Published : 19 Jul 2014 10:00 AM
Last Updated : 19 Jul 2014 10:00 AM
ஜூலை 27 - நினைவுதினம்
கடலலையின் ஓசையைப் போல ஆரவாரமான பேச்சு. மௌனி, க.நா.சு. எம்.வி.வி. புதுமைப்பித்தன், கு.ப.ரா. தி.ஜானகிராமன், ஆர். சண்முக சுந்தரம், கரிச்சான் குஞ்சு, கி.ராஜநாராயணன் போன்ற ஆளுமைகளைப் பற்றி தஞ்சை ப்ரகாஷ் மூலமாகத்தான் நிறையக் கற்றுக்கொண்டோம். ஈஷா உபநிஷத்தில் மேற்கோள் காட்டுவார். தலையும் புரியாமல் வாலும் தெரியாமல் தவிக்கும் எங்களை நிதானப்படுத்தி பிரபஞ்ச ரகசியத்தை விளக்குவார். பளிச்செனப் புரியும்.
இந்திய மரபில் எப்போதுமே ஆசான்கள் முக்கியமானவர்கள். அவரின் சொற்கள் ஒளிமிக்கவை தான். நாங்கள் எங்களுடைய ஆசானை முதல் சந்திப்பிலேயே கண்டுகொண்டோம். தன்னிடமுள்ள பொக்கிஷங்களை அப்படியே அள்ளி வழங்கிவிட்டு வெறுமையாய் நிற்க வேண்டும் - ஞானத்தையும்கூட என்பார்.
தஞ்சாவூர் மங்களாம்பிகாவில் காபி சாப்பிட்டுவிட்டு பிளாட்பாரக் கடைகளில் பரப்பியிருக்கும் பழைய சினிமாப் பாட்டுப் புத்தகங்களில் சிரத்தையாகத் தேடி இரண்டொரு புத்தகங்களைத் தேர்வு செய்வார். “ராகத்திலே அனுராகம் மேவினால் ஜெகமே ஊஞ்சலில் ஆடாதா” என்று ராஜா குரலில் இழைத்துப் பாடுவார். “இதப் பாடவும் கேட்கவும் வரம் வாங்கியிருக்க வேண்டும்” என்று சங்கீத நுணுக்கங்களை அலசுவார். ஓஷோ பற்றிப் பேசுவார். ஜே. கிருஷ்ணமூர்த்தியைப் பற்றிப் பேசுவார். இரண்டு பேரும் நழுவிப்போன இடங்களை விவரிப்பார். அவர் கதைசொல்லி மட்டுமல்ல. உரையாடல்காரர். சில நேரம் பேச்சு மேலோங்கிப் போய்விடும். திகட்டல் இருப்ப தில்லை.
“ஒரு பறவையைப் பார். அதற்குப் பாதை கிடையாது. வானவெளியில் நெடுஞ்சாலைகள் இல்லை. காலடித் தடங்களும் இல்லை. வானவெளியின் பொருள் எல்லையற்ற சுதந்திரமே. அதனால் பறவையைப் போலச் சுயமாக இருக்க வேண்டும். தீர்மானிக்கும் அம்சமாக இருப்பவன் நீயேயன்றி வேறு யாருமில்லை. எழுது, எதை வேண்டுமானாலும் எழுது. உன் செம்மையான முயற்சியால் அது தனக்குரியதை ஏற்றுப் பிரமாதமாக ஆகிவிடும்” என்று சொல்வார்.
இன்றைக்கு எழுத்துலகில் பிரமாதமாக இருக்கும் பலரும் ப்ரகாஷ் பள்ளியில் பயின்றவர்கள். ஒரு நாளேனும் ப்ரகாஷ் உடனான சந்திப்பு நிகழ்ந்திருக்கும். ஒரு மணிநேரச் சந்திப்புகூடப் போதுமானதுதான். இன்றைக்கு நிறைய பேர், ‘ப்ரகாஷுடன் இருந்தபோது’ என்று மேடையில் பேசுகிறார்கள். உண்மையில் இவர்களில் பலர் ப்ரகாஷைச் சந்தித்ததே கிடையாது. இது ப்ரகாஷ் என்ற ஆசானின் வெற்றிதான்.
அவர் பைபிளைக் கரைத்துக் குடித்தவர். எந்த இடத்தில் கேட்டாலும் சொல்வார். நான் சரியான கிறிஸ்துவன்தான் என்பார். ஆனால் கிறிஸ்துவத்தைக் கேள்வி கேட்கும் அவரை கிறிஸ்துவர்கள் அங்கீகரிக்கவில்லை. சர்ச்சுக்குப் போனது எனக்குத் தெரிந்து அவரது திருமணத்தன்று மட்டுமே. கோட்-சூட் அணிந்து கம்பீரமாக மங்கையர்க்கரசியுடன் நின்ற கோலம் நினைவிருக்கிறது. அப்புறம் இறுதியாக- அவருக்குத் தெரிந்தி ருக்க நியாயமில்லை- செய்ன்ட் பீட்டர்ஸ் சர்ச் கல்லறைக்கு. அங்கே இரங்கல் கூட்டம் நடந்ததே இல்லை. ஆனால் ப்ரகாஷுக்கு நடந்தது.
கார்ல் மார்க்சின் மூலதனத்தை அலசுவார். சுவைபட விளக்குவார். கொஞ்ச காலம் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்ததாக நினைவு. அப்புறம் நான் கம்யூனிஸ்ட் இல்லை என்றார். நாங்கள் ஏழெட்டுப் பேர் தலையில் குல்லாய் வைத்துக்கொண்டு ஒரு ரமலான் அன்று ஆற்றங்கரைப் பள்ளிவாசலுக்குச் சென்றோம்.
சமஸ்கிருதம் கற்றார். தேவநாதாச்சாரியார் தஞ்சாவூரில் வெண்ணாற்றங்கரையில் இருந்தார்- நானும் கூடப் போயிருந்தேன். எனக்குக் கொஞ்சம் வடமொழிப் பயிற்சி இருந்தது. ப்ரகாஷ் சிரோன்மணி பட்டம் பெற்றார். க.நா.சு.வுடன் திருவனந்தபுரம் செல்வார் அடிக்கடி. சுவாமி ஆத்மானந்தா வைச் சந்திக்க. அவரின் ஞானத் தேடல் இறுதிவரை நின்றதில்லை. போற்றப்பட்ட ஞானவான்களிடம் போதாமை தென்பட்டதால் அடுத்து அடுத்து என்று அலைந்தார்.
க.நா.சு.விடம், “உங்கள் தரவரிசைப்பட்டியல் மோசமானது. கிட்டத்தட்ட ஒரு காபிக்கடை விலைப் பட்டியல் மாதிரி. அவ்வப்போது விலைகள் மாறும்” என்று விமர்சிப்பேன். இருக்கலாம் என்று ஒற்றை வார்த்தை பதில்தான் வரும். அவரது பட்டியலில் அவருடன் மாதக்கணக்கில் அலைந்து திரியும் தஞ்சை ப்ரகாஷுக்கு இடம் இல்லை என்றபோது “உண்மைதான்” என்று பதில் வரும்.
மிஷன் தெரு, கரமுண்டார் வீடு, மீனின் சிறகுகள், கள்ளம் முதலானவை தஞ்சை ப்ரகாஷின் நாவல்கள். மேபல் போன்ற சிறந்த கதைகள், கவிதைகள் எனவும் உண்டு. இவை தமிழ் இலக்கிய உலகில் பெரிய சலசலப்பையும் கடும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியவை. அச்சேறாதவை நிறைய. சிறந்த எழுத்தாளர் ஒரு கதையில் ஜெயிக்க வேண்டும் என்பார். மௌனியின் தாக்கத்திலிருந்து அவரால் விடுபட முடியவில்லை. அப்புறம் மிக முக்கியமாக இரண்டு கையெழுத்துப் பிரதிகளை நான் பார்த்து வாசித்திருக்கிறேன். ‘புறா ஷோக்கு’, ‘வித்யாசாகரம்’. ‘படுக்கையறைக் கதைகள்’ பத்திரமாக இருக்கிறது. புறா ஷோக்கும் வித்யாசாகரமும் இன்னும் ஏராளமான கட்டுரை, கதைகளும் எங்கே யாரிடம் போனதென்று தெரியவில்லை.
அவர் ஏராளமான தொழில்கள் செய்தார். அவற்றில் ஜெயித்தாரா? இல்லை. வெங்காய வியாபாரமும், சாப்பாட்டுக் கடையும், ரப்பர் ஸ்டாம்ப் கடையும் அச்சகமும் சரிப்பட்டு வரவில்லை. ‘சும்மா’, ‘இலக்கிய வட்டம்’, ‘தனி முதலி’ ஆதியவை இவர் ஏற்படுத்தி வெற்றிகரமாக நடத்திய இலக்கிய அமைப்புகள். ‘ஒளிவட்டம்’ என்று கூட நடத்தினார். மத்திய, மாநில அரசு உத்தியாகங்களும் பார்த்தார். எந்த உத்தியோகத்திலும் நிலைபெற முடியவில்லை. Truth liberates என்ற ஏசுபிரானின் வாசகம் இவருக்குப் பிடித்தமானது. படைப்பாளி அரசுக் கோப்புகளோடு வாழ முடியாது.
இவர் தமிழ்ப் பண்டிதரானது, பிரெஞ்சு, ஜெர்மன், வங்காளம், கன்னடம், மலையாளம் என தேடிப் போய்க் கற்றுக்கொண்டது எல்லாம் வெறும் ஞானத் தேடலினால் அல்ல. அதில் என்ன இருக்கிறது என்று பார்த்து விடும் ஆவல். மகாபாரதத்தையும் பைபிளையும் ராமாயணத்தையும் தாண்டிப் புதிதாக என்ன செய்யப்போகிறோம் என்று அடிக்கடி சொல்லிக் கேட்டிருக்கிறேன். எழுதுவதைவிட உரையாடலைத் தான் விரும்பினார். க.நா.சு., ஜி. நாகராஜன், சுந்தர ராமசாமி, கரிச்சான் குஞ்சு ஆகியோரிடம் நடத்திய உரையாடல்கள் பதிவாகாமல் போனது நஷ்டம்தான்.
எந்த சக்தியும் இல்லாத சாதாரணமான ஒன்றைப் போலத்தான் காலம் நமக்கு வித்தை காட்டுகிறது. ஆனால் உண்மையில் அது மனித வாழ்வை ஒரு கூரிய வாள் போல ஒரு நொடிகூட இடையீடின்றி அறுத்துக்கொண்டிருக்கிறது. நான் காலமாக இருக்கிறேன் என்பான் கீதையில் கண்ணன்.
உண்மையில் மேதைகள் காலத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. அதில் ஏறிச் சவாரி செய்பவர்கள். ப்ரகாஷ் என்ற ஆசானின் உரையாடல் காலம் தாண்டியும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT