Published : 13 Jan 2018 10:19 AM
Last Updated : 13 Jan 2018 10:19 AM
த
மிழில் பக்தி இலக்கியங்களைப் படிக்க விரும்புவோர், நல்ல உரையாசிரியர்கள் யார், நல்ல பதிப்பு எது என்று திணறுவதைக் காண முடிகிறது. அவர்களுக்கு உதவியாக இந்தப் பட்டியல் இருக்கும்.
தொடக்க நிலையில் ஆன்மிகம் என்பது மிக எளிமையாக பக்தி என்றே புரிந்துகொள்ளப்படும் - கோயிலுக்குப் போவதும் சாமி கும்பிடுவதும் போற்றிப் பாடுவதும் என்று. சைவ மரபில் வந்தவர்களின் ஆன்மிக நூல்மரபு தேவார, திருவாசகங்களில் தொடங்க, வைணவ மரபில் நூல்மரபு திவ்வியப் பிரபந்தத்தில் தொடங்கும். சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்ல நினைக்கிறவர்கள் அடுத்துத் தேடுவன உரை நூல்கள்.
வைணவ மரபைப் போலச் சைவ மரபில் உரை நூல்கள் அதிகம் இல்லை. தருமபுர ஆதீனம் 1953-ல் தொடங்கி தக்க தமிழ் அறிஞர்களைக் கொண்டு பன்னிரு திருமுறை நூல்களுக்கு உரைகள் எழுதுவித்துப் பதிப்பித்தது. இந்த நூல்களை அனைவரும் வாங்கிச் சேகரிப்பது கடினம் என்ற நிலையில் இவற்றை www.thevaaram.org என்ற வலைதளத்தில் காந்தளகம் பதிப்பகத்தின் ஆக்கத்தில் பாட்டும் இசையும் உரையுமாக அனைவரும் காணவும் கேட்கவும் பதித்துவைத்திருக்கிறது தருமை ஆதீனம். பி.சா.நடராசன், ஞா.மாணிக்கவாசகன் போன்ற உரையாசிரியர்களைக் கொண்டு உமா பதிப்பகமும் சைவத் திருமுறை நூல்களுக்கு உரைகள் வெளியிட்டிருக்கிறது.
சைவத் திருமுறைகளில் நிறைய உரைகள் கண்ட நூல்கள் என்று திருவாசகத்தையும் திருமந்திரத்தையும் சொல்லலாம். திருவாசகத்துக்குச் சைவ சித்தாந்த அடிப்படையில் கா.சு.பிள்ளை எழுதி சைவநூல் அறக்கட்டளை வெளியிட்டுள்ள உரை, அத்வைத அடிப்படையில் சுவாமி சித்பவானந்தர் எழுதி இராமகிருஷ்ண தபோவனம் வெளியிட்டுள்ள உரை, பொதுநிலையில் ஜி.வரதராஜன் எழுதி பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்டுள்ள உரை, சமீபத்தில் பழ.முத்துவீரப்பன் எழுதி மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்டுள்ள உரை ஆகியன குறிப்பிடத்தக்கன.
திருமந்திரத்துக்கு சி.அருணை வடிவேல் முதலியார் எழுதித் தருமபுர ஆதீனம் வெளியிட்டுள்ள உரை, ச.தண்டபாணி தேசிகர் எழுதித் திருவாவடுதுறை ஆதீனம் வெளியிட்டுள்ள உரை, ஜி.வரதராஜன் எழுதி பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்டுள்ள உரை ஆகியன போற்றத் தக்கன. ப.இராமநாத பிள்ளை எழுதி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டுள்ள உரை, அ.மாணிக்கம் எழுதி வர்த்தமானன் பதிப்பகம் வெளியிட்டுள்ள உரை, ஞா.மாணிக்கவாசகன் எழுதி உமா பதிப்பகம் வெளியிட்டுள்ள உரை, அழகர் நம்பி எழுதி கவிதா பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ள உரை ஆகியன குறிப்பிடத் தக்கன.
ஆன்மிகத்தை நாடுபவர்களின் பக்தி ஈடுபாட்டை, திருமந்திரம் மறுவிசாரணை செய்யச் சொல்லும். அந்த மறுவிசாரணை, சித்தர் பாடல்களுக்குள் செலுத்தும். பி.ரத்தின நாயகர் அண்ட் சன்ஸ் வெளியிட்ட பதினெண் சித்தர்கள் பெரிய ஞானக் கோவை, பிரேமா பிரசுரம் வெளியிட்ட சித்தர் பாடல்கள், பூம்புகார் பிரசுரப் பதிப்பு ஆகியன குறிப்பிடத்தக்கவை. சித்தர்களைப் பற்றியும் அவர்களுடைய பாடல்களின் தன்மையைப் பற்றியும் குறிப்பு வேண்டுகிறவர்களுக்கு இரா.திருமுருகனைத் தொகுப்பாசிரியராகக் கொண்டு சாகித்திய அகாடமி வெளியிட்டுள்ள சித்தர் பாடல்கள் நூல் சிறந்த வழிகாட்டி.
எல்லோரையும்போலவே ஆன்மிகம் பழக விரும்பி, பணிவைக் கற்றுத் தரும் பக்தி மரபில் தொடங்கி, அறிவைக் கற்றுத் தரும் சித்தர் மரபில் சேர்ந்துகொண்டவர், அருளைக் கற்றுத் தரும் திருவருட்பிரகாச வள்ளலார். அவருடைய திருவருட்பா இல்லாமல் பட்டியல் முழுமை அடையாது. திருவருட்பாவின் ஆறு திருமுறைகளுக்கும் ஔவை சு.துரைசாமிப் பிள்ளை எழுதிய உரை, முதலில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டு, பின்னாளில் வர்த்தமானன் பதிப்பகத்தால் மறு அச்சிடப்பட்டது. அளவில் பெரிய இந்நூலை வாங்கத் தயங்குபவர்கள், தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் வலைதளமான www.tamilvu.org-இன் நூலகத்தில் கண்டுகொள்க.
...எச்சார்பும் ஆகிஉயிர்க்கு இதம்புரிதல் வேண்டும்; எனைஅடுத்தார் தமக்கெல்லாம் இன்புதரல் வேண்டும்; இச்சாதி சமயவிகற் பங்கள்எலாம் தவிர்த்தே, எவ்வுலகும் சன்மார்க்கப் பொதுவடைதல் வேண்டும்!
- என்று உண்மை ஆன்மிகம் வேண்டுகிறார் வள்ளலார். எளிய வழி. அன்பும் அருளும் உடையவராக இருத்தல். ‘ஐயே அதிசுலபம் ஆன்மவித்தை’ என்று பாடத் தூண்டுகிறதல்லவா வள்ளலாரின் ஆன்மிகம்!
-கரு.ஆறுமுகத்தமிழன், எழுத்தாளர்,
மெய்யியல் துறை உதவிப் பேராசிரியர்,
தொடர்புக்கு: arumugatamilan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT