Published : 11 Oct 2023 04:28 PM
Last Updated : 11 Oct 2023 04:28 PM

மாதொரு பாகனுக்கு கிளம்பிய எதிர்ப்பு: மனம் திறக்கும் பெருமாள் முருகன்

உதகை: இலக்கியம்‌, கலாச்சாரம், வரலாறு மற்றும் ‌பாரம்பரியம் ‌ஆகியவற்றின் கொண்டாட்டமான உதகை இலக்கிய விழா, இலக்கிய விவாதத்துக்கு அப்பால்‌ நீலகிரி உயிர்க்கோளத்தின்‌ சுற்றுச்சூழல்‌ முக்கியத்துவத்தையும்‌, பல்வேறு சமூகங்களையும்‌ விளக்கும்‌ வகையில் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. நடப்பாண்டு 7-வது உதகை இலக்கிய விழா இரு நாட்கள் நடைபெற்றது.

விழா ஒருங்கிணைப்பாளரான ராமன் கூறும்போது, "இந்த ஆண்டு விழாவில் ‌பெரும் ‌இன்னல்களை எதிர்கொண்ட போதிலும், ‌கல்வியை ஊக்குவிப்பதிலும்‌, தமிழ்நாட்டின் ‌இலக்கியக்‌ கலைகள் ‌மற்றும் ‌கலாச்சாரத்தை வளர்ப்பதிலும்‌ ‌இடையறாது அர்ப்பணிப்புடன்‌ செயல்பட்டதற்காக, தமிழ்நாட்டின் ‌தலைசிறந்த எழுத்தாளர்களில்‌ ஒருவரான பெருமாள்‌ முருகனுக்கு வாழ்நாள் ‌சாதனையாளர்‌ விருது வழங்கப் பட்டது" என்றார்.

விழாவில் பங்கேற்ற பெருமாள் முருகன் கூறியதாவது: பழமை வாய்ந்த உதகை நகரில் எனக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது பெருமைக்குரியது. எனது குடும்பத்தில் யாருக்கும் எழுத, படிக்க தெரியாது. அது போன்ற பின்புலம் வாய்ந்த குடும்பத்தில் இருந்து வந்தவன். எழுத்தறிவு என்பது எனது தலைமுறைதான் வந்தது. அதற்கு அந்த காலகட்டத்தில் முதல்வராக இருந்த காமராஜருக்கு நன்றி கூற வேண்டும். தொடக்கப் பள்ளிகளை தொடங்கியதும், மதிய உணவு திட்டத்தை தொடங்கியதுமே இதற்கு காரணம்.

உதகை இலக்கிய விழாவில், வாசகர்களுக்கு தனது நூல்களில் கையெழுத்திட்டு
வழங்கிய எழுத்தாளர் பெருமாள் முருகன்.

தொடக்கத்தில் எனக்கு எதைப் பார்த்தாலும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. எனது 8 வயது முதல் எழுத ஆரம்பித்துவிட்டேன். 90-களில் அறிமுகமான பெண்ணியம்,நவீன கோட்பாடுகளால் எனது எழுத்தில் மாற்றம் ஏற்பட்டது. நான் எழுதிய முதல் சிறுகதை தொகுப்பு திருச்செங்கோடு. எனது ஊர் பெயரை வைத்து முதல் சிறுகதை தொகுப்பை எழுதினேன். எனது எழுத்துக்கு பயிற்சி களமாக இது இருந்தது.

நான் பழகிய தடங்களில் செல்வதை தவிர்ப்பேன். வெவ்வேறு விஷயங்கள், வடிவங்களில் முயற்சி செய்து பார்ப்பேன். பேசா பொருளை பேசலாம் என்று யதார்த்தத்தை எழுதினேன். அன்றைய கால கட்டத்தில் எழுத்தாளர்கள் வசை சொற்களை எழுதமாட்டார்கள். நவீன கோட்பாடுகளால் எழுதுவதற்கு சுதந்திரம் கிடைத்தது.

மாதொரு பாகன் நாவலில் இரு பாத்திரங்கள் பால் உறவு, சாதி மற்றும் கடவுள் நம்பிக்கை குறித்து பேசுவதாக எழுதியிருந்தேன். இதனை சில அரசியல் கட்சிகள் பொதுமைப்படுத்தி மக்களை தூண்டி போராட்டங்கள் நடத்தின. எனது புத்தகங்களை எரித்தனர். நான் குடும்பத்தோடு ஊரை விட்டு செல்லும் அளவுக்கு அச்சுறுத்தல் இருந்தது.

மக்களிடம் மதம், கடவுள் சார்ந்து மாண்புகள் உள்ளன. இதை பயன்படுத்தியவர்கள் மக்களின் உணர்வை தூண்டிவிட்டதால் எதிர்ப்பு கிளம்பியது. வாழ்க்கையில் இருக்கக்கூடிய மாண்புகளை கேள்வி எழுப்பும்போது எதிர்ப்பு கிளம்பும். 1990-களில் எழுத்தாளர்களுக்கு முழு அளவில் சுதந்திரம் கிடைத்தது.

மாதொரு பாகன் புத்தகப் பிரச்சினைக்கு பின்னர் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்குபிறகுதான் மீண்டும் எழுத ஆரம்பித்தேன். தமிழ்மொழி இலக்கியங்கள் பல்வேறு இந்திய மற்றும் உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்படுகின்றன. நான் ரஷ்ய இலக்கியங்களை தமிழில் படித்து, அவர்களின் உலகை அறிந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றேன்.

இலக்கியங்களை வாசிக்கும்போது அறிமுகமில்லாத வாழ்க்கையை வாழ்வோம்,உணர்வோம். இன்றைய கால கட்டத்தில் ஒருவருடன் உரையாட மொழி பிரச்சினைஇல்லை. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக அனைத்தும் எளிமையாகி விட்டது.தமிழ் எழுத்தாளர்கள் உலகம் முழுவதும் புழங்க முடியும்.உலகம் கவனிக்கும். இதனால், எனக்கு எந்த வித தயக்கமும் இல்லை, என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x