Published : 25 Nov 2017 10:18 AM
Last Updated : 25 Nov 2017 10:18 AM
வரலாற்றின் பக்கங்களில் மறக்கடிக்கப்பட்ட ஏராளமான பெயர்களில் ஒருசிலரையாவது தெரிந்துகொள்ள முயற்சிப்போம் என்ற அறிவிப்போடு நாளிதழ் ஒன்றின் இணைய தளத்தில் சாரு நிவேதிதா எழுதிய கட்டுரைத் தொடரின் புத்தக வடிவம் இது. சார்வாகன், கு. அழகிரிசாமி, தி.ஜ.ர., திரு.வி.க., சக்தி கோவிந்தன், ந. சிதம்பர சுப்பிரமணியன், ஆர். சண்முகசுந்தரம், உ.வே.சா., அசோகமித்திரன், ந.பிச்சமூர்த்தி, அரு.ராமநாதன், ஆ. மாதவன், எஸ். சம்பத், எம்.வி. வெங்கட்ராம், தஞ்சை ப்ரகாஷ், க.நா.சு. ஆகிய 16 ஆளுமைகளை அவர்களது வாழ்க்கைக் குறிப்பு, தனித்தன்மை, அவர்களின் சிறந்த படைப்புகள் என்று விரிவாக அறிமுகம் செய்கிறது இத்தொகுப்பு.
தொழுநோயாளிகளுக்கு அறுவைச் சிகிச்சை செய்த ஸ்ரீனிவாசன், ‘சார்வாகன்’ என்ற பெயரில் 41 சிறுகதைகள், 3 குறுநாவல்களையும் எழுதியவர். காந்திய இயக்கமோ, திராவிட இயக்கமோ தோன்றிய காலத்தில் அதற்கு உயிர் கொடுத்தவர்கள் ஒதுங்கிக்கொள்ள, வேடிக்கை பார்த்தவர்கள் மாலை மரியாதைகளைப் பெறுவதைச் சொல்லும் சார்வாகனின் ‘அமரபண்டிதர்’ குறுநாவலை சாரம் பிழிந்து தருகிறார் சாரு நிவேதிதா. ‘முடிவற்ற பாதை’ என்ற கதையில் கதிர்வேலு என்ற தபால்காரருக்குக் குழந்தைகள் அதிகம், பொறுப்பு அதிகம் என்றாலும் இன்னொருவர் பணத்தைத் தொடக் கூடாது என்ற நேர்மையுடன் செயல்படுவதை அந்தத் தன்மை குறையாமல் காட்டியுள்ளார்.
சிறுகதை, இசை, நாடகம், கட்டுரை, மொழிபெயர்ப்பு, ஓவியம் ஆகிய துறைகளுடன் பத்திரிகை ஆசிரியராகவும் இருந்த கு. அழகிரிசாமியின், ‘இரண்டு பெண்கள்’ சிறுகதையைப் போலவே அது குறித்து சாரு எழுதி யிருப்பது ஈர்க்க வைக்கிறது. எதிர் வீட்டிலிருக்கும் பெண் தொடர்ந்து புத்தகங்களை வாங்கிப் படித்தாலும் காதலிக்கத் தோன்றாத கதாநாயக இளைஞர், கோடிவீட்டு கனகலட்சுமி (பெயரல்ல – அழகி என்பதற்கான வர்ணனை) கேட்டதும் டைப்ரைட்டரைக் கொண்டு போய் கொடுத்து, பிறகு வாங்கி வந்ததால் வீட்டைக் காலி செய்ய நேரும் அவலமும் அந்தத் தெருக்கார ஆண்களின் மன வக்கிரமும் நன்கு வெளிப்படுத்தப் படுகிறது.
உ.வே.சா. பற்றிய கட்டுரை அற்புதமான நினைவாஞ்சலி. அவரைப் பற்றி எழுத ஆயிரம் பக்கங்கள்கூடப் போதாது, நூறு பேர் செய்ய வேண்டிய வேலையைத் தனி ஒருவராகச் செய்திருக்கிறார் உ.வே.சா., நடமாடும் பல்கலைக்கழகம் போலச் செயல்பட்டிருக்கிறார் என்றெல்லாம் சாரு மிகையில்லாமல் எழுதியிருக்கிறார். குறிஞ்சிப்பாட்டுச் சுவடியில் 99 மலர்களின் பெயர்கள் வரும் இடத்தில் சில வரிகளைக் காணவில்லை என்றதும் அதைத் தேடும் வேலையில் இறங்குகிறார் உ.வே.சா. எல்லா இடங்களிலும் தேடியாகிவிட்டது, எஞ்சியிருப்பது தருமபுர ஆதீனம் மட்டுமே.
திருவாவடுவதுறை ஆதீனத்துக்கும் தருமபுர ஆதீனத்துக்குமான பகை நீதிமன்றம் வரை போயிருந்த சமயம். அந்த ஒரு வரியைக் கண்டு பிடித்துவிட வேண்டும் என்பதற்காக, திருவாவடுதுறை ஆதீனத்தின் ஆதரவைப் பெற்ற உ.வே.சா. அங்கும் செல்ல முடிவெடுக்கிறார். இவரைப் பற்றி நன்கு அறிந்த தருமபுர ஆதீனகர்த்தர் அனுமதி தருகிறார். காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை தேடியும் கிடைக்காத நிலையில், தனியே எடுத்து வைத்த சுவடிகளில் இருக் கிறதா என்று பார்க்குமாறு ஆதீனத்தின் ஊழியர் கூறியதும் அதையும் படித்துப் பார்த்து, அதில் இருந்த பெயர்களைக் கண்டு பரவசமடைந்து முழுமையாக பதிப்பித்து முடித்ததை நெகிழ்ச்சியுடன் சாரு எழுதுகிறார்.
எம்.வி.வெங்கட்ராம் பற்றிய கட்டுரையையே, “என் கர்வம் அழிந்துவிட்டது, டிரான்ஸ்கிரஸிவ் பிக்ஷன் எழுதிய இரண்டு மூன்று ஆட்களில் நானும் ஒருவன் என்ற கர்வம் என்னை விட்டு அகன்றுவிட்டது” என்று தொடங்கி, எம்.வி. வெங்கட்ராமின் ‘காதுகள்’ கதையை விவரித்திருக்கிறார். சமூகம் எதையெல்லாம் குற்றம் என்றும் பாவம் என்றும் ஒதுக்கி வைத்திருக்கிறதோ, விவாதிப்பதற்குக் கூட அஞ்சுகிறதோ அதை எழுதுவதே ‘டிரான்ஸ்கிரஸிவ்’ என்று சுருக்கமாக விளக்கவும் செய்திருக்கிறார்.
“பேசாமலேயே விழியால் நட்பைச் சுரக்கும் உள்ளம். என்னிடம் மட்டும் இல்லை. எல்லோரிடமும் இப்படித்தான். எந்த மனிதனிடமும் வெறுப்போ, கசப்போ தோன்றாத, தோன்ற முடியாத மனது இவனுக்கு. வியாபாரத்தில் எப்படி இவன் முன்னுக்கு வரப் போகிறானோ? யோகியின் உள்ளம் இவனுக்கு. அதை மறைப்பதற்காகக் கடை வைத்திருக்கிறானோ இன்னும் ஸ்திரப் படுத்திக் கொள்வதற்காக, எல்லாவற்றையும் ஒரே யடியாக ஒரு நாள் உதறி எறிந்துவிட்டுப் போவதற்காக வைத்திருக்கிறானா, புரியவில்லை” என்று வெங்கட்ராம் குறித்து தி.ஜானகிராமன் எழுதியிருப்பதை அப்படியே மேற்கோள் காட்டியிருக்கிறார் சாரு.
இளம் வாசகர்கள் இலக்கிய முன்னோடிகளைத் தேர்ந்தெடுத்துப் படிக்க சாருவின் இந்தப் புத்தகம் நல்லதொரு வழிகாட்டி.
பழுப்பு நிறப் பக்கங்கள், சாரு நிவேதிதா விலை: ரூ.240. | கிழக்கு பதிப்பகம், சென்னை-14, 044-42009603. |
-வ.ரங்காசாரி,
தொடர்புக்கு: rangachari.v@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT