Last Updated : 25 Oct, 2017 10:21 AM

 

Published : 25 Oct 2017 10:21 AM
Last Updated : 25 Oct 2017 10:21 AM

எமதுள்ளம் சுடர்விடுக! - 14: ஆய்வு என்பது பேருழைப்பு!

பே

ராசிரியர் சா.பாலுசாமி என்கிற பாரதிபுத்திரன் எழுதி ‘காலச்சுவடு பதிப்பகம்’ வெளியிட்டுள்ள ‘நாயக்கர் காலக் கலைக் கோட்பாடுகள்’ என்கிற அரிய வரலாற்று ஆய்வு நூலைப் பற்றி உரையாடிக் கொண்டிருக்கிறோம்.

மதுரை நாயக்கர் ஆட்சி கி.பி.1529-ல் தொடங்கி கி.பி 1736-ல் முடிவு பெறுகிறது. அதாவது 207 ஆண்டுகள் நீண்ட நாயக்கர்களின் ஆட்சி காலத்தில் கட்டிடம், சிற்பம், ஓவியம், இலக்கியம் ஆகிய நுண்கலைத் துறையில் என்ன சாதித்தது என்கிற ஆய்வுதான் அந்த நூலாகும். கூடவே, நமக்குக் கிடைக்கும் நாயக்கர் காலப் பணிகளோடு, முன்பிருந்த பாண்டியர், பல்லவர், சோழர், விஜய நகர அரசுகள் அந்த துறையில் செய்திருந்த பணிகளையும் தொட்டுக்காட்டி, நாயக்கர்கள் பின்பற்றிய மரபுகள், உருவாக்கிய புதிய மரபு கள் ஆகியவற்றையும் எழுதிச் செல்லும் ஒரு நிறைவான நுண்கலை வரலாறாக இந்த நூல் நீள்கிறது.

நாயக்கர் காலக் கலை, ‘பெருந்தோற்றம்’ கொண்டதாக அமைந்திருக்கிறது. அதாவது, அவர்கள் எழுப்பிய கட்டிடங்கள்,சிற்பங்கள்,ஓவியங்கள், இலக்கியங்கள் அனைத்தும் பெரும் தோற்றம் கொண்டவையாக விளங்குகின்றன. கோபுரம் என்றால் மிக உயரம். சிற்பம் என்றால் உயரமும் அகலமும். காப்பியம் என்றால் மிக அதிகமான பாடல்கள். இப்படியான பெருமைகளைத் தம் அடையாளமாக்கினர் நாயக்க மன்னர்கள். ஏன்? விஜய நகர அரசர்களால், அதி காரிகளாக நியமிக்கப்பட்டவர்கள், பின்னர் சூழ்நிலைக்கு ஏற்ப மன்னர்களாக மாறுகிறார்கள். அவர்களுக்கு முன்பு இருந்த பல்லவர்கள், சோழர்கள் ஆகிய மன்னர்களுக்கு இணையாகத் தம்மை வரித்துக்கொண்டு, அவர்களது பணிகளைக் காட்டிலும் பெரிதாக, மிகப் பெரிதாகக் காரியமாற்றி வரலாற்றில் இடம் பெற அவர்கள் செய்த முயற்சி இது என்று, ஓர் ஆய்வாளர் சொன்னதை எடுத்துக்காட்டுகிறார் பாரதிபுத்திரன். தென் இந்தியாவின் மிக உயரமான கோபுரம் வில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரம், 192 அடி உயரம் உடையது. இது நாயக்கர் மன உயரம்!

நாயக்கரின் மற்றுமொரு கலைக்கோட்பாடு, விரிவாக்கம். அதாவது இறை உருவம், அரச உருவம் முதலான தனி உருவங்களோ சிற்பங்களின் உள்ளடக்கமாக இருந்த நிலை மாறி, மனிதக் குழுக்கள் இடம் பெறுகின்றன. குறவன் குறத்தியர் சிற்பம், குறத்தி குழந்தைகளுடன் படைக்கப்படுகிறாள். ஒருவருக்கு மேம்பட்ட உருவங்கள் இடம்பெறுகிற மாதிரி, நிகழ்ச்சிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. கோலாட்டம், மல்யுத்தம், குறத்தி கைரேகை பார்த்துச் சொல்வது போன்ற சிற்பங்கள், கலை கீழே வைக்கப்பட்ட மக்களை நோக்கி நியாயமாக இறங்கி வருவதாகக் கொள்ளலாம்.

உழவர்கள் அன்றும் இப்போது போலத்தான்!

நிலத்தின் அடிப்படையிலான வேளாண்மையே நாயக்கர் கால பொருளாதாரத்துக்கு அடிப்படை. என்றாலும் விவசாயிகளின் உழவர்களின் வாழ்நிலை வறுமை உடையதாகத்தான் இருப்பதை ஆசிரியர் தெளிவுபடுத்துகிறார். நில வருவாய், உழுதவனுக்குப் போய்ச் சேரவில்லை. கோயில்கள், சத்திரங்கள், கைத் தொழிலாளர், புலவர்கள், வித்துவான்கள், அந்தணர்கள், தேவதாசிகள், வட்டாரத் தலைவர்கள் ஆகியோருக்கே சென்றது.

கோ.கேசவன் சொன்ன கருத்தொன்று அடிக்குறிப்பில் வருகிறது.

10 கலம் நெல் விளைச்சலின் உழைப்பில் எப்பங்கும் இல்லாத ஆளும் வர்க்கமும் அதன் சார்பு நிறுவனங்களும் 9 கலத்தையும் 7 மரக்காளையும் 7 படிகளையும் அபகரித்துக்கொள்கிறது. அதாவது 1,280 படிகள். இதில் உழைப்ப வனுக்கு 9 படிகள் மட்டுமே.

நாயக்கர் காலத்தில் உற்பத்திக் கருவி கள் பெருக்கமின்மை, உற்பத்தித் திறன் முன்னேற்றம் இன்மை, ஒரே விதமான பொருள் உற்பத்தி ஆகிய காரணங்களால் விவசாயம் தேக்கமுற்றது. அரசு அதிகாரிகளும் ஊழியர்களும் முறைகேட்டுடன் நடந்தனர். ஊர் மணியக்காரன், கணக்கன் போன்றோர் பொய்க் கணக்கு எழுதியும், முறையற்று வரி தண்டியும், லஞ்சம் (நல்ல தமிழில் கையூட்டு) பெற்றும் பொறுப்புகளை மறந்தும், மக்களை ஏமாற்றியுள்ளனர். (தமிழர்களுக்கு இது புதுசா என்ன?)

இப்படி இருந்தன அரசியலும் பொருளாதாரமும். புதியன படைக்கும் ஆர்வம் அற்ற அரசுகள். என்றாலும் சுமார் 200 ஆண்டுகள் நிகழ்ந்த ஆட்சி , சோழர் அரசு போல தனிப்பெரும் படைப்புகள் இல்லை என்றாலும் விரிவாக்கம் நிகழ்ந்தன. பழசைப் புதுப்பிப்பது பெரும் கடமையாயிற்று.

நாயக்கர் காலத்துக் கல்விச் சூழல்

நாயக்க மன்னர்கள் தமிழையும் தமிழ்க் கல்வியையும் ஆதரிக்கவில்லை. பள்ளிகள் வைத்து பொதுமக்களுக்கு கற்பிக்கவில்லை. ஆனால், வேதபாடசாலைகள் இருந்தன. வடமொழிக் கல்விக்கு அரசு ஆதரவு. அப்பள்ளியில் பிராமணர்களே கல்வி கற்றனர்.

ஆ.கி.பரந்தாமனார் குறிப்பொன்று: மக்களுக்குக் கல்வி இன்றியமையாதது என்று அரசர்கள் கருதவில்லை. பொதுமக்களால் நடத்தப்பட்ட பள்ளிகளுக்கும் அவர்கள் உதவவில்லை. வடமொழி வேதக் கல்விக்கே அரசுகள் உதவின.

சமய ஒருமைப்பாடு

நாயக்கர்களிடம் இருந்து நம் சமகாலத்து அரசியல் கற்க வேண்டியது அவர்களின் சமய ஒருமைப்பாடு. ‘இந்து’ என்ற சொல் அப்போது பயிலப்படவில்லை. (நல்லவேளை). சைவம் இருந்தது. வைணவம் இருந்தது. சாக்தம் (சக்தி வழிபாடு) இருந்தது. இவைகள் அனைத்துக்கும் நாயக்க மன்னர்கள் புரவலர்களாக இருந்தார்கள். விஜய நகர அரசே, இசுலாமியர்களுக்கு எதிராகப் பிறந்தது என்றாலும், நாயக்கர்கள் பேதம் பேணவில்லை. காலம், எல்லாக் காயங்களையும் ஆற்றத்தானே செய்யும்.

