Published : 07 Oct 2023 06:08 AM
Last Updated : 07 Oct 2023 06:08 AM

நம் நாட்டில் எழுத்தாளர்களுக்கு சுதந்திரம் இல்லை: பெருமாள் முருகன் வேதனை

உதகை: எழுத்தாளர்கள் கொலை செய்யப்பட்டதன் மூலமாகவே நம் நாட்டில் எழுத்தாளர்களுக்கான சுதந்திரம் இல்லை என்பது ஊர்ஜிதமாகிறது என்று, எழுத்தாளர் பெருமாள் முருகன் வேதனை தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம் உதகையில் இரண்டு நாட்கள் நடைபெறும் 7-வது இலக்கிய விழா நேற்று தொடங்கியது. அங்குள்ள நூலகத்தில் நடந்த விழாவில், எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை, நீலகிரி நூலக தலைவர் கீதா சீனிவாசன் வழங்கி கவுரவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பெருமாள் முருகன் கூறியதாவது: இலக்கிய விழாக்கள் உலக அளவில் மற்றும் இந்தியாவில் பிற மாநிலங்களில் அதிக அளவு நடக்கிறது. ஆனால், தமிழகத்தில் மிகவும் குறைந்த அளவே நடைபெறுகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை, இந்து இலக்கிய விழா மற்றும் நீலகிரி மாவட்டத்தில் நீலகிரி நூலகம் சார்பில் மட்டுமே இலக்கிய விழா நடத்தப்படுகின்றன. இதுபோன்ற இலக்கிய விழாக்கள் தமிழகத்தில் அதிக அளவு நடத்தப்பட வேண்டும். நமது சமூகம் பொருளாதார ரீதியாகவும், மற்ற துறைகளில் முன்னேற்றம் அடையவும் இதுபோன்ற இலக்கிய விழாக்கள் நடத்தப்பட வேண்டும்.

நினைத்ததை எழுதுவதற்கான கருத்து சுதந்திரம் கிடைக்கிறதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. நாம் நினைத்ததை பேசுவதற்கான சுதந்திரம் இருக்க வேண்டும். அதற்கு விமர்சனம் செய்யவும் இடம் உண்டு. ஆனால், தற்போது பேசினாலோ அல்லது எழுதினாலோ அதிக அளவு அச்சுறுத்தல் மற்றும் மிரட்டல்கள் உள்ளன. கருத்துகள் சுதந்திரமாக வெளி வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளது. இந்தியா மட்டுமின்றி உலக அளவில் இப்பிரச்சினை உள்ளது. அந்தந்த நாடுகளின் அரசியல் சூழல் காரணமாக பிரச்சினைகள் வேறுபடுகின்றன. நமது அரசியல் சூழ்நிலையில் இந்த அச்சுறுத்தல்கள் அதிகமாகவே உள்ளன.

கௌரி லங்கேஷ், கல்புருக்கி ஆகிய எழுத்தாளர்கள் கொலை செய்யப்பட்டதன் மூலமாகவே, நமது நாட்டில் எழுத்தாளர்களுக்கான சுதந்திரம் இல்லை என்பது ஊர்ஜிதமாகிறது. ஒரு காலத்தில் புத்தகத்தை தேடி சென்றோம். தற்போது நம்மை தேடி புத்தகங்கள் வருகின்றன. இன்றைய சூழ்நிலையில் தொழில்நுட்ப வளர்ச்சியால் இளைய தலைமுறையிடம் புத்தக வாசிப்பு பழக்கம் அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் சுதா மூர்த்தி ஜெர்ரி, பின்டோ, கல்கி கோச்லின், டாக்டர் மகேஷ் ரங்கராஜன், மன்சூர் கான், கிருஷ்ண மூர்த்தி, முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி விஜயகுமார் உள்ளிட்டோரின் உரையாடல்கள், பேச்சுகள், விவாதங்கள் நடைபெற்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x