Published : 24 Jan 2018 10:04 AM
Last Updated : 24 Jan 2018 10:04 AM
ஒரு இயக்கத்தின் தொடக்கம்!
தி
ருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி எனும் இடத்தில், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் வ.வே.சு. ஐயர், ‘தமிழ் குருகுல வித்தியாலயம்’ எனும் பெயரில் ஒரு கல்விக்கூடத்தை 1922 டிசம்பர் 8-ல் தொடங்கினார். காந்தியார், காங்கிரஸின் ஒரு திட்டமாக தேசியக் கல்வியைக் கையில் எடுத்திருந்தார். ஆங்கில அரசின் ஆதரவில் நடந்த கல்வி நிலையங்களும் அதன் பாடமும் பயிற்றுமொழியும் தேசியத்துக்கு விரோதமாக இருந்தன. தேசியப் பள்ளிகள் தேசியப் போராட்டத்துக்குப் பலம் சேர்க்கும் என்று காந்தி நம்பினார். அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் அவ்வாறு அமைந்ததுதான். அதை ஏற்ற வ.வே.சு. ஐயர் சேரன்மாதேவியில் குருகுலம் அமைத்தார்.
ஐயரைப் பற்றிய பிம்பம் நன்றாகவும் மரியாதைக்குரியதாகவும் இருந்தது. அவர் குருகுலத்துக்கு நிதி கேட்டு, ‘வேண்டுகோள் ’ விடுத்தார். முதலாண்டு செலவுக்கு ரூ.10 ஆயிரத்து 200 ஆகும் என்று திட்டச் செலவையும் அறிவித்தார். காங்கிரஸ் கட்சிக் கமிட்டி, ஐயருக்கு ரூ.10 ஆயிரம் குருகுலச் செலவுக்குத் தர முன்வந்து, அதில் ரூ.5 ஆயிரத்தை முதல் தவணையாக வழங்கியது. தேசியக் கல்வி நிதியில் இருந்து இந்தப் பணம் வழங்கப்பட்டது.
பெரியார் வழங்கிய மானியம்
தமிழ்நாட்டுக் காங்கிரஸ் தலைவராக பெரியார் இருந்தபோது, இந்த மானியத் தொகையை ஐயர் பெற்றார். நாட்டுக்கோட்டை நகரத்தார்களும் பெரும் நிதி உதவினார்கள். வை.சு.சண்முகம் செட்டியார் அளித்த நிதியால்தான் குருகுலம் அமைந்த 30 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது. அந்தக் காலத்தில் வெளிவந்த இந்து, குமரன், சுதேசமித்திரன், தமிழ்நாடு, நவசக்தி ஆகிய இதழ்கள் குருகுலத்துக்கு உதவக் கோரின. இக்குருகுலத்துக்கு நிதி உதவ, 3 பேர் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உதவிகேட்டு உழைத்திருக்கிறார்கள்.
ஆக, குருகுலம் கிளைவிட்டு வளரத் தொடங்கி இருக்கிறது. ஆனால், அதன் வேர் அழுகத் தொடங்கியிருக்கிறது என்பதை முதன்முதலில் கண்டுபிடித்து வெளிப்படுத்தியவர், காங்கிரஸ் தலைவர் வரதராஜுலு நாயுடு. ‘தமிழ்நாடு’ எனும் இதழில் (இந்தப் பத்திரிகை அவருடையது) எழுதிய அப்பகுதியை ‘லட்சுமி’ எனும் இதழ் (அக். 1924) மறுபிரசுரம் செய்தது.
திடுக்கிட வைத்த பதில்
‘‘ஜாதி வித்தியாசம் பாராட்டாத குருகுலத்தினால்தான் நமது தேசத்துக்கு ஏதாவது நன்மை செய்ய முடியும். தமிழ்க் குருகுலத்தில் ஜாதி வித்தியாசம் இருக்கிறது. ஆகவே, இந்த வித்தியாசம் இருக்கும்வரை இக்குருகுலம் தமிழ்நாட்டில் உள்ள பிராமணர் அல்லாதாரை இழிவுப்படுத்திக் காண்பித்துக் கொண்டிருக்கும். குருகுலத்தில் பிராமணரும், பிராமணர் அல்லாதாரும் வித்தியாசத்துடனேயே நடத்தப்படுகிறார்கள். சாப்பாட்டில் சகல வகுப்புகளையும் சேர்ந்த ஒரு பிராமணர் ஒரு பக்கமாகவும், சகல வகுப்புகளையும் சேர்ந்த பிராமணர் அல்லாதார் ஒரு பக்கமாகவும் இருந்து சாப்பிட வேண்டும். இதை நான் நேரில் அறிவேன். குருகுலத்தில் இந்த வித்தியாசம் கூடாது என்று நான் சொன்னேன். ஆனால், இந்த வேற்றுமையை ஒழிக்க முடியாது என்று ஐயர் கூறினார். இதைக் கேட்டதும் நானும் ஸ்ரீமான் ஈ.வி.ராமசாமி நாயக்கர் (பெரியார்) போன்ற பிராமணர் அல்லாதாரும் திடுக்கிட்டுப் போனோம்!’’
இதுதான் நாயுடு எழுதியது. இன்றும் தொடருகிற, பிராமணர் மற்றும் பிராமணர் அல்லாதாருக்கும் இடையே நடந்த பெரும் போராட்டத்தின் தொடக்கமாக அவர் எழுத்துகள் அமைந்தன. அடுத்து, பெரியார் காங்கிரஸை விட்டு வெளியேறியது நடந்தது. திராவிட இயக்கம் கண்டது; தமிழ்நாட்டில் காங்கிரஸ் என்ற கட்சி திராவிட இயக்கங்களின் விரலைப் பிடித்தே அடையாளத்தைத் தக்கவைத்துக்கொள்ள நேர்ந்ததும் நிகழ்ந்தது. திராவிட அரசியல் என்ற ஒன்றை இந்தியா கண்டது.
நீதிக் கட்சியின் பேரெழுச்சி
பிராமணர் அல்லாதாரின் இயக்கம் 1912-ல் சென்னையில் தோன்றியது. அப்போது அதன் பெயர், ‘தி மெட்ராஸ் யுனைடெட் லீக்’. பின்னர் ‘திராவிடர் சங்கம்’. 1916-ல் நீதிக் கட்சி தோற்றம் கண்டது. மிக அடர்த்தியாக வளர்ந்தது. தமிழக ஆட்சியைப் பிடித்தது. தியாகராயர் போன்ற தலைவர்கள் உருவாகி இருந்தார்கள்.
இச்சூழ்நிலையில்தான் குருகுலப் பிரச்சினை அரங்குக்கு வந்தது. பிராமணர் அல்லாதார் மாணவர்கள் இழிவு செய்யப்பட்டது கண்டு மனம் வருந்தியவரே நாயுடு. ஐயரின் லட்சியமே அவரின் லட்சியம். அதோடு ஐயரின் மேல் மிக்க அன்பு வைத்திருந்தவர் அவர்.
அடுத்த ஓராண்டு தமிழக அரசியலில் பெரும்புயல் வீசியது. தமிழக அரசியலில் பெரும் மாற்றங்களை நிகழ்த்திய இந்நிகழ்ச்சியைப் பற்றி மிகவும் ஆதாரமானதும், அக்கறையோடும் எழுதப்பட்ட பதிவு ஆய்வறிஞர் பழ.அதியமான் எழுதிய ‘சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்’ எனும் நூல். அது பற்றியே இப்போது பேசிக் கொண்டிருக்கிறோம். இந்த அரிய நூலை ‘காலச்சுவடு பதிப்பகம்’ பதிப்பித்துள்ளது.
திரு.வி.க. இதுபற்றி எழுதியதாவது:
‘‘வ.வே.சு.ஐயர் சமரச உள்ளத்தோடு நடக்க முயன்றாலும், வைதீகர்கள் குறுக்கே நின்று இடர் செய்கிறார்கள். அது உண்மையாயின் எல்லா வகுப்பாரிடத்தும் பொருள் வாங்க முயன்றிருத்தல் ஆகாது. ஸ்ரீமான் ஐயர் பல திறக் கொள்கையுடையவரிடத்தும், காங்கிரஸிலும் பொருளுதவி பெற்றிருத்தலால் பொதுஜன விருப்பத்துக்கு மாறுபட்டு நடக்க மாட்டார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு!’’
‘‘குழந்தைகளின் பெற்றோர், தங்கள் குழந்தைகள் தனியாக அமர்ந்து சாப்பிட வேண்டும் என்று விரும்பினால் அப்படியே செய்கிறோம்’’ என்று சமாதானம் சொன்னார் ஐயர். ‘பந்தி வித்தியாசம், பிராமண - பிராமண அல்லாதார் உணர்ச்சியின் வெளிப்பாடு அல்ல; எல்லா சாதியாரிடமும் பரவிக்கிடக்கும் சாதி உணர்ச்சிப் பேயின் வாடை..!’ என்று ‘சுதேசமித்திரன்’ பத்திரிகை தன் சார்பை வெளிப்படுத்திக்கொண்டது.
குருகுலத்தில் பிராமணக் குழந்தைகள் உள் ஹாலிலும், பிராமணர் அல்லாதார் மாணவர்கள் வெளியேயும் இருந்து உண்பதாகக் ‘குமரன்’ இதழ் ஆசிரியரும், செட்டியார் பிரமுகருமான முருகப்பாவும் சொன்னார். இதுபற்றி ஐயர் பதில் சொன்னார்: ‘‘ஒரே வரிசையாக இருந்து உண்பதற்கு இடம் போதவில்லை!’’
மேலும், ‘‘கலந்துண்பதில் ஐயருக்கு ஆட்சேபம் இல்லை. ஜன சமூகத்தில் இருக்கும் ஆசாரங்களை ஒட்டியே ஆசிரம ஆசாரங்களும் இருக்கும்’’ என்று ஐயர் சொன்னார் என்று முருகப்பா சொன்னார்.
வரதராஜுலு, குருகுலப் பிரச்சினையில் தீவிரமான நிலைப்பாட்டை எடுத்ததால், காங்கிரஸ் கட்சிக்குள் எதிர்ப்பைச் சந்தித்தார். குருகுலத்தில் நடந்த பந்தி வித்தியாசத்துக்கு சாதிரீதியான உயர்வு, தாழ்வு என்ற பேதமே அடிப்படை. ‘பிறப்பால் கற்பிக்கப்பட்ட இந்த பேதத்தை சடங்கு செய்து நீக்கிவிடலாம்’ என்று ஐயர் கருதினார். ‘தாழ்வாகக் கருதப்பட்டவர்க்கு சடங்கு ஒன்றைச் செய்து உயர்வானவர்களுக்குச் சமமாக அவர்களை மாற்றிவிடுவது’ என்பது அவர் திட்டம். ‘நவசக்தி’ முதலான பத்திரிகையும், பிரமுகர் பலரும் இதற்கு எதிரானார்கள்.
‘எல்லோர்க்கும் பூணூல் தரித்து உடன் உண்ணச் செய்வதற்கு எந்தப் பொருளும் இல்லை. வைதீக பிராமணர்களும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்..!’
சரியாக இதேநேரம், காந்தியார் கேரளாவின் வைக்கம் வர இருந்தார். அவரிடமே பேசப் புறப்பட்டார் ஐயர். ‘இந்த விஷயத்தில் நிர்பந்தம் எதுவும் கூடாது. இந்து மதத்தில் வருணாசிரம தர்மமும் ஒரு முக்கிய தத்துவம் என்று மகாத்மா அபிப்ராயம் கூறியதாகத் தெரிகிறது’ என்று ‘சுதேசமித்திரன்’ இதழ் எழுதியது.
