Last Updated : 16 Jan, 2018 08:55 AM

 

Published : 16 Jan 2018 08:55 AM
Last Updated : 16 Jan 2018 08:55 AM

5 கேள்விகள் 5 பதில்கள்: அரசியலும் இலக்கியமும் இணைநதிகள்

வி

டுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் இலக்கியப் படைப்பாக்கத்திலும் மொழிபெயர்ப்பிலும் தீவிரமாக இயங்கிக்கொண்டிருப்பவர். ‘மணற்கேணி’ என்கிற ஆய்விதழையும் நடத்திவருகிறார். அவரிடம் ஒரு சுருக்கமான பேட்டி:

தமிழில் ஆய்வுப் பணி எப்படி இருக்கிறது? வளர்ச்சி முகத்தில் உள்ளதா... தேக்கநிலையில் உள்ளதா?

ஒவ்வொரு ஆண்டும் மிக அதிக எண்ணிக்கையில் பி.ஹெச்டி., பட்டங்கள் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகமாக வழங்கப்படுகின்றன. அவற்றில் தமிழ் பி.ஹெச்டி.யின் எண்ணிக்கை கணிசமாக இருக்கிறது. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் உருவாக்கப்பட்ட பிறகு, செவ்வியல் இலக்கிய ஆய்வுகள் அதிகம் மேற்கொள்ளப்படுகின்றன.

இது ஒரு ஆரோக்கியமான போக்கு என்றாலும், தரம் என்ற அளவுகோலில் பார்த்தால், தமிழ்த் துறை மட்டுமின்றி பிற துறைகளிலும் குறிப்பிடத்தக்க ஆய்வுகள் எதுவும் கடந்த 10 ஆண்டுகளில் வெளிவந்ததாகத் தெரியவில்லை. ஆய்வுகளின் தரத்தை மேம்படுத்துவதற்கு தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் தீவிரமான பரிசீலனையை மேற்கொண்டு, அதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும்.

மணற்கேணி போன்ற ஆய்விதழ்கள் நடத்துவதில் உள்ள சவால்கள், சிக்கல்கள் என்னென்ன?

90-கள் வரை தமிழில் சிற்றிதழ்கள் வந்தன. இப்போது தமிழில் சிற்றிதழ்கள் எதுவும் வருவதாகத் தெரியவில்லை. பொதுநீரோட்டத்துடன் கலப்பதல்ல, அதனை உடைப்பதுதான் சிற்றிதழுக்கான இலக்கணம். இப்போது இருப்பவர்களுக்கு அந்த வேட்கை இருப்பதாகத் தெரியவில்லை. எனினும், மணற்கேணி ஒரு சிற்றிதழ் அல்ல. அது ஒரு ஆய்விதழ்.

இளைஞர்கள் அம்பேத்கரைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கு, அடிப்படையான தமிழ் நூல்கள் என்னென்ன?

அவருடைய அனைத்துப் படைப்புகளையும் தமிழில் மொழிபெயர்த்து நியுசெஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அம்பேத்கரைப் புரிந்துகொள்ள விரும்புகிற யாரும் வழிகாட்டிகளை நோக்கிப் போக வேண்டாம். அவருடைய நூல்களைப் படித்தாலே போதும். மேலும், அரசியல் நிர்ணய சபையில் நடந்த விவாதங்களையும் படிக்கும்போதுதான் அம்பேத்கர் என்ற ஆளுமையின் பிரம்மாண்டத்தைத் தெரிந்துகொள்ள முடியும்.

அரசியல், இலக்கியம் - இரண்டு துறைகளிலும் தீவிரமாக இயங்கிவருகிறீர்கள். எப்படி நேரம் ஒதுக்க முடிகிறது?

நேரம் ஒதுக்கிக்கொண்டு செயல்படுவதில்லை. அரசியல், இலக்கியம் இரண்டும் சமமாக உள்ளூர ஓடிக்கொண்டே இருக்கும் விஷயங்கள்தான். மாணவப் பருவத்திலிருந்தே இப்படித்தான் இருக்கிறேன். ஒன்றுக்கு ஒன்று முரண்பாடாகவோ சிரமமாகவோ இருப்பது கிடையாது. 2014 தேர்தல் பிரச்சாரத்தின்போது, ஒரு கிராமத்திலிருந்து இன்னொரு கிராமத்துக்கு வாகனத்தில் பயணிக்கையில் நேரம் கிடைக்கும்போது நின்றுகொண்டே ஆங்கிலக் கவிதைகளை மொழிபெயர்த்தேன். இலக்கியத்தை சரியாகப் புரிந்துகொள்ள அரசியலும் அரசியலில் ஒரு படைப்பூக்கத்தைக் கொடுக்க இலக்கியமும் எனக்குப் பயன்படுகின்றன.

எழுத்து, மொழிபெயர்ப்பு சார்ந்த வருங்காலத் திட்டங்கள்?

இன்னும் நிறைய எழுத வேண்டும் என்று உறுதி எடுத்துள்ளேன். குறிப்பாக, வகுப்புவாதம் வலுப்பெற்று வரும் சூழலில், கருத்தியல் தளத்திலான பங்களிப்பு அதிகமாகத் தேவைப்படுவதாக நினைக்கிறேன். இந்த ஆண்டு ஒரு நாவல் எழுதவும் திட்டமிட்டிருக்கிறேன். அந்நாவல் வேறுபட்ட வடிவத்தில் சமகால அரசியலைப் பேசும்.

- ச.கோபாலகிருஷ்ணன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x