நாயக்கர் காலத்தில் இசுலாம் வேரூன்றி இருந்தது. இசுலாமியர் பலர் பாளையக்காரர்களாக இருந்தனர். நாயக்கர் ஆட்சிக்கு உதவியாக இருந்தார்கள். மங்கம்மாள், பள்ளிவாசலுக்கும் தர்க்காவுக்கும் நிலக் கொடை அளித்தார். தர்க்காவுக்கு அரசு நிலம் தந்திருக்கிறது.

நாயக்கர் காலத்தில்தான் கிறிஸ்துவம் தமிழகத்தில் வேரூன்றி நிலைத்தது. கிறிஸ்துவ அருள் தொண்டர்கள் மதப் பிரச்சாரம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். மதம் மாறியவர்களுக்கு அரசு பாதுகாப்பளித்திருக்கிறது. அனைத்து மதங்களிடமும் நாயக்க மன்னர்கள் இணக்கமான மனம் கொண்டிருந்தனர்.

நாயக்கர்களின் மனத் தராசு முள்

தமிழகக் கோயில்கள் பலவற்றிலும் நிர்வாக வழிபாட்டு உரிமைகளைப் பண்டாரங்கள் பெற்றிருந்தனர். பழநி தண்டாயுபாணித் திருக்கோயிலின் வழிபாடு நிகழ்த்தும் உரிமை, போகரின் சீடமரபில் வந்த சைவ மரபினரருக்கே பரம்பரையாக இருந்தது. திருமலை நாயக்கரின் தளவாய் ராமப்பையர் அங்கு வழிபாடு நடத்த வந்தார். பிராமணர் அல்லாத அர்ச்சகரிடம் தீர்த்தப் பிரசாதம் வாங்க மனமில்லாது, அப்போதிருந்த பூசகர்களை நீக்கி, ஆதி சைவ மறையோர்களைத் தருவித்துப் பூசகர்களாக அமர்த்தினார்.

நாயக்கர்களின் காலத்தில் பார்ப்பனக் குடியிருப்புகள் மிகுதியாயின. ஆலய வழிபாட்டுரிமைகள் பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்டன.

நாயக்க மன்னர்கள் தமிழ் அறியாதவர்கள். ஆகவே, தமிழ்ப் புலவர்களின், தமிழ் இலக்கியத்தின் பெருமை களையும் அறியாதவர்கள். தமிழ்ப் பயிற்சி பெருகாத காலம். என்றாலும் என்ன?

தமிழ்ப் புலவர்களாகிய படைப்பாளர்கள், மத முரண்பாடுகள், சகிப்புத்தன்மை அற்ற போக்குகளுக்கு எதிராக மத இணக்கம், மாற்று மதத்தை ஓம்புதல் ஆகிய ஜனநாயகப் பண்புகளுக்கு ஆதரவாக நின்றிருக்கிறார்கள். எழுதியும் இருக்கிறார்கள். சிவன் விஷ்ணுவை வணங்குவது போலவும் விஷ்ணு சிவனை மதிப்பது போலவும் பாடல்கள் புனைந்துள்ளார்கள். நெல்லி நகர் அருளாளதாசரின் ‘பாகவத புராணம்’ ஓர் அழகிய சமரசப் படைப்பு.

ஒரு வரலாற்றை மீள் பார்வை பார்க்கும்போது, கவனிக்க வேண்டிய மிக முக்கியமான மக்கள் மனநிலை, வாழ்நிலை எதையும் விட்டு வைக்காமல் நூல் படைத்திருக்கிறார் பேராசி ரியர் சா.பாலுசாமி (பாரதிபுத்திரன்).

இந்த நூலை மனம் நிறைந்து வரவேற்கிறார் தமிழறிஞர் கா.சிவத்தம்பி. அவர் சொல்கிறார்: ‘தமிழ்நாட்டின் கலை வரலாறு என்பது, நாம் எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு கலை வடிவங்களினது வரலாற்றை அறிந்துகொள்வதாகும். தமிழ் மக்களின் வரலாற்று வளர்ச்சியையும், சிந்தனை விருத்தியையும், ரசனை அனுபவங்களையும் அறிந்துகொள்வதாகும். நம் பார்வை விரிவுக்கான பூபாளம் இசைக்கப்பட தொடங்கிவிட்டது!

- சுடரும்…

எண்ணங்களைப் பதிய: writerprapanchan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x