1925 மார்ச் 24-ம் தேதி. எஸ்.சீனிவாச ஐயங்கார் வீட்டில் காந்தியாரை வரதராஜுலுவும் ஐயரும் மற்றும் ராஜாஜி போன்றவர்களும் சந்தித்தார்கள். 1.குருகுலவாசம் செய்யும் பிரம்மச்சாரிகள் ஒரு பந்தியில் அமர வேண்டும். 2. பிராமணரே சமைக்க வேண்டும். 3. பண உதவி செய்த புரவலர் கேட்டால் பணத்தைத் திரும்பத் தந்துவிட வேண்டும். தராத பட்சத்தில் புரவலர்களை நிர்வாகக் குழுவில் இணைத்துக்கொள்ள வேண்டும்... போன்ற பல விஷயங்கள் பேசப்பட்டன. எதையும் கறாராக முடிவு செய்யவில்லை என்று தெரிகிறது.
நாயுடு போன்றோர் ‘தமிழர் கூட்டம்’ என்ற பெயரில் சென்னையில் 1925 மார்ச் 24-ல் விவாதித்தார்கள். ‘பிராமணரல்லாதார்’, ‘பார்ப்பனரல்லாதார்’ என்ற சொல்லுக்குப் பதிலாக ‘தமிழர்’ என்ற சொல்லை அதன்பிறகு பயன்படுத்தலானார்கள்.
நாயுடு கடுமையான முடிவு எடுத்தார். ‘1925 ஏப்ரல் முடிவுக்குள் காங்கிரசஸில் இருந்து பெற்ற பணத்தைத் திரும்பச் செலுத்த வேண்டும். இல்லை என்றால் மே மாதம் குருகுலத்தின் முன் சத்தியாக்கிரகம்’ என்ற முடிவெடுத்தார். ஐயர், குருகுலத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகினார்.
பெரியார் ‘குடியரசு’ இதழில் எழுதினார்: ‘ஸ்ரீமான் வ.வே.சு.ஐயர், மறுபடி 5,000 ரூபாய் காங்கிரஸில் இருந்து கொடுக்க வேண்டும் என்று கேட்டபோது, நானும் தண்டபாணிப் பிள்ளையும் கண்டிப்பாய்ப் பணம் கொடுக்கக்கூடாது. முன்கொடுத்த பணமே தமிழர்களின் இழிவுக்கு உபயோகப்படுகிறது... என்று சொன்னோம்!’
உண்மை எழுதும் எழுத்தாளர்
1922 முதல் 25 வரை , தமிழகத்தின் பெரும் பேச்சாக இருந்த குருகுலப் பிரச்சினை, ஐயர் மரணத்தால் நிறைவு பெற்றது. 1925-ம் ஆண்டு மே மாத முடிவில் பாபநாசம் அருவிக்கு மகன், மகள் ஆகியோருடன் குளிக்கச் சென்றார் ஐயர். பாபநாசம் அருவிக்கு மேல் உள்ள கல்யாண தீர்த்தத்தை அடைந்தார்கள். நதியைக் கடந்து அக்கரை போக மகள் சுபத்திரா கோரினாள். பாறைகளில் தவறி விழுந்தாள். அப்பா என்று அலறியபடி ஆற்றில் அடித்துச் சென்ற மகளைக் காப்பாற்ற ஐயரும் ஆற்றில் குதித்து மகளை நெருங்கினார். ஆற்றின் வேகத்தை சமாளிக்க முடியாமல் ஆற்றில் கரைந்தார் ஐயர்.
நம் சமகால மிக முக்கியமான அரசியல் வரலாற்றை, மிகவும் பாராட்டத்தக்க வகையில் எழுதியிருக்கும் பழ.அதியமான் பாராட்டத்தக்கவர். இவரே வரதராஜுலு நாயுடு பற்றியும், ஜார்ஜ் ஜோசப் பற்றியும் வ.ரா. பற்றியும் முன்னர் எழுதியவர். ஆதாரங்களுடன் உண்மை எழுதும் எழுத்தாளர் அதியமான்.
- சுடரும்...
- எண்ணங்களைப் பகிர: writerprapanchan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT