Last Updated : 16 Jan, 2018 08:53 AM

 

Published : 16 Jan 2018 08:53 AM
Last Updated : 16 Jan 2018 08:53 AM

எழுத்தில் பதிவான திரை!

சி

னிமா, கலாச்சாரத்தை கடந்த ஒரு கலை. என்றாலும், அதன் கோட்பாடுகளை அறிந்துகொள்ள மொழி வழியிலான நூல்கள் தேவை. சினிமா ரசனை, உருவாக்கம், நுட்பம், கோட்பாடு போன்ற வகைமைகளில் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மனி உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு நூல்கள் உள்ளன. இவற்றோடு ஒப்பிடும்போது, சினிமாவை சுவாசிக்கிற தமிழ்ச் சமூகத்தில் அது தொடர்பான நூல்கள் குறைவுதான் என்றாலும், இங்கும் குறிப்பிடத்தக்க படைப்புகள் உள்ளன. அவற்றில் முக்கியமான சிலவற்றைப் பார்ப்போம்.

எளிமையான, அடிப்படையான நூல் வரிசையிலிருந்து துவங்கினால், அறந்தை நாராயணனின் ‘தமிழ் சினிமாவின் கதை’ நூலிலிருந்து ஆரம்பிக்கலாம். நாடக மரபு துவங்கி, மெளனப் பட காலகட்டத்தைத் தொடர்ந்து 80-கள் வரையான தமிழ்த் திரைப்படங்களின் பல்வேறு ஆதாரமான தகவல்களைத் தருகிறது. தியடோர் பாஸ்கரனின் ‘பாம்பின் கண்’ என்கிற மொழியாக்க ஆய்வு நூல் பல அடிப்படையான தகவல்களுடன் இதன் வரலாற்றை இன்னமும் துல்லியமாக்குகிறது. ‘எம் தமி்ழர் செய்த படம்’, ‘சொப்பன வாழ்வில் மகிழ்ந்தே’ ஆகிய அவருடைய மற்ற நூல்கள் தமிழ் சினிமாவின் அடிப்படை வரலாற்றைச் சிறப்பான தரவுகளுடன் பதிவாக்கியிருக்கிறது. இந்த வகையில், தியடோர் பாஸ்கரன், ராண்டார் கை போன்றோர்களைத் தமிழ் சினிமா நூலின் முன்னோடிகள் என்றே சொல்லலாம்.

அம்ஷன் குமாரின் ‘சினிமா ரசனை’, ஓவியர் ஜீவாவின் ‘திரைச்சீலை’ (தேசிய விருது வென்றது) ஆகிய நூல்கள், சினிமாவைச் சரியானபடி நுகர்வதற்கான அடிப்படை வெளிச்சத்தை சராசரி பார்வையாளனுக்கு அளிக்கின்றன. ‘வாங்க, சினிமாவைப் பற்றி பேசலாம்’ என்கிற இயக்குநர் பாக்யராஜின் நூல், வெகுஜன சினிமா உருவாக்கத்தின் பின்னணியில் உள்ள சுவாரசியமான தகவல்களை ஜனரஞ்சக மொழியில் பேசுகிறது.

உலக சினிமாவைப் பற்றிய எளிமையான அறிமுகத்தை வெகுஜன இதழில் செழியன் எழுதிய ‘உலக சினிமா’ தொடர் அளித்தது. தீராநதியில் எஸ்.ராம கிருஷ்ணன் எழுதிய ‘அயல் சினிமா’ தொடரும் முக்கியத்துவம் வாய்ந்தது. உலக சினிமா குறித்து அவர் எழுதித் தொகுத்திருந்த நூலும் கவனிக்கத்தக்கது. ஒரு சினிமாவைப் பற்றி பிரத்யேகமான முழு நூல் தமிழில் வருவதெல்லாம் மிக அபூர்வம். ‘பதேர் பாஞ்சாலி’ என்கிற வங்க சினிமாவைப் பற்றி எஸ்.ரா. எழுதிய பிரத்யேகமான நூல் அவசியம் வாசிக்க வேண்டியது.

‘தமிழ் சினிமாவின் பரிணாமங்கள்’ என்கிற விட்டல் ராவின் நூல், பல அரிய தகவல்களை உள்ளடக்கியது. இவரின் இன்னொரு நூலான ‘நவீன கன்னட சினிமா’ நாம் அறியாத, அண்டை மாநில கலையுலகைப் பற்றிய பல சுவாரசியமான கட்டுரைகளைக் கொண்டிருக் கிறது.

ஆய்வுரீதியிலான சினிமா நூல்களும் தமிழில் உள்ளன. கார்த்திகேசு சிவத்தம்பியின் ‘தமிழ்ப் பண்பாட்டில் சினிமா’ என்பது ஒரு முன்னோடி நூல். ஹங்கேரி அறிஞரான பேல பெலாஸ் எழுதிய சினிமா கோட்பாடு பற்றிய நூல், 80-களிலேயே தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுவிட்டது. எம்.சிவக்குமார் சிறப்பாக மொழிபெயர்த்த இந்நூல், சமீபத்தில் புதிய பதிப்பாக வெளியாகியுள்ளது. ‘திரையில் வரையப்பட்ட தமிழ் நிலம் (பிரேம்), கதாநாயகனின் மரணம் (ராஜன்குறை), ‘சினிமாவின் இரண்டாம் நூற்றாண்டு’ (எம்.சிவக்குமார்), திரை அகம் (ஆனந்த் பாண்டியன்), சினிமா: சட்டகமும் சாளரமும் (சொர்ணவேல்) போன்றவை குறிப்பிடத்தக்க ஆய்வு நூல்கள்.

ப.திருநாவுக்கரசின் ‘சொல்லப்படாத சினிமா’, உலக ஆவணப்படங்கள் மற்றும் இந்திய, தமிழ் ஆவணப்படங்களைப் பற்றி விரிவாகப் பதிவுசெய்திருக்கும் நூல். இவர் தொகுத்த ‘மக்களுக்கான சினிமா’ பல சர்வதேசக் கலைஞர்களின் சுயாதீன முயற்சிகளைப் பதிவுசெய்திருக்கிறது. எஸ்.ஆனந்தின் ‘திரைப்பட மேதைகள்’ ஐரோப்பிய சினிமா இயக்குநர்களைப் பற்றிய மிகச்சிறந்த அறிமுகத்தை அளிக்கிறது. ‘சத்யஜித் ரே, திரைமொழியும் - கதைக் களமும்’ எனும் நூல், அந்தத் திரை மேதையின் ஆக்கங்களைப் பற்றிய மிகச் சிறந்த நூல். லதா ராமகிருஷ்ணன் இந்நூலை மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார்.

நாட்டுப்புற ஆய்வியலாளரான டி.தர்மராஜ் எழுதிய ‘கபாலி: திரைக்கதையும், திரைக்கு வெளியே கதையும்’ எனும் நூல் ஒரு வெகுஜன சினிமாவையொட்டி சமூகத்தின் புறச்சூழலையும் இணைத்து ஆராய்வது சுவாரசியமானது. பிரெஞ்சு இயக்குநர்களை அறிமுகப்படுத்தும் வெ.ஸ்ரீராமின் ‘புதிய அலை இயக்குநர்கள்’, பேராசிரியர் எம்.எஸ்.எஸ்.பாண்டியனின் ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நூல்களும் இந்த வரிசையில் முக்கியமானவை. வெங்கடேஷ் சக்ரவர்த்தி, சுபகுணராஜன், சுந்தர்காளி போன்றவர்களின் சினிமா கட்டுரைகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

சினிமா நூல்களின் விற்பனைக்கு என்றே பிரத்யேகமாக உருவாகியிருக்கும் ‘பியூர் சினிமா’ என்கிற நூல் அங்காடி, சினிமாவின் முக்கியத்துவத்தை அறிவுசார் சமூகம் தீவிரமாக எடுத்துக்கொண்டிருப்பதை உறுதிசெய்தாலும், கடக்க வேண்டிய தூரம் இன்னமும் நீளமாகவே உள்ளது.

-சுரேஷ் கண்ணன்,

தொடர்புக்கு: sureshkannan2005@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x