Published : 19 Jul 2014 12:44 PM
Last Updated : 19 Jul 2014 12:44 PM
‘ஆர்ச்சி இறந்துவிட்டான்'. இதுதான் கடந்த சில நாட்களாகப் பரபரப்பாகப் பேசப்படும் செய்தி. ஒரு புகழ்பெற்ற தலைவரின் இறப்போ, நடிகரின் இழப்போ தரக்கூடிய அதிர்ச்சி மதிப்பு இந்தச் செய்திக்கும் உண்டு. இத்தனைக்கும் ஆர்ச்சி (தமிழில் அவ்வளவு பரிச்சியமில்லாத!) காமிக்ஸ் கதாபாத்திரம்தான். காமிக்ஸ் பாத்திரம் தொடர்பான செய்திகள் இத்தனை முக்கியத்துவம் பெறுவது, மேற்கத்திய நாடுகளில், குறிப்பாக அமெரிக்க வாசகர்கள் மத்தியில் மிகவும் இயல்பான விஷயம்.
புகழ்பெற்ற காமிக்ஸ் பாத்திரங்களான பேட்மேனும் அவரது உதவியாளர் ராபினும் தன்பாலின உறவாளர்கள் என்ற செய்தி 1950-களில் பரபரப்பாகப் பேசப்பட்டது. அவெஞ்சர்ஸ் தொடரின் சூப்பர் ஹீரோக்களில் ஒருவரான தோரின் இடத்தில் இப்போது ஒரு பெண் இருக்கிறார். கையில் கனமான சுத்தியலைச் சுமக்கும் அந்த முரட்டுப் பாத்திரத்தில் இனி நிரந்தரமாக அந்தப் பெண்தான் இருப்பார் என்று மார்வெல் காமிக்ஸ் ஆசிரியர் வில் மோஸ் தெரிவித்திருக்கிறார். இதுபோன்ற தகவல்கள் நிஜ மனிதர்கள் பற்றிய கிசுகிசுக்கள் போல, காமிக்ஸ் காதலர்கள் மத்தியில் நெடுங்காலம் உலாவும்.
காமிக்ஸ் பாத்திரங்கள் இறந்துபோவதும் புதிய சமாச்சாரம் அல்ல. ஸ்பைடர்மேனாக வரும் பீட்டர் பார்க்கர், கேப்டன் அமெரிக்காவாக வரும் ஸ்டீவ் ரோஜர்ஸ் ஆகியோரும் இதைப் போல் ஏற்கனவே ‘இறந்தவர்கள்'தான். அந்த வரிசையில் தற்போது ஆர்ச்சி சேர்ந்திருக்கிறார். 1940-களில் தொடங்கப்பட்ட காமிக்ஸ் பாத்திரம் அது. அமெரிக்காவில் உள்ள ரிவெர்டேல் என்ற கற்பனை நகரில் வசிக்கும் பதின்வயது நண்பர்கள் ஆர்ச்சி, வெரோனிகா, பெட்டி கூப்பர், ஜக்ஹெட் ஜோன்ஸ் மற்றும் ரெக்கி மாண்டில். கவர்ந்திழுக்கும் பாத்திரமான ஆர்ச்சியை யார் திருமணம் செய்துகொள்வது என்பதில் தோழிகள் வெரோனிகாவுக்கும் பெட்டிக்கும் இடையில் பலத்த போட்டியும் உண்டு. சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் கெவின் கெல்லர் என்ற இளைஞனும் அந்த நண்பர்கள் குழாமில் சேர்ந்தான். கெவின் ஒரு தன்பாலின உறவாளர். ஆர்ச்சிக்கும் கெவினுக்கும் இடையில் தன்பாலின உறவு உண்டோ என்று சந்தேகிக்க வைக்கும் அளவுக்குக் கதையில் திருப்பங்கள் ஏற்பட்டன. இருவரும் முத்தமிட்டுக்கொள்ளும் காட்சியும் பரபரப்பாகப் பேசப்பட்டது.
பல ஆண்டுகளாகப் பதின்பருவ காலத்திலேயே இருந்த இவர்கள் சமீபகாலமாக நடுத்தர வயதுக்குள் வந்திருந்தனர். இந்த நிலையில்தான், ‘லைஃப் வித் ஆர்ச்சி' என்ற காமிக்ஸ் தொடரில், துப்பாகியால் சுடப்பட்டு உயிரிழக்கிறான் ஆர்ச்சி. அதுவும் தனது நண்பன் கெவின் கெல்லருக்காக!
கதைப்படி அமெரிக்காவின் செனட்டராகத் தேர்ந்தெடுக்கப்படும் கெவின், அமெரிக்காவில் துப்பாக்கிக் கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்தப் பாடுபடுகிறான். அவனைத் தீர்த்துக்கட்டத் திட்டமிடுகிறது சமூக விரோதக் கும்பல் ஒன்று. திட்டப்படி கெவினைப் பின்தொடரும் ஒரு மர்ம நபர் அவனைத் துப்பாக்கியால் சுடும்போது குறுக்கே புகுந்து துப்பாக்கி ரவையைத் தன் மார்பில் வாங்கிச் சரிகிறான் ஆர்ச்சி. கதை இத்துடன் முடியவில்லை. அவனது இறப்புக்கு ஓராண்டுக்குப் பின் நண்பர்கள் கல்லறையில் அவனுக்கு அஞ்சலி செலுத்தும் காட்சியும் உண்டு. “இது பரபரப்புக்காக செய்யப்பட்ட விஷயமல்ல. பரவிவரும் துப்பாக்கிக் கலாச்சாரத்தின் விளைவுகளைக் காட்டும் பாடம்” என்று ஆர்ச்சி காமிக்ஸ் பதிப்பாளர் ஜான் கோல்டுவாட்டர் தெரிவித்திருக்கிறார்.
“ஆர்ச்சி ஒரு சூப்பர் ஹீரோ அல்ல. காயம் பட்டால் ரத்தம் ஒழுகும் சாதாரண மனிதன். ஆர்ச்சி போன்ற அன்புக்குரிய கதாபாத்திரம் இறந்துபோனால் அதன் தாக்கம் எப்படி இருக்கும். அப்படித்தான் சக மனிதனின் இறப்பும்” என்பது ஜான் கோல்டுவாட்டரின் வாதம்.
ஆர்ச்சி ரசிகர்கள் இந்த அதிர்ச்சியை எப்படித் தாங்கிக்கொள்வார்கள் என்பது கேள்விக்குரிய விஷயம்தான்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT