Published : 13 Jan 2018 10:24 AM
Last Updated : 13 Jan 2018 10:24 AM
19
92-ல் தொடங்கப்பட்ட தமிழ்மண் பதிப்பகத்துக்கு இது வெள்ளி விழா ஆண்டு. இந்த ஆண்டின் சிறப்பு வெளியீடாக ‘அப்பாத்துரையம்’ பெருந்தொகுதி நூல்களை வரும் 16-ம் தேதி சென்னை புத்தகக் காட்சி அரங்கில் வெளியிடவிருக்கிறது தமிழ்மண் பதிப்பகம்.
‘பன்மொழிப் புலவர்’ கா.அப்பாத்துரை, குமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழியில் பிறந்தவர். தமிழ், மலையாளம், ஆங்கிலம், இந்தி, சம்ஸ்கிருதம் உள்ளிட்ட பல மொழிகளைக் கற்றவர். தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் ஒரே ஆண்டில் முதுகலை தேர்ச்சி பெற்றதோடு, இந்தியில் விஷாரத் பட்டமும் பெற்றவர். நூற்றுக்கணக்கான ஆராய்ச்சி நூல்களை எழுதியுள்ளார். தமிழ் மொழியின் தொன்மையையும், தமிழினத்தின் தொன்மையையும் ஆய்ந்தறிந்து முன்வைத்த பெருமைக்குரியவர் கா.அப்பாத்துரையார்.
‘அப்பாதுரையம்’ குறித்து தமிழ்மண் பதிப்பகத்தின் கோ.இளவழகனிடம் கேட்டபோது, “19-ம் நூற்றாண்டின் இறுதியும், 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கமும், தமிழ், தமிழர் வரலாற்றின் மறுமலர்ச்சிக் காலம். இந்தக் காலத்தில் மொழிக்காகவும், இனத்துக்காகவும் பெரும் பங்காற்றிய அறிஞர்களின் நூல்கள் அனைத்தையும் ஒருசேரத் தொகுத்து, ஒரே வீச்சில் வெளியிட வேண்டும் எனும் நோக்கில் ‘தமிழ்மண்’ என்ற பதிப்பகம் தொடங்கப்பட்டது. தமிழ் இலக்கிய நூல்கள் மட்டுமின்றி, இலக்கண நூல்களையும் வெளியிட்டுவருகிறோம். பாவாணர் நூற்றாண்டு விழாவில் தேவநேயப் பாவாணர் எழுதிய 53 நூல்கள், ந.சி.கந்தையா எழுதிய 66 நூல்கள், வரலாற்றிஞர் வெ.சாமிநாத சர்மா எழுதிய 78 நூல்கள் ஆகியவற்றை வெளியிட்டிருக்கிறோம். திரு.வி.க.வின் 54 நூல்களை 24 தொகுதிகளாகவும், பாவேந்தர் பாரதிதாசன் படைப்புகள் 25 தொகுதிகள் என பல தொகுப்பு நூல்களையும் வெளியிட்டுள்ளோம். அறிவுச் சுரங்கமாக விளங்கிய கா.அப்பாத்துரையாரின் நூல்கள் காலவாரியாகத் தொகுக்கப்பட்டு, ‘அப்பாத்துரையம்’ எனும் பெருந்தொகுதிகளாக அவரது 110-ம் ஆண்டு நினைவு வெளியீடாகக் கொண்டுவருகிறோம். அவரது 97 நூல்களையும், 48 தொகுதிகளாகத் தொகுத்துள்ளோம். மொத்தப் பக்கங்கள் 15,532. இத்தொகுதிகளின் மொத்த விலை ரு.19,460. இத்தொகுதிகளை 50 % தள்ளுபடியில் இந்தப் புத்தகக் காட்சியில் வழங்கவிருக்கிறோம்” என்றார்.
அப்பாத்துரையாரின் நூல்கள், இன்றைய தலைமுறையினருக்கு புதிய வெளிச்சம் தரும் கைவிளக்காகப் பயன்படும் என்பதில் சந்தேகமில்லை. - மு. முருகேஷ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT