Last Updated : 13 Dec, 2017 10:38 AM

 

Published : 13 Dec 2017 10:38 AM
Last Updated : 13 Dec 2017 10:38 AM

எமதுள்ளம் சுடர்விடுக! - 20: ஓர் ஏர் உழவன்

பே

ராசிரியர் நா.வானமாமலையின் நூற்றாண்டு இது.

நா.வானமாமலை 7-12-1917-ல் பிறந்தவர். மறக்கப்படக்கூடாத அந்த ஆய்வறிஞரைப் பற்றி முழுமையான ஆதாரத் தகவல்களோடு ஒரு புத்தகம் வெளிவந்துள்ளது. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் இரா.காமராசு எழுதியுள்ள அந்த நூல்: ‘பேராசிரியர் நா.வானமாமலை ஆராய்ச்சித் தடம்’. என்.சி.பி.எச் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியத் தேசியம், பின்னர் திராவிடச் சிந்தனைகள் என்று வளர்ந்த சிந்தனைத் தளத்தில் மார்க்சியம் வந்து நின்றது. அந்தப் பரப்பில் பணியாற்றிய ஜீவா, உருவாக்கிய இலக்கிய, அரசியல், பண்பாட்டு வெளியில் பின்னால் இணைந்தவர்கள் தொ.மு.சி. ரகுநாதனும், நா.வானமாமலையும் ஆவர். மார்க்சியத் திறனாய்வாளர், விமர்சகர், மார்க்சிய ஆய்வு முறையியலைத் தமிழகத்தில் தழைக்கச் செய்தவர் என பேராசிரியர் நா.வா-வைத் தமிழுலகம் பேசுகிறது.

மார்க்சியர் ஆனார்

நா.வானமாமலை, ஜீவா மற்றும் தொ.மு.சி. மரபினர். அவர்களைப் போலவே இவரும் கம்பன், இளங்கோ, பாரதி ஆகியோரைக் கொண்டு, திராவிட அரசியலை எதிர்கொண்டார். உண்மையில் ஆய்வாளர் ந.முத்துமோகன் சொல்வதைப் போல, பாரதி மரபு என்பதை அழுத்தமாக நிறுவியவர்களில் நா.வா-வுக்கு ஒரு சிறந்த இடம் உண்டு.

நாங்குனேரியில் பிறந்தவர் நா.வா. அமெரிக்கன் கல்லூரியில் பட்டம்பெற்றார். ஆசிரியர் பயிற்சி பெற்றவர். 1935-ல் ஜீவா, பி.ராமமூர்த்தி, பி.சீனிவாச ராவ் பேசிய பேச்சுகள் அவரைக் கிளர்த்தியிருக்கிறது. நெல்லையைச் சேர்ந்த சிந்துபூந்துறை அண்ணாச்சி சண்முகம் பிள்ளையின் தொடர்பு இவரை மார்க்சியர் ஆக்கியது.

ஆய்வுக் குழு தொடக்கம்

1970-ல் நில மீட்சிப் போராட்டத்தில் சிறை சென்றார். சிறைத் தோழர்கள் நல்லகண்ணு, வி.எஸ்.காந்தி. அவர் தன் 51-வது பிறந்த நாளில் நெல்லை ஆய்வுக் குழுவைத் தொடங்கினார். ஆய்விலும் சமூகத்திலும் ஆர்வம் கொண்ட யாரும் அவருடைய ஆய்வுக்குழுவில் சேரலாம். பாளையம்கோட்டையில் தொடங்கிய இந்த ஆய்வுக்குழு, பல இடங்களில் பரவியது. 1968- முதல் கூட்டங்கள் தொடர்ந்தன.

இதன் பயனாக, 1969-ல் ‘ஆராய்ச்சி’ மாத இதழைத் தொடங்கினார். ‘ஆராய்ச்சி’-க்கு என்று தன்னை அர்ப்பணம் செய்துகொண்டார். அப்பத்திரிகையில் மிகச்சிறந்த ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்தன. ஆராய்ச்சிக்கு பல வகைப்பட்ட அறிஞர்கள், கட்டுரைகள் எழுதினர். தமிழறிஞர்கள், ஆய்வாளர்களுக்குத் தன் பத்திரிகையைக் கையளித்தார் பேராசிரியர்.

தமிழால் முடியும்

தமிழகத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போரைத் தொடர்ந்து, தமிழில் அறிவியல் பாடம் நடத்த முடியுமா என்று ‘அறிஞர்கள்’ சிலர் கேட்டார்கள். ‘தமிழால் முடியும்’ என்று ஒரு தொகுப்பு நூலை, அவர்களின் பதிலாகத் தந்தார் வானமாமலை.

உண்மையில் நா.வா. அவர்களின் பெரும்பங்களிப்பாக, நாட்டார் வழக்காற்றியல் பணியையே வரலாறு பொதிந்து வைத்திருக்கிறது.

உலகம் முழுவதும் இடதுசாரிகள், நாட்டுப்பாடல்கள் சேகரித்துக் கொண்டிருந்த காலம்அது.

இந்தியாவில் பி.சி.ஜோதி நாட்டுப்பாடல்கள் சேகரிக்கும் பணியைத் தொடங்கி வைத்தார். அதில் நா.வா தம்மை இணைத்துக்கொண்டார். பாடல்களைச் சேகரித்ததோடு மட்டும் தன்னை அமைத்துக்கொள்ளவில்லை நா.வா. நாட்டார் இலக்கியமே, எழுதப்பட்ட ஏட்டு இலக்கியத்துக்கு மூலம் மட்டும் அல்ல; மக்களின் அசல் மனமும், வர்க்க உணர்வும், படைப்பு ஞானமும் வெளிப்படும் இலக்கிய வெளி என்பதையும் கண்டார்.

13chmbn _ book wrapperrightஉருவம் கொடுத்த தமிழர்

நாட்டார் இலக்கியத்தை ஓர் இயலாக, இலக்கிய வகையாக, ஓர் இயலுக்கு உரிய இலக்கண வகைமைகளோடு உருவம் கொடுத்தார்.

நாட்டுப்பாடல்கள் சொன்னவர் பெயர், எந்தச் சூழ்நிலையில் பாடல்கள் பிறந்திருக்கின்றன என்கிற ஆய்வோடு இரண்டு நூல்கள் வெளியிட்டார்.

1. தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள். (1960)

2. தமிழர் நாட்டுப்பாடல்கள் (1964)

இதைப் பற்றி விமர்சகரும் எழுத்தாளருமான க.நா.சு இப்படி எழுதுகிறார்: ‘‘கலப்படம் இல்லாத அயன்சரக்கு இது. இதைச் சேகரிப்பதில் காட்டப்பட்டுள்ள சிரத்தையும் எடுத்துக்கொண்டுள்ள சிரமமும் பாராட்டப்பட வேண்டியதாகும்!’’

மூதாதையர் தமிழை மீட்டவர்

நாட்டார் வழக்காற்றியல், மானிடவியல், அடித்தள மக்கள் ஆய்வு போன்ற எதுவுமே முறையாக அறிமுகம் ஆகாத தமிழ்ச் சூழலில் நாட்டார் இலக்கியத்தைக் கையிலெடுத்த பேராசிரியர், தமிழர்களுக்கு அவர்களின் மூதாதையரின் தமிழை மீட்டுத் தந்தார்.

நா.வா. தொகுத்து, அருமையான முன்னுரைகளோடு, கால மற்றும் சமூக ஆராய்ச்சித் தரவுகளோடு வெளியிட்ட, கட்டபொம்மு கதைப் பாடல், கட்டபொம்மு கூத்து, கான்சாகிப் சண்டை, முத்துபட்டன் கதை, ஐவர் ராசாக்கள் கதை, காத்தவராயன் கதைப் பாடல் ஆகிய 6 நூல்களையும், மதுரைப் பல்கலைக்கழகத்தில் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் துணைவேந்தராக இருந்தபோது, பல்கலை வெளியீடாக இவற்றை வெளியிட்டார்.

1975 டிசம்பர் முதல் 1976 டிசம்பர் வரை திராவிட மொழியியல் கழகத்தின் சார்பில் தார்வார் பல்கலைக்கழகத்தில் பேராய்வாளராக நா.வா-வை நியமனம்செய்து, வ.அய்.சுப்பிரமணியம் பெருமை பெற்றார். நம் பேராசிரியருக்கும், தமிழ்நாட்டாருக்கும் பெருமை சேர்ந்தது.

ரப்பரின் கதையை எழுதியவர்

நம் பேராசிரியர் நா.வா-வுக்கு இன்னொரு முகம் உண்டு. புராண, கற்பனைக் கதைகளையே குழந்தைகளுக்குக் கொடுத்த முறையை மாற்றி, குழந்தைகளுக்காகவே ‘ரப்பரின் கதை’யை எழுதினார். முதன்முதலில் கொலம்பஸ் ரப்பரைக் கண்டு பிடிப்பது, பிறகு ‘குட்இயர்’ என்கிற அமெரிக்கரால் அதை வளர்த்து எடுத்தது பற்றிய வரலாறு அது. காகிதத்தின் கதை, இரும்பின் கதை போன்றவை பேராசிரியரின் பங்களிப்பு. ஒரு அறிவியல் சமூக வடிவமைப்பு, இளம் மனிதர்களிடம் தொடங்க வேண்டும் என்பது பேராசிரியரின் அவதானிப்பு என்பது இதன் மூலம் பெறப்படுகிறது.

ஆய்வாளர் நா.வா. தன் ஆய்வை, ‘மாற்று வரலாறு எழுதியலாக’ அமைத்துக்கொண்டார். இதற்குச் சிறந்த முன் உதாரணமாக டி.டி.கோசாம்பியின் இந்திய வரலாறும், பண்பாடு குறித்த ஆய்வும் இருந்தன. கோசாம்பியின் ஆய்வு, மாற்று வரலாறு. உற்பத்திமுறை, வர்க்கங்களின் உறவுகள், சுரண்டல்கள், போராட்டங்கள், கொடுமை வரிகள், நிறுவனங்களின் அரசியல் இவைகளை வெளிக்கொணர்ந்தார்கள் மார்க்சிய வரலாற்றாசிரியர்கள்.

தமிழக வரலாறும் பண்பாடும்

நா.வா-வின் ‘சோழர் காலம்’ அத்தகைய ஆய்வு என்று அ.மார்க்சும், பொ.வேல்சாமியும் கருதுகிறார்கள். வ.உ.சி முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி, உரைநடை வளர்ச்சி என்கிற நூல்களோடு, தமிழக வரலாறும் பண்பாடும் என்கிற முக்கியத்துவம் வாய்ந்த நூலும் நா.வா-வின் ஆய்வுக்குப் பெருமை சேர்ப்பவை.

பண்டை மன்னர்களின் பெருமைகளை மட்டும் பேசி மகிழ்ந்த வரலாற்று ஆசிரியர்கள் மத்தியில், மன்னர்கள் தங்கள் உயர்வுக்கும், பெருமைக்கும் மக்களை வதைத்த வன்கொடுமைகள் பக்கம், நா.வா. தன் சமூக ஆய்வுகளை நகர்த்தினார். ஓரேர் உழவராகத் தொடங்கிப் பல நல்ல துறைகளைக் கண்டவர் அவர்.

‘இயல்’ ஆக முன் வைத்தவர்

நா.வா. அவர்களின் ஆய்வுகளை மொத்தமாகப் பார்க்கும்போது மார்க்சியத்தை, தமிழ்ச் சூழலுக்கு ஏற்ற வகையில் அவர் வடிவம் செய்தது விளங்கும். இதை ஒருமுறை ‘இயல்’ ஆகவே அவர் முன் வைத்தார். அ.சிவசுப்பிரமணியன் போல தமிழின் மிக முக்கிய வரலாற்று ஆசிரியர்களுக்கு அவர் ஓர் முன் மாதிரியாகச் செயல்பட்டார். நா.வா. சிந்தனை வெளி என்கிற ஒன்று உருவானது, இயற்கையாக நிகழ்ந்தது. கம்யூனிஸ்ட் கட்சியுடன் அவர் தொடர்பு, அமைப்புக்கும் தத்துவம் சார் அறிஞருக்குமான உறவு. அவர், தன் இடத்தை அறிந்தே செயல்பட்டிருக்கிறார். கட்சியும் அதன் வரம்பை அறிந்திருந்தது.

2.2.1980 அன்று பேராசிரியர் நா.வா காலமானார். மறைவுக்குப் பின் 1980 செப்டம்பர் 13-ல் இலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் நா.வா-வின் தமிழ்ப் பணிகளைப் பாராட்டி ‘கலாநிதி’ பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.

பேராசிரியர் இரா.காமராசு, நா.வா-வின் நூற்றாண்டை சிறப்பு செய்திருக்கிறார்.

மிகப்பெரிய பேருழைப்பை நல்கி, நா.வா-வின் வாழ்க்கைப் பயணத்தின் எந்த முக்கியச் சுவடும் மறைந்து போகாமல் முழுமையாகப் பதிவு செய்திருக்கிறார். எந்தக் கட்டத்திலும் தன்னை நீர்த்துப் போகச் செய்யாமல் திடமாகப் பணிபுரிந்த பேராசிரியர் நா.வா-வுக்கு மிகச் சிறந்த பாராட்டு, இந்த ‘நா.வானமாமலை ஆராய்ச்சித் தடம்’ என்கிற சிறந்த ஆக்கம்!

- சுடர் விடும்...

எண்ணங்களைப் பகிர: writerprapanchan@gmailcom

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x