Published : 20 Jan 2018 11:06 AM
Last Updated : 20 Jan 2018 11:06 AM

வாசகர்களின் கில்லாடி நடையைக் காண வேண்டுமா?

வாசிப்பு போதை குறித்த அருமையான கட்டுரை ஒன்றை, 20 ஆண்டுகளுக்கு முன்பு வார இதழ் ஒன்றில் வாசித்தேன். தனது கணவன் எப்போதும் குடித்துவிட்டு வருகிறான், அன்றாடம் ஒரே சண்டை சச்சரவு. இதெல்லாம் கேட்க மாட்டீங்களா என்று குடும்ப நண்பரிடம் புகார் செய்கிறாள் ஒரு பெண். “சொல்லிட்ட இல்ல, இன்னும் ரெண்டே மாசத்துல அவனை எப்படி மாத்துறேன்னு பாரு” என்று உறுதியளிக்கிறார் நண்பர். வியப்பிலும் வியப்பு, கணவன் குடியை விட்டுவிடுகிறான். வீடு திரும்பினால் தன் பாட்டுக்கு ஏதேனும் ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்துவிடுகிறான். படிப்பு, படிப்பு! வாசிப்புதான் அவன் உயிர் மூச்சு இப்போது.

மனைவி மீண்டும் நண்பர் வீட்டு வாசலில் போய் நிற்கிறாள்: ‘‘அண்ணே தயவுபண்ணி அவரைப் பழையபடி குடிகாரராவே ஆக்கிவிட்ருங்க. அதுவே பரவாயில்லை’’ என்கிறாள். நண்பருக்கு ஒன்றும் விளங்கவில்லை. அவள் தொடர்கிறாள்: ‘‘பொழுதன்னிக்கும் புஸ்தகத்தைக் கட்டி அழுதிட்டிருக்காரு... படிச்சதையே திரும்ப எடுத்து வச்சுக்குறாரு... சமையல் அறையில்கூடப் புத்தகங்களைக் கொண்டுவந்து அடுக்கிடறாரு. எதையும் எடுத்து எங்கேயும் போட முடியறதில்ல’’ என்று குமுறுகிறாள். எப்படி கதை?

பெருமிதம் சேர்க்கும் வாசிப்பு

இனிமேல் புத்தகமே வாங்க மாட்டேன் என்று சொன்ன நண்பர் ஒருவரை அடுத்த ஆண்டே புத்தகக் காட்சியில் பார்த்தேன். உண்மையில், வாசிப்பு போதை கொஞ்சம் சிக்கலானதுதான் போலும்.

தற்காலத்தில் கைபேசியிலேயே செய்திகளை வாசித்துவிடுகின்றனர். வாட்ஸ் அப் இருக்கவே இருக்கிறது, செய்தித்தாள் வாசிப்புகூட பாதிக்கப்பட்டுள்ளது என்று சொல்கின்றனர். அப்புறம்தான் புத்தகம் என்று கேட்கின்றனர். இருந்தாலும், ஐ.டி. துறை உள்ளிட்ட இளைய தலைமுறை வாசகர்கள் பலரை இலக்கியக் கூட்டங்களில், நிகழ்வுகளில், புத்தகக் காட்சி நேரங்களில் பார்க்கத்தான் செய்கிறோம்.

வேகமான வாழ்க்கைச் சூழலில் இழக்கக் கூடாத இன்பங்களின் பட்டியலில் இசை இருப்பதுபோலவே வாசிப்பும் இருக்கவே செய்கிறது. புத்தக வாசிப்புக்கான நாற்றைப் பள்ளிக்கூடங்களில் நட வேண்டும். கல்லூரிகளில் வளர்த்தெடுக்க வேண்டும். வாசிப்பும் பகிர்வும் விவாதங்களும் சமூக முன்னேற்றத்தின் சுவாரசியமான படிக்கட்டுகள் என்பதை அனைவரும் புரிந்துகொள்ளும்படி கொண்டுசெல்ல வேண்டும்.

கதை வாசிப்பு, கதை சொல்வது போன்ற இனிய அம்சங்களை பத்துப் பதினைந்து வயதில் பழக்கிக்கொள்ள முடிந்தால், அதைவிட வரம் வேறில்லை. உள்ளபடியே கதை கேட்பதும், தனது சொந்தப் புனைவை விவரிப்பதும் குழந்தைப் பருவத்தில் இயல்பான விஷயம்தான். வளர வளர பிள்ளைகள் தங்கள் இயல்பைக் கைநழுவ விடுகின்றனர். காட்சிப்படுத்தலின் இன்பத்தைத் தமது கற்பனையில் கொண்டு நிறுத்திக்கொண்ட காலத்தில், புத்தகமும் அவர்களுக்கு அதற்குப் பெருந்துணையாக நின்றது. இப்போது நேரடிக் காட்சிப்படுத்தலுக்கு அறிவியல் எத்தனையோ சாதனங்களைக் கைகளில் கொண்டுவந்து சேர்த்த பிறகு, கற்பனையும் களவுபோய், வாசிப்பும் பின்னுக்கு நகர்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. புத்தக வாசிப்பு ஒரு நூலைப் படிப்பதோடு முற்றுப்பெற்று விடுவதில்லை. மரம் சும்மா இருந்தாலும் அதை அசைக்கும் காற்றாக, உள்ளத்தைக் கிள்ளிவிடுகிறது. அடுத்தடுத்த நிகழ்வுகளில் அதன் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உடன்படவோ முரண்படவோ தூண்டுகிறது. அடுத்த மனிதர்க்குக் கடத்த முடிபவர்களுக்கு எண்ணக் கிளர்ச்சி அனுபவத்தை வழங்குகிறது. இன்னின்ன ஊர்களுக்குச் சென்றிருக்கிறோம், இந்தந்த மனிதர்களை வாழ்க்கையில் சந்தித்திருக்கிறோம், இப்படி இப்படியான படிப்பைப் படித்திருக்கிறோம் என்ற வரிசையில், இப்பேர்ப்பட்ட நூல்களை வாசித்திருக்கிறோம் என்ற பெருமிதத்தைச் சேர்க்கிறது புத்தக வாசிப்பு.

புத்தகங்களில் எதிர்கால உலகம்!

மிகவும் நேசிக்கும் நட்பைக் கொண்டாடிக்கொண்டிருப்பதுபோலவே, விருப்பமான நூல்களிடம் மீண்டும் மீண்டும் திரும்பத் தூண்டுகிறது வாசிப்பு. திருமண நிகழ்வில் எதிர்ப்படும் நண்பரை உறவுக்காரருக்கு அறிமுகம் செய்துவைப்பதுபோலவே, புத்தகக் காட்சியில் தமக்குப் பிடித்த நூலை அடுத்தவருக்கு அறிமுகம்செய்து, வாங்க வைத்துப் பெருமை கொள்ள வைக்கிறது நூல் வாசிப்பு.

“வீட்டுக்கு வரேன்னு எத்தனை தடவை வாக்குறுதி கொடுக்கிறீங்க, ஆனா வர்றதில்ல” என்று செல்லமாகக் கடிந்துகொள்ளும் அன்பர்களைப் போல, வாசிக்க நினைத்தும் கையில் எடுக்காத புத்தகங்கள் அலமாரி கண்ணாடி வழியாக நம்மைப் பார்க்கையில் ஏற்படும் குற்ற உணர்ச்சியைக் கடப்பது சிரமமான ஒன்றுதான். என்றாலும், ‘என் சொந்தங்களோட நெருக்கமா இருக்கேன்’ என்ற உணர்வை, வாங்கிக் குவித்த புத்தகங்கள் ஏற்படுத்திவிடுகின்றன.

படிக்கிற சொகம் இருக்கே...

‘பகல் முழுக்கப் பட்டினி கிடந்தாலும், ராத்திரி ஒரு வேளை ராஜா வேஷம் போடற சொகம் இருக்கே’ என்று ‘ராஜபார்ட் ரங்கதுரை’ திரைப்படத்தில் ஒரு வசனம் வரும். வாழ்க்கையின் பல்வேறு தரிசனங்களை ஒரு புத்தக வாசிப்பு மிக இலகுவாக நமக்குக் கை மாற்றித் தருகிறது. கசப்பை, புறக்கணிப்பை, அவமதிப்பை, வெறுப்பை, வெறுமையைப் புறந்தள்ளிவிட்டு, வெளிச்சத்தை நோக்கிய திசையின் சாளரத்தைத் திறந்துகொள்ள நம்பிக்கை ஊட்டுகிறது. புதிய சட்டை அணிந்து செல்கையில், அடுத்தவர் பார்க்கிறாரா என்று ஓரக்கண்ணால் பார்க்கும் குழந்தை உள்ளத்தை, ஒரு புத்தக வாசிப்பும் ஏற்படுத்துகிறது. பின்னர், பக்குவம் கொள்ளவும் பழக்குகிறது.

வசதியான வீட்டில் சமைத்த பாத்திரங்களைக் கழுவித் துடைத்துவிட்டுத் தனது குடிசைக்குத் திரும்பும் ஏழைப் பெண், கரி அடுப்பில் தங்களுக்கான கஞ்சியைப் பொங்கும் வாழ்க்கையைப் போலவே, எளிய மனிதர்கள் நூலகங்களையும், புத்தகக் காட்சி அரங்குகளையும் கடந்து சென்றாலும், தங்களுக்குச் சாத்தியமான புத்தகங்களோடு வீடு திரும்பினாலும், மாற்றத்துக்கான விதைகளையும் எழுச்சியையும் அந்த மிகச் சில நூல்களே ஏற்படுத்திவிடும் சாத்தியங்களில் இருக்கிறது எதிர்கால உலகம்.

ரஷ்யக் கதைகளில் வரும் பாத்திரம் போதையோடு நடப்பதைக் கில்லாடி நடை என்று அந்நாளைய மொழிபெயர்ப்பாளர்கள் மொழிபெயர்த்திருந்ததை வாசித்த நினைவுவருகிறது. வாசகர்களும் அப்படியான கில்லாடி நடை நடப்பதைப் புத்தகக் காட்சி மெய்ப்பிக்கிறது என்றே தோன்றுகிறது.

- எஸ்.வி.வேணுகோபாலன், எழுத்தாளர்,

தொடர்புக்கு: sv.venu@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x