Published : 21 Jan 2018 10:19 AM
Last Updated : 21 Jan 2018 10:19 AM
புத்துணர்வுடன் தொடங்கிய 41-வது புத்தகக் காட்சி நாளுக்கு நாள் பெருகிக்கொண்டிருக்கும் வாசகர்களின் திரளான வரவேற்பிலும் உற்சாகத்திலும் திளைத்தபடி இறுதிக் கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்களின் நம்பிக்கையை புத்தகக் காதலர்கள் உறுதிப்படுத்தியிருப்பது மிகவும் மகிழ்ச்சியூட்டக்கூடியது. சென்னைப் பெருமழைவெள்ளம், வார்தா புயல், பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி., போன்ற நெருக்கடியான தருணங்களைத் தாண்டியும் நம்பிக்கையுடன் இந்தப் புத்தகக் காட்சியில் பங்குபெற்ற பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள், எழுத்தாளர்களுக்கு வாசகர்களின் பெரும் வரவேற்பு மிகுந்த ஊக்கத்தை அளித்திருக்கிறது. இந்த ஊக்கம்தான் மேலும் மேலும் தீவிரமாகச் செயல்படுவதற்கான செயல்துடிப்பை அறிவுலகுக்குத் தந்திருக்கிறது.
கடந்த ஆண்டைப் போலவே இந்த முறையும் அமைந்தகரையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் (பச்சையப்பா கல்லூரி எதிரில்) கோலாகலமாக இந்தப் புத்தகக் காட்சி நடந்துகொண்டிருக்கிறது. கடந்த 10-ம் தேதி தொடங்கிய இந்த அறிவுக் கலாச்சாரத் திருவிழா நாளையுடன் (ஜனவரி 22) நிறைவடைகிறது. சுமார் 710 அரங்குகள், 5 லட்சம் தலைப்புகள், 1 கோடிப் புத்தகங்கள் என்று பிரம்மாண்டமாக நடந்துகொண்டிருக்கும் இந்தப் புத்தகக் காட்சியில், சுமார் ரூ.15 கோடிக்கும் மேல் விற்பனை எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று 12-வது நாளில் அடியெடுத்துவைக்கும் இந்தப் புத்தகக் காட்சியில் விற்பனையைப் பொறுத்தவரை பல பதிப்பாளர்களும் விற்பனையாளர்களும் திருப்தி தெரிவிக்கிறார்கள். ஆனாலும், கடந்த சில ஆண்டுகளில் புத்தக உலகினர் சந்தித்து வரும் இழப்புகளை வைத்துப் பார்க்கும்போது இது போதாது. இன்றோடு சேர்த்து இரண்டு நாட்கள் மிச்சம் இருக்கின்றன. இந்தப் புத்தகக் காட்சி மேலும் மிகப் பெரிய அளவில் வெற்றியடைவது, கடந்த ஆண்டுகளின் வலிகளைப் பதிப்புலகினரை மறக்கச் செய்து மகிழ்ச்சியில் ஆழ்த்துவதெல்லாம் வாசகர்கள் கையில்தான் இருக்கிறது. கூட்ட நெரிசல் போன்ற காரணங்களால் இதுவரை புத்தகக் காட்சிக்குச் செல்லாதவர்கள், சென்று அவசர அவசரமாகப் புத்தகங்கள் வாங்கிவிட்டு வந்தவர்களெல்லாம் நிதானமாக ஒவ்வொரு அரங்காகப் பார்வையிட்டு, பிடித்த புத்தங்களை வாங்குவதற்கு ஏற்ற தருணம் இதுதான். ஏற்கெனவே, புத்தகக் காட்சிக்கு வந்து நிறைய புத்தகங்களை அள்ளிச் சென்றவர்களுக்கும் ஏதாவது புத்தகங்களை வாங்க மறந்துவிட்டோமோ என்று சரிபார்த்துக்கொள்ளவும் இந்த இரண்டு நாட்களும் நல்ல வாய்ப்பு. மிக முக்கியமாக, புத்தகக் காட்சியை முன்னிட்டு ஒரே நேரத்தில் பல பதிப்பகங்களும் புத்தகங்கள் கொண்டுவர முயன்றதால் அச்சகங்களில் கடும் நெருக்கடி ஏற்பட்டதால் முக்கியமான சில புத்தகங்கள் இந்தப் புத்தகக் காட்சியின் தொடக்கத்தில் வெளிவர முடியாமல் போயிருக்கின்றன. அந்தப் புத்தகங்கள் பலவும் தற்போது வெளியாகியிருக்கின்றன.
புத்தகக் காட்சியின் ஆரம்ப நாட்களில் வந்தவர்களில் பலரும் தாங்கள் வாங்க நினைத்த புத்தகங்களில் சில இன்னும் வெளியாகியிருக்காததால் சற்றே ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதைப் பார்க்க முடிந்தது. அவர்களெல்லாம் இப்போது மீண்டும் வருகைபுரிந்தால் மகிழ்ச்சியோடு திரும்பிச் செல்லலாம், பதிப்பாளர்களுடனும் தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளலாம்!
ஒரு கொண்டாட்டத்தின், ஒரு திருவிழாவின் தொடக்கம் எப்படி அமர்க்களமாக இருக்குமோ அப்படித்தான் அதன் நிறைவுப் பகுதியும்! அதில் நீங்களும் அங்கம் வகிக்க வேண்டாமா!? உங்கள் நண்பர்களோடும், குடும்பத்தினரோடும் இந்த இரண்டு நாட்களும் புத்தகக் காட்சியில் புத்தக உலா செல்வதற்குத் திரண்டு வாருங்கள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT