Published : 14 Jan 2018 08:56 AM
Last Updated : 14 Jan 2018 08:56 AM
இலக்கியம் படைக்கும் பலரும் தங்கள் பிள்ளைகளை இலக்கியம் அண்டிவிடக்கூடாது என்ற அளவில் அவர்களை வளர்த்துவரும் சூழலில் கவிஞர் ஜி.எஸ்.தயாளனின் மகள் சஹானா பள்ளிப் பருவத்திலேயே கவிதைத் தொகுப்பு வெளியிட்டிருப்பதை முக்கியமானதாக் கருத வேண்டும். இதழ்களில் வெளிவந்து பெரும் வரவேற்பு பெற்ற சஹானாவின் கவிதைகள் தொகுக்கப்பட்டுக் ‘கண் அறியாக் காற்று’ என்ற தலைப்பில் ‘ஆகுதி-பனிக்குடம்’ வெளியீடாக வந்திருக்கிறது. சஹானாவுடன் பேசியதிலிருந்து...
மிகவும் சிறு வயதிலேயே ஒரு கவிதைத் தொகுப்பைக் கொண்டுவந்திருக்கிறீர்கள். மனதில் என்ன உணர்கிறீர்கள்?
ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது. ஜில் என்று ஒரு இனம் புரியாத உணர்வும் ஏற்படுகிறது.
அப்பாவும் கவிஞர் என்பதால் அவருடைய தாக்கம் உங்களுக்கு ஏற்பட்டதா?
ஆம். எனக்கு எழுதத் துணையாக இருந்தவை முதலில் வாசித்த என் அப்பாவின் கவிதைகளே.
முதன்முதலாக எழுதிய கவிதை எது? அந்த நேரத்தில் உங்கள் மனநிலை எப்படி இருந்தது?
முதன்முதலாக எழுதிய கவிதை ஒரு துளி. என் தோழி ஒருத்தி மழை நீர் சேகரிப்பு பற்றி எழுதி கேட்டாள். அவளுக்காகத்தான் முதலில் எழுதினேன். அவளுக்கு அழகாக எழுதிக் கொடுக்கணும் என்ற எண்ணம் மட்டும்தான் என் மனதில் அப்போது இருந்தது.
உங்கள் மீது தாக்கம் செலுத்தும் கவிஞர்கள், எழுத்தாளர்களைப் பற்றிச் சொல்லுங்களேன்!
தாக்கம் செலுத்தும் கவிஞர்கள் பாரதி, சுந்தர ராமசாமி, ஷங்கர்ராமசுப்ரமணியன், பிரான்சிஸ் கிருபா, குட்டி ரேவதி, தேன்மொழிதாஸ், என்.டி.ராஜ்குமார், லஷ்மி மணிவண்ணன், தேவதேவன், கூடல் தாரிக். கவிதைகள்தான் அதிகம் வாசித்திருக்கிறேன்.
படைப்புகளைப் பொறுத்தவரை உங்களின் எதிர்காலத் திட்டம் என்ன?
நிறைய கவிதைகள் எழுத வேண்டும். வேறு திட்டங்கள் ஏதுமில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT