Published : 12 Dec 2017 10:53 AM
Last Updated : 12 Dec 2017 10:53 AM

கடவுளின் நாக்கு 75: குற்றத்தின் விதை

குற்றத்தின் விதை

‘அ

ரூபமாக மறைந்துபோகும் சக்தி உங்களுக்கு கிடைத்தால் என்ன செய்வீர்கள்?’ என்று ஒரு இணைய இதழ் பலரிடமும் வாக்கெடுப்பு நடத்தியிருக்கிறது. 90 சதவீதம் பேர் சொன்ன பதில் திகைப்பூட்டுகிறது. ‘வங்கியைக் கொள்ளையடிப்பேன்’, ‘பாரில் போய் மூக்கு முட்டக் குடிப்பேன்’, ‘நண்பனின் மனைவியை அடைவேன்’, சூதாட்ட விடுதிக்குள் போய் பணத்தை அள்ளுவேன்’, ‘பெண்கள் ஹாஸ்டலுக்குள் போய் இளம்பெண்களிடம் தகாது நடப்பேன்’, ‘அதிகாரத்தைக் கைப்பற்ற கொலை செய்வேன்’ என தவறான வழிகளில் ஈடுபடவே விருப்பம் தெரிவித்துள்ளனர்.

வயது வேறுபாடின்றி, ஆண் பெண் பேதமின்றி, தாங்கள் அரூபமாக முடிந்தால் அடக்கிவைக்கப்பட்ட ஆசையை வெளிப்படுத்துவேன் என்றுதான் பதில் கூறியுள்ளனர். குற்றம் செய்யத் தயாராகவே மக்கள் இருக்கிறார்கள்.

கடவுள் மீதான பயம், சட்டம் மீதான பயம், தண்டனை மீதான பயம் என, பயம்தான் அவர்களைத் தடுத்து வைத்திருக்கிறது என்பதுதான் நிஜமா?

அதிநவீன தொழில்நுட்பச் சாதனங்களின் வளர்ச்சி சகலரையும் எளிதாக குற்றங்களில் ஈடுபட வைக்கிறது. செல்போன்களால் இவ்வளவு குற்றங்கள் உருவாகும் என யாராவது கற்பனை செய்திருப்பார்களா, என்ன?

சுய ஒழுக்கம் என்ற ஒன்றே இன்று தேவையற்றதாகிவிட்டதா?’ என்ற கேள்வி எழுகிறது. சுய ஒழுக்கத்துடன் வாழ்பவனை உலகம் பரிகாசம் செய்கிறது. அசடு என அடையாளப்படுத்துகிறது. ஆனால், சுய ஒழுக்கத்தைத் தவிர வேறு என்ன கவசம் ஒரு மனிதனைக் காப்பாற்றிவிட முடியும், சொல்லுங்கள்!

எது ஈடுபட வைத்தது?

பிஹாரில் ஒரு விவசாயி, அவரது மகன், அவனது நண்பர்கள் நால்வரும் சேர்ந்து ஒரு மாணவியை வன்புணர்ச்சி செய்துவிட்டார்கள் என டைம்ஸ் தொலைக்காட்சி செய்தி ஒன்றில் காட்டுகிறார்கள். விவசாயிக்கு 60 வயதிருக்கும். அவரது மகனுக்கு 35 வயதிருக்கும். தந்தையும் மகனும் சேர்ந்து செய்கிற செயலா இது? அவர்கள் கேமராவை பார்த்துப் பேசும்போது, கண்களில் குற்ற உணர்ச்சியே இல்லை.

அந்த ஆளின் மனைவியோ, மகளோ, பேத்தியோ இந்தச் செய்தியைப் பார்க்கும்போது என்ன ஆவார்கள்? எது இந்த விவசாயியை பாலியல் குற்றத்தில் ஈடுபட வைக்கிறது. வெறும் உடல் இச்சை என்பதை மட்டும் ஒப்புக்கொள்ளமாட்டேன்.

அவரால் இந்தக் கொடூரம் நிகழ்த்தப்பட்ட மாணவி அவரது பேத்தி வயது கொண்டவள்தானே. அது ஏன் அவரது புத்தியில் உறைக்கவே இல்லை?

ரயிலில், பேருந்தில், பொதுவெளியில் என எங்கேயும், எவரும் குற்றச்செயல்களில் ஈடுபடத் தயங்குவதே இல்லை. சில நாட்களுக்கு முன்பு அப்படி ஒரு வீடியோவை ஒரு நண்பர் வாட்ஸ்அப்பில் அனுப்பியிருந்தார்.

ஸ்கூட்டியில் வரும் ஒரு பெண், அடைத்து சாத்தப்பட்ட கடையின் முன்னால் இருந்த சிமென்ட் பேக்குகளை, யாருமில்லை என்ற காரணத்தால் திருடிப் போகிறாள். ஆனால், ரகசிய கேமரா அவளைப் பதிவு செய்துவிட்டது. திருட்டில் ஈடுபடும் அந்த பெண்ணுக்கு 20 வயதே இருக்கக்கூடும். அவளிடம் சிறு தயக்கம்கூட இல்லை. சந்தர்ப்பம் கிடைத்தால் எல்லா குற்றங்களும் அரங்கேற்றமாகிவிடுமா என்ன?

பின்பு எதற்கு இத்தனை நீதி நூல்கள், அறங்கள். ஞானமொழிகள்?

உதாரணமாக ஒரு கதை

அறம் பற்றிய விவாதம் ஒன்றை மேற்கொள்ளும்போது பிளேட்டோவின் சகோதரன் கிளாக்கோன் ஒரு கதையை உதாரணமாகச் சொல்கிறான்.

கிரேக்கத்தில் ஆடு மேய்ப்பவன் ஒருவன் இருந்தான். மேய்ச்சலுக்கு ஆடுகளை ஓட்டிச் செல்வது, இரவில் வீடு திரும்பி, கிடைத்த உணவை சாப்பிட்டுவிட்டு நிம்மதியாக உறங்குவது என அவனது வாழ்க்கை போய்க்கொண்டிருந்தது.

ஒருநாள் அவன் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுக்கொண்டிருந்தபோது, ஒரு பாறையின் அடியில் இருந்து ஒரு புதையலைக் கண்டெடுத்தான். அது ஒரு பெட்டி. திறந்து பார்த்தால் உள்ளே ஒரு மோதிரம் இருந்தது. அதை கையில் மாட்டிக்கொண்டான். அந்த மோதிரம் எப்படிப்பட்டது? யாருடையது என எதையுமே அவன் ஆராயவில்லை.

ஒருநாள் அவனது மந்தையில் இருந்து ஒரு ஆடு தப்பி ஓடிவிட்டது. அதை தேடிக்கொண்டுப் போகும்போது, கையில் அணிந்திருந்த மோதிரத்தைத் தற்செயலாக தேய்த்தான். மறுநிமிஷம் அவன் அரூபமாக மறைந்துவிட்டான். ஆஹா! இது மாய மோதிரமாக இருக்கிறதே என மகிழ்ந்தபடியே தனது ஆட்டை எளிதாக தேடிக் கண்டுபிடித்துவிட்டான்.

மாயமோதிரம் கைக்கு வந்தபிறகு, தான் அரூபமாகிவிட்டால் யாராலும் கண்டுபிடிக்க முடியாதே என்று நினைத்த அவன், உல்லாச வழிகளைத் தேடி ஈடுபடத் தொடங்கினான். ஒருநாள் அரண்மனையில் நடக்கும் விருந்துக்கு ஆடு கொண்டுபோக வேண்டிய தேவை அவனுக்கு ஏற்பட்டது. அரண்மனைக்குள் நுழைந்த அவன் மாய மோதிரத்தின் உதவியால் அரூபமாகி அந்தப்புரத்துக்குள் நுழைந்தான்.

மகாராணியின் அழகைக் கண்டு மயங்கி, அவளது படுக்கையில் அரூபமாக உடன் படுத்துக்கொண்டான். யாரோ தன்னை அணைப்பதை அவள் உணர்ந்தபோதும், ஆள் உருவம் தெரியவில்லை. தனது கற்பனையோ என நினைத்து அவள் உறங்கிவிட்டாள்.

அவளை எப்படியாவது மயக்கிவிட நினைத்த இடையன், தனது உருவத்தை வெளிப்படுத்தி தனது மாய மோதிரத்தின் சக்தியைப் பற்றி எடுத்துச் சொன்னான். அதைக் கேட்ட மகாராணி, ‘‘நீ இந்த மாய மோதிரத்தைக் கொண்டு அரூபமாகி மன்னரின் அறைக்குப் போய் அவரைக் கொன்றுவிடு. பின்பு நீயும் நானும் இன்பமாக வாழலாம்’’ என்றாள்.

அதன்படியே இடையனும் அரூபமாக மன்னரின் அறைக்குச் சென்று அவரைக் கொலை செய்கிறான். யார் கொன்றது என ஒருவராலும் கண்டறிய முடியவில்லை. தன் அடையாளத்தை மாற்றிக்கொண்டு, மகாராணியை அடைந்த அவன் நாட்டுக்கே அரசனாகிவிடுகிறான். ஒரே ஒரு மாயசக்தி கிடைத்தால் போதும், எல்லாத் தவறுகளும் அரங்கேற்றப்பட்டுவிடுகின்றன என்ற உண்மையை எடுத்துச் சொல்கிறது இக்கதை.

மாய மோதிர ஏக்கம்

இந்த கதையைப் பற்றி விவாதிக்கும் சாக்ரடீஸ், ‘உலகில் எல்லா மனிதர்களும் இதுபோன்ற ஒரு மாய மோதிரம் தனக்கு கிடைக்காதா என ஏங்குகிறார்கள்’ எனக் கூறுகிறார்.

உண்மையில் இப்படி ஒரு மோதிரம் கிடைத்துவிட்டால், எந்த தவறையும் மனிதர்கள் துணிந்து செய்வார்கள். அரூபமாக சென்று நன்மைகள் செய்யலாமே என நினைப்பவர்கள் வெகு சொற்பமே.

சுய ஒழுக்கம் என்பது பெண்களுக்கு மட்டுமே போதிக்கப்பட வேண்டியது என பண்பாடு நினைக்கிறது.

ஆனால், அது ஆண் - பெண் இருவருக்கும் பொதுவானது என்பதை நினைவூட்ட வேண்டியிருக்கிறது. எது சுதந்திரம், எது கட்டுப்பாடு என்பதை புரிந்துகொள்வதில் நாம் தவறு இழைக்கிறோம். எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்ளலாம் என்பது அராஜகம் இல்லையா? அதை எப்படி சுதந்திரம் என அழைக்கமுடியும்?

பண்பாட்டின் பெயரால் ஒடுக்கப்பட்ட விஷயங்களை நாம் விலக்கிவைக்கலாம். ஆனால், சுய ஒழுக்கம் என்பதே முட்டாள்தனமானது என நினைப்பதை ஏற்கமுடியாது.

ஸ்வீடிஷ் இயக்குநரான இங்க்மர் பெர்க்மன் இயக்கிய ‘வெர்ஜின் ஸ்பிரிங்’ படத்தில் ஒரு இளம்பெண் அழகான ஆடை அணிந்து தேவாலயத்துக்குப் போகிறாள். வழியில் 3 இடையர்கள் அவளுடன் சந்தோஷமாகப் பேசிக்கொண்டு துணைக்கு வருகிறார்கள். ஒரு வெட்டவெளியைக் கடக்கும்போது திடீரென அவர்கள் முகம் மாறுகிறது. அவள் தனியே இருக்கிறாள் என்பதை உணருகிறார்கள். உடனே அவள் மீது பாய்ந்து அவளுடன் வல்லுறவு கொண்டு, கொன்றுவிடுகிறார்கள்.

ஒளிரும் தேவதை போன்ற அந்த பெண் ஏன் கொல்லப்படுகிறாள்? குற்றம் நம் மனதில் ஒளிந்தே இருக்கிறதா? படத்தில் அந்தப் பெண் இறந்துபோனதும் ஒரு நீரூற்று தோன்றுகிறது. அதுதான் சாட்சி. அது மனசாட்சியின் அடையாளம். அவள் இறந்து போயிருக்கலாம். ஆனால், அவளுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கேட்டே அந்த நீருற்று எழுகிறது.

யாரும் அறியாமல் நடக்கும் எல்லா குற்றங்களுக்கும் இப்படி ஒரு நீரூற்று பொங்கவே செய்யும். அதுவே உலகின் நியதி!

- கதைகள் பேசும்...

எண்ணங்களைப் பகிர: writerramki@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x