Published : 02 Dec 2017 10:42 AM
Last Updated : 02 Dec 2017 10:42 AM
ஜோடி குருஸின் மூன்று நாவல்களின் வழித்தடமே ‘வேர் பிடித்த விளைநிலங்கள்' கட்டுரைத் தொகுப்பு. தன்னை அறிந்துகொள்வதோடு தனக்குள்ளிருக்கும் படைப்பாளியையும் தான் அறிந்துகொண்டதைப் பற்றி ஜோ எழுதுகிறார். அப்படி எழுதும்போது கட்டுரைக்கு ஒரு புது மொழி கிடைக்கிறது. இருத்தலுக்கான போராட்டத்தில் பிறந்தது அந்த மொழி.
ஜோவின் வாழ்வின் பல்வேறு மாயத் தருணங்களுக்குக் காரணம் பிரகாசி பாட்டிதான். ‘கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது என்று எனக்குத் தெரியும்' என்ற சுயசரிதையில் வரும் மாயா ஏஞ்சலோவின் பாட்டி வாசகர்களை வியக்க வைப்பாள். மாயாவுக்கு அந்த வயதில் பாட்டிதான் எல்லாமும். “அவளின் இதயம் மிகப் பெரியது. அதனுள்தான் எங்களின் சிறிய இதயங்கள் வளர்ந்துகொண்டிருந்தன” என்று தன் பாட்டியை நினைவுகூர்கிறார் மாயா. ஜோவின் பிரகாசி பாட்டியைப் பற்றி வாசிக்கும்போது மாயா வின் பாட்டியும் கூடவே பயணிக்கிறார். பிரகாசி பாட்டியிடம் அப்படியொரு ஆளுமை. திருநெல்வேலித் தெருக்கள் அதிரப் பேரனை மாபரத்திக்குக் கூட்டிப்போகிற அழகு வாசகர்கள் மனதில் நிரந்தரம்கொள்ளும். அப்படியான ஒரு பாட்டிக்கு மனம் ஏங்கும்.
தன் பாட்டியின் மடியில் படுத்துக் கேட்ட கதைகளின் ஈரம்தான் ஜோவின் படைப்புகளோ என்று தோன்றுகிறது. தன் பாட்டியிடம் கேட்ட மாபரத்தி குமரியின் கதை ஜோவின் மனதில் விதையாக விழுகிறது. ஜோவின் ஆதியைத் தேடும் பயணத்தில் தமிழ் இனம் ஒரு முகமாகிறது. தூரத்தில் வரும் கட்டுமரங்களில் தாத்தாவின் மரம் குறித்துப் பாட்டி விவரிப்பதைக் கதை போல வாசிக்கிறோம். “பிரகாசி அவளுக்கும் ஒரு பங்கு குடுத்துரு” என்கிற தாத்தாவின் கருணைதான் ஜோவின் உயிருக்கு உணவாகிறது. தாத்தா தெம்மந்திரை ஒரு கடல் வாழ் உயிரோ என அதிசயிக்கிறோம்.
துளவையைக் கட்டுமரத்தில் போட்டபடியே மடக்கில் இறங்கி, நீண்டு வளர்ந்த இரு கைகளாலும் கடல்நீரை அள்ளி வாய் கொப்பளித்த படி நிலத்தில் கால் பதிக்கிற மனிதர் தெம்மந்திரை. இப்படி தாத்தாவின் ஒவ்வொரு நகர்வையும் மென்று சுவைத்த ஜோவால் எப்படி எழுதாமல் இருக்க முடியும்? எதையும் கதையாகச் சொல்லும் தாத்தா, பாட்டி கிடைத்தது ஜோவுக்குப் பிறப்பிலே கிடைத்த சொத்து. கடலின் விதவிதமான நீரோட்டங்கள், காற்று வகைகள், கணியங்கள், நட்சத்திரக் கூட்டத்தைப் பார்த்து நாழிகை சொல்வது எல்லாமும் தாத்தாவின் அறிவு. தெம்மந்திரையால் விஸ்வாமித்ர மாமுனியை யும் இடிந்தகரை பக்கம் கூட்டிவர முடிகிறது.
ஜோவுக்கு வாழ்நாள் முழுவதும் அனுபவங்கள். அதுவும் படைப்பாளிக்கு நிகழ வேண்டிய அனுபவங்கள். எல்லா அனுபவங்களும் கதையாவதில்லை. பண்டிதர் ரூபின் வர்மாவையும், அந்தோணிக்குட்டி அண்ணாவியையும், இன்பக்கவிராயரையும் அறிமுகம் செய்துவைக்கும் மடக்கலப் பிள்ளையை சந்திப்பது ஜோவின் படைப்புக்கான விதைதானே?
‘‘கவிதை எழுதாதீங்க; வாழ்க்கையை எழுதுங்க’’ என்று தமிழினி வசந்தகுமார் இவரிடம் ஏன் சொல்ல வேண்டும்? “உன்னை யார் அங்கு படிக்க அனுப்பியது மகனே. இரண்டு ஆண்டுகள் முழுதாக அங்கே இருந்து வா போதும்” என்று லயோலா கல்லூரியில் படிக்கும் தன் பிள்ளைக்கு ஒரு மந்திரக் கடிதத்தை ஜோவின் ஆத்தா எழுதக் காரணம் என்ன? அனுபவங்களின் கதவுகளை மூடிவிடாதே மகனே என்றுதானே பொருள். ஜோ மும்பையில் வாழவில்லையென்றால் ‘அஸ்தினாபுரம்’ நாவல் ஏது? ஜோ சொல்கிறார், “படிப்பில் லயோலா கல்லூரி பல்வேறு வாய்ப்புகளைத் திறந்து காட்டியதென்றால், வேலைப் பரப்பில் விதவிதமான உலகுகளைக் கண்முன்னே கொண்டுவந்து காட்டியது மும்பை.”
ஜோவின் வாழ்வில் தல்மேதா தாத்தாவின் பங்களிப்பும் பெரிது. பாளையங்கோட்டை சேவியர் பள்ளி யில் ஜோவைச் சேர்த்ததோடு நில்லாமல் ஒவ்வொரு மாதமும் வந்து பார்த்தது மனித உறவு சார்ந்தது மட்டுமல்ல. ஒரு கதைசொல்லியின் வருகையாக அது அமைந்ததுதான் கவனிக்கத் தக்கது.
நிஜ வாழ்வில் கொஞ்சமாகப் புனைவைக் கலந்து புதிய எழுத்தை அவரால் தர முடிகிறது. பால் தயிராவதற்குக் கொஞ்சம் மோர் போதும். அனுபங்கள் திரட்டிய எழுத்தே அவரது நாவல்கள். ஜோவின் கட்டுரைகளைப் படித்துவிட்டு அவரது நாவல்களை வாசித்தால் கதாபாத்திரச் சித்தரிப்புகள் மேலும் வியக்க வைக்கும். அனுபவம் எப்படி எழுத்தாகிறது என்ற விந்தைக்கு விடையும் கிடைக்கும். நினைவுகளை இன்றைய வாழ்விலிருந்து அதிரவிடுகிறார். அதனால் ஜோவின் கட்டுரை மொழி கதைபோல மணக்கிறது.
- க.வை. பழனிசாமி, எழுத்தாளர்,
தொடர்புக்கு: kavai.palanisamy@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT