Published : 10 Oct 2023 04:10 AM
Last Updated : 10 Oct 2023 04:10 AM
புதுச்சேரி: மக்கள் மொழியில் யதார்த்தத்தை எழுத வேண்டும் என்று கரிசல் விருது பெற்ற கவிஞர் பழமலய் தெரிவித்தார்.
மறைந்த எழுத்தாளர் கி.ராஜ நாராயணன் நூற்றாண்டு நிறைவு விழா புதுச்சேரியில் நேற்று நடைபெற்றது. புதுச்சேரி பல்கலைக்கழகம் சுப்பிரமணிய பாரதியார் தமிழ் மொழி மற்றும் இலக்கியல் புலமும், கி.ரா. அறக்கட்டளையும் இணைந்து இந்நிகழ்வை நடத்தின. நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக கல்வி ஆய்வுகள் பிரிவின் இயக்குநர் தரணிக்கரசு தலைமை தாங்கினார்.
எழுத்தாளர் கி.ரா மகன்கள் கி.ரா.திவாகர், கி.ரா.பிரபாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்கலைக்கழக தமிழியற்புல இணைப் பேராசிரியர் ரவிக் குமார் நோக்கவுரையாற்றினார். நிகழ்ச்சியில் பேராசிரியர் கவிஞர் பழமலய்க்கு கரிசல் விருது வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கவிஞர் பழமலய் பேசுகையில், “உணர்ச்சிவசப்படுவதால் தான் அவர்கள் எழுத்தாளர்களாக இருக்கிறார்கள். மக்களோடு நெருக்கமாக பழகி, பேசியதால்தான் எழுத்தாளர்களை மக்கள் விரும்பினர். அதில் கிராவும் ஒருவர். அதேபோல் எழுத்தாளர் பிரபஞ்சனும் என் வாழ்வில் முக்கியமானவர். மக்கள் மொழியில் யதார்த்தத்தை எழுத வேண்டும்.
வாழ்க்கை நம்மை தேடவைக்கிறது. மனிதன் தன்னைதானே கண்டுபிடிக்க விரும்புகிறான். தனக்காகத்தான் வாழ்கிறான். நான் யார் என்ற பெரிய கேள்விக்கு விடை தெரியாமல் தான்பெயர், ஊர், மதம், சாதி, என அடையாளங்களை தேடிக்கொள்கிறான். ‘யாதும் ஊரே, யாவரும் கேளீர்’ என்ற ஒரு பாடலுக்கு லட்சம் பாடல் கூட இணையாகாது. இவ்வுலகம் நமக்கானது மட்டுமல்ல. அடுத்த மனிதனுக்கும் உரியது.
அடுத்தவரையும் மதியுங்கள். அவர்களுக்கு உதவுங்கள். கெடுக்காமல், குழித்தோண்டாமல் வாழுங்கள். கரிசல் விருதை மறைந்தோருக்கும் வழங்கலாம். பிரபஞ்சன், ஆனந்த ரங்கம்பிள்ளை போன்று பலரும் உள்ளனர். பல காரணங்களுக்காக முகமூடி அணிந்திருப்பதை கைவிட்டு, வெளிப்படையாக இருந்தால் மனதுக்கு ஆறுதல் தரும். முன்னேற்றத்துக்கும் உதவும்” என்றார்.
சிலம்பு நா.செல்வராசு எழுதிய கி.ரா.வின், ‘மொழி அரசியல்’ எனும் நூல் வெளியிடப்பட்டது. கி.ரா.இலக்கியங்கள் பாடத் திட்டம் உருவாக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. விழாவில் பேராசிரியர் க.பஞ்சாங்கம், எழுத்தாளர் இமையம் உள்ளிட்டோர் கி.ரா. நூற்றாண்டு சொற்பொழிவுகளை நிகழ்த்தினர். கி.ரா. அறக்கட்டளை நிறுவனர் இளவேனில். சீனு தமிழ் மணி, பாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT