Last Updated : 03 Jan, 2018 09:45 AM

 

Published : 03 Jan 2018 09:45 AM
Last Updated : 03 Jan 2018 09:45 AM

எமதுள்ளம் சுடர் விடுக!- 23: சகோதரர், சகோதரி அன்றோ?

மூகத்தின் நம் சகோதர, சகோதரிகள் சிலர் திருநங்கைகள் எனவும் திருநம்பிகள் எனவும் அழைக்கப்படுகிறார்கள். அவர்களை அறிவற்ற மூடர்கள் இழிவான பல வார்த்தைகளால் குறிப்பிட்டுக் கீழ்மைப்படுத்துகிறார்கள். ஒடுக்கப்பட்டவர், விளிம்பு நிலை மனிதர்களை விடவும் துயர நிலையில் வைக்கப்பட்டுள்ளார்கள் அவர்கள். இந்த நூற்றாண்டில்தான், அவர்களைப் பற்றிய புரிதல் ஓரளவுக்கு ஏற்பட்டுள்ளது. அவர்கள் பற்றிய அக்கறையோடு கூடிய ஆய்வுகள், படைப்புகள் நிகழ்ந்துள்ளன. திருநங்கைகள் ரேவதி, ப்ரியா பாபு, லிவிங் ஸ்மைல் வித்யா, ஆஷா பாரதி போன்றோர் படைப்புகளும், பேராசிரியர்கள் குணசேகரன், மங்கை, மு.ராமசாமி பொன்ற பலரின் நாடக முயற்சிகளும் திருநங்கைகளைப் புரிந்துகொள்ளும் இசைவான சூழ்நிலையை உருவாக்கியுள்ளன.

‘சமூக வரலாற்றில் அரவாணிகள்’ என்கிற 50 ஆய்வாளர்கள் எழுதிய கட்டுரை தொகுப்பை வாசித்தேன். முனைவர் கி.அய்யப்பன் வெளியிட்டுள்ளார். பதிப்பாளர்கள் முகிலை இராச பாண்டியன், ஜே.ஆர். இலட்சுமி, கெ.இரவி, சி.இராமச்சந்திரன் ஆகியோர். விசாலட்சுமி பதிப்பகம் (கிழக்குத் தெரு, கடையம், நல்லாப்பாளையம் அஞ்சல், விழுப்புரம் மாவட்டம்) வெளியிட்டுள்ள, முக்கியத்துவமான புத்தகம் இது. திருநர்களைப் பற்றிய பழைய இலக்கிய இலக்கண ஆசிரியர்கள், அருளாளர்கள் எழுதிய குறிப்புகள் திருநர்களின் இன்றைய வாழ்க்கைச் சூழல், அரசு ஆற்ற வேண்டிய பணிகள் பற்றி இந்த 58 கட்டுரை ஆசிரியர்கள் மிகச் சிறப்பான கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர்.

நாகரிகமாக ஏற்போம்

‘பெண்மைவிட்டு ஆண் அவாவுவ பேடு ஆண்பால்’ மற்றும் ஆண்மைவிட்டு அல்லது அவாவுவ பெண்பால்’ என்கிறது நன்னூல். பெண் தன்மையைவிட்டு ஆண் தன்மையை விரும்புகிறவரை, அவர் விருப்பப்படி ஆண்பாலாய் அழைக்கலாம்; அதுபோல ஆண் தன்மையை விட்டுப் பெண்மையை அவாவுகிறவரை, அவர் விரும்புகிற பெண்ணாகவே அடையாளம் காணலாம் என்கிறது இலக்கணம். யார் எந்தப் பாலை ஏற்கிறாரோ, அதை நாமும் ஏற்பதுதானே நாகரிகம்!

இந்நூலில் ஆய்வாளர் பலரும் இலக்கண நூல்களை குறிப்பிட்டு, பழைய சமூகம், ‘திருநர்’களாகிய திருநங்கைகள், மற்றும் திருநம்பிகளை எவ்வாறு இனம் கண்டன என்பதைத் தவறாது குறிக்கிறார்கள். அவ்வை, ‘அரிது அரிது மானிடராதல் அரிது/ மானிடராயினும் கூன், குருடு, செவிடு, பெடு நீங்கிப் பிறத்தல் அரிது’ என்கிறார். அநேகமாக தமிழ் இலக்கிய வரலாற்றில் திருநங்கைகள் குறித்த அறிவார்த்தமான முதல் பதிவாக அவ்வையைத்தான் சொல்ல முடியும். கூனல் முதுகு, குருடு, செவிடு போன்றவை ஒரு உடற்குறை. அதுபோலத்தான் பேடாக இருப்பதும் ஒரு சிறிய குறை.

உண்மையும் அதுதான். மனித செல்லில் உள்ள குரோமோசோம்களில் கடைசி இணையே ஆண் - பெண்ணைத் தீர்மானிக்கின்றன. ஒரு இணைச் சேர்க்கை ஆணாகவும்; வேறொன்று பெண்ணாகவும் உருப்பெறுகின்றன. சிலவேளைகளில் குழப்பமோ, கோளாறோ ஏற்பட்டால், திருநர் பிறப்பு உருவாகிறது. இதற்கு யாரும் காரணம் இல்லை. இதுஇயற்கை நிகழ்வு. தந்தை, தாய், பிறந்த குழந்தை யாரும் காரணம் இல்லை. ஆக, ஒரு திருநரிடம் சமூகம் பேண வேண்டியது சகோதரத்துவம்தான். செய்ய வேண்டியது இழிவல்ல. புறக்கணிப்பல்ல.

பெற்றோர் உணர வேண்டும்

கொடுமை என்னவென்றால், இளம் சிறார்கள் சீரழிக்கப் படுவது அவர்களின் பெற்றோர்களால்தான். ஆமாம்,13 வயதில் ஒரு சிறுவன், தான் ஆண் அல்ல என்பதை உணர்கிறான் என்றால் பெண்ணாகத் தன்னைப் பாவிக்கிறான் என்று பொருள். பெண் ஆடை அணிகிறான். பெண்களோடு விளையாட, சிநேகம் கொள்ள முயற்சிக்கிறான். அவனுடைய போக்கு, அவனது பெற்றோருக்கு அதிர்ச்சியளிக்கிறது. அந்தச் சிறுவனிடம் பேசவும் அவன் இயல்பை அவனுக்கு உணர்த்தவும் முன் வராத மூடப் பெற்றோர்கள், அச்சிறுவனைத் துன்புறுத்துகிறார்கள். தாக்குகிறார்கள். சகல வன்முறைகளும் பிரயோகிக்கப்பட, சிறுவன் வேறு வழி இல்லாமல் வீட்டை விட்டு ஓடுகிறான். படிப்பு தொலைகிறது. வாழ்க்கை தொலைகிறது. சமூக விரோதிகள், போலீஸ், காமத் தரகர்கள் என்று பலரும் அவனை வழி மறிக்கிறார்கள். எப்படியோ பிழைத்து, நல்ல குழுவுடன் இணைந்து பிழைத்துப் போகிறான். இப்போது அவன் தன் ஆண் உறுப்பை அறுத்தெறிந்து, பெண்ணாகிறான். அவன் இப் போது பெண். ஒரு நல்ல வளர்ந்த சமூகம், அந்தப் பெண்ணை வரவேற்கும். அவனுக்குள் ஒளிந்திருக்கும் திறமையை, ஆற்றலைக் கண்டு பிடிக்கும். அத்துறையில் அவனை வளர்க்கும்.

அவர்களின் மொழி

மகாபாரதத்தில் இடம்பெற்ற ஒரு கதையில் இருந்து, தங்கள் குல மரபை ஏற்படுத்திக்கொண்டார்கள் திருநர்கள். குருஷேத்திர யுத்தத்தில் வெற்றிபெற, 32 லட்சணங்களும் உடைய ஒரு சுத்த வீரனைத் தேடுகிறார்கள் பாண்டவர்கள். அவர்கள் நினைவில் அரவாண் தோன்றுகிறான். அரவாண் அர்ச்சுனன் மகன். அவனைப் பலி கொடுத்து வெற்றிபெற ஆசைப்படுகிறார்கள் பாண்டவர்கள். யுத்தம் மனிதத் தன்மையைத்தான் முதலில் கொல்லும். மரணத்துக்கு முன்பாக திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று அரவாண் ஆசைப்படுகிறான். அப்போது, கிருஷ்ணனே மோகினி உருவம் கொண்டு அரவாணுக்கு மனைவி ஆகிறார். மறுநாள் விடியலில் அரவாண் களப்பலி ஆகிறான். இந்நிகழ்வின் நினைவே கூவாகம் கூத்தாண்டவர் விழா. அவ்விழாவில் திருநங்கையர்கள் தாலிக் கட்டிக்கொண்டு, அதைத் தொடர்ந்து அறுத்தும் கொள்கிறார்கள். இந்நிகழ்வை எண்ணி குமுறி அழும் அவர்கள், எதை நினைத்து அழுகிறார்கள்? பெற்றோரின் பிரிவு, சமூகம் செய்யும் கொடுமை, வாழ்க்கை தரும் இழிவு இதை எல்லாம் நினைத்தே அழுகிறார்கள். துரோகங்களை நினைத்துத் துடிக்கிறார்கள். யார் எதைச் சொல்லி சமாதானப்படுத்த முடியும்?

