Last Updated : 01 Nov, 2017 09:52 AM

 

Published : 01 Nov 2017 09:52 AM
Last Updated : 01 Nov 2017 09:52 AM

எமதுள்ளம் சுடர்விடுக! - 13: இரண்டாவது சுதந்திரப் போர்!  

இரண்டாவது சுதந்திரப் போர்!  

ந்திரா காந்தி, தனக்கு ஏற்பட்ட நெருக்கடியைத் தேசத்துக்கு ஏற்பட்ட நெருக்கடியாக விரிவாக்கம் செய்தார். விளைவாக தலைவர்கள் கைது, மிசா, பத்திரிகைத் தணிக்கை என்று இந்தியா மிக மோசமான அரசியலைச் சந்தித்தது. விளைவாக, பிரதமர் கனவை வாழ்நாள் கனவாகக் கொண்டிருந்த மொரார்ஜி தேசாய் ஜனதா கட்சி சார்பில் பிரதமரானார்.

மொரார்ஜி, விடுதலைப் போராட்ட வீரர். நேர்மை, ஒழுக்கம் இரண்டையும் தன் இரு கண்களாகக் கொண்டவர் என்பார்கள். ஆனால், பல கலாச்சாரங்கள், வரலாறுகளைக் கொண்ட இந்தியாவின் பன்மைத்துவத்தை அவர் ஏற்கவும், உணரவும் தயாராக இல்லை.

இந்தியப் பகுதியை ஆங்கிலேயர்கள் ஆண்டபோது, புதுச்சேரிப் பகுதியைப் பிரெஞ்சுக்காரர்கள் ஆண்டார்கள். சுமார் 250 ஆண்டுகள் பிரெஞ்சியருக்குக் கீழ் அவர்களின் மொழி, பண்பாடு, வாழ்க்கை முறைகளோடு ஒன்றி வாழ்ந்து வந்தவர்கள் புதுவை மக்கள். புதுச்சேரியைப் ‘பிரஞ்சுக் கலாச்சாரத்தின் ஜன்னல்’ என்று நேரு குறிப்பிட்டார். புதுச்சேரியின் தனித்துவம் காக்கப்படும் என்று, 1954-ம் ஆண்டு புதுச்சேரி இந்தியாவுடன் இணையும்போது, அன்றைய இந்தியப் பிரதமர் நேரு உத்தரவாதம் கொடுத்திருந்தார். பிரெஞ்சு அரசும், இந்திய அரசும் ஒப்பந்தம் செய்துகொண்டபோது, புதுச்சேரி மாநிலத்தில் எந்த மாற்றம் நிகழ்ந்தபோதும் புதுவை மக்களின் அபிப்பிராயத்தை அறிந்தே, அவர்கள் ஒப்புதலோடு மாற்றம் நிகழும் என்பதும் ஒப்பந்தம். அன்றைய புதுச்சேரி மாநிலம் என்பது, தமிழகப் பகுதியான காரைக்கால், கேரளப் பகுதியில் இருந்த மாகி, ஆந்திரப் பகுதியில் இருந்த ஏனாம், கொல்கத்தாவையொட்டி இருந்த சந்திர நாகூர் ஆகியவைச் சேர்ந்த நிலப் பரப்பாகும்.

வெறுப்பை காட்டிய மொரார்ஜி

இந்த வரலாற்றை மொரார்ஜி அறிவார். என்றாலும், மிக மூர்க்கமாகவும் தன்னிச்சையாகவும் புதுச்சேரி மாநிலத்தை அதையொட்டி இருக்கும் மாநிலங்களோடு இணைத்து, கரைந்து போகச் செய்து, ஒரு தாலுக்காவாக மாற்றலாம் என முடிவு எடுத்துள்ளார் என பத்திரிகைச் செய்தி வெளியாகின. இதற்கு மொரார்ஜி உணர்ந்த காரணங்கள் சில. ஒன்று, இந்தச் சின்னஞ்சிறு மாநிலங்கள் (டெல்லி, புதுச்சேரி போன்றவை) இந்திய அரசுக்கு மிகுந்த செலவு வைக்கின்றன என்பதாகும். இந்த மாநிலங்களை மக்கள் வாழும் இடமாகவே அவர் நினைக்கவில்லை. அவர் இந்தியாவின் நிதி அமைச்சராக இருந்த காலத்திலேயே, தன் வெறுப்பைக் காட்டியிருந்தார்.

பின் நாட்களில் புதுவை முதலமைச்சரான ப.சண்முகம், ஒரு விஷயத்தை நினைவுகூர்ந்தார். ‘‘நான் அப்போ விவசாயத்துறை அமைச்சர். புதுச்சேரியில் நீர்ப்பாசன வசதிகள், விவசாய அபிவிருத்திக்காக போதிய நிதி கேட்டு கோப்புகளைக் கொடுத்தேன். அவர் அதைப் பிரித்துக்கூட பார்க்கவில்லை. எங்களைக் கண்கொண்டு பார்க்காமல் கையெடுத்துக் கும்பிட்டு வழியனுப்பி வைத்தார்.’’

ooradangu

அதோடு புதுச்சேரி அரசியல் பற்றியும் மொரார்ஜிக்கு மரியாதை இல்லை. அதற்குக் காரணங்கள் இருந்தன. இந்தியாவில் முதல் முதலாகக் ‘கட்சி தாவல் அசிங்கத்தைத்’ தொடங்கி வைத்ததே புதுச்சேரிதான். புதுச்சேரி சுதந்திரம் அடைந்த 1954-க்குப் பிறகு, 1955-ல் பிரதிநிதித்துவ சபைத் தேர்தல் நடந்தது. காங்கிரஸ் கட்சியும், மக்கள் முன்னணியும் பிரதான கட்சிகள். மொத்தம் 39 தொகுதிகள். மக்கள் முன்னணி 21 இடங்களையும் காங்கிரஸ் 17 இடங்களையும் பெற்றன. அப்போது தமிழகத்தில் நன்றாக ஆட்சி நடந்தது. புதுச்சேரியிலும் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் நன்றாக இருக்கும் என்று காமராஜர் நினைத்தார். கம்யூனிஸ்ட்டுகளிடம் ஆட்சி போகக் கூடாது என்பது கர்மவீரரின் கருத்து.

அப்போதுதான் வரலாற்றுப் பிழை நடந்தது. மக்கள் முன்னணியைச் சேர்ந்த அ.அருள்ராஜ், வி.என்.புருஷோத்தமன், எம்.என்.யூசுப் ஆகிய மூவர் காங்கிரஸுக்குத் தாவினார்கள். காங்கிரஸ் பலம் 20 ஆகி, அது ஆட்சி அமைத்தது. இந்த அரசியல் இழிவு, புதுச்சேரி அரசியலில் வெகு காலம் தொடர்ந்தது. இதுவும் பிரதமர் மொரார்ஜிக்குப் புதுச்சேரி மேல் மதிப்பின்மையை ஏற்படுத்தியிருக்கும். எல்லாம் ஒழுங்காக நடக்க வேண்டும் என்று நினைக்கிற ஒழுக்கவாதிக்குப் புதுச்சேரியின் அன்றைய அரசியல் ஒழுக்கமின்மை ஒவ்வாமையை ஏற்படுத்தியது.

பரிசீலனையில் இணைப்பு

பிரதமர், ஜனாதிபதியிடம், புதுச்சேரியை அண்டையில் இருக்கும் தமிழகத்தோடு இணைத்துவிடலாம் என்று சொன்னதாக ஒரு செய்தி பத்திரிகையில்வெளிவந்தது. புதுச்சேரித் தலைவர்கள் விழித்துக்கொண்டார்கள். 19.9.1978 அன்றைய ‘இந்து’ பத்திரிகைச் செய்தி ஒரு மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 18.1.1979 அன்று மொரார்ஜி சென்னைக்கு வருகை தந்தார். எம்.ஜி.ஆர். முதலமைச்சராக அவரை வரவேற்றார். அப்போது பத்திரிகையாளர்கள், தமிழகத்தோடு புதுச்சேரியை இணைத்துவிடுவீர்களா என்று கேட்டார்கள். ‘‘இணைப்பு பரிசீலனையில் இருக்கிறது’’ என்றார் பிரதமர்.

பிரச்சினை கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இதன் விளைவாக, புதுச்சேரி மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்தது. சுதந்திரத்துக்காக புதுவை மக்கள் போராடியது போலவே, இணைப்பு எதிர்ப்புப் போராட்டமும் நிகழ்ந்தது. காவல்துறை வன்முறை, அத்துமீறல், துப்பாக்கிச் சூடு, உயிர் பலி, 144 தடைச்சட்டம், ஊரடங்கு உத்தரவு என்று மிகப்பெரிய வன்முறை மக்கள் மேல் நிகழ்த்தப்பட்டது.

நெருப்பில் ஊற்றிய எண்ணெய்

மிக முக்கியமான, 1979 ஜனவரியையொட்டி நிகழ்ந்த சுமார் இரண்டு வார அரசியல் போராட்ட நிகழ்வைப் பற்றிய வரலாற்று நூல் ஒன்று ‘ஊரடங்கு உத்தரவு - புதுச்சேரி அரசியல் போராட்ட வரலாறு’ என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது. மிகவும் ஆராய்ச்சிபூர்வமாகவும், ஆதாரத்தோடும், கள ஆய்வோடும் வெளிவந்துள்ள இந்த அரிய வரலாற்று நூலை பி.என்.எஸ்.பாண்டியன் எழுதியுள்ளார். வெர்சோ பேஜஸ் (புதுச்சேரி - 8 செல்: 98946 60669) வெளியிட்டுள்ள இந்தப் புத்தகம், புதுச்சேரி வரலாற்றை, அதன் நேற்று, இன்று, நாளைகளையும் மிக விரிவாகப் பேசியிருக்கிறது. பி.என்.எஸ்.பாண்டியன், புதுச்சேரி பத்திரிகையாளராகப் பணியாற்றுகிறார்.

எரிகிற நெருப்பில் எம்.ஜி.ஆர். எண்ணெய் ஊற்றி மேலும் போராட்டத்தை வளர்த்தார். மொரார்ஜி சார்ந்திருக்கும் ஜனதா கட்சியோடு தேர்தல் கூட்டணி வைத்தார் எம்.ஜி.ஆர். இந்தத் தவறான அரசியல் காரணமாக, அடுத்து வந்த புதுச்சேரி தேர்தலில் மிகவும் மோசமான தோல்வியை முதல்முறையாக அவர் சந்தித்தார்.

குமரி அனந்தன் அவையோசைக்கு அளித்த பேட்டியில் கூறியது: ‘‘பாண்டிச்சேரி விவகாரம் தீப்பிடித்து எரிகிறது. இதற்குக் காரணம் பிரதமர் தேசாயும், எம்.ஜி.ஆரும்தான். பாண்டிச்சேரி விவகாரம் பற்றி எம்.ஜி.ஆர்.நெல்லையில் பேசும்போது, ‘குழந்தைக்கு மருந்து கொடுக்கும்போது கசக்கும் என்று குடிக்க மறுத்தால் விட்டுவிடுவதா, ஊசி போட்டால்அழும் என்பதற்காக ஊசி போடாமல் விடுவதா? என்று சொல்லியதோடு நிறுத்தவில்லை எம்.ஜி.ஆர். ‘பாண்டிச்சேரி முதலமைச்சரும், 8 கோடி மக்கள் தொகை கொண்ட உத்தரப்பிரதேச முதலமைச்சரும் சமமா? அடுத்த முதலமைச்சர்கள் கூட்டம் நடக்கும்போது உத்தரப்பிரதேச முதல்வருடனும், 5 கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டு முதலமைச்சருடனும் பாண்டிச்சேரி முதலமைச்சர் சமமாக உட்கார முடியுமா?’ என்றும் பேசியுள்ளார் எம்.ஜி.ஆர். இந்தப் பேச்செல்லாம் சேர்ந்துதான் புதுவை மக்களைக் கொந்தளித்து எழச் செய்திருக்கிறது..’’ என்று பேட்டி கொடுத்தார் குமரி அனந்தன்.

கண்டதும் சுட உத்தரவு

ஜனதா, அ.தி.மு.க. இரண்டு கட்சிகளைத் தவிர, மற்ற கட்சிகளும் தலைவர்களும் இணைந்து ‘புதுச்சேரி இணைப்பு எதிர்ப்பு இயக்கம்’ கண்டனர். போராட்டக் குழுவும் அமைக்கப்பட்டது. 1979 ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்று அந்தப் போராட்டக் குழு தீர்மானித்தது. மக்கள் சுத்தமாக குடியரசு தின விழாவைப் புறக்கணித்தார்கள். மாணவர்கள் எதிர்க் கோஷம் போட்டார்கள். போலீஸ் தடியடி நடத்தியது. புதுச்சேரிப் போலீஸும் இணைப்புக்கு எதிரானது என்பதால் மத்திய காவலர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள்.

போலீஸ் வாகனங்கள் எரிக்கப்பட்டன. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கண்டதும் சுட உத்தரவுகள். நகரம் மனித நடமாட்டம் அற்றுப்போனது. துப்பாக்கிச் சூட்டில் இருவர் இறந்தார்கள் என்று அரசு சொன்னது. பலர் இருக்கலாம். ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் ஊர்களில் காவல்துறையின் வெறியாட்டம் மிகக் கொடுமையானது. பெண்கள் மேல் பாலியல் வன்கொடுமை கட்டவிழ்த்துவிடப்பட்டது. 10 நாட்களுக்கு மேல் இந்த வெறியாட்டம் நீடித்தது.

மக்கள் தலைவர் வ.சுப்பையா, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் போராட்டம் பற்றி விரிவாகக் கடிதம் எழுதினார். நாடாளுமன்றத்தில், தி.மு.க. உறுப்பினர் ஏ.வி.பி.ஆசைத்தம்பி மிக விரிவாகவும் ஆழமாகவும் போராட்டம் பற்றிப் பேசினார். பார்வதி கிருஷ்ணன், பூபேஷ் குப்தா போன்றவர்கள் பேசிய கூர்மையான பேச்சு, ஆட்சியாளர்களை அசைத்தது. உள்துறை அமைச்சர் எச்.எம்.பட்டேல், ‘ ‘புதுச்சேரி மாநிலத்தை இணைப்பதற்கான எந்தவிதமான முன் முயற்சிகளையும் எடுக்கவில்லை. உள்ளூர் மக்களின் முடிவைப் பொறுத்தே அதற்குண்டான சாத்தியக் கூறுகள் ஆராயப்படும்!’’ என்றார்.

பொறுப்பற்ற பேச்சின் விபரீதம்

1979 ஜனவரி 21 முதல் 31 வரை புதுச்சேரியை உலுக்கிய அந்த 10 நாட்கள் மொரார்ஜியின் பொறுப்பற்ற பேச்சால் விளைந்த பெரும் சேதம். அந்த மனிதரே, 10 நாட்கள் கழித்து, ‘ ‘பாண்டிச்சேரி இணைப்பு குறித்து மத்திய அரசு முடிவு எடுக்கவில்லை’’ என்று அறிவித்தார். அதன் பிறகு புதுச்சேரி பற்றி எந்தப் புலம்பலும் அவரிடம் இருந்து வரவில்லை.

1979-ல் இணைப்பு எதிர்ப்பு போராட்டம் முடிவுற்றதருவாயில், மாநில அந்தஸ்து கேட்கும் குரல் எழுந்தது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து அளிக்கப்பட வேண்டும் எனக் கேட்டு, இப்போதும் மத்திய அரசிடம் விண்ணப்பித்துக்கொண்டே இருக்கிறது புதுச்சேரி. மத்திய அரசும் வழக்கம் போல இக்கோரிக்கையையும் புறக்கணித்துக்கொண்டே இருக்கிறது.

1979 போராட்டம், புதுச்சேரி மக்களின் போர்க்குணத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. இதனால் மக்களுக்கு எதிரான எதையும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது உறுதிப்பட்டிருக்கிறது மீண்டும். இது புதுச்சேரி மக்களின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்.

- சுடரும்...

எண்ணங்களைப் பகிர: writerprapanchan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x