Published : 16 Dec 2017 10:41 AM
Last Updated : 16 Dec 2017 10:41 AM

பரணிவாசம்: ஒரு ஊரின் கதை

ஒரு ஊரின் கதை

கோ

வில்பட்டி என்ற சிறிய நகரில் படைப்பாளிகளுக்குப் பஞ்சமில்லை. கி.ரா. என்ற வாழைமரத்தின் பக்கக் கன்றுகள் போல பூமணி, தேவதச்சன், ச.தமிழ்ச்செல்வன், கோணங்கி, சோ.தருமன், கௌரிசங்கர், அப்பாஸ், உதயசங்கர், அப்பணசாமி, ஜோதிவிநாயகம், சமயவேல், மாரிஸ், வித்யாசங்கர், கிருஷி, பிரதீபன், மனோகர் (நடிகர் சார்லி ) எனப் பலரும் தோன்றியிருந்த தருணம். எண்பதுகளின் தொடக்கத்தில், இந்தப் படைப்பாளிகளில் பலர் சேர்ந்து ‘தர்சனா’ என்றொரு வீதி நாடக இயக்கத்தை நடத்தினார்கள். நடிப்பவர்கள் எல்லோருமே படைப்பாளிகள் என்பது முக்கியமான அம்சம். ஊரின் மத்தியில் இருக்கும் காந்தி மைதானத்தில் இரவு எட்டு மணிக்கு அந்தகார இருளில் அமர்ந்து, நூல் விமர்சனம் செய்வது, நாடகத்தை உருவாக்குவது, ஒத்திகை பார்ப்பது எல்லாம் நடக்கும். சில மழைக்கால இரவுப் பொழுதுகளில், பலரின் அந்தரங்கமான காதல் அனுபவக் கீற்றுகளும் வெளிப்படும். மாறுபட்ட கருத்துகள் கொண்டபோதிலும், எல்லோருடனும் இயல்பாய் பேசவும் விவாதிக்கவும் முடிந்த காலம் அது. ஓவியர் பிக்காஸோவுக்கு நூற்றாண்டு விழா நடத்தினோம். கார்ட்டூன் கண்காட்சி நடத்தினோம். யுத்த எதிர்ப்புக் கண்காட்சி, உலக சமாதான கண்காட்சியெல்லாம் நடத்தினோம். த்வனி, தேடல் போன்ற சிறு பத்திரிகைகள் நடத்தி கைகளைச் சுட்டுக்கொண்ட அனுபவங்களும் உண்டு. அது அப்படித்தானே? அந்த காலகட்டத்தின் அருமையான மனிதர்களைப் பற்றியும், உடன் இருந்த படைப்பாளிகள் பற்றியும், அவர்கள் அறிமுகப்படுத்திய அல்லது விவாதித்த நூல்களின் பின்னணியோடு எழுத்தாளர் உதயசங்கர் எழுதியுள்ள நூல் ‘முன்னொரு காலத்தில்’. இந்த நூலை வாசிக்கும்போது, சிங்கிஸ் ஐத்மாத்தவும் ஓவியர் பிக்காஸோவும் செகாவும் குப்ரினும் தாஸ்தாவ்ஸ்கியும் உங்களுடன் வருவார்கள். ஸ்டெப்பி புல்வெளியில் நீங்களும் அவர்களோடு பேசியபடி நடப்பீர்கள். வாழ்வின் வசந்தமான பதின்பருவ அனுபவங்களைச் சுவாரசியமான நினைவுகளாய்ப் பதிவுசெய்திருக்கிறார் உதயசங்கர்.

தொடர்புக்கு: narumpu@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x