திருநர்கள் தமக்குள் ஒரு மொழியையே அமைத்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த மொழியின் பெயர் கவுடி. இப்புத்தகத்தில் இதை ந.சித்தி ஜீனத் நிஷா என்பவர் எழுதியுள்ளார், சமூகத்தின் கூரிய பார்வையில் இருந்து தப்பிக்க உதவும் மொழி இது.

உதாரணம்: ‘இந்த நார்னி பில்பன் பண்ணுவானு நினைக்கிறேன்’. இதன் பொருள்: இந்தப் பெண் பிரச்சினை செய்வான் என்று நினைக்கிறேன்.

பாம்படத்தி - வணக்கம்; டப்பர் - பணம்; தந்தா - நிற்பது; சீசா - சண்டை; சீஸ் பந்தி – அழகான பையன்; டி.டி- குடித்தல்; ஜோக் - ஆடை; கவுடி – ரகசியம்.

திருநர்கள் பலர் கலை இலக்கியத் துறையில் பெரிய ஆளுமைகளாகியிருக்கிறார்கள். நர்த்தகி நடராஜ் - ஒரு பெரிய நடனக் கலைஞர். ஆஷா பாரதி – சமூக சேவகி, சபீனா பிரான்சில் – அலுவலர்; பிரியா பாபு – பத்திரிகையாளர், லிவிங் ஸ்மைல் வித்யா – சிறந்த நடிகர்; இன்னும் பலப் பல.

இது நமது கடமையல்லவா?

திருநங்கைகள், திரு நம்பிகளுக்கு அரசும் சமூகமும் செய்ய வேண்டியது என்ன? திருநர்களின் திருமணம் சட்டபூர்வமாக்கப்பட வேண்டும்; ஏனைய மனிதர்கள் பெறுகிற இட ஒதுக்கீடு, இவர்களுக்குக் கட்டாயம் வேண்டும்; கல்வி, தங்கிப் பயிலும் பள்ளி, கல்லூரிகள், உடன் வேலைவாய்பு; வேலை பெறும் வரை பண உதவி, குடி இருப்பு, ஏனைய மக்கள் அடைகிற ஆதார், வாக்கு அட்டை, வாகன லைசென்ஸ் இன்ன பிற; ஊருக்கு ஊர் இலவச சட்ட உதவி இவர்களின் முதல் தேவை. பாலினம் தொடர்பான சட்டங்கள், அரவாணிகள் எந்த வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்களோ அந்த வீட்டு (வசதி இருக்குமானால்) சொத்து உரிமை; இலவச பாலின மாற்று சிகிச்சை ; இவர்களுக்கு என்று தனி வாரியம்.

கட்சிகளுடன் இணைந்து போட்டியிடாமல் சட்டப்பேரவை உறுப்பினராவது; ராஜ்ய சபாவிலும், நாடாளுமன்றத்திலும் அவர்களுக்குரிய இடம்; அவர்கள் விவகாரத்தைக் கவனிக்கத் தனி அமைச்சகம் போன்றவைதான் அவர்களுக்கான உடனடித் தேவைகளாகும்.

திருநங்கைகள் அனைவருக்கும் உடடினடியாக வேலைவாய்ப்புகள் அளித்து அவர்களை அழிவில் இருந்து காப்பாற்றுவது அரசின் கடமை. அதற்குக் குரல் கொடுப்பது ஏனைய சமூகத்தின் கடமை.

அந்த மனிதச் சொந்தங்கள் கண்ணீர் வடிக்க எந்தச் சமூகமும் பார்த்துக்கொண்டிருத்தல் ஆகாது. ஒரு மனிதக் குழு துயரம் அடைய, மற்றவர் அலட்சியப்படுத்துவது, மனிதத்தனம் அல்ல. அது அறமும் அல்ல.

முனைவர் அய்யப்பன், ஒரு சிறந்த பயன்மிக்க நூலைக் கொண்டுவந்தமைக்காகப் போற்றப்பட வேண்டியவர்.

- சுடரும்...

எண்ணங்களைப் பகிர: writerprapanchan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x