Last Updated : 16 Dec, 2017 10:34 AM

 

Published : 16 Dec 2017 10:34 AM
Last Updated : 16 Dec 2017 10:34 AM

அய்யனார், ஐயப்பன், ஆசீவகம்!- பேராசிரியர் க.நெடுஞ்செழியன் நேர்காணல்

மிழ்ப் பண்பாட்டின் மேன்மைகளை மீட்டெடுப்பதற்காகத் தன் வாழ்வின் பெரும் பகுதியை ஒப்படைத்துக்கொண்டவர் பேராசிரியர் க.நெடுஞ்செழியன். 35 வயதில் தொடங்கிய பயணம் 74 வயதிலும் தொடர்கிறது. மொத்தம் 18 நூல்களை எழுதியிருக்கிறார். அதில் பெரும்பான்மையானவை ஆய்வு நூல்கள். ‘ஆசீவகமும் அய்யனார் வரலாறும்’ நூல் அவரது ஆய்வின் உச்சம். அவரை சித்தன்னவாசல் குகைக்கோயிலில் சந்தித்தோம். அங்கு சுற்றுலா வந்திருந்த ஐயப்ப பக்தர்களிடம், “இங்கே சிலையாக இருக்கிற மூவரும், நீங்க கும்பிடுற ஐயப்பன், அய்யனார்கள்தான்” என்று அறிமுகப்படுத்தி, விளக்கமளிக்கத் தொடங்கிவிட்டார். அவருடன் உரையாடியதிலிருந்து...

அடிப்படையில் நீங்கள் கடவுள் மறுப்பாளர். இந்த ஆய்வில் இறங்கியது எப்படி?

எனது முனைவர் பட்ட ஆய்வுக்காக (1980) நான் எடுத்துக்கொண்ட தலைப்பு ‘தமிழ் இலக்கியத்தில் உலகாயதம்’. பொருள்முதல்வாதம் எனப்படும் உலகாயதம் பற்றி ஏற்கெனவே தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா மிகப்பெரிய ஆய்வுசெய்திருந்தார். அதில் ஒரு பகுதியாக ஆசீவகம் பற்றியும் எழுதியிருந்தார். அதை வாசித்தபோது, அதில் சொல்லப்பட்ட பல செய்திகள் நாம் ஏற்கெனவே கேள்விப்பட்டவையாக இருந்தன. அதற்கு அவர் என்னென்ன நூல்களைப் பயன்படுத்தியிருந்தாரோ அதை எல்லாம் நானும் வாசித்துப் பார்த்தபோது இன்னும் ஆச்சரியம். ஆசீவகம் பற்றிய அடிப்படைத் தகவல்களையெல்லாம் அந்த நூலாசிரியர்கள் பாலி, பிராகிருத மொழி நூல்களிலிருந்துதான் பெற்றிருந்தனர். ஆனால், அவற்றின் மூலச்சான்று தமிழில் இருக்கிறது என்பதை ஒரு பேராசிரியராக என்னால் உணர முடிந்தது. எனவே, சட்டோபாத்தியாயாவை விட்டுவிட்டு, ஏ.எல்.பாஷம் எழுதிய புத்தகங்களை நாடினேன். அவர் 1950-களிலேயே, ‘ஆசீவகம்: இந்தியாவில் அழிக்கப்பட்ட ஒரு சமயம்’ என்ற பெயரில் முனைவர் பட்ட ஆய்வுசெய்தவர். நான் ஆசீவகம் பக்கம் போனது இப்படித்தான். “ஆசீவகம் வட நாட்டில் கி.மு.3-ம் நூற்றாண்டின் இறுதியிலேயே செல்வாக்கை இழந்துவிட்டது. ஆனால், தென்னகத்திலோ கி.பி.14-ம் நூற்றாண்டு வரை அது செல்வாக்கோடு இருந்துள்ளது. இப்போதும் அதன் வேர்களைத் தமிழகத்தில் காண முடிகிறது” எனக் கூறியிருந்தார் பாஷம்.

ஆசீவகத்தை நிறுவியவர்களும், தமிழகத்தில் தற்போது அய்யனாராக வணங்கப்படுகிறவர்களும் ஒரே நபர்களே என்ற முடிவுக்கு எப்படி வந்தீர்கள்?

ஆசீவகத்தை உருவாக்கியவர் மற்கலி என்பதை தமிழ் இலக்கியம், பௌத்தம், ஜைனம் ஆகிய மூன்று மரபுகளும் உறுதிசெய்துள்ளன. ஆனால், ஆசீவகம் பற்றி ஆராய்ந்த அறிஞர்கள் அனைவரும் பௌத்த, ஜைன மரபுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதால், அந்த ஆய்வு ஒருதலைச் சார்பாக அமைந்துவிட்டது. தமிழ் இலக்கிய, நாட்டார் மரபுகளையும் சேர்த்து ஆராய்ந்தபோது, மற்கலிதான் தமிழ் மக்கள் வணங்குகிற ‘தர்ம சாஸ்தா’ (அய்யனார்களில் ஒருவர்) என்று உறுதிசெய்ய முடிந்தது. மகாவீரரும் மற்கலிகோசாலரும் ஒன்றாகப் பணியாற்றி, பிறகு இருவரும் பிரிந்துவிட்டனர் என்று ஜைன இலக்கியத்தில் குறிப்பு உள்ளது. மற்கலியின் ஆயுதம் செண்டாயுதம். நம் அய்யனார் கையில் இருப்பதுவும் அதுவே. பெரிய புராணத்தின் ‘வெள்ளானைச் சருக்கம்’ வழியாக அய்யனார் பிறந்த இடம் திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகேயுள்ள திருப்பட்டூர் என்று அறிய முடிந்தது. அங்கே கள ஆய்வுசெய்தபோது, அய்யனார் பிறந்த ஊர் என்பதற்கான கல்வெட்டு ஆதாரம் கிடைத்தது. அவ்வூரில் சிவாலயமும், அய்யனார் கோயிலும் உள்ளன. சிவாலயத்தை நுட்பமாக ஆராய்ந்தபோது, அதுவும் ஆசீவக ஆலயமாக இருந்து பறிக்கப்பட்டதுதான் என்ற உண்மை விளங்கியது.

‘தர்ம சாஸ்தா’ மரணமடைந்த இடமான சித்தன்னவாசலில், குகைக்குள்ளாக மூன்று சிலைகள் இருக்கின்றன. கிறிஸ்தவ மதத்தில் துறவியர் தொடங்கி போப் ஆண்டவர் வரையில் படிநிலைகள் இருப்பதுபோல, ஆசீவகத்திலும் வண்ணக் கோட்பாடு இருந்தது. கருப்பு, நீலம், பச்சை, செம்மை எல்லாவற்றையும் கடந்து கழிவெண் பிறப்பு (பரம சுக்ல) நிலையை அடைந்தவர்கள் இவர்கள் மூவரும். நடுவில் இருப்பவர் வேளிர் மரபில் பிறந்து சிற்றரசராக வாழ்ந்து, துறவியான அறப்பெயர் சாத்தன் (தர்ம சாஸ்தா). இரண்டாவது நபர் கிராமங்களில் பூரணம், பொற்கலை எனும் இரு மனைவியரோடு அருள்பாலிக்கிற பூரண அய்யனார். மூன்றாவதாக இருப்பவர் அடைக்கலம் காத்த அய்யனார் (பாண்டிய மன்னரின் படைத்தளபதியாக இருந்து துறவியானவர்).

ஆசீவகம் தாக்கப்பட்டபோது, ஓவியம் சிதைக்கப்பட்டது. இப்போது மலையடிவாரத்தில் மூன்று அய்யனாருக்கும் கோயில்கள் கட்டி வணங்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆசீவகத்தின் வண்ணக்கோட்டுப் படிநிலை யின் குறியீடுதான் 18 படிகள். அந்த அடையாளத்தை முன்பு ஆசீவகத்தலமாக இருந்த திருச்சி திருவெள்ளறை, மதுரை அழகர்கோயில் முதலான இடங்களில் இப்போதும் பார்க்கலாம். சபரிமலை இப்போதும் சாஸ்தா கோயிலாகவே இருக்கிறது.

ஆசீவகத்தைக் கடவுள் மறுப்புக் கோட்பாடு

என்கிறீர்களே எப்படி?

வானத்தையும் பூமியையும் உயிரினங்களையும் படைத்தது இறைவன் என்று மத நிறுவனங்கள் சொல்கின்றன. ஆனால், ஆசீவகம் அணுக்கோட்பாட்டின் அடிப்படையில், தற்செயலாகவே உலகம் தோன்றியதாகச் சொல்கிறது. இதுகுறித்து ‘ஆசீவகம் எனும் தமிழர் அணுவியம்’ என்ற ஆய்வு நூலை வெளியிட்டுள்ளேன். இந்தப் பேரண்டத்தின் தோற்றம், பெருவெடிப்பு, கருந்துளை பற்றியெல்லாம் அறிவியல் உலகம் 40, 50 ஆண்டுகளாகத்தான் பேசத்தொடங்கியிருக்கிறது. ஆனால், 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் இலக்கியமான பரிபாடலில் இதுபோன்றதொரு குறிப்பு உள்ளது. “பாழ்பட்டுப்போன வெட்டவெளியில், அணு கரு நிலையில் இருந்தபோது ஏற்பட்ட பெரிய வெடிப்பின் காரணமாக வெப்பம் தோன்றியது. பிறகு காற்றும் தோன்றியது. வெப்பத்தின் மீது காற்று மோத மோதத் தீயாகியது. தீ எரிந்து எரிந்து அணையத் தொடங்கியபோது ஆவிப்படலம் மேகமாகப் படிந்து, அது குளிர்ந்து மழையாகப் பெய்தது” என்கிறது பரிபாடல். இதுதான் ஆசீவகத்தின் பேரண்டம் பற்றிய கோட்பாடு.

‘பெரும்பான்மையான சிவன் கோயில்களும் பெருமாள் கோயில்களும் பெளத்த விகாரங்களையும் சமணக் கோயில்களையும் இடித்துக் கட்டப்பட்டவையே’ என்ற தொல்.திருமாவளவனின் கூற்றை ஏற்கிறீர்களா?

அவரது கூற்று சரியே. ஆனால், ஆசீவகம் பற்றிய ஆய்வு முடிவுகள் பரவலாவதற்கு முந்தைய கால நிலைப்பாட்டிலிருந்து அவர் கருத்து சொல்லியிருக்கிறார். தமிழகத்தைப் பொறுத்தவரையில் 90% கோயில்கள் ஆசீவக (ஆதிநாதர், ஸ்ரீ) கோயில்களாக இருந்து, பிற மதத் தலங்களாக மாற்றப்பட்டவையே. தமிழகத்தில் எந்தெந்த கோயில்களில் எல்லாம் ஸ்ரீ என்ற திருநிலைக்கு (இன்றைய கஜலட்சுமி) தனி சன்னதி இருக்கிறதோ அவை அனைத்தும் ஆசீவக ஆலயங்கள்தான். அதேபோல எந்தெந்த சிவன்கோயில்களில் யானையை முதலை விழுங்குவது, சிங்கம் தாக்குவது போன்ற புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளனவோ அவை அனைத்துமே ஆசீவகத்திடமிருந்து பறிக்கப்பட்ட ஆலயங்களே.

- கே.கே.மகேஷ்,

தொடர்புக்கு: magesh.kk@thehindutamil.co.in

படங்கள்: ஆர்.ராஜேஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x