகம் விரும்புகின்றனர். ஜனவரி 2017-ல் வாஷிங்டனில் நடைபெற்ற மகளிர் அணிவகுப்பு செய்திகளைத் தொடர்ந்து இச்சொல் பிரபலமானது. இதுதொடர்பான அணிவகுப்புகள் அமெரிக்காவிலும் அணிவகுப்புகள் உலகளவிலும் நடத்தப்பட்டபோது இச்சொல் பிரபலமானது. ஏற்பட்டாளர்களும், கலந்துகொண்டோரும் பெண்ணியத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்ததைப் பற்றியும், பெண்ணியம் என்பதானது அந்த அணிவகுப்பில் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றியும் தொடர் விவாதங்கள் நடைபெற்றன. ‘மீ டூ (#MeToo movement)’ என்ற இயக்கம் விறுவிறுப்பாகக் காணப்படும் இந்த ஆண்டின் சிறந்த சொல்லாக ‘ஃபெமினிசம்’ தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு அகராதியும் தத்தம் நிலைப்படி ஒரு சொல்லைப் புதிய சொல்லாகத் தேர்ந்தெடுத்து, அதற்கான காரணங்களை முன்வைக்கின்றன. அரசியல், சமூகப் பண்பாட்டு நிகழ்வுகளின் அடிப்படையிலும், பயன்பாட்டு நிலையிலும் இவ்வாறாக சொற்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களில் ‘யூத்க்வேக்’ மற்றும் ‘ஃபேக் நியூஸ்’ அந்தந்த இடத்தைச் சார்ந்துள்ள நிலையிலும் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையிலும் அமைகின்றன. ஆனால் ‘ஃபெமினிசம்’ என்பது பொதுவில் அமைந்துள்ளதைக் காண முடிகிறது. ‘டைம்’ இதழ் தன் முகப்பட்டையில் இந்த ஆண்டு சிறந்த நபராக ‘மீ டூ’ இயக்கம் இடம்பெற்று சிறப்பிடத்தைப் பெற்றுள்ளது. அந்த வகையில் இந்த மூன்று அகராதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சொற்களில் ஃபெமினிசம் முக்கியமான இடத்தைப் பெறுகிறது என்று கொள்ளலாம்.

ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில் செப்டம்பர் 2017 பதிப்பில் தமிழ்ச் சொற்களான அப்பா, அண்ணா உள்ளிட்ட சொற்களுடன் தமிழ், தெலுங்கு, இந்தி, வங்காளம், குஜராத்தி உள்ளிட்ட இந்திய மொழிகளின் 70 சொற்கள் இடம்பெற்றுள்ளன. அவ்வகராதியில் சேர்க்கப்பட்டுள்ள இந்த 70 சொற்களும் இந்திய வரலாற்றினை மட்டுமின்றி, இந்தியாவில் ஆங்கில மொழியில் பல வகையான பண்பாட்டு, மொழியியல் தாக்கங்களையும் வெளிப்படுத்துகின்றன என்றும், அவை இந்தியாவில் ஆங்கில மொழியை வடிவமைக்கவும் மாற்றவும் உதவுகின்றன என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

அந்தந்த ஆண்டின் சிறந்த தமிழ்ச் சொல்லைக் கண்டுபிடிக்க கல்வி நிலையங்களோ, தமிழ் ஊடகமோ ஒரு முயற்சியினை மேற்கொண்டால், அந்த ஆண்டில் தமிழ்நாட்டின் சமூக, அரசியல், பண்பாட்டு நிலையில் அந்தச் சொல் மூலமாக ஏற்படுத்திய தாக்கத்தினை அறியவும், ஒரு சுய மதிப்பீடு செய்துகொள்ளவும் உதவியாக அமையும்!

- பா. ஜம்புலிங்கம்,

முனைவர், உதவிப் பதிவாளர் (ஓய்வு),

தமிழ்ப் பல்கலைக்கழகம்.

தொடர்புக்கு:

drbjambulingam@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x