Published : 09 Dec 2017 10:05 AM
Last Updated : 09 Dec 2017 10:05 AM

பரணி வாசம்: வில்லுக்குப் பிச்சைக்குட்டி!

பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி, வில்லிசையில் ஆர்வம் கொண்டு, வில்லிசை பயின்று, பிறகு வேலையைத் துறந்து, வாழ்நாள் முழுவதும் வில்லிசை என்ற கலை வடிவத்தைக் கொண்டுசென்றவர் பிச்சைக்குட்டி. இவரைப் பற்றி, எழுத்தாளர் சோ.தருமன் எழுதியுள்ள இந்த நூல் சுவையானது.

காந்தி வரலாற்றை வானொலிக்காக 16 மாதங்கள் வில்லிசை நிகழ்த்தினார் பிச்சைக்குட்டி. அதில் ஜாலியன்வாலாபாக் படுகொலையைப் பற்றி உணர்ச்சிகரமாய்ப் பாடுகிறார்.

"சீறிப்பாய்ந்தார் தீரர் சத்தியமூர்த்தி

சேலத்தில் கூட்டினார் சக்கரவர்த்தி ராஜாஜி

செங்கல்பட்டில் எழுந்தாரே பக்தவச்சலமும்

மதுரையில் ஊர்வலம் வைத்யநாதய்யர்

விருதுநகர் காமராஜர் வீறுகொண்டு எழுந்தார்

பாப்பான்குளம் சொக்கலிங்கம் பதறித் துடித்தெழுந்தார்."

சில நாட்கள் கழித்து பிச்சைக்குட்டிக்கு ஒரு கடிதம் வருகிறது.

‘‘எனது பெயர் சொக்கலிங்கம். ஊர் பாப்பான்குளம். பஞ்சாப் படுகொலை நடந்ததும் நெல்லையில் ஊர்வலம் பொதுக்கூட்டம் நடத்திப் பலத்த அடி வாங்கியவன். விடுதலை பெற்றுக் காலம் மாறி, கிராமத்தில் பழையதை நினைத்துக்கொண்டு சீந்துவாரின்றி ஒதுங்கி வாழ்ந்துவருகிறேன். இந்த மாதத் தொடரில் பஞ்சாப் படுகொலை பற்றி தாங்கள் பாடியதில் எனது பெயரும் ஊரும் வரவும் நானும் எனது குடும்பத்தாரும் அடைந்த சந்தோசத்திற்கு அளவே இல்லை. ஊர்க்காரர்கள் என்னை இப்போது ரொம்ப மதிப்பாய் பார்க்கும்போது, ஒரே நிமிடத்தில் நான் ஒரு புதிய பிறவி எடுத்ததைப் போல உணர்கிறேன். உங்களை ஒரே ஒருமுறை சந்திக்க ஆசை. இந்தப் பக்கம் வரும்போது சொல்லுங்கள். நான் உங்களை வந்து பார்க்கிறேன்..’’ என்று எழுதியிருந்தது. நெகிழ்ந்து போனார் பிச்சைக்குட்டி. அடுத்த முறை அம்பாசமுத்திரத்தில் ஒரு நிகழ்ச்சிக்காகச் சென்றபோது, பாப்பான்குளம் சென்று சொக்கலிங்கத்தைச் சந்தித்தார். அவருக்கு ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு, பழங்கள் வைத்து நூறு ரூபாய் நோட்டையும் வைத்துக் கொடுத்தார் பிச்சைக்குட்டி.

இதுபோன்று அரிய பல தகவல் கள் இந்த நூலில் இடம்பெற்றிருக்கின்றன.

வில்லிசை வேந்தர் பிச்சைக்குட்டி

சோ. தருமன்,

விலை: ரூ.100.

மலைகள் பதிப்பகம்,

அம்மாபேட்டை, சேலம் – 636003

தொடர்புக்கு: 8122334569.

தொடர்புக்கு: narumpu@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x