Published : 27 Jan 2018 10:18 AM
Last Updated : 27 Jan 2018 10:18 AM
சோ
வியத் நூல்கள் அல்லது மாஸ்கோ நூல்கள் என்றழைக்கப்பட்ட ரஷ்ய மொழிபெயர்ப்பு நூல்கள் தமிழ் வாசிப்பு உலகில் ஏற்படுத்திய மாற்றங்கள் மிகப் பெரியவை. தத்துவம், அரசியல், வரலாறு, அறிவியல், கதைகள், சிறார் நூல்கள் எனப் பல துறை சார்ந்த நவீனப் பார்வையை அப்புத்தகங்கள் ஏற்படுத்தின. என்.சி.பி.எச். பதிப்பகம் வழியாகத் தமிழகமெங்கும் பரவலான ரஷ்யப் புத்தகங்கள் மலிவு விலைப் பொக்கிஷங்களாகத் திகழ்ந்தன.
ஆயிரக்கணக்கான அந்த நூல்களில் இன்றைக்கு அச்சில் இருப்பவை மிகக் குறைவே. இந்தப் பின்னணியில், ஆறு முக்கிய ரஷ்ய நூல்களை மறுபதிப்பு செய்திருக்கிறது நக்கீரன் பதிப்பகம். ஜென்ரிக் வோல்கவ் எழுதிய ‘மார்க்ஸ் பிறந்தார்’, மரியா பிரிலேழாயேவா எழுதிய ‘லெனின் வாழ்க்கைக் கதை’, கொமரோவ் எழுதிய ‘வியக்கவைக்கும் வானவியல்’, அனிக்கின் எழுதிய ‘மஞ்சள் பிசாசு’, மத்சுலேன்கோ எழுதிய ‘இரண்டாவது உலக யுத்தம்’, மிஹயீல் நெஸ்தூர்ஹ் எழுதிய ‘மனித இனங்கள்’ ஆகிய நூல்களே அவை.
இந்த நூல்களில் ‘மஞ்சள் பிசாசு’ நூலுக்கு மட்டும் தமிழ் மொழிபெயர்ப்பாளர் நா.தர்மராஜனின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது (அதேநேரம், மறுபதிப்பு செய்த ஆசிரியரின் இரண்டு கட்டுரைகள் முன்பகுதியில் வலிந்து சேர்க்கப்பட்டுள்ளன). புகழ்பெற்ற ‘மார்க்ஸ் பிறந்தார்’ நூலும் தர்மராஜன் மொழிபெயர்த்ததே. ஆனால், இதில் அவர் பெயர் இல்லை. இதுபோல மூலநூலை மொழிபெயர்த்தவர்களின் பெயர்கள் விடுபட்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
சில இடங்களில் ஆங்கில எழுத்துருக்கள் மாற்றப்படாமல், தமிழிலேயே அர்த்தமில்லாத வகையில் அச்சிடப்பட்டுள்ளன. மறுபதிப்பு செய்யும்போது உரிய நெறிமுறைகளைப் பின்பற்றியிருக்க வேண்டும். இந்தப் புத்தகங்கள் இன்றைக்கு அச்சில் இல்லாத நிலையில், மறுபதிப்பு கொண்டுவந்திருப்பது வரவேற்கத்தக்கது. மேற்குறிப்பிட்ட குறைபாடுகளைக் களைந்திருந்தால், மறுபதிப்பு முயற்சி முழுமையடைந்திருக்கும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT