Published : 19 Jan 2018 10:47 AM
Last Updated : 19 Jan 2018 10:47 AM
மொ
ழிபெயர்ப்புகளை மட்டும் தேடித்தேடி வாசிக்கும் வாசகர்கள் எல்லா தலைமுறைகளிலும் இருந்துவருகிறார்கள். சொந்த மொழியின் படைப்பெல்லைகளை அயல்மொழி இலக்கியங்களால் விரிவுப்படுத்திக்கொள்ளும் முயற்சிதான் அது. எனக்கும் அந்த மோகம் எனது கல்லூரி தினங்களில் பீடித்திருந்தது. ரஷ்ய மொழி இலக்கியங்களை ராதுகா பதிப்பகம் மூலம் கண்டடைந்தேன்.
ரஷ்ய மொழி இலக்கியங்களில் தமிழுக்குக் கிடைத்த அற்புதமான படைப்புகள் என விளாதீமிர் கொரலேன்காவின் ‘கண் தெரியாத இசைஞன்’, லியோ டால்ஸ்டாயின் ‘புத்துயிர்ப்பு’ இரண்டையும் சொல்வேன். இவ்விரு நூல்களையும் மொழிபெயர்த்த ரா. கிருஷ்ணையாவின் எழுத்துத் திறன் மீது அந்த வயதில் எனக்கு உண்டான கவர்ச்சிதான் மொழிபெயர்ப்புத் துறையைத் தேர்ந்தெடுக்கக் காரணமாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
‘கண் தெரியாத இசைஞன்’ ஒரு மிகச் சிறிய நாவல். பிறவியிலேயே பார்வையில்லாத பியோத்தரின் அகவுலகத்தில் இசை உண்டாக்கும் மாற்றம் அவனைப் பெரும் இசைக்கலைஞனாக உருவாக்குகிறது. யதேச்சையாக சூரியனை அண்ணாந்து பார்க்கும்போது அந்தக் குருட்டுக் கண்களுக்குள் நிகழும் சலனங்கள், தோழியுடன் ஏற்படும் கோபம் என்று மறக்க முடியாத மகத்தான படைப்பு அந்நாவல். இன்று வரை நான் வாசித்த நாவல்களில் முதலிடத்தை வகித்திருப்பது ‘புத்துயிர்ப்பு’. காந்திக்கும் பிடித்தமான நாவல் இது. இளவரசன் நெஹ்லூதவ் மூலமாக டால்ஸ்டாய் தனது வாழ்வின் ஆன்மீகத் தேடலை விரிவாக நிகழ்த்திச் சொல்கிறார். இந்நாவலை விஞ்சக்கூடிய கலைப்படைப்பு எந்நாளும் சாத்தியமில்லை என்பேன்.
இரண்டாம் உலகப் போர் காலத்தில் பிரெஞ்சு மொழியில் அந்த்வான் து செந்த் எக்சுபெரியால் எழுதப்பட்ட ‘குட்டி இளவரசன்’ இன்றளவும் உலகின் மகத்தான நாவல்களில் ஒன்று. க்ரியா பதிப்பக வெளியீடாக வெ.ஸ்ரீராம், ச. மதனகல்யாணி ஆகியோரின் மொழிபெயர்ப்பில் தமிழில் வெளிவந்துள்ளது. குட்டி இளவரசன் ஒவ்வொரு கிரகமாகச் செல்கிறான். அங்கே பூ, பாம்பு, நரி போன்றவற்றோடு உரையாடுவதுதான் நாவல். குழந்தைகளுக்கான புத்தகத்தைப் போலிருந்தாலும் ‘அற்புத உலகில் ஆலி’ஸைப் போலவே ஆழமான தத்துவங்களையும், வாழ்வின் புதிர்த்தன்மையையும் சொல்லும் நாவலாக இருக்கிறது.
ஃபிரான்ஸ் காஃப்காவின் ‘உருமாற்றம்’ என்ற குறுநாவலைப் பற்றி புதுமைப்பித்தனே கடிதம் ஒன்றில் குறிப்பிடுகிறார். கிரிகோர் சாம்சா என்று விற்பனைப் பிரதிநிதி கடுமையான மன அழுத்தத்தில் வாழ்கிறான். அவனைச் சுற்றிலும் சுயநலக்காரர்கள். திடீரென ஒருநாள் தூங்கியெழும்போது அவன் ஒரு மிகப்பெரிய அசிங்கமான பூச்சியாக மாறிவிட்டிருப்பதைக் காண்கிறான். இந்நாவலின் தொடர்ச்சியாக முரகாமி ஒரு சிறுகதை எழுதியுள்ளார். ருஷ்டியின் நாவல் ஒன்றில் இப்பாத்திரம் இடம்பெறுகிறது. காஃப்காவைப் படிப்பதும், தூக்கத்தில் துர்சொப்பனத்தில் ஓர் உலகத்தைக் காண்பதும் ஒன்றுதான் என்று க.நா.சு எழுதுகிறார். தமிழில் மிக அற்புதமாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் நூல்களில் இந்நாவலும் ஒன்று. இம்மொழிபெயர்ப்பை பலமுறை செப்பனிட்டு வழங்கியிருக்கிறார் ஆர்.சிவக்குமார் (தமிழினி பதிப்பகம்).
சுகுமாரன் மொழிபெயர்ப்பில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட துருக்கிய நாவலான ‘அஸிஸ் பே சம்பவம்’ (அய்ஃபர் டுன்ஷ்) கடந்த பத்தாண்டுகளில் வெளிவந்துள்ள மொழிபெயர்ப்புகளில் குறிப்பிடத்தக்கது. இசைக்கலைஞன் ஒருவனின் தோற்றம், வளர்ச்சி, வீழ்ச்சி என வெவ்வேறு தளங்களில் விரியும் நுட்பமான கதையாடல்; தேர்ந்தெடுத்த சொற்கள், நேர்த்தியான வாக்கிய அமைப்புகளால் ஆன நூல் இது.
என் வாசிப்பில் முக்கியமான மொழிபெயர்ப்பு நூல்கள் எனப் பட்டியலிட்டால் அது நீளமாகச் செல்லும் . குறிப்பிட்டு சொல்வதென்றால் வெ.ஸ்ரீராம் பிரெஞ்சு மொழியிலிருந்து நேரடியாக மொழிபெயர்த்துள்ள ஆல்பெர் காம்யுவின் ’முதல் மனிதன்’, ‘அந்நியன்’, பியரெத் ஃப்லுசியோவின் ‘சின்ன சின்ன வாக்கியங்கள்’, எக்சுபெரியின் ‘காற்று, மணல், நட்சத்திரங்கள்’ ஆகிய நூல்களையும் கீழ்வரும் சில புத்தகங்களையும் சொல்லலாம். போர்ச்சுகீஸ் எழுத்தாளர் ஹொஸே ஸரமாகோ எழுதிய ‘அறியப்படாத தீவின் கதை’ ஆனந்தால் தமிழில் அற்புதமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
உலகில் மிக அதிகமாக விற்பனையான ‘ சோஃபியின் உலகம்’ இளம் வாசகர்களுக்கான நாவல். யொஸ்டைன் கார்டெர் எழுதிய இந்நாவல், உலகின் பல்வேறு சிந்தனை மரபுகளை ஓர் இளம்பெண்ணுக்கு சுவாரஸ்யமாக விளக்கிச் சொல்வதுபோல் அமைந்தது. ஆர்.சிவக்குமாரின் மொழிபெயர்ப்பு (காலச்சுவடு). இது கடந்த நாற்பதாண்டுகளாக எல்லா நாடுகளிலும் மிகவிருப்பத்துடன் வாசிக்கப் படுகிற நாவல் காப்ரியேல் மார்க்கேஸின் ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’. தமிழில் சுகுமாரன் மொழிபெயர்ப்பில் காலச்சுவடு வெளியிட்ட நாவல்.
இந்திய மொழி நாவல்களில் குர் அதுல் ஜன் ஹைதரின் ‘அக்னி நதி’, அதீன் பந்தியோபாத்யாயவின் ‘நீலகண்ட பறவையைத் தேடி’, விபூதிபூஷணின் ‘பதேர் பாஞ்சாலி’, ஓ.வி விஜயனின் ‘கசாக்கின் இதிகாசம்’ ஆகியவை தமிழில் வந்திருக்கும் நல்ல மொழிபெயர்ப்புகளில் சில.
-ஜி.குப்புசாமி, மொழிபெயர்ப்பாளர்,
தொடர்புக்கு: gkuppuswamy62@yahoo